SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வளமான வாழ்வில் வசந்தம் தரும் வராஹர்

2019-04-23@ 09:34:04

பூமியில் தன் பக்தர்களையும், தேவர்களையும் அசுரர்களிடமிருந்து காப்பாற்றும் பொருட்டு ஸ்ரீ மஹாவிஷ்ணு 24 அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவற்றில் பத்து அவதாரங்களை தசாவதாரங்கள் என்று பக்தர்கள் போற்றுகின்றனர். பெரும்பாலான வைணவ ஆலயங்களில் மத்ஸ்யம் முதல் கல்கி முடிய இந்த பத்து அவதாரங்களைக் கொண்ட தசாவதார சந்நதியை தரிசிக்கலாம். தசாவதாரங்களில் மிகவும் முக்கியமானதாக ஸ்ரீவராஹ அவதாரம் கருதப்படுகிறது. பத்தில் மூன்றாவதான இந்த அவதாரத்தில் இரண்யாட்சன் என்ற அரக்கன் பூமியை கடலுக்குள் எடுத்துச் சென்று ஒளித்து வைத்த போது, திருமால் பிரமாண்டமான வராஹமாகத் தோன்றி அவனை வதைத்து பூமிப் பிராட்டியை மீட்டதாக ஐதீகம். இந்த அடிப்படையில் வராஹ அவதாரங்களைக் குறிக்கும் சிற்பங்களில் ஸ்ரீவராஹமூர்த்தி பூமி உருண்டையை தன் கோரைப்பற்களிடையே தாங்கியவாறோ பூமிப் பிராட்டியை தன் இடது மடியில் தாங்கியபடியோ காட்சி தருவதை காணலாம். உலக மக்களுக்கு அமைதியும் நல்வாழ்வும் வேண்டி செய்யப்படுகின்ற அனைத்து வேள்விகளுக்கும் பாதுகாப்பாக இருந்து அருள்பாலிப்பதால் ஸ்ரீவராஹர், யக்ஞவராஹர் என்றே அழைக்கப்படுகிறார்.

யாகங்களில் பயன்படுத்தப்படும் பல்வேறு உபகரணங்கள், பாத்திரங்கள் மற்றும் திரவியங்கள் ஸ்ரீவராஹப் பெருமானின் அவயவங்களாக அமைந்திருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீவராஹ அவதாரத்தில் ஆதிவராஹர், பிரளய வராஹர், யக்ஞவராஹர், லஷ்மி வராஹர் போன்ற பல மூர்த்தங்கள் உள்ளன. தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ முஷ்ணம், மஹாபலிபுரம்-சென்னை சாலையில் உள்ள திவ்ய தேசமான திருவிடந்தை, திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி போன்றவை மிகப் பிரபலமான வராஹத் தலங்களாகத் திகழ்கின்றன. மேலும் கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மத்தியப்பிரதேசம் போன்ற பல மாநிலங்களிலும் வராஹருக்கு என்று பிரத்தியேகமான ஆலயங்கள் உள்ளன. திருவேங்கடவன் எழுந்தருளியிருக்கும் திருமலைத் திருத்தலமே ஒரு வராஹ க்ஷேத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள வராஹர் ஆலயங்களில், ஸ்ரீவராஹர் பிரமாண்டமான பன்றி ரூபத்தில் நான்கு கால்களுடன் தன் உடல் முழுவதும் எண்ணற்ற தேவதைகளைத் தாங்கிக் காட்சி தருகிறார்.

இந்த வரிசையில் தெலங்கானா மாநிலம், கரீம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீயக்ஞவராஹர் ஆலயம் ஒரு பிரபலமான க்ஷேத்திரமாகும். இப்பகுதியினை ஆட்சி செய்த சையத் கரிமுத்தீன் என்பவரைச் சிறப்பிக்க கரீம் நகர் என அழைக்கப்படுகிறது. தமிழகக் கோவில் பாணியில் கட்டப்பட்டுள்ள கரீம் நகர் ஸ்ரீயக்ஞ வராஹர் ஆலய முகப்பை ஐந்து கலசங்களோடு கூடிய மூன்று நிலை ராஜகோபுரம் அலங்கரிக்கிறது. அதனை கடந்து உள்ளே சென்றால் ஸ்ரீயக்ஞவராஹர் மற்றும் ஸ்ரீ ராமசத்யநாராயண சுவாமி ஆகியோருக்கு தனித்தனிச் சந்நதிகளும், எதிரே தனியே கொடி மரங்கள், பலிபீடங்களும் உள்ளன. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள கருவறையில் ஸ்ரீயக்ஞவராஹர் நான்கு கரங்களோடு அமர்ந்த நிலையில் பின்னிருகரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி, முன் வலக்கையில் தூக்கிப் பிடித்த கதை மற்றும் முன் இடக்கையில் கமண்டலத்தோடு காட்சி தருகிறார். இவரது முகம் வடக்கு திசையைப் பார்த்தவாறு உள்ளது. கீழ்த்தாடையிலிருந்து மேல்நோக்கி வளைந்து வளர்ந்துள்ள இருகோரைப் பற்கள் பூமி உருண்டையைத் தாங்கி நிற்கிறது. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளோடு வடிக்கப்பட்டுள்ள இந்த அற்புதமான யக்ஞவராஹ மூர்த்தியின் சிலாரூபம், வனப்பும் கம்பீரமும் கொண்டு தரிசிக்கும் பக்தர்களைப் பரவசப்படுத்துகிறது.

ஸ்ரீயக்ஞவராஹரின் காலடியில் உள்ள உற்சவமூர்த்தியும் மூலவர் போன்றே வராஹ உருவத்தில் சமபங்கமான நின்ற நிலையில் திவ்ய ஆயுதங்களோடு இடப்புறத்தில் பூதேவி சகிதமாக காட்சி தருகிறார். யக்ஞவராஹர் சந்நதியைத் தவிர, ஸ்ரீராமசத்யநாராயண சுவாமி, ரத்னகர்ப்ப கணபதி, அனந்தநாகேந்திர சுவாமி, நவகிரஹ சந்நதிகளும் உள்ளன. பக்தர்கள் மணப்பேறுக்கும், மகப்பேறுக்கும் ஸ்ரீஅனந்த நாகேந்திர சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். ஸ்ரீவசுதா லஷ்மி, ஸ்ரீவரதுர்க்கா, ஸ்ரீவாக்வாதினீ மஹா சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரின் சந்நதிகளும் மனதைக் குழைய வைக்கின்றன. ஸ்ரீவராஹர் மற்றும் சத்ய நாராயணசுவாமி சந்நதிகளில் வைகானச ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்படுகின்றன. நாட்டின் புனித ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு மஹா அபிஷேகம், கோடி குங்குமார்ச்சனை, ஸ்ரீமத் ராமாயண மஹாக்ரதுவு, சதுர்வேத ஸ்வாஹாகாரம் போன்ற அரிய வழிபாடுகள் சிறப்பாக இந்த ஆலயத்தில் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் உலக மக்களின் அமைதிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் ரக்ஷோக்ன இஷ்டி என்ற அரிய யாகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த யாகம் திரேதாயுகத்தில் விஸ்வாமித்ர முனிவரால் நடத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது. ஸ்ரீ யக்ஞவராஹர் ஆலயத்தில் ஐப்பசி மாதம் பத்து நாள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. யுகாதியை அடுத்து வரும் முதல் சனிக்கிழமை மஹாசாந்தி ஹோமம், மஹாஅபிஷேகம் மற்றும் மாலையில் தெப்போற்சவம் ஆகியவை நடைபெறுகின்றன. இவற்றோடு இதே நாளில் ஸ்ரீசீதாராமச்சந்திர திருக்கல்யாணமும் நடத்தப்படுகிறது. பவித்ரோற்சவம், ஆகஸ்டு மாதம் வராஹ ஜயந்தி, விநாயக சதுர்த்தியை அடுத்து ஒன்பது நாட்களுக்கு விநாயக நவராத்திரி, புரட்டாசியில் தேவி நவராத்திரி ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. காலை 6 மணிக்கு சுப்ரபாத சேவையோடு துவங்கும் ஆலய வழிபாடுகள் மதியம் 11 மணிக்கு முடிந்து மீண்டும் மாலை 5 மணிக்கு வேதபாராயணத்தோடு துவங்கி இரவு 8 மணி ஏகாந்த சேவையோடு நிறைவு பெறுகின்றன.

இந்த ஆலயத்தில் 1986ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த சமஸ்தானம் தொடர்ந்து 108 ஆலயங்களை ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நிர்மாணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அமைப்பினர் சதுர்வேத விஷ்ணு ஸ்வஹாகார மந்திரம், ஸ்ரீமஹாலஷ்மி மஹாத்மியம், ஸ்ரீயக்ஞவராஹ ஸஹஸ்ரநாம நாமாவளி, ஸ்ரீயக்ஞவராஹ சுப்ரபாதம், ஸ்ரீயக்ஞவராஹ கத்யம் போன்ற பல அரிய நூல்களை வெளியிட்டுள்ளனர். கரீம்நகர் ஸ்ரீயக்ஞவராஹர் ஆலயம் மாநிலத் தலைநகரான ஹைதராபாத்திலிருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ளது. தெலங்கானா மாநிலம் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் வேமுல வாடா என்ற ஊரில் உள்ள ஸ்ரீபீமேவரஸ்வாமி மற்றும் ஸ்ரீராஜராஜேஸ்வரஸ்வாமி ஆலயங்கள், கொண்டகட்டு ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயம், ஒரே கருவறை யில் இரண்டு சிவலிங்கங்களைக் கொண்ட காளேஸ்வரம் ஸ்ரீகாளேஸ்வரர்-முக்தேஸ்வரர் ஆலயம், மற்றும் கோடிலிங்க சிவாலயமும் இப்பகுதியில் பிரசித்தி பெற்றவை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்