SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வித்தியாசமான வராஹர் கோயில்கள்

2019-04-22@ 17:56:50

வராஹர் ஜெயந்தி: 23.04.2019

தசாவதாரம் எனப்படும் மஹாவிஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் பூர்ண அவதாரங்களான ராம மற்றும் கிருஷ்ண அவதாரங்களுக்கு இந்தியா  முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. இவற்றை அடுத்து அதிக எண்ணிக்கையில் உள்ளவையாக நரசிம்ம அவதாரத் திருக்கோயில்களைச் சொல்லலாம்.  ஆனால், விஷ்ணுவின்  மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்திற்கு ஒரு சில ஆலயங்களே உள்ளன. இரண்யாட்சன் என்ற அசுரன் ஒரு முறை பூமியை  பாய் போலச்சுருட்டிக் கொண்டு கடலுக்குள் கொண்டு ஒளித்து வைத்த போது, மஹாவிஷ்ணு வராஹ (பன்றி) அவதாரம் எடுத்து, அவனோடு போரிட்டு பூமியை  மீட்டுக் கொண்டு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் திகழ,  வராஹப் பெருமான் தனது இடது மடியில் பூமிதேவியை அமர்த்தி, முன்னிரு கரங்களால்  பரிவோடு தேவியை அணைத்துக் கொண்டிருப்பதாக காட்டப்படும் வராஹ மூர்த்தங்களைத்தான் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். பூதேவியும் தன்னை அரக்கர்களிடமிருந்து மீட்டெடுத்து வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் பாவனையில் வராஹரை நோக்கி இரு கரங்களைக் கூப்பியபடி காட்சி தருவார். அதேபோல அவர் காலடியில்  ஆதிசேஷனும் காணப்படுவார்.  

ஒரு சில இடங்களில் ஆதிவராஹர் தன் இரு கொம்புகளில் பூமி உருண்டையை ஏந்தியிருப்பதாகக் காட்டப்படுவதும் உண்டு. தமிழ்நாட்டில் வராஹ அவதாரத்திற்குரிய ஆலயங்களில் மிக முக்கியமானது கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள பூவராஹஸ்வாமி ஆலயமாகும்.  இது தவிர மஹாபலிபுரம், திருவிடந்தை, கல்லிடைக்குறிச்சி, கும்பகோணம் போன்ற ஒரு சில தலங்களிலும் வராஹருக்கு ஆலயங்கள் உள்ளன. ஆந்திர மாநிலம்  திருமலையில் உள்ள ஆதிவராஹர் ஆலயம் மிகப் பிரசித்தமானது. வேங்கடேசப் பெருமாள் இங்கு கோயில் கொள்வதற்கு முன்பாகவே, இந்த ஆதிவராஹர்  ஆலயம் இங்கு அமைந்ததாக ஐதீகம். கேரளம், கர்நாடகம், ஒடிஷா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் வராஹருக்கு ஆலயங்கள் உள்ளன. இந்த  ஆலயங்களில் வராஹர் ஜயந்தியை ஒட்டி சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பொதுவாக வராஹர் ஆலயக் கருவறைகளில் பூதேவியை இடது மடியில் இருத்தி, பூவராஹர், ஆதிவராஹர், யக்ஞ வராஹர், பிரளய வராஹர் முதலான திருநாமங்களோடு பெருமாள் காட்சி தருவதையே நாம் தரிசிக்கிறோம். ஆனால், மத்திய பிரதேசத்தில் மட்டும் வராஹர் ஆலயங்களில் வராஹப் பெருமான் பிரமாண்டமான வராஹ (பன்றி) உருவில், நான்கு கால்களோடு நின்ற நிலையில் காட்சியளிக்க அவரை நூற்றுக்கணக்கான தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அக்காலச் சிற்பிகளின் கலை நயத்தையும் நுணுக்கத்தையும் இந்தச் சிற்பங்கள் பறை சாற்றுவதாக அமைந்துள்ளன. இவற்றில் கஜுராஹோ, எரான், பதோ, கோ, குவாலியர், மஜ்ஹோலி ஆகிய இடங்களில் உள்ள வராஹர் சிற்பங்கள் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்தவை.  முற்றிலும் பன்றி உருவமாகவே வடிக்கப்பட்ட இது போன்ற வராஹர் சிற்பங்கள் இம்மாநிலத்தில் 29 இடங்களில்  
இருப்பதாகக் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்திலுள்ள கஜுராஹோ எண்ணற்ற ஆலயங்களைக் கொண்ட ஒரு கலைக் கூடமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற சூரியனார் கோயிலும் இங்குதான் உள்ளது. சத்ரப்பூர் மாவட்டம் கஜுராஹோ கிராமத்தில் லட்சுமணா ஆலயத்திற்கு எதிராக அமைந்துள்ள வராஹர் சிற்பம் கிபி 900க்கும் 925க்கும் இடையே செதுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒன்பது அடி நீளமும் ஆறு அடி உயரமும் கொண்ட இந்த வராஹர் சிற்பத்தில் 672 சிற்பங்கள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டிருப்பது பார்ப்போரை வியக்க வைக்கின்றன.  நாசித்துவாரங்களுக்கும் வாய்க்கும் இடையே வீணை ஏந்திய  சரஸ்வதி காட்சி தருகிறாள். வராஹத்தின் காலடியில் பூமியைத் தாங்கியிருப்பதாகக் கருதப்படும் ஆதிசேஷன் காட்டப்பட்டுள்ளார். அடுத்து மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஏரன் ஊரில் உள்ள வராஹர் ஆலயத்தில் கிபி 510ம் ஆண்டைச் சேர்ந்த குப்தர் கால கல்வெட்டுகள்  உள்ளன.

இங்குள்ள வராஹரின்  உருவம் 14 அடி நீளம், 5 அடி அகலம், 11 அடி உயரம் கொண்டது. மத்திய பிரதேசத்தில் அமைந்த மிகவும் பழமையான,  வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாக ஏரன் கருதப்படுகிறது. பன்றியின் ஒரு கொம்பை பிடித்துக் கொண்டு பூதேவி நின்று கொண்டிருப்பது போல இந்தச் சிற்பத்தில்  காட்டப்
பட்டுள்ளது. கஜுராஹோ மற்றும் ஏரன் வராஹர் சிலைகளையடுத்து மிகப் பழமையானது ஜபல்பூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நகரமான மஜ்ஹோலியில் உள்ள  வராஹர் சிற்பமாகும். இந்தச் சிற்பம் 11வது நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு ஒரு சதுர கருவறையில் வராஹர் சிற்பம் உள்ளது. கருவறை  நுழைவாயிலில் கங்கை, யமுனை சிற்பங்களும், மேற்புறம் விஷ்ணு, நவகிரகங்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 130eng_11

  இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

 • plastic22

  பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

 • pink_kolkatta11

  இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

 • panta22

  சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

 • 22-11-2019

  22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்