SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வராஹரை தேட வைத்த ஹரித்துவாரமங்கலம்

2019-04-22@ 17:54:25

புராண நிகழ்வுகளின் மைய விஷயமே தலங்கள் உருவாவதில்தான் உள்ளது. தனி மனித ஞானத் தேடலின் உற்பத்தியே கோயில்கள்தான். அதுபோல புராணங்கள் அகங்காரத்தை நசிக்கச் செய்யும் விஷயத்தையே விதம்விதமான முறைகளில் விளக்கியபடி உள்ளன. அதில் கடவுளர்களே தம்மை அகங்காரம் மிக்கவர்களாக வேடம் பூண்டு நமக்காக நடத்திக் காட்டும் லீலைகளும் உண்டு. அப்படித்தான் இத்தலத்தில் புராணத்தில் விஷ்ணுவும், பிரம்மாவும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். அது என்னவென்று பார்ப்போமா? ஆக்கல் எனும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு தான்தான் பிரபஞ்சத்தை சிருஷ்டி செய்கிறோம் எனும் அகங்காரம் கிளைவிட்டது. அருகேயிருந்த விஷ்ணுவிடமும் தம் அகங்காரக் கிளையை படரவிட்டார். ‘‘உமக்கொன்று தெரியுமா நீர் என்னதான் உயிர்களை காத்தாலும், நான் சிருஷ்டிக்கவில்லையெனில் உமக்கே வேலையில்லை‘‘ என கேலி பேசினார்.

‘‘பிரம்மனே நீர் படைப்பது இருக்கட்டும். அந்த ஜீவனை காக்க வேண்டாமா. அதனுடைய சந்தோஷம் முக்கியமில்லையா. உன்னுடைய படைப்புகளுக்கு அழகு சேர்ப்பதே நான்தான். நான் காக்கவில்லையெனில் உன் படைப்புகள் அழிய வேண்டியதுதான். பிறகு உமக்கென்ன வேலை இருக்கிறது. அதனால் என் தொழில்தான் உயர்ந்தது. இதிலிருந்தே நான் உயர்ந்தவன் என்பது வெளிப்படை’’ என்று சிறுவர்கள் போல அவர்கள் பேசிக் கொண்டார்கள். அப்போது அவர்கள் மத்தியில் ஒளியொன்று ஊடுருவியது. சட்டென்று நெருப்பு ஸ்தம்பம் எனும் அனல் கக்கும் தூணாக ஈசன் அக்னியுருவில் வானையும், பூமியையும் ஊருடுவி சுழன்று நின்றார். பிரம்மாவும், விஷ்ணுவின் பிரமிப்போடு பார்த்தார்கள்.

எங்கெல்லாம் நான் எனும் அகங்காரம் முற்றுகிறதோ அங்கெல்லாம் ஞானப் பிழம்பாக ஈசன் வந்திறங்குவது வாடிக்கையாக இருந்தது. ஞானம் எனும் சிவத்திற்கு அன்னியமாக வேறெந்த வஸ்தும் இல்லையெனக் காட்டுவதுதான் இங்கு தத்துவார்த்தம். இங்கு ஞான மயமாக இருக்க வேண்டிய பிரம்மாவும், விஷ்ணுவுமே தன்னால்தானே என அஞ்ஞான மயமாக மயங்கிருப்பது பார்த்துதான் இப்படி அக்னி வடிவாக தோன்றினார். அக்னியிலிருந்து குரல் வெளிப்பட்டது. ‘‘உங்களுக்குள் யார் பெரியவர் என்பதுதானே உங்களின் வாதம். அதை நான் சொல்லலாமா’’ என்று கேட்டார்.  ‘‘ஆஹா... சிவனாரின் தீர்ப்புக்கு ஞாலமே கட்டுப்படுமே. நாங்கள் ஏற்க மாட்டோமா என்ன’’என இருவரும் சேர்ந்தே பதில் உரைத்தனர். ‘‘என் இந்த அக்னி ரூபமான உருவின் அடியையும், முடியையும் முதலில் யார் காண்கிறார்களோ’’ அவரே பெரியவர் என்றார்.

இதைச் சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே பிரம்மா பறவையாகப் பறந்தார். ஆதியில் வராக அவதாரம் எடுத்த பெருமாள், மீண்டும் வராகமாக பூமியை குடைந்தார். அப்படி ஹரியான விஷ்ணு வராகராக பூமியை துவாரமிட்டு குடைந்த தலமே அரி துவார மங்கலம் எனும் நாம் காணும் தலமாகும். இந்தப் புராணம் திருவண்ணாமலை புராணத்தோடு தொடர்பு கொண்டது. அண்ணாமலையில் அண்ணாராக அக்னி மலையாக சிவன் இருக்க, ஹரி எனும் அரி பூமியை குடைந்து ஈசனின் அடியை தேடிய தலம் இதுவேயாகும். பெருமைமிக்க அபூர்வ தலமும் இதுவேயாகும். இதுதான் இத்தலத்தில் கூறப்படும் புராணமாகும். இதற்குப் பிறகு பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் தேடமுடியாது திகைத்து ஈசனையே சரணுற்றனர் என்பது, சர்வ ஜீவன்களுக்கும் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் விஷயமாகும்.    

ஈசனின் அடியைக் காண பூமியைத் தோண்டி தோல்வியோடு மீண்டும் வெளிவந்த தலமும் இந்த அரித்துவாரமங்கலம்தான். தேனொழும் தமிழில் நாயன்மார்கள் திரு அரதைப் பெரும்பாழி என்றனர். அப்படிப்பட்ட அழகிய தலத்தை அருள்வலம் வருவோமா. சோழர்கள் காலத்தில் நிறைய திருப்பணிகள் செய்யப்பட்டு தொன்மையால் கோயில் இன்னும் மிளிர்கிறது. இத்தலம் பஞ்ச ஆரண்யத் தலங்களுள் ஒன்றாகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் கம்பீரத்தோடு நிமிர்ந்திருக்கிறது. எதிரேயே பழமையான திருக்குளம் அமைந்துள்ளது. கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலப்புறத்தில் ஒரு மண்டபம் காணப்படுகிறது. ஈசனுக்கும், அம்பாளும் தனித்தனி சந்நதிகளில் வீற்றிருக்கின்றனர். ராஜகோபுரத்திலிருந்து நேரே மூலவராம் பாதாளேஸ்வரர் சந்நதி நோக்கி நகர்கிறோம். வராகரின் பாதாளப் பிரவேசத்திற்கு சாட்சிபோல ஈசன் இத்தலத்தில் லிங்க உருவில் அருள்பாலிக்கிறார். அதனாலேயே ஈசனுக்கு முன்பு ஒரு பாழி என்றழைக்கப்படும் பள்ளம் உள்ளது. இதற்குள்தான் வராகராக திருமால் திருவடியை தேடிச் சென்றதாக ஐதீகம்.

ஏதோவொரு அரூபமான விவரித்தலுக்கு அப்பாற்பட்ட சக்தியொன்று அங்கு மையமிட்டிருப்பதை பாதாளேஸ்வரர் சந்நதியில் உணரலாம். வராகர் அதல, விதல, சுதல, விதல, பாதாளம் என்று ஊடறுத்து சென்ற இடம் இதுதான். இத்தல ஈசனை சரணாகதி உற்றால் அண்ணாமலையானின் நிஜ தரிசனம் கிடைக்கும் என்பது தலம் கூறும் ரகசியமாகும். மெல்ல மனதை விடுவித்து கருவறை விட்டு அம்பாள் சந்நதியை நோக்கி நகர்கிறோம். அம்பாள் தனிக் கோயில் அழகோடு மிளிர்கிறாள். நேற்றுதான் திருமணம் முடித்த பெண்போல பேரழகோடு நின்றகோலத்தில் அருள்பரப்புகிறாள். அருளையும், ஆனந்தத்தையும் பொழியும் கண்கள், எப்போதும் மெல்லிய புன்னகையில் கவலைகளை விரட்டும் அநாயாசத் தோற்றம் நம்மை நகரவிடாது செய்கிறது. ஜகத்தின் அழகே இவளாததால் அலங்கார அம்மை என்று இத்தலத்தில் அழைக்கப்படுகிறாள். திருமணமாகாத பெண்கள் அம்பாளிடம் வேண்டிக் கொண்டு கல்யாண அலங்காரத்திற்கு தகுதியாகி வருவது இங்கு சகஜமாக நிகழ்கிறது.

அம்பாளை தரிசித்து அருகேயே உள்ள வன்னிமர நிழலில் அமரலாம். இந்த தல மரம்தான் இத்தலத்தில் பிரதானச் சிறப்பு எனில் மிகையில்லை. அத்தனையொரு அதிர்வுகள் மரத்தினின்று வெளிப்பட்ட வண்ணம் இருக்கிறது. மரத்தடியிலேயே பிள்ளையார் சிலைகள். ஓய்வெடுப்பதை விட தவம் செய்ய சிறந்த இடமாக இது விளங்குகிறது. மரத்தின் சுகம் தூக்கத்தை விரட்டி விழிப்பை தருகிறது என்பது அனுபவ உண்மை. கோயிலின் பிராகாரத்தை சுற்றி வந்தால் முறையே தட்சிணாமூர்த்தியும், மேற்கே லிங்கோத்பவரையும், வடக்கே பிரம்மாவையும் தரிசிக்கலாம். கோயிலின் பிராகாரத்தை வலம்வரும்போதே சோழர்களின் கலைநுணுக்கத்தை கண்ணுரலாம். கற்களில் காணப்படும் பழமை நம்மை ஆயிரம் வருடங்களுக்கு அப்பால் அழைத்துச் செல்கிறது.

மெல்ல பிராகார வலம் வரும்போது ராஜகோபுரத்தின் இடப் பக்கத்திலுள்ள மண்டபத்திற்கு நகர்கிறோம். நீண்ட மேடைபோன்ற அமைப்பில் பிள்ளையார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியன், சந்திரன், சுந்தரர், சம்பந்தர், பைரவரை தரிசிக்கலாம். அதேபோல பாதாளேஸ்வரர் சந்நதிக்கு அருகிலே கஜலட்சுமியும், மாரியம்மனையும் தரிசிக்கலாம். அம்பாள் சந்நதிக்கும், இறைவன் சந்நதிக்கும் இடையே இருக்கும் சுவரில் மிகவும் மங்கலான வராகம் போன்ற புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. அதேபோல மேற்குப் பிராகாரத்தில் அம்மன் சந்நதிக்கும், சுவாமி சந்நதிக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியின் சந்நதி அமைந்துள்ளது.
இந்த ஆலயம் பெரிதுமல்லாது சிறிதுமல்லாது மத்திமமானது. அழகானது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமானது. கோயிலை சுற்றி வலமாக வந்து நமஸ்கரித்து நிமிர்ந்தால் பாதாளேஸ்வரர் இங்கு மேலேயே காட்சியளிக்கிறார் எனும் உண்மையை எளிதாக உணரலாம்.  கும்பகோணம், தஞ்சாவூர் என்று இருவழிகளிலும் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 130eng_11

  இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

 • plastic22

  பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

 • pink_kolkatta11

  இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

 • panta22

  சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

 • 22-11-2019

  22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்