SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேர்வுகளின் வெற்றிக்குள் வாழ்க்கையை குறுக்காதீர்கள்!

2019-04-22@ 17:26:54

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது - 12

இந்தப் பிரபஞ்சம் பிரம்மாண்டமானது. இதில் எத்தனையோ கோள்கள் கதிர்கள் நிலவுகள் நட்சத்திரங்கள் உள்ளன என்கிறார்கள். இந்த பிரமாண்டத்தின் ஒரு புள்ளிதான் நாம் வாழும் உலகம். அந்த உலகத்தில் மிகச் சிறு துளிதான் நாம். ஆனால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வோர் உலகம்.இந்த மனநிலைதான் நம்மை செயல்படவும் வைக்கிறது. நம்முடைய செயல்களில் வெற்றி கொள்ளவும் காரணமாகிறது. நமக்குள் இருக்கும் உலகம் தனக்கான பாதையில் மட்டும் சுற்றி தொடர்கிறதா என்றால் இல்லை. சூரியன் போகும் திசையில் எல்லாம் முகம் திருப்பும் சூரியகாந்தியை போல சக மனிதர்களின் அபிப்பிராயங்கள் அனுமானங்கள் ஆகியவற்றில் நாம் என்னவாக இருக்கிறோம் என்னும் கணக்குகளை நம்மை இயக்குகின்றன. காலை நேர நடை பயிற்சியில் இருக்கிறேன். யாரோடும் பேசாமல் தனிமையில் நடப்பது என் பழக்கம். 50 அடி தள்ளி ஒரு நடமாடும் மாநாடு நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

ஏழெட்டு பேர் உரத்த குரலில் உள்ளூர் அரசியல் தொடங்கி உலக அரசியல் வரை அலசிக் கொண்டு வருகிறார்கள். அந்தக் கூட்டத்திற்கு வழிவிட சற்றே ஒதுங்கி நிற்க அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். அதன்பிறகு அவர்கள் பின்னால் போய்க்கொண்டிருந்த எனக்கு திடீரென்று பொறி தட்டியது. அவர்கள் எனக்குப் பின்னால் வந்தவர்கள். என்னை கடந்து நடக்கிறார்கள். நானும் வேகமாகத்தான் நடக்கிறேன். ஆனால், அவர்களை அதற்குப் பின்னர்  நான் கடக்கவே இல்லை. அவர்கள் வேகமாக நடக்கிறார்களா அல்லது நான் மெதுவாக நடக்கிறேனா என்கிற குழப்பம் ஏற்பட்டதால் என் நடையின் வேகம் இன்னும் கொஞ்சம் மட்டுப்பட்டது. அவர்களை போல் பேச்சில் எனக்கு கவனம் சிதறவில்லை. அவர்கள் வருவதை உணரும் வரையில்கூட அவர்களைக்  கடந்து தான் சென்று கொண்டிருந்தேன். அவர்கள் தங்கள் வேகத்தை கூட்டி விட்டார்களா? அல்லது நான் என் வேகத்தை குறைத்து விட்டேனா?

சற்று யோசித்த பிறகு இந்தக் கேள்விக்கு அவசியமே இல்லை என்று புரிந்தது. ஏனெனில், என் வேகத்தில் நான் நடக்கிறேன். அவர்கள் வேகத்தில் அவர்கள் நடக்கிறார்கள். அவ்வளவுதான். அவர்கள் என்னை முந்தியதும் நான் அவர்களை முந்துவதும் வரலாற்றில் பதிவாகிற விஷயங்கள் இல்லை. எனவே, ஒன்றுக்கும் உதவாத ஒப்பீடுகளில் மனிதன் தன்னுடைய கவனம் செலுத்தி கவலை கொள்கிறான் என்பது புரிந்தது. கல்யாண்ஜி ஒரு கவிதையில் சொல்லுவார்.“நீங்கள் ஓடிக் கடக்கிற தூரத்தை நான் நடந்து கடக்கிறேன் நிச்சயமாய்.” மற்றவர்களுடன் ஒப்பிடுவது சரியா, தவறா என்கிற கேள்வி காலங்காலமாய் கேட்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அடுத்தவர்களோடு தன்னை ஒப்பிட்டு அழுக்காறு காரணமாய் அவர்கள் வளர்ச்சி பற்றி அவதூறு சொல்பவர்கள் பக்குவம் இல்லாதவர்கள். அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்து தன்னுடைய குறையை திருத்திக் கொள்ள யாருக்குப் பக்குவம் இருக்கிறது அவர்கள் தம்மை மற்றவர்களுடன் ஒப்பிடலாம். அதேநேரம் எல்லாமே தனக்கு  தவறாகத்தான் நடக்கிறது என்னும் எண்ணம் கொண்டவர்கள் தங்களைவிட தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டு தன்னை தேற்றிக் கொள்ளலாம்.இதைத்தான் குமரகுருபரர்

“தம்மில் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா பெரிதென்(று) அகமகிழ்க ’’

என்று சொன்னார். இதனை கவியரசர் கண்ணதாசன் திரைப்படப் பாடல் ஒன்றில் இன்னும் எளிமையாக

“உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு”

என்றார். மற்றவர்களுடனான ஒப்பீடு நம் உயர்வுக்கு வழிவகுத்தால் போதும். அப்படியிருந்தால் யாருடன் நம்மை ஒப்பிடுகிறோமோ அவர்களுடன் பகையையும் வளர்க்காது. அதேநேரம் நம் மனதில் தாழ்வு மனப்பான்மையையும்  வளர்க்காது. குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசும்போது அந்தக் குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. ஏனெனில், அந்தக் குழந்தையிடம் இல்லாத எந்த இயல்பு தன்னிடம் இல்லை என்று பக்கத்து பகுத்து உணர்கிற பக்குவம் அந்த வயதில் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, இன்னொரு குழந்தையை விட தனக்கு திறமைகள் குறைவுதான் போதும் போதும் என்று அந்த குழந்தை எண்ணிவிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, நம் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுச் சொல்லும் போது அதிகபட்ச எச்சரிக்கை அவசியமாகிறது.

ஒப்பீடு சரியா தவறா என்று சிந்திக்கும்போது நம்மிடம் ஒப்பிடுவதற்கு என்ன அளவுகோல்கள் இருக்கின்றன என்பதையும் சேர்த்து சிந்திக்க வேண்டும். வாங்குகிற மதிப்பெண்களில் குழந்தைகள் மத்தியில் இருக்கும் வேறுபாடு, தேர்வுக்கு எந்த குழந்தை எவ்வளவு நேரம் படிக்கிறது என்பது போன்ற ஒப்பீடுகள் நம்மிடையே உண்டு. இவையெல்லாம் குறுகிய கண்ணோட்டத்தை அளவுகோலாகக் கொண்டு நிகழ்பவை. தேர்வில் வெற்றி என்பது வாழ்வின் வெற்றிக்கு மிகவும் தேவைதான். ஆனால். தேர்வில் பெறும் வெற்றி மட்டுமே வாழ்வின் வெற்றிக்கு வழி செய்து விடாது என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் மறந்துவிடுகிறார்கள். ஒரு குழந்தையிடம் இருக்கும் தனித்தன்மை என்ன தனித் திறமை என்ன என்பதையெல்லாம் கண்டுணர்ந்தால் அந்த குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஒரு அளவு கணித்து விடலாம்.

எல்லோரும் செய்வதையே தங்கள் குழந்தையும் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் பெற்றோரின் கோணத்திலிருந்து பார்த்தால் சரி போல தோன்றலாம். ஆனால் எங்கேயும் எதிலேயும் விதிவிலக்குகள் உண்டு. சிறிய வயதில் எறும்பும் வெட்டுக்கிளியும் என்னும் கதையினை துணைப் பாடத்தில் படித்து இருப்போம். அது ஒரு வகையான நீதி சொல்லும் கதை. எறும்புகள் உழைத்துக் கொண்டிருக்கும். வெட்டுக்கிளி பாட்டு பாடிக் கொண்டிருக்கும். மழைக்காலம் வந்த பிறகு வெட்டுக்கிளிக்கு உணவு இருக்காது. எறும்புகளிடம் போய் கடன் கேட்கும். ஓர் எறும்பு வெட்டுக்கிளியிடம் “நீ வேலை செய்ய வேண்டிய நேரத்தில் பாட்டு பாடிக் கொண்டு இருப்பதால்தான் உனக்கு இப்போது சாப்பாடு இல்லை. எனவே நீயும் எங்களைப் போல் உழைக்கத் தொடங்கு” என உபதேசம் செய்யும். மழைக் காலம் முடிந்ததும் வெட்டுக்கிளி வேலைக்குப் போகும் என்பதாக அந்த கதை முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த கதையை நிர்வாக மேலாண்மை நிபுணர் போத்த ராஜா ரவீந்திரா என்பவர் நீட்டித்து எழுதினர். Give back my Guitar எனும் நூலில் இதுபோல பல பழைய கதைகளை புதிய சிந்தனையுடன் அவர் புதிய கோணத்தில் நீட்டித்து எழுதியிருக்கிறார். இந்த புதிய கதையின்படி வெட்டுக்கிளி வேலைக்குப் போக ஆரம்பித்து சில நாட்களிலேயே அதற்கு வேலை பிடிக்காமல் போய்விடும். முன்னதாக எறும்பு வெட்டுக்கிளி இடமிருந்து கிட்டாரை வாங்கி வைத்திருக்கும். இப்போது வெட்டுக்கிளி இருப்பிடம் போய் “என்னுடைய கிட்டாரை திருப்பிக் கொடு”என்று கேட்கும். “அப்படியானால் சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்’’ என எறும்பு கேட்கும்.அப்போது வெட்டுக்கிளி எறும்புகளுடன் ஓர் ஒப்பந்தம் போடும். “நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நான் பாடுகிறேன். வேலை செய்யும் களைப்பு உங்களுக்கு தெரியாமல் இருக்கும்படி நான் பார்த்துக் கொள்கிறேன் அதற்காக உங்கள் அன்றாட உழைப்பில் இருந்து 10% எனக்கு ஊதியமாக கொடுங்கள்” என்று கேட்கும்.

அங்கிருந்த நூறு எறும்புகளும் ஒப்புக் கொள்ளும். எறும்புகள் வழக்கமான வேலையை செய்து 90% ஊதியத்துடன் வீடு திரும்ப வெட்டுக்கிளி தனக்கு விருப்பமான வேலையைச் செய்து ஆயிரம் மடங்கு ஊதியம் பெற்று திரும்புகிறது என்று இந்த கதை முடிகிறது. விருப்பமான துறையில் பலர் நுழைந்து வெற்றி பெற முடியாமல் போவதற்கு சின்ன வயதில் விதிக்கப்பட்ட தடைகள் காரணம். குழந்தைகள் வாழ்வில் நன்கு வர வேண்டும் என்று அதீத அக்கறையுடன் செயல்பட்டாலும் கூட அந்த அக்கறையே அவருடன் அவர்களிடம் ஒளிந்திருக்கும் ஆற்றலை அடையாளம் காண விடாமல் செய்து விடக் கூடும். விளையாட்டு  நுண்கலைகள்  என்று விதவிதமான துறைகள் குழந்தைப் பருவத்தில் அறிமுகம் செய்யப்படுவதன் அடிப்படை கூட இதுதான். ஒரு விருந்தில் விதம் விதமான காய்கறிகள் பரிமாறப்பட தான் விரும்பும் காய்கறியை ஒருவர் அதிகம் உண்பதற்கு வாய்ப்பு இருப்பது போலவே வாழ்க்கையிலும் தங்கள் விருப்பத்தை தேர்வு செய்யக் கூடிய உரிமை ஒவ்வொருவருக்கும் தரப்பட வேண்டும்.

குறிப்பாக குழந்தைகளுக்கு இது மிகவும் முக்கியம். இதைத்தான் மகாகவி பாரதி
பயிற்றி பல கல்வி தந்து இந்தப்
பாரை உயர்த்திடல் வேண்டும்
என்று பாடுகிறார்.

பற்பல துறைகளில் அறிமுகமும் தனக்கு மிகவும் விருப்பமான துறையில் ஈடுபடும் வாய்ப்பும் தனி மனிதர்களுக்குள் இருக்கும் தலைமைப் பண்பை வெளிக் கொணர்கிறது. இப்போது நான் சொல்லப் போவதும் மேடைகளில் அடிக்கடி நான் காட்டுகிற மேற்கோள்தான்.“யானைகளில் நான் ஐராவதமாய் இருக்கிறேன். பசுக்களில் காமதேனுவாக இருக்கிறேன்” என்று கீதையில் கண்ண பரமாத்மா சொல்கிறார். இதுபற்றி ஓஷோவிடம் அவருடைய சீடர் ஒருவர் “அப்படியானால் மற்றும் யானைகளில் கண்ணன் இல்லையா? மற்ற பசுக்களில் கண்ணன் இல்லையா’’ என்கிற கேள்வியைக் கேட்டார். ஓஷோ அதற்கு அழகான ஒரு பதிலை சொன்னார். ஒரு யானையின் உச்சபட்ச சாத்தியம் வெள்ளை யானையாகிய ஐராவதம். ஒரு பசுவின் உச்சபட்ச சாத்தியம் காமதேனு மாகிய தெய்வப் பசு. எல்லா உயிரினங்களுக்கும் இப்படி ஓர் உச்சகட்ட சாத்தியம் இருக்கிறது. எந்த உயிர் தன்னுடைய சாத்திய தன்மையின் உச்சம் தொடுகிறதோ அந்த உயிருக்குள் இறைவன் இருக்கிறான் என்பதுதான் இதன் தாத்பரியம்’’ என்றார்.மனிதன் தனக்குள் இருக்குற ஆற்றலின் உச்சம் தொடுவதன் மூலம் தனக்குள் இருக்கிற தெய்வீகத் தன்மையின் உச்சம் தொடுகிறான். அதன் வழி வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான்.

மரபின் மைந்தன் முத்தையா

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்