SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றியின் நாள் இதுவே

2019-04-22@ 17:25:13

‘‘உயிர்த்தெழுந்தேன், இன்னும் உம்மோடு இருக்கிறேன்.’’ உமது கையை என்மீது வைத்தீர். உமது அறிவு வியப்புக்குரியதாயிற்று. அல்லேலுயா!’’ வாழ்வின் ஊற்றாகிய இறைவா! உம்முடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக சாவை வென்று முடிவில்லா வாழ்வின் வழியை எங்களுக்குத் திறந்து வைத்தீர். அவருடைய உயிர்த்தெழுதலைப் பெருவிழாவாகக் கொண்டாடும் நாங்கள் உம்முடைய ஆவியால் இன்று புத்தெழுச்சி பெற்று, மாறா உறவிலும் மங்கா மகிழ்விலும் ஒளி நிறைந்த புதுவாழ்வு காணச்செய்தருளும்.ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே. இன்று அக்களிப்போம், அகமகிழ்வோம். ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது. ஆண்டவரின் வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. ‘‘கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்திற்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று. சாவும் உயிரும் நம்மிடையே புரிந்த வியத்தகு போரினிலே உயிரின் தலைவர் இறந்தாலும் உண்மையில் உயிரோடு எழுந்தார். உயிர்த்த ஆண்டவர் இயேசு என்றும் வாழ்கிறார்.

இறக்க மாட்டார். அவரில் விசுவாசம் கொள்பவர்களும் இயேசுவைப் போன்று வெற்றி வீரர்களாய் வாழ்வர். இவர்கள் உலகில் வாழும்பொழுதும் உயர்ந்த மனிதர்களாக விண்ணுலகைச் சார்ந்தவர்களாக வாழ வேண்டும். இத்தகைய வாழ்க்கையின் மூலம் இவர்கள் உயிர்த்த  இயேசுவிற்குச் சாட்சியம் புரிகின்றார். மறை நூல் வாக்குகளை உண்மையாய்ப் புரிந்துகொள்வார்கள். இயேசுவின் உயிர்ப்பை இலகுவில் புரிந்துகொள்வர். இயேசு உயிர்த்தார். மரணத்தை வெற்றி கொண்டார் என்ற உண்மை நம் விசுவாசத்தின் அடிப்படை என்பதை உணர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ வேண்டுமென்று மன்றாடுவோம். ஏழைகள், கைவிடப்பட்டோர், அனாதைகள், ஆதரவற்றோர், நோயுற்றோர் அனைவரும் உயிர்த்த இயேசுவின் மகிழ்ச்சியையும், நிறைவையும் பெற நாம் அனைவரும் உதவி செய்வோம். இறைவா! உமது உயிர்ப்பின் பேருண்மையால் உம்முடைய பிள்ளைகளாகிய எங்களுக்குப் புதுவாழ்வை அளித்ததற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இந்த மகிழ்வில் எங்களை என்றும் பேணிக்காத்தருளும்.

நாங்கள் பெற்ற பெருவாழ்வை எல்லோரோடும் பகிர்ந்து வாழ்வின் நிறைவை அடையச் செய்தருளும். உலக வரலாற்றில் இயேசுவின் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. கடவுளாக இருந்தாலும், மனிதனாகப் பிறந்து அவர் பட்ட பாடுகள் எத்தனை? அனுபவித்த சொல்ல முடியாத அவமானங்கள் எத்தனை? தாங்க முடியாத வேதனைகள் எத்தனை? எத்தனை? உண்மைக்குச் சாட்சியம்  கூறியதற்காக, ‘‘இப்படியா பேசுவது? யூதத் தலைவரைப் பார்த்து’’ என்று கன்னத்தில் அறைந்தான் சேவகன். ‘நான் செய்த குற்றம் என்ன?’ என்று துணிவுடன் கேட்ட இயேசுவின் வார்த்தையைக் கேட்ட உலகமே மெய்சிலிர்த்து அதிர்ந்து நிற்கின்றது. ‘வாழ்வது ஒருமுறை’, ஆனால், வாழப்போகும் அத்தனை தலைமுறைகளும் வாழ்ந்து காட்டிய அற்புத அன்பு இயேசுவே. மரணத்தை வென்று உயிர்த்த அதிசய தெய்வமே! இந்த மகிமையின் நாளில் உம்மை வணங்குகிறோம்! போற்றுகிறோம்!

வாழ்வை சூது கவ்வுவதுபோல் தோன்றும். ஆனால், தர்மம் மீண்டும் வென்றே தீரும். ஒளியை இருள் சிதறடித்ததாக வரலாறும் இல்லை. வாழ்வை சாவு விழுங்கியதாக வரலாறும் இல்லை. அதர்மம் தர்மத்தை வென்றுவிட இயலாது. உண்மை ஒருநாள் வென்றே தீரும். இறந்த இயேசு வெற்றி வீரராக உயிர்த்தெழுந்தார். கல்லறையை மூடியிருந்த கல் ஒதுங்கி அவருக்கு இடம் தந்தது. உயிர்த்து உலகெங்கும் அவர் பிரசன்னத்தால் ஒளியை நிலைக்கச் செய்தார். பொய்மை அழியும் உண்மை வெல்லும். தர்மம் ஜெயிக்கும். அநீதி அழியும். நீதி நிலைக்கும். இதுவே இயேசுவின் உயிர்ப்பு விளம்பும் செய்தி. இறுதி வெற்றி இறைவனுக்கே!

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-05-2020

  23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்