SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரையேற்றுவாய் கற்பகமே!

2019-04-22@ 17:20:24

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 40

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய் - கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே   - பாடல்  எண்  - 30

அபிராமி பட்டர் கீழே நெருப்பும், கையிலே தான் அமர்ந்திருக்கும் உரியை அறுக்க கத்தியும் முன்னே அபிராமியின் காட்சியையும், கண்ட போதிலும் கூட அவர் சொன்ன அமாவாசையன்று நிலவு வரவேண்டும். அது தாமதமாக போகும் போது அதைப் பற்றிய ஒரு சிறு அச்சம் அவரை வாட்டுகிறது உமையம்மை நம்மை சோதிக்கிறாளா? அப்படி சோதிக்க வேண்டும் என்று அவளே நினைத்து விட்டால் அதை யாராலும் சரிசெய்ய முடியாது. அந்த கலக்கம் இந்த பாடலில் தெரிகிறது. தன் முன் நிற்கும் அபிராமியை பார்த்து கேட்கிறார் காலையில் யாரும் அறியாமல் எனக்கு வாக்களித்த நீ இப்போது யாவரும் அறிய காலதாமதம் செய்வது ஏன்? என்று உபாசகனின் நடு நிலைப் பயணத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறார்.

‘‘அன்றே தடுத்து என்னை ஆண்டு
கொண்டாய்’’

ஸ்ரீ வித்யா உபாசனை நெறியில் வழிபாடானது நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சரியை , கிரியை, தியானம், ஞானம் என்ற நான்கும் உபாசகனுக்கு சுக, துக்க, சம, யோக, என்ற நான்கு பயன்களையும், பெற்றுத் தர வல்லது. அந்த நான்கு பயன்களைப் பற்றிய விரிவான விளக்கமே இப்பாடல் இதில் முதலாவதாக தோன்றுவது சுகமாகும்.
(சுகம்) :- இறைவழிபாடானது அதை செய்பவனுக்கு இன்பத்தை அளிக்கவல்லது, அதைப் பெற இறைவனைக் குறித்த சில சமய நெறிகளை இடைவிடாது பின்பற்றுவதையே சரியை என்பர். இது முதல் நிலையில் குருவினால் செய்யப்படும் தீட்சையாகும் இதற்கு சமய தீட்சை என்று பெயர்.

(கிரியை):- (துக்க)  - உபாசனை நெறியானது வாழ்வில் ஏற்படும் தவிர்க்க முடியாத துக்கத்தை தவிர்க்கும் என்று வழிபடுவோனால் செய்யப்படும் இறை குறித்த முயற்சியாகும். இது ஏற்கனவே பின்பற்றிய சரியையின் வழி உபாசகனிடத்தில் தோன்றும் மாறுதலேயாகும். இறையருளானது இன்பத்தை அளிப்பதோடு துன்பத்தையும் விலக்க வல்லது என்று உபாசகன் உணர்ந்து துன்பத்தை நீக்கி கொள்வதாகும். இந்நிலைக்கு தகுதிப் படுத்துவதே விசேஷ தீட்சையாகும்.

சம :- சமய தீட்சை, விசேஷ தீட்சை, இவைகளின் வழி தொடர் முயற்சியாலும், இடைவிடாத நம்பிக்கையினாலும், இறையருளால் இன்பம் பெற்று துன்பம் நீக்கியதாலும், இறையருள் காட்சியினால் பக்குவப்பட்டு உலகியல் இன்ப, துன்பங்களைத் தாண்டி, இறை அனுபவம் முற்றிலும் வேறானது என்பதை உணர்த்த அந்த இரண்டையும் சமமாகக் கருதும் ஆன்மாவைக் குறித்த உண்மை அறிவை அனுபவமாகப் பெறுவதாகும்.

இந்நிலையில் துக்கத்தினால் துன்புறாமலும், இன்பத்தைக் குறித்து முயற்சிக்காமலும் மனதில் கலக்கமின்றி அமைதியாகவும், தெளிவாகவும் இருப்பர். இந்நிலைக்கு தகுதிப்படுத்துவது நிர்வாண தீட்சையாகும்.

யோகம் :- யோகம் என்பது சரியையின் வழியே இன்பம் கண்டு கிரியையின் வழியே துன்பம் நீக்கி சமத்தின் வழியே அமைதியுற்று, தெளிவடைந்து அமைதியான மனதினால் இறையருளை உள்வாங்கி இறைவனைப் பற்றிய மெய்யறிவை பெற்று, அவன் அருளே, அது நீங்கா அவனே ஆனந்தம் என உணர்ந்து இறைவனோடு இரண்டறக் கலப்பதே யோகம், இந்நிலைக்கு தகுதிப்படுத்துவது ஆச்சார்ய பீடாரோஹனம்.

சீடன் வழிபாட்டின் உயர்வை அறியாத போதே அவனை அழைத்து வந்து இறையருளினால் குருவானவர் சமய முதலிய நான்கு வகை தீட்சையினால் என்னை இறைநெறி பின்பற்றுவதற்கு உதவியிருக்கிறார்.அப்படி உதவிய போதிலும், பூசனையை முறைப்படி சீடன் செய்த போதிலும், குருநாதர் சொன்னது போல் இறைவியானவள் நேரில் தோன்றி அருள் புரிய வில்லை.

‘‘கொண்ட தல்ல என் கை நன்றே’’

முன்னர் குருவின் மூலமாக அருளிய உமையம்மையானவள், குரு சொன்னபடி செய்த பிறகும் இப்போது எனக்கு அருள் செய்யாதது ஏன்? ‘‘அன்றே தடுத்தென்னை ஆண்டு கொண்டாய்’’ என்று தீட்சை கொடுத்து என்னை ஆண்டு கொண்ட நீ, நான் செய்யும் வழிபாட்டிற்கு வாராதிருப்பதென்பது, நீ முன் சொன்ன வார்த்தைக்கு முரணானதே. தான் உமையம்மையை அழைத்தும் வாராதிருப்பதை தன் உணர்வை ‘‘கொண்ட தல்ல என்கை’’ என்ற வார்த்தையால் வெளிப்படுத்துகின்றார்.

‘‘தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்லுவேன்’’ - 32 என்ற இந்த வரிகள் மூலமாக அபிராமி பட்டருக்கு முன்னர் இறைவியானவள் அருளியிருப்பதையும் அதே போல் அபிராமியை வணங்கி அமாவாசையன்று பௌர்ணமியை வரவழைத்து சக்தி திருவருளை, உலகிற்கு நிலை நாட்ட முதலில் கள்ள வாரணர், அமிர்தகடேஸ்வரர், காலசம் ஹார மூர்த்தி இவர்களைத் தொழுது முன்னனுமதி பெற்று (உபாசனையின் நோக்கில் இதை உத்தரவு என்பர்) அதன் பிறகே அபிராமி
அந்தாதியை பாடத் துவங்கியுள்ளார்.

இதற்குச் சான்றாக அபிராமி பட்டர் எழுதிய கள்ளவாரணப் பதிகம், காலசம்ஹார மூர்த்தி பின் முருகு, அமிர்தகடேஸ்வரர் பதிகம் இவற்றோடு சிறப்பாக அபிராமி அம்மை பதிகம் என்று ஸ்ரீவித்யாவின் பாலா என்ற தேவதையை வணங்கியதாகத் தெரிகிறது இப்படி முன்னே உத்தரவு தந்தவாறு (அருள் செய்த) பின்னே அந்தாதி பாடியும், உமையம்மை அமாவாசை அன்று நிலவை, வரவழைப்பாள் என்று அபிராமி சொன்னவாறே நடப்பாள் என்று நம்பிய நிலையில் முப்பதாவது பாடலை பாடும் போது அவருக்கு இருந்த மன நிலையை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்த வரி.

எழுபத்தி ஒன்பதாவது பாடலில் தான் அருள் செய்தாள் ஆனால் அதற்கு முன்னர் அவருடைய மன நிலையில் ‘‘கொண்ட தல்ல என்கை நன்றே’’ என்று நம்பிக்கை சற்று தளர்வதையும் அதே சமயத்தில் உமையம்மை முன் நின்று தான் அருள் தர தயங்குவதாக அறியாமையில் தான் நினைக்கிறார். இது ஒவ்வொரு சராசரி உபாசகனுக்கும் தன் வழிபாட்டு செயல்.

தான் விரும்பிய விளைவைத் தராத போது ஏற்படும் தளர்வேயாகும். அதை மனதில் கொண்டே ‘‘கொண்டதல்ல நன்றே’’ என்று வினவுகிறார் - உமையம்மை காட்சி கொடுப்பது வேறு, அருள்வது வேறு, இவை இரண்டும் வெவ்வேறு செயல்கள் இந்நிலையில் உமையம்மையை தான் காண்கிறார். உமையம்மையின் செயல்பாடான அருள் பிறர் அறிய வெளிப்படாத நிலை இருப்பதை எண்ணி உமையம்மையிடத்திலே முறையிடுகிறார் ‘‘கொண்டதல்ல என் கை நன்றே’’ என்று உமையம்மைக்கு நினைவுறுத்துகிறார். உமையம்மைக்கு நினைவுறுத்த தேவையில்லை என்றாலும் வணங்குகிற பக்தனின் மனதை படம் பிடித்து காட்டுகிறது இப்பாடல். இது ஒவ்வொரு உபாசகனுக்கும் வளர் நிலை தடை என்பதை இவ்வரியின் வழி அறிவுறுத்துகிறார்.

‘‘உனக்கினி நான் என் செயினும்’’

ஸ்ரீ வித்யா உபாசனையில் பின்பற்றப்படும் வழிபாட்டு நெறி  ஸ்ரீவித்யா. சபர்யா பத்ததி என்ற வழிபாட்டு செயல் முறை விளக்க நூல் ஆகும். அதில் கூறியுள்ளபடி குரு பூஜை துவங்கி நமஸ்காரம் வரை அறுபத்தி நான்கு பெரும் பிரிவுகளாக பிரித்து காயத்தினால் செய்யப்பட வேண்டியது, மனதினால் செய்யப்பட வேண்டியது. வாக்கினால் செய்யப்பட வேண்டியது. என்று ஒவ்வொன்றும் செய்ய வேண்டிய நேரம், செய்ய வேண்டிய முறை செய்முறைக்கு தேவையான பொருட்கள் செயல்களினால் தோன்றும் விளைவு போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

அவற்றை முறைப்படி செய்வதே இறை திருவுருவங்கள் குறித்து வழிபடுவோன் செய்ய வேண்டியவைகளாகும். செய்யக் கூடாதவை மாற்றிக்  கொள்ள வேண்டியவை என்று அந்நூலில் குறிப்பிடப்படும் முறையே உமையம்மையைக்  குறித்து செய்ய வேண்டியதாகும். பூஜை முறைகளையே செய்ய வேண்டியவைகளாக சாத்திரம் சொல்லியிருக்கிறது.

‘‘பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே - 6’’

ஆகமத்தின் பெயரையும், பூசைக்கு வைத்து வணங்க வேண்டிய மலர் - கடம்ப மலர் இது பொருளை குறித்து ஆகமத்திலுள்ள விதி மனதினால் தியானிக்க வேண்டிய உருவம்.
ஐந்து மலர்களை அம்பாகக் கொண்டவளும் கரும்பை வில்லாகக் கொண்டவளும், பாசம் அங்குசம், இவைகளை தரித்த நான்கு கைகளை உடையவளும், மூன்று கண்களுடையவளும், சிவந்த ஒளி பொருந்தியவளாகவும், மனதினால் எண்ணி தியானிக்க வேண்டும்.

நடு இரவில் வழிபாடு செய்ய வேண்டும். திரிபுரை என்ற மூலமந்திரம் சொல்லி, மனம் வாக்கு, காயம் என்ற முக்கரணங்களாலும் செய்ய வேண்டியதை நன்கு அறிந்துள்ளார்.

‘‘தாமம், கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுதெமக் கென்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கொளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடிரண்டு  நயனங்களே’’  - 73

என்பதை இப்பாடல் மூலம் அறிய முடிகிறது. இப்படி செய்ய வேண்டியவைகளை நன்கு அறிந்த அபிராமி பட்டர் ,‘‘ உனக்கு இனி நான் என் செய்யினும்’’ என்று ‘‘என்’’ என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறார். சில நேரம் வேண்டியவை கிடைக்கவில்லை என்றால் இறைவியின் மீது கோபம் வரலாம், கோபத்தினாலும் செய்ய மறுக்கலாம். தேவையான மலர் போன்றவை கிடைக்காமலிருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு சொல்லுகிற மந்திரத்தில் தவறுகள் ஏற்படலாம், உறிய காலம் தவறிப் போகலாம், மனதின் பக்குவமின்மையினால் தியானம் சரிவர செய்யவியலாமல் போகலாம். இது ஒவ்வொரு உபாசகனுக்கும் உரிய தடையாகும். இந்த தடையினால் பலன் விளையாது போகலாம். எதிர் பலன் வரலாம் என்று கருதியே உமையம்மையிடம் ‘‘என்’’ செய்யினும் என்ற வார்த்தையைக் குறிப்பிடுகிறார்.


அதன் விளைவு நன்மையாகவே இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, தவறாக செய்யினும், தப்பாக செய்யினும், செய்ய வேண்டியதை செய்யாது விடினும், என்பதையே ‘‘உனக்கு இனி நான் என் செய்யினும்’’ - என்று எதை செய்தாலும் என்று குறிப்பிடுகிறார். அந்த பூசனைக்குரிய பலனை தரவேண்டும். எதிர் விளைவு வரக்கூடாது. என்பதே அவரது நோக்கமாக ‘புரிந்து கொள்ள வேண்டும்.

‘‘நடுக்கடலுள் சென்றே வீழினும் ’’

1 ) அபிராமி பட்டர் உமையம்மையின்  வழிபாட்டில் அறிந்தும், கோபத்தால் செய்த குற்றத்தினால் ஏற்படும் தவறால் துன்பமாகிற கடலுள் சென்று வீழ்ந்தாலும்
‘‘வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமைகள் புதிய தன்றோ’’ - 46 என்கிறார்.

2) பூசனையில் தெரியாது செய்கின்ற  தவறுகளால் அவர் எதிர் பார்த்த விளைவு தோன்றாத ஏக்கத்தால் தோன்றும் தோல்வி கடலுள் விழுந்தாலும். அதனால் ஏற்படும் தீய விளைவுகளாகிய துன்பக் கடலுள் வீழ்ந்தாலும். ‘‘நன்றே வருகினும் தீதே விளைகினும்’’- 95

3) உமையம்மை நேரில் தோன்றி வரமே தந்தாலும் அதை முறையாகப் பெற்று மகிழாமல் ஆசையின் காரணமாக சில வரங்களை பெற்றும் துன்பக்கடலுள் விழுவதையே.
‘‘ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்பாசத்தில் அல்லற்பட இருந்தேனை’’ - 32.

4) சித்தி பெற்ற உபாசகர்களின் உடன் இருந்து பயிலும் பக்குவமற்ற சில சீடர்கள் தன் குருவை பற்றி முழுமையுமாய் புரிந்து கொள்ளாமல் அவரை போல் நடந்து கொள்வது அவரை சரியாக புரிந்து கொண்டதாகக் கருதி தவறாகப் புரிந்து கொண்டு காரண காரியம் அறியாமல் பிறருக்கு தவறாக உபதேசிப்பது மீண்டு செய்வது எனப்படும் இதையே ‘‘மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே’’ -45 எனக் குறிப்பிடுகின்றார்.

உபாசகனுக்கு உமையம்மையோ, குருவோ தோன்றி ஒரு சில அறிவுரைகளைக் கூறியும் அதை தான் முழுவதுமாய் பின் பற்றாமல் பின்னால் இடருக்குள்ளாவது.
உதாரணமாய் யட்சி உபாசகர்களுக்கு ஒரு அளவிற்கு மேல் காது செவிடாவது. தேவையில்லாத மனக் குழப்பங்கள் வரும். இத்தகைய குழப்பத்தை தீர்க்க குருவருள் திருவருள் இருந்தும் சில உபாசனை செயல் முறைகளை செய்யாமலிருந்தால் பின்னாளில் இவ்வினைகளை சந்திக்க நேரிடும். ‘‘நடுக்கடலுள் சென்றே வீழினும் ’ என்கிறார்.

‘‘கரையேற்றுகை நின் திருவுளமே’’

இத்தகைய தவறு, தப்பு, இது போன்ற பல இடையூறுகளுக்கு பிறகு உபாசகனுக்கு உண்டாகும் பலனை பெறும் வழி செய்வது. உமையம்மையின் அருளேயாகும். அதைப் பெறவிடாமல் தவிர்ப்பது அறியாமையே அதை நீக்க.

தீவழி நீக்கி நல் வழி அருள முழுமையுமாய் பெற உமையம்மையிடத்தே வழிகேட்கிறார். ‘‘பண்ணளிக்கும் சொற் பரிமளை’’ - 15 அதற்கு உமையம்மை தாம் பதில் அளித்ததை நமக்கு தெரியப்படுத்துகிறார். ‘‘மண்ணளிக்கும் செல்வமோ பெறுவர்?. மதி வானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியாத முக்தி வீடுமன்றோ?’’ - 15 வாழும் போது மண்ணுலக செல்வமும் இறந்த பின் விண்ணளிக்கும் செல்வமும், அது சலித்த பின் அழியாத முத்தி வீடு பேற்றையும் கேட்க வேண்டும் என்று உமையம்மையே அருளினால் நம்மை பெறச் செய்தாள் தான் உண்டு. அதனால் தான் ‘‘கரையேற்றுகை நின் திருவுளமே ’’என்கிறார்.

ஒரு ஆன்மாவானது உமையம்மையின் வழிபாட்டு நெறியில் கற்று அதன் வழி நின்று நிற்றலின் வழி தோன்றிய அனுபவத்தைப் பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஏழு பிறவி தொடர்ச்சி வேண்டும் என்றார். அத்தகைய தொடர்ச்சி ஒருவருக்கும் இயல்பாக அமையாது. அது இறையருளால் மட்டுமே அமைத்து தரப்படும். அதைத்தான்  

‘‘முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்’’ - 25
‘‘முன் செய் புண்ணியமே ’’- 40
‘‘அன்றே தடுத்து என்னை ஆண்டு
கொண்டாய்’’

என்பதனால் உமையம்மையின் அருள் தனக்கு இருந்ததையும். அந்த அருளினால் தான் இறை அனுபவத்தை விரைவில் பெறவைக்க முடியும் என்பதால் ‘‘கறையேற்றுகை நிந்தன் திருவுளமே’’ என்கிறார். அப்படி அருள் இல்லை என்றால் எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல்

ஏற்டே டொறுக்க அற்தோ
எவ்விதம் உளஞ் சகித் துய்குவேன்
மிகையுந் துரத்த வெம்பிணியுந் துரத்த
வெகுளி யானதுந் துரத்த
மிடியுந் துரத்த நரை திரையும் துரத்த மிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந் துரத்த வஞ்சனையுந் துரத்த
பசியென் பதுந்து ரத்த
பாவந் துரத்த பதிமோகந் துரத்த
பல காரிய முற் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளுந் துரத்த வெகுவாய்
நாவரண்டோடிக் கால் தளர்ந்திரும் என்னை
நமனுந் துரத்து வானோ - (அம்மை பதிகம்)

என்பதனால் மானுடனானவன் தனது இயற்கையான சூழலின்படி இறைவனை நினைக்க வழியில்லை, தானே இறைவியின் தன்மையை உணர வாய்ப்பில்லை, அவள் அருளினால் மட்டுமே சற்று உணர முடியும், சற்று உணர்ந்தாலும், அந்த அருள் ஞானம் வரும்வரை தொடர்ந்தால்  மட்டுமே, அதை பெறுபவர் அதற்கு முயன்றால் மட்டுமே சாத்தியமாகும். ஆகையால் தான் அபிராமி பட்டர் ‘‘கரையேற்றுக நின் திருவுளமே’’ என் முயற்சியினால், அறிவால் இயல்பால், தன்னிடத்துள்ள இயலாமையை கூறி இரக்கத்தை வேண்டுகிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்