SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வ மங்களம் உண்டாகட்டும்!

2019-04-17@ 17:17:20

என் மகன் டிப்ளமோ முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ராணுவத்திற்கு செல்வேன் என்று முரண்டு பிடிக்கிறான். நான்கு முறை செலக்ஷனுக்குச் சென்று சிறுசிறு தவறுகளால் வெளியேறிவிட்டான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளான். தனியார் வேலைக்கு செல்ல மறுக்கிறான். பலவீனமான ஜாதகம் என்று சொல்கிறார்கள். அவனது வாழ்வு சிறக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். பாஸ்கரன், வேலூர் மாவட்டம்.

மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் சனி நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருக்கிறார். பத்தாம் வீட்டிற்கு உரிய செவ்வாய் மறைவு ஸ்தானம் ஆகிய 12ம் வீட்டில் சூரியன், புதன், ராகுவுடன் இணைந்திருக்கிறார். இவரது ஜாதகத்தை பலவீனமான ஜாதகம் என்று கருத முடியாது. போராட்டம் நிறைந்த ஜாதகம் என்று புரிந்துகொள்ளலாம். அவருடைய எண்ணப்படியே ராணுவத்திற்குச் செல்ல தேவையான வசதிகளைச் செய்து தாருங்கள்.

எல்லை பாதுகாப்புப் படை, சிஆர்பிஎஃப், முதலான துணை ராணுவப் பணிகளுக்கும் முயற்சிக்கலாம். அவருடைய ஜாதகத்தின்படி பிறந்த ஊரைவிட்டு தொலைதூரத்தில் பணி செய்யும் அம்சமே நிறைந்திருக்கிறது. அதிலும் செவ்வாய்க்கு உரிய பாதுகாப்புப் பணி என்பது இவருக்கு நிச்சயமாகக் கிடைத்துவிடும். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் முயற்சி செய்துவரச் சொல்லுங்கள். செவ்வாய்தோறும் அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட துதியினைச் சொல்லி வழிபட்டுவரச் சொல்லுங்கள். அவர் விரும்பும் வேலை கிடைத்துவிடும்.

“வடதிசை தன்னில் ஈசன் மகனருட் திருவேல் காக்க
 விடையுடை ஈசன் திக்கில் வேதபோதகன் வேல் காக்க.”


நான் சிறுவயதில் இருந்தே வீட்டில் சண்டையைப் பார்த்து வளர்ந்தவன். 16 மணிநேர வேலைப்பளு காரணமாக எப்பொழுதும் பயமும் பதற்றமும் தொற்றிக் கொள்கிறது. இதனால் சில வருடங்களாக சைக்கோ, பைத்தியம், லூசு என எல்லோராலும் அழைக்கப்பட்டு அவமானப்படுகிறேன். தற்கொலைக்கும் முயன்றுவிட்டேன். இதிலிருந்து விடுதலை பெறுவேனா? வெங்கடேசன், சென்னை.

கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனுடன் கேது இணைந்து வீணான பயத்தினைத் தோற்றுவித்திருக்கிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் தற்கொலை என்பது தீர்வாகிவிடாது. முத்தான கையெழுத்தினை உங்கள் கடிதத்தில் காண முடிகிறது. மனத்தெளிவு இல்லாதவர்களால் இப்படி அழகாகக் கடிதம் எழுத இயலாது. 6 முதல் 15 வயதிற்குள் நீங்கள் பார்த்த சம்பவம் ஒன்று உங்கள் ஆழ்மனதை பாதித்திருக்கிறது. உலக வாழ்வியலில் இதுபோன்ற பிரச்னைகள் சகஜம்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஜென்ம லக்னாதிபதி சனி வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கிறார்.

மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் மனம் திறந்து பேசிவிடுங்கள். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கவலை தேவையில்லை. உங்கள் ஜாதகத்தில் தொழிற் ஸ்தானம் என்பது வலிமையாக உள்ளது. சிறிது காலம் வேலை செய்துவிட்டு அதன்பின்பு சுயமாகத் தொழில் செய்து உங்களால் முன்னேற முடியும். 10ம் வீட்டில் குரு, சுக்கிரன், ராகு ஆகியோரின் இணைவும், ஒன்பதில் சூரியன், புதனின் இணைவும் இதனை உறுதி செய்கிறது. வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வாழ்நாள் முழுவதும் வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். உழைப்பால் உயர்வடையும் ஜாதகம் உங்களுடையது. பழைய சம்பவங்களை மனதில் எண்ணாமல் புதிய வாழ்வினைத் துவக்குங்கள். வளமுடன் வாழ்வீர்கள்.

ஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகளை உடைய என் மூத்த மகன் ஒன்றரை ஆண்டுக்கு முன் வாகன விபத்தில் இறந்துவிட்டான். இரு குழந்தைகளும் என் இளைய மகனுடன் பாசத்துடன் பழகி வருகிறார்கள். குழந்தைகள் நலன் கருதி திருமணம் ஆகாத இளைய மகனுக்கும் கணவனை இழந்து தவிக்கும் மருமகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என எண்ணுகிறேன். குறைகள் ஏதேனும் இருப்பின் அவர்கள் நிறைவுடன் வாழ பரிகாரம் சொல்லுங்கள். மோகனசுந்தரி, திருப்பூர்.

உங்கள் கடிதம் கண்டதும் மெய்சிலிர்த்தது அம்மா. முற்போக்கான சிந்தனையை உடைய உங்களுக்கும், உங்கள் உறவினர்களுக்கும் கோடானுகோடி நமஸ்காரங்கள். மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் இளைய மகனின் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. இருவரின் ஜாதக பலத்தின்படி தற்போது திருமணத்தை நடத்தலாம். அதே நேரத்தில் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் சூரியன், புதன், ராகு ஆகியோரின் இணைவு அவருடைய சிந்தனையில் மாற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது.

உங்கள் பேரனின் மன நிலையில் அதிக கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். பேத்தியின் ஜாதகம் சிறப்பாக உள்ளது. இந்தத் திருமணத்தை ஏதேனும் ஒரு சுப்ரமணிய ஸ்வாமியின் ஆலயத்தில் வைத்து நடத்துங்கள். ஆலயத்தில் அன்றைய தினத்திற்கான அன்னதான செலவினை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்நாள் முழுவதும் உங்கள் மருமகளை கிருத்திகை விரதத்தினை தவறாமல் கடைபிடிக்க வலியுறுத்துங்கள். முருகப்பெருமானின் திருவருளால் அவர்களது வாழ்வினில் சர்வ மங்களமும் உண்டாகட்டும்.

கணவர் இறந்த நிலையில் என் அக்கா தன் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமத்திற்கு இடையில் நன்கு படிக்க வைத்திருக்கிறார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த அவரது மகளுக்கு ராகுகேது தோஷம் உள்ளதென்று கூறி வரும் வரன் எல்லாம் தட்டிப் போகிறது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறப்பது அவ்வளவு பெரிய தோஷமா? அவரது திருமணம் நடைபெற பரிகாரம் கூறுங்கள். சித்ரா, தாராபுரம்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறப்பதால் தோஷம் ஏதும் இல்லை. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமியாருக்கு ஆகாது என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே. கடக ராசியில் பிறப்பவர்களின் ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பார். அதிலும் ஆயில்யத்தில் பிறந்தவர்கள் நல்ல மன உறுதி படைத்தவர்களாக இருப்பார்கள். ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் கேது அமர்ந்திருந்தாலும், லக்னாதிபதி சுக்கிரன் உச்ச பலத்துடன் வெற்றியைத் தரும் 11ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். நினைத்ததை சாதிக்கும் திறன் படைத்தவர். அதே போல் அவரது ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் ராகு அமர்ந்திருந்தாலும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் இரண்டில் அமர்ந்திருப்பது நன்மையைத் தரும் நிலையே.

ராகு உச்ச பலத்துடன் இருப்பதால் அவரது ஜாதகத்தில் எந்தவிதமான தோஷமும் இல்லை. நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது போல் அவரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் எதுவும் கிடையாது. 23.07.2019 வரை அவரது ஜாதகத்தில் சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அதற்குள் மாப்பிள்ளையை முடிவு செய்து விடுவீர்கள். அதனைத் தொடர்ந்து வரும் குரு புக்தியின் காலத்தில் இவரது திருமணம் நல்லபடியாக நடந்து விடும். செவ்வாய்க்கிழமை தோறும் ராகுகால வேளையில் துர்க்கையின் சந்நதியில் எலுமிச்சை விளக்கேற்றி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். கல்யாண மேளச் சத்தம் வீட்டினில் விரைவில் ஒலிக்கும்.

“யாதேவீ ஸர்வ பூதேஷூ மாங்கல்ய ரூபேண சம்ஸ்திதா
 நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ:”


திருமண வயதைத் தாண்டிய எனக்கு நெருங்கிய உறவு முறையில் திருமணம் பேசி பின் நடைபெறவில்லை. ஜாதகத்தில் முன்னோர் சாபம் உள்ளதாகக் கூறுகிறார்கள். வீட்டில் உள்ளவர்களே நான் தரித்திரம் பிடித்தவள் என்றும் ராசியில்லாதவள் என்றும் பேசுவதால் என் தாயார் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள். என்தாயார் கண் முன் என் திருமணம் நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

ஜாதகத்தில் முன்னோர் சாபம் இருந்தால் அதற்கு நீங்கள் என்ன செய்ய இயலும்? பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின் படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. லக்னாதிபதி சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்து அமர்ந்துள்ளது மிகவும் நல்ல நிலையே. லக்னத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களை மிகவும் திறமையானவர் என்பதை எடுத்துரைக்கிறது. குனியக் குனியக் குட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். உங்களை அலட்சியமாகப் பேசுபவர்களின் வார்த்தைகளை தூக்கியெறியுங்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி உறவுமுறையில் வரன் அமையும் வாய்ப்பு நன்றாக உள்ளது. உறவுமுறையில் பேசிய திருமணம் நடைபெறாததன் காரணத்தை நீங்கள் குறிப்பிடவில்லை. அந்த வரனுக்கு இன்னும் திருமணம் முடியாமல் இருந்தால் நீங்கள் மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம்.

அவர் இல்லாவிடினும் உறவுமுறையில் உள்ள வேறொரு நபருடன் இந்த வருட இறுதிக்குள் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வயது கடந்திருந்தாலும் குழந்தை பிறப்பதில் எந்தவிதமான தடையும் உண்டாகாது. புதன்கிழமை தோறும் ஒப்பிலியப்பன்கோயிலுக்குச் சென்று பெருமாளைச் சேவித்த பின்பு உப்பில்லாத உணவினைச் சாப்பிட்டு விரதத்தினை பூர்த்தி செய்யுங்கள். தொடர்ந்து 17 வாரங்களுக்கு அதாவது நான்கு மாத காலத்திற்கு புதன்கிழமை தோறும் இந்த விரதத்தினை கடைபிடியுங்கள். திருமணத்தை அவரது சந்நதியிலேயே நடத்திக்கொள்வதாக உங்கள் பிரார்த்தனை அமையட்டும். கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி ஒப்பிலியப்பனை வணங்கிவர திருமணத்தடை அகலக் காண்பீர்கள். உங்களை ராசியில்லாதவள் என்று சொன்னவர்கள் உங்கள் ராசியைக் கண்டு வியக்கும் அளவிற்கு வாழ்ந்து காட்டுவீர்கள். தாயாரின் கண் குளிர உங்கள் திருமணம் நடைபெறும். கவலையே தேவையில்லை.

“ஸ சதுர்முக ஷண்முக பஞ்சமுக ப்ரமுகாகில தைவத மௌலிமணே
 சரணாகத வத்ஸல ஸாரநிதே பரிபாலய மாம் வ்ருஷசைல பதே.”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும். சர்வ மங்களம் உண்டாகட்டும்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 03-07-2020

  03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • petroLLL

  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

 • pakisthN_11

  கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

 • mask_glovbeess1

  கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

 • 26-06-2020

  26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்