SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

2019-04-17@ 16:25:25

144. போஜனாய நமஹ (Bhojanaaya namaha)

“முருகா! முருகா!” என்று வேகமாக அழைத்தபடி கைலாயத்துக்குள் நுழைந்தார் விஸ்வாமித்ரர். “வாருங்கள் மாமுனியே!” என வரவேற்றார் முருகன். “எனக்கொரு சந்தேகம். அதை முதலில் நீ தீர்த்து வை!” என்றார் விஸ்வாமித்ரர். “என்ன சந்தேகம்?” என்று கேட்டார் முருகன். “என் கதையை முதலில் உனக்கு நினைவூட்டுகிறேன்! அதன்பின் சந்தேகத்துக்கு வருகிறேன்!” என்று சொன்ன விஸ்வாமித்ரர், தனது பழைய வரலாற்றை நினைவுகூர்ந்தார்.

முன்னொரு சமயம், ஏதோ சில காரணங்களால்  மழை பொழியவில்லை. அதனால் பூமியில் பெரும் வறட்சி ஏற்பட்டு, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நிலை உண்டானது. அவ்வறட்சிக் காலத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக உண்ண உணவின்றிக், குடிக்கத் தண்ணீரின்றி நான் தவித்தேன். என்னால் பசியையும் தாகத்தையும் அடக்க முடியவில்லை. உண்பதற்கு ஏதாவது உணவு கிடைக்காதா என ஏங்கத் தொடங்கினேன்.

அப்போது ஒரு மாமிசக் கடையைக் கண்ட நான், அந்தக் கடைக்காரனிடம் மாமிசத்தை வாங்கிச் சாப்பிட்டாவது பசியைப் போக்கிக் கொள்ளத் தீர்மானித்தேன். ஆனால் பகல் பொழுதில் ஊரார் பார்க்கும் வேளையில் மாமிசக் கடையில் போய் நிற்க எனது மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் அன்று மாலை போர்வையைப் போர்த்திக் கொண்டு அந்தக் கடைக்குச் சென்று நாய் மாமிசம் கொஞ்சம் தருமாறு கேட்டேன். ஆனால் கடைக்காரன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். “ஐயோ! முனிவரே! உங்களுக்கு மாமிசத்தைக் கொடுத்தால், எனக்குப் பாபம் ஏற்படும். நான் நரகத்துக்குச் செல்ல நேரிடும்! நான் தர மாட்டேன்! என்னை மன்னித்து விடுங்கள்!” என்று கதறினான்.

அன்று இரவு அவன் கடையை மூடிவிட்டு உள்ளேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். மீண்டும் கடைக்குள் நுழைந்து மாமிசத்தை எடுத்து உண்ணப் பார்த்தேன். ஆனால் கடைக்காரன் விழித்துக் கொண்டான். என்னைக் கண்டவுடன், “ஏ இந்திரனே! உனக்குக் கருணையே இல்லையா? நீ மழை பொழியாததால் பூமியில் விளைச்சல் இல்லை. மக்கள் பசி பட்டினியால் வாடுகிறார்கள். மகா முனிவரான விஸ்வாமித்ரர் நாய் மாமிசத்தை உண்ணும் நிலைக்கு வந்துவிட்டார்! உடனடியாக மழையைக் கொடு!” என்று இந்திரனை நோக்கி உரக்கச் சொன்னார்.

அடுத்த நொடியே மழை பொழியத் தொடங்கி விட்டது. ஊரிலுள்ள ஆறுகள் குளங்கள் குட்டைகள் ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. அருகிலிருந்த நதிக்குச் சென்று நீரைப் பருகி என் தாகத்தைத் தீர்த்துக் கொண்டேன். இவ்வரலாற்றை முருகனிடம் சொன்ன விஸ்வாமித்ரர், “முருகா! நான் தமிழகத்துக்குச் சென்றிருந்தேன். திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வார் என்றொரு யோகி வாழ்ந்ததாகவும், அவர் ஒரு சொட்டு தண்ணீர் அருந்தாமல், ஒரு வாய் உணவு உண்ணாமல் முப்பத்திரண்டு ஆண்டுகள் புளியமரப் பொந்தில் யோகத்தில் அமர்ந்திருந்ததாகவும் மக்கள் கூறினார்கள்.

என்னால் உணவின்றிப் பன்னிரண்டு வருடங்களைக் கழிக்க முடியவில்லை. ஆனால் முருகா உனக்கு மிகவும் விருப்பமான பூமியாகிய தமிழகத்தில் நம்மாழ்வார்
என்பவர் முப்பத்திரண்டு  ஆண்டுகள் உணவு, தண்ணீர் இன்றி வாழ்ந்தாரே! அது எப்படி?” என்று கேட்டார்.

“உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும்
எல்லாம் கண்ணன் எம்பெருமான்”

என்று நம்மாழ்வாரே பாடிய படி, கண்ண பிரானையே தனக்கு உண்ணும் உணவாகவும், தாகம் தீர்க்கும் தண்ணீராகவும், மெல்லும் வெற்றிலையாகவும் கொண்டிருந்தபடியால், அவருக்கு வேறு உணவோ, தண்ணீரோ, வெற்றிலையோ தேவைப்படவில்லை! திருமால் தனது பக்தர்களுக்குத் தானே தாரக, போஷக, போக்யங்களாக இருப்பதால் அந்த பக்தர்களுக்குத் தனியாக சோறு, தண்ணீர், வெற்றிலை என எதுவும் தேவைப்படுவதில்லை!” என்று விடையளித்தார் முருகன்.

இவ்வாறு தன் மெய்யடியார்களுக்குத் திருமாலே உணவாக இருப்பதால், ‘போஜனம்’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 144-வது திருநாமம்.
“போஜனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் தனது அழகையும் குணங்களையும் உணவாகத் தந்து அவர்களை மகிழ்விப்பார்.

145. போக்த்ரே நமஹ  (Bhokthre namaha)

திருமலைக்கு ஸ்ரீநிவாசப் பெருமாள் வருவதற்கு முன், அம்மலையில் ஒரு வேப்ப மரத்தின் வடிவில் பெருமாள் எழுந்தருளியிருந்தார். மரத்தின் வடிவிலுள்ள பெருமாளுக்கு அங்கு வாழ்ந்த வேடன் ஒருவன் தினமும் தேனும் தினைமாவும் சமர்ப்பிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். பெருமாளுக்குச் சமர்ப்பித்த பின், அவர் அமுது செய்த பிரசாதமாகக் கருதி, அந்தத் தேனையும் தினைமாவையும் அவன் உட்கொள்வான்.

அவனுக்கு ஒரு மகன் இருந்தான். தன்னைப் போலவே தன் மகனையும் பக்தி உள்ளவனாக வளர்த்தான் அந்த வேடன். “நீ பெருமாளுக்கு நிவேதனம் செய்யாமல் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தக் கூடாது!” என்று சொல்லியே தன் மகனை வளர்த்தான். ஒருநாள் வேடனும் அவன் மகனும் பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகத் திருமலைக்குச் சென்றார்கள். வேடன் தனது பையைப் பிரித்துப் பார்த்தபோது, அதில் தினைமாவு மட்டுமே இருந்தது. தேனைக் கொண்டு வர மறந்துவிட்டான். “மகனே! இங்கேயே இரு
இம்மலையிலுள்ள தேன் கூடுகளுள் ஒன்றில் இருந்து தேன் கொண்டு வருகிறேன்!” என்று சொல்லிவிட்டு வேடன் சென்றான். வெகுதூரம் சென்றும் அவனுக்குத் தேன் கிடைக்கவில்லை.

தினைமாவோடு மரத்தடியில் காத்திருந்த சிறுவனுக்கோ பசி தாங்கவில்லை. “ஏழுமலையானே! இன்று தேன் கிடைக்காததால் தினைமாவை மட்டும் உனக்குச் சமர்ப்பிக்கிறேன்!” என்று பெருமாளுக்கு வெறும் மாவை நிவேதனம் செய்துவிட்டு அந்தச் சிறுவன் அதை உண்ணத் தொடங்கினான். ஒரு பிடி மாவை அவன் வாயில் போட்டுக் கொண்டபோது, அங்கே தேனுடன் வேடன் வந்துவிட்டான். பெருமாளுக்குச் சமர்ப்பிக்காமலேயே தினைமாவைத் தன்மகன் உட்கொள்வதாக எண்ணிய வேடன், சிறுவனின் தலையை வெட்டுவதற்காகத் தன் வாளை உருவினான்.

அப்போது மரத்தைப் பிளந்து கொண்டு அங்கே ஸ்ரீநிவாசப் பெருமாள் தோன்றினார். நீலமேகம் போன்ற நிறத்துடனும், கௌஸ்துபம், வைஜயந்தி வனமாலை உள்ளிட்ட அணிகலன்களோடும், சங்கு சக்கரங்களைக் கையில் ஏந்தியபடியும் வேடன்முன் நின்ற ஸ்ரீநிவாசன், “அந்தச் சிறுவன் பக்தி என்னும் தேன் கலந்த தினைமாவை எனக்குச் சமர்ப்பித்துள்ளான். அதை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன்!” என்று கூறினார். மேலும், “பக்தியோடு இலையோ, பழமோ, புஷ்பமோ, தண்ணீரோ எதைச் சமர்ப்பித்தாலும் நான் அதை ஏற்பேன். இவை எதையும் சமர்ப்பிக்க முடியாவிட்டால், என் பக்தன் கண்ணீரை மட்டும் சமர்ப்பித்தாலும் கூட போதும்! நான் அதை ஏற்று அருள்புரிவேன்!” என்றார்.

இவ்வாறு வேடனுக்கும் அவன் மகனுக்கும் பெருமாள் திருமலையில் அருள்புரிந்த நாள் ஒரு புரட்டாசி மாத சனிக்கிழமை ஆகும். இச்சம்பவத்தின் நினைவாகத் தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் நம் வீடுகளில் மாவிளக்கு ஏற்றுகிறார்கள். அந்த வேடன் சமர்ப்பித்த தினைமாவுக்குப் பதிலாக அரிசிமாவும், தேனுக்குப் பதிலாக வெல்லமும் கலந்து அதன்மேல் திரியிட்டு விளக்கேற்றுகிறோம். “ச்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீநிவாஸே” என்று ராமாநுஜர் கூறியபடி, திருமலை என்னும் மலைக்கு மேல் தீபம் போல் திருமால் விளங்குவதைக் குறிக்கும் விதமாக, மலைபோல் அரிசி மாவையும் வெல்லத்தையும் வைத்து, அதன்மேல் மாவிளக்கு ஏற்றுகிறோம்.

இவ்வாறு பக்தியுடன் தனது அடியார்கள் சமர்ப்பிக்கும் பண்டங்களை அமுது செய்து அவர்களுக்கு அருள்புரிவதால், திருமால் ‘போக்தா’ என்றழைக்கப்படுகிறார். ‘போக்தா’ என்றால் உண்பவர் என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 145-வது திருநாமம். “போக்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியவர்கள் சமர்ப்பிக்கும் அனைத்துப் பொருட்களையும் திருமால் மனமுவந்து ஏற்றுக் கொண்டு அருள்புரிவார்.

146. ஸஹிஷ்ணவே நமஹ  (Sahishnave namaha)

ராமாநுஜருக்கு முதலியாண்டான், நடாதூர் ஆழ்வான் என இரண்டு மருமகன்கள் இருந்தார்கள். அவர்களுள் நடாதூர் ஆழ்வான் என்பவருடைய பேரன் வரதகுரு. வரதகுரு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நதியில் தினமும் வேத பாராயணம் செய்து வந்தார். ஒருநாள் அவர் வேத பாராயணம் செய்து கொண்டிருக்கையில், அர்ச்சகர் பெருமாளுக்கு நிவேதனம் செய்வதற்காகப் பால் எடுத்து வந்தார். அடுப்பில் இருந்து சுடச்சுடக் கொண்டு வந்ததால், பாலில் இருந்து ஆவி பொங்கி வந்து கொண்டிருந்தது.

அதைக் கண்ட வரதகுரு, “சுவாமி!” என்று அர்ச்சகரை அழைத்து, “அந்தப் பாலை இங்கே தாருங்கள்!” என்றார். “இது பெருமாளுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பால்!” என்றார் அர்ச்சகர். “அது தெரியும்! இங்கே தாருங்கள்!” எனக் கேட்டு வாங்கினார் வரதகுரு. ஒரு தாய் எப்படிக் குழந்தைக்குப் பாலை ஆற வைத்துக் கொடுப்பாளோ, அது போல் பாலை ஆற்றி, பொறுக்கக் கூடிய சூட்டுக்கு வந்தபின் அர்ச்சகரிடம் கொடுத்து, “இப்போது பெருமாளுக்கு இதைச் சமர்ப்பிக்கலாம்!” என்றார்.

“ஏன் பாலை ஆற வைத்தீர்கள்?” என்று கேட்டார் அர்ச்சகர். அதற்கு வரதகுரு, “பெருமாள் எவ்வளவு மென்மையான, அழகான திருமேனியை உடையவர்? இவ்வளவு சூடான பாலைக் கொடுத்தால் அவரது நாவைச் சுட்டு விடாதா?” என்று கேட்டார். “நீங்கள் வேதங்களை நன்கு கற்றவர். எம்பெருமானின் நாவில் இருந்து தான் நெருப்பு தோன்றியது என்கிறது வேதம். அவ்வாறிருக்க அவரது நாவை இந்தப் பால் எப்படிச் சுடும்? அவர் பரம்பொருள் அல்லவா?” என்று கேட்டார் அர்ச்சகர்.

“அவனது பெருமைகளை நோக்குகையில், அவனது நாவை இந்தப் பால் சுடாது என உணர முடிகிறது. எனினும் அவனது வடிவழகையும் மென்மையையும் நோக்குகையில், ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டுவது போன்ற பாசத்தைத் தான் காட்ட முடிகிறதே ஒழிய, அவனது பெருமைகளும் வலிமையும் நம் நெஞ்சில் நிற்பதில்லை!” என்று சொன்னார் வரதகுரு.
வரதகுரு ஆற்றிக் கொடுத்த பாலைப் பெருமாளிடம் கொண்டு சென்றார் அர்ச்சகர். அப்போது “அம்மா!” என்றொரு குரல்! எங்கிருந்து அக்குரல் வந்ததென்று ஆவலுடன் எல்லோரும் பார்த்தார்கள். என்ன விந்தை? வரதராஜப் பெருமாளே, வரதகுருவை உரத்த குரலில் “அம்மா!” என்று அழைத்திருக்கிறார்.

வியந்து போன அர்ச்சகர், “இந்த வரதகுருவை நீ ‘அம்மா’ என்று அழைத்தாயா?” எனப் பெருமாளிடம் கேட்டார். “அனைத்துலகங்களுக்கும் தாயாகவும் தந்தையாகவும் நான் இருக்கிறேன். அனைத்துயிர்களிடமும் நான் அன்பு காட்டிய  போதும், என்மீது யாரும் இத்தகைய தாய்ப்பாசத்தைக் காட்டியதில்லை. ஆனால் அத்தகைய பாசத்தை இந்த வரதகுரு என்மீது இப்போது காட்டியபடியால், அவரை நான் அம்மா என்றழைத்தேன்!” என்றார் வரதராஜப் பெருமாள்.

அன்று முதல், வரதகுரு என்ற பெயர் மறைந்து ‘நடாதூர் அம்மாள்’ என்றே அனைவரும் அவரை அழைக்கத் தொடங்கினார்கள். (அவர் அவதரித்த ஊர் நடாதூர் என்பதால் பெருமாள் தந்த  ‘அம்மா’ என்ற பெயரோடு அவர் ஊரை இணைத்து நடாதூர் அம்மாள் என்று வழங்கப்பட்டார்.) மறுநாள் அந்த அர்ச்சகர் நடாதூர் அம்மாளிடம், “சுவாமி! எனக்கொரு சந்தேகம். பெருமாள் மேல் அன்பு கொண்டு நீங்கள் பாலை ஆற வைத்து அவருக்குச் சமர்ப்பித்தீர்கள். ஆனால் இத்தனை நாட்களாக நாங்கள் சூடான பாலைத்தான் பெருமாளுக்குச் சமர்ப்பித்து வந்தோம். அதனால் பெருமாள் கோபம் கொண்டு எங்களுக்கு ஏதாவது தண்டனை தருவாரா?” என்று கேட்டார்.

அதற்கு நடாதூர் அம்மாள், “நிச்சயம் தண்டிக்க மாட்டார். நாம் தினமும் பூஜையைத் தொடங்குகையில் பதினாறு விதமான உபசாரங்கள் செய்யப் போவதாகச் சொல்லிவிட்டு, முடிவில் முப்பத்திரண்டு விதமான அபசாரங்களைத் தான் செய்கிறோம். ஆனால் அதையும் பெருமாள் பொறுத்தருள்கிறார். அவ்வாறே சூடான பாலை நீங்கள் சமர்ப்பித்தாலும் அதற்காகப் பெருமாள் கோபம் கொள்ள மாட்டார். பயப்படாதீர்கள்! தண்ணீருக்கும் சந்திரனுக்கும் எப்படிக் குளிர்ச்சி என்பது இயற்கையாகவே உள்ளதோ, அது போல பெருமாளுக்கும் பொறுமை எனும் குணம் இயற்கையாகவே உள்ளது!” என்று கூறினார்.

‘ஸஹிஷ்ணு:’ என்றால் பொறுத்துக் கொள்பவர் என்று பொருள். தனது பக்தர்கள் அறிந்தோ அறியாமலோ, முன்னும் பின்னுமாகச் செய்யும் பூஜைகளையும், அவற்றிலுள்ள பிழைகளையும் பொறுத்துக் கொள்வதால் ‘ஸஹிஷ்ணு:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே என்பது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 146-வது திருநாமம். “ஸஹிஷ்ணவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த அனைத்துப் பிழைகளையும் திருமால் மன்னித்து, அவர்களை நல்வழிப் படுத்துவார்.

147. ஜகதாதிஜாய நமஹ (Jagadhaadhijaaya namaha)

கண்ணனின் 16,008 மனைவிகளுள் ஜாம்பவதி என்றொருத்தி இருந்தாள். கண்ணனை மணம்புரிந்து நெடுநாட்கள் ஆகியும் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை. தன் கவலையைக் கண்ணனிடம் அவள் தெரிவித்தாள். “நீ கவலைப் படாதே! நான் கைலாயத்துக்குச் சென்று, பரமசிவனைக் குறித்துத் தவம் புரிந்து குழந்தை வரம் பெற்று வருகிறேன்!” என்று  சொன்னான் கண்ணன். கைலாயத்தை அடைந்த கண்ணன் சிவபெருமானைக் குறித்துப் பிள்ளை வரம் வேண்டித் தவம் புரிந்தான். கண்ணன் தவம் செய்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவன் கண்ணன்முன் தோன்றினார்.

“என்னைக் குறித்து நீ ஏன் தவம் செய்கிறாய்?” என்று கேட்டார். அதற்குக் கண்ணன், “பிள்ளை வரம் வேண்டித் தவம் புரிகிறேன். எனக்கும் ஜாம்பவதிக்கும் குழந்தை பிறந்தால் அதற்கு உன் பெயரையே சூட்டுகிறேன்!” என்றான். “இது என்ன லீலை? புருஷோத்தமனான உனக்கு நான் குழந்தை வரம் அருள வேண்டுமா?” என்று கேட்டார் சிவபெருமான்.
கண்ணன் அப்போது பழைய வரலாறு ஒன்றை நினைவுகூர்ந்து, இவ்வாறு சொன்னான்: பரமசிவனே! முன்பு உலகை நான் படைத்த போது பிரம்மாவைப் படைப்புக் கடவுளாகவும், உன்னை அழிக்கும் கடவுளாகவும் நியமித்தேன். பக்தர்கள் கேட்டவுடன் நீ வரம் தருவதால் ‘ஆசுதோஷி’ என்ற பட்டமும் உனக்களித்தேன். அப்போது நீ என்னிடம் ஒரு வரம் கேட்டாயே நினைவிருக்கிறதா?

“நாராயணா! எனக்கு ‘ஆசுதோஷி - கேட்டதும் வரம் தருபவன்’ என்று பட்டமளித்தால் மட்டும் போதாது. நான் வரம் தருபவன் என்பதை உலகத்தார் அறியும் வண்ணம் நீ ஒருமுறை என்னிடம் வந்து வரம் கேட்க வேண்டும்! நீ கேட்கும் வரத்தை நானும் அளிக்க வேண்டும்! அப்போது தான் நான் வரம் தர வல்லவன் என மக்கள் உணர்வார்கள்!” என்று என்னிடம் நீ வரம் கேட்டாய். “தகுந்த நேரத்தில் உன்னிடம் வந்து வரம் வேண்டுகிறேன்!” என நானும் உறுதியளித்தேன்.

இவ்வரலாற்றைச் சொன்ன கண்ணன், “இப்போது நான் உனக்களித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகத்தான் இங்கே தேவர்கள் மற்றும் முனிவர்கள் முன்னிலையில் உன்னிடம் வரம் கேட்டு நிற்கிறேன்!” என்றான். வியந்து போனார் பரமசிவன். “என்ன ஒரு எளிமை! எனக்கு அளித்த வாக்கைக் காப்பதற்காகவும், நான் வரம் தருபவன் என்பதை உலகுக்கு உணர்த்துவதற்காகவும், உன்னைக் குறைத்துக் கொண்டு என் முன்னே வந்து நிற்கிறாயே என்ற பரமசிவன், கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொன்னார்:

“க இதி ப்ரஹ்மணோ நாம ஈசோஹம் ஸர்வதேஹனாம் | ஆவாம் தவாங்கஸத்பூமௌ தஸ்மாத் கேசவநாமவான் ||”

   ‘க’ என்பது பிரம்மாவைக் குறிக்கும். ‘ஈச’ என்பது சிவனாகிய என்னைக் குறிக்கும். ‘க’, ‘ஈச’ இருவரையும் படைத்தவனான நீ (க + ஈச + வ) ‘கேசவன்’ எனப்படுகிறாய். எங்களைப் படைத்ததோடு மட்டுமின்றி, மும்மூர்த்திகளுள் ஆக்கும் பதவியையும், அழிக்கும் பதவியையும் முறையே பிரம்மாவுக்கும் எனக்கும் அளித்தாய். அதுமட்டுமின்றி, எங்களுக்கு இடையே விஷ்ணு என்னும் காக்கும் தெய்வமாகவும் நீயே அவதரித்தாய். இத்தனைப் பெருமைகளை உடையவனான நீ உன் எளிமையை எங்களுக்கு உணர்த்துவதற்காக என் முன் வரம் வேண்டி நிற்கிறாய்!” என்றெல்லாம் சொல்லிப் பலவாறு கண்ணனைத் துதித்தார் பரமசிவன்.

அதன்பின் கண்ணன் துவாரகைக்குத் திரும்பியவாறே, ஜாம்பவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்குப் பரமசிவனின் பெயர்களுள் ஒன்றான ‘சாம்பன்’ என்னும் பெயரைச்
சூட்டினான் கண்ணன். இவ்வரலாற்றில் பரமசிவன் குறிப்பிட்டபடி, உலகைத் தோற்றி, அதற்குப் படைப்புக் கடவுளாகப் பிரம்மாவையும், அழிக்கும் கடவுளாகச் சிவனையும் திருமால் நியமித்தார். ‘ஜகத்’ என்றால் உலகம். ‘ஆதி’ என்றால் ஆதிகாலம். ‘ஜ’ என்றால் தோன்றியவர். ‘ஜகத் + ஆதி + ஜ = ஜகதாதிஜ:’ என்றால், உலகின் ஆதிக் காலத்தில், பிரம்மா, சிவன் இருவரையும் படைத்துவிட்டு, அவர்களுக்கு நடுவே விஷ்ணு என்னும் வடிவத்தில் தோன்றியவர் என்று பொருள். ‘ஜகதாதிஜ:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 147-வது திருநாமம். “ஜகதாதிஜாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல குழந்தைகள் பிறக்கும் படித் திருமால் அருள்புரிவார்.

148. அநகாய நமஹ (Anaghaaya namaha)

 முண்டகோபநிஷத்தில் ஜீவாத்மா - பரமாத்மா பற்றி அழகான உருவகம் ஒன்று வருகிறது:

“த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா
ஸமானம் வ்ருக்ஷம் பரிஷஸ்வ ஜாதே |
தயோ அன்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி
அனச்னன் அன்ய: அபிசாகசீதி ||”

இந்த மந்திரத்தின் பொருள் - ஒரு பிப்பல மரம். அந்த மரத்தின் கிளையில் அழகான சிறகுகளை உடைய இரண்டு பறவைகள் அமர்ந்திருக்கின்றன. இரு பறவைகளும் நல்ல நண்பர்கள். அவற்றுள் ஒரு பறவையானது, அந்த மரத்திலுள்ள பழங்களை எல்லாம் ஆசையோடு உண்கிறது. அவ்வாறு உண்பதால் அப்பறவை இளைத்துக் கொண்டே போகிறது. மற்றொரு பறவையோ அம்மரத்திலுள்ள பழங்களைச் சாப்பிடவில்லை. அது நன்கு புஷ்டியாகவும் ஆனந்தமாகவும் இருக்கிறது.

எப்போதும் பிரம்மம், முக்தி, ஆன்மா என்றே பேசும் உபநிஷத் திடீரென்று மரம் என்றும் பறவை என்றும் குழந்தைகளுக்குக் கதை சொல்வது போல் சொல்கிறதே! என்ன காரணம்? இந்தக் கதை ஓர் உருவகம். இதற்குள் பெரிய தத்துவம் இருக்கிறது. உருவகம் குறிப்பிடும் பொருள் பிப்பல மரம் உடல் மரத்திலுள்ள பழங்கள், நம் கர்ம வினைகளின் பலன்கள் பழத்தை உண்ணும் பறவை ஜீவாத்மா பழத்தை உண்ணாத பறவைபரமாத்மா நம் உடலாகிய பிப்பல மரத்தில் ஜீவாத்மா, பரமாத்மா என்னும் இரு பறவைகள் வசிக்கின்றன. இந்த உடலானது, நமது பாப புண்ணியங்களாகிய முன்வினைகளின் படியாக ஏற்பட்டது.

அதனால் அந்தப் பாப புண்ணியங்களின் பலன்களே இவ்வுடலாகிய மரத்தில் பழுத்த பழங்கள். பரமாத்மா இவ்வுடலுக்குள் இருந்தாலும், இந்த சரீரத்தோடு தொடர்புடைய பாப புண்ணியங்களால் தீண்டப்படாமல் எப்போதும் பரிசுத்தமாகவே உள்ளார். ஆனால் ஜீவாத்மாவோ முன்வினைப் பயன்களாகிய பழங்களை உண்டு கொண்டே இருக்கிறார். அதனால் இளைத்து விடுகிறார். இவற்றை உண்ணாத பரமாத்மா எப்போதும் தூய்மையாகவும், புஷ்டியாகவும் இருக்கிறார். இதுவே முண்டகோபநிஷத் கூறும் தத்துவம்.
முண்டகோபநிஷத் விளக்கியது போல், வினைப்பயன்கள் உள்ளிட்ட எந்த தோஷங்களாலும் தீண்டப்படாத பரமாத்மாவாகத் திருமால் திகழ்வதால் ‘அனக:’ என்றழைக்கப்படுகிறார். ‘அக:’ என்றால் தோஷம் என்று பொருள். ‘அனக:’ என்றால் தோஷங்களற்றவர் என்று பொருள்.

அகோபில நரசிம்மரைப் பாடுகையில், திருமங்கையாழ்வார்,

“அங்கண் ஞாலம் அஞ்ச அங்கோர் ஆளரியாய்
அவுணன்
பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன் இடம்”

என்று பாடினார். அதாவது, “இரணியனின் மார்பைத் தன் நகங்களால் கிழித்து, அந்த ரத்தக் கறையோடு திகழும் புனிதன்” என்று நரசிம்மரைப் போற்றுகிறார். பொதுவாக ரத்தக்கறை படிந்தவர்களை அசுத்தமானவர்கள் என்றுதான் சொல்வோம். ஆனால் இறைவனோ ரத்தக்கறை படிந்தாலும் புனிதனாகவே விளங்குகிறார். ஏனெனில் ரத்தக் கறையிலுள்ள தோஷங்கள் அவரைப் பாதிப்பதில்லை. இவ்வாறு தோஷங்களற்றவராகத் திருமாலைக் காட்டும் ‘அனக:’ என்னும் திருநாமம் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 148-வது
திருநாமமாக விளங்குகின்றது. “அனகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் மனங்கள் எப்போதும் தூய்மையாக இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

149. விஜயாய நமஹ (Vijayaaya namaha)

மகாபாரதப் போர் நடந்து கொண்டிருக்கிறது. “பத்தாம் நாள் போரின் முடிவில், பீஷ்மர் அம்புப் படுக்கையில் சாய்ந்தார்!” என்னும் அதிர்ச்சிச் செய்தியைத் திருதராஷ்டிரனிடம் வந்து சொன்னான் சஞ்சயன். திடுக்கிட்டுப் போன திருதராஷ்டிரன், “குருக்ஷேத்ரப் போர்க்களத்தில் என்ன ஆயிற்று? விவரமாகக் கூறு! என்று கேட்க, அதுவரை நடந்த சம்பவங்களை எல்லாம் விவரிக்கத் தொடங்கினான் சஞ்சயன். மனக்கலக்கத்தை அடைந்த திருதராஷ்டிரன், “போரில் யார் வெல்வார்கள் என்று நீ நினைக்கிறாய்?” என்று
சஞ்சயனிடம் கேட்டான்.

பாண்டவர்கள் தான் வெல்லப் போகிறார்கள் என்பது சஞ்சயனுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியும். ஆனால் கௌரவர்கள் தோற்பார்கள் என்றோ, பாண்டவர்களே வெல்வார்கள் என்றோ திருதராஷ்டிரனிடம் நேரடியாகச் சொல்லச் சஞ்சயனுக்கு மனம் வரவில்லை. எனவே குறிப்பால் அதை உணர்த்தும் விதமாக ஒரு ஸ்லோகத்தைச் சொன்னான்:

“யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தநுர்தர: |
தத்ர அ: விஜயோ பூதி: த்ருவாநீதி: மதி: மம ||”
(இதுவே கீதையின் நிறைவு ஸ்லோகமாகும்.)

அதாவது, “அறிவுள்ள, அறிவற்ற பொருள்களையும், அவற்றின் இருப்பையும், அனைத்துவிதச் செயல்பாடுகளையும் அடக்கி ஆளும் யோகேஸ்வரனான கண்ணபிரானும், கையில் வில்லையும் மனத்தில் கண்ணனின் திருவடிகளையும் பிடித்திருக்கும் அர்ஜுனனும் எங்கே இருக்கிறார்களோ, அங்கே தான் அதிர்ஷ்டம், வெற்றி, செல்வம், நீதி என அனைத்தும் இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து!” என்று திருதராஷ்டிரனிடம் கூறினான் சஞ்சயன்.

தனது மகன்களான கௌரவர்கள் அழியப் போகிறார்கள் என்றும், கண்ணனின் ஆதரவு இருப்பதால் பாண்டவர்களே வெல்லப் போகிறார்கள் என்றும் சஞ்சயனின் கூற்றைக் கொண்டு உணர்ந்து கொண்டான் திருதராஷ்டிரன். இதிலிருந்து கண்ணன் எந்தப் பக்கம் இருக்கிறானோ, அங்கே வெற்றி நிச்சயம் என்பது தெரிகிறதல்லவா? இவ்வாறு தன்னைச் சார்ந்த தன் அடியார்களுக்கு விஜயமாகிய வெற்றியைத் தருவதால், திருமால் ‘விஜய:’ என்றழைக்கப்படுகிறார்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 149-வது திருநாமமாகும். பாண்டவர்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில், குந்தி தேவி, தனது பிள்ளைகளோடு ப்ருகு முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றிருந்தாள். பாண்டவர்கள் ஒவ்வொருவராக ப்ருகு முனிவரை விழுந்து நமஸ்கரித்தார்கள். அர்ஜுனன் நமஸ்கரித்த போது, “நீ அறுபதில் நட்சத்திரமாக விளங்குவாய்!” என ஆசீர்வாதம் செய்தார்.

ப்ருகுவின் கூற்று குந்திக்கு அப்போது புரியவில்லை. வியாசரிடம் வந்து இச்செய்தியைச் சொல்லி, “ப்ருகு சொன்னதற்கு என்ன பொருள்?” என்று வினவினாள். அதற்கு வியாசர், “அறுபது என்பது பிரபவ, விபவ... எனத் தொடங்கி வரும் அறுபது வருடங்களைக் குறிக்கும். நட்சத்திரங்கள் மொத்தம் இருபத்தேழு. எனவே ‘அறுபதில் நட்சத்திரம்’ என்றால் அந்த அறுபது வருடங்களுள் இருபத்தேழாவது வருடமான ‘விஜய’ என்னும் வருடம் என்று பொருள். அறுபதுள் நட்சத்திரமாக விளங்குவாய் என்றால் விஜயனாக விளங்குவாய் என்று பொருள்!” என்று விளக்கினார்.

பிருகு முனிவர் ஆசீர்வாதம் செய்ததற்கேற்ப அர்ஜுனனும் விஜயனாக விளங்கினான். ஆனால் அவன் ‘விஜயனாக’ இருந்தமைக்குக் காரணம் யாதெனில், ‘விஜயனான’ கண்ணன் எப்போதும் அவனோடு இருந்து அவன் ‘விஜயம்’ பெறும்படி அனுக்கிரகம் செய்ததே ஆகும். நாமும் “விஜயாய நமஹ” என்று தினமும் சொல்லி வந்தால், திருமால் நமக்கு வாழ்வில் அனைத்து விதமான வெற்றிகளையும் அருளுவார்.

திருக்குடந்தை டாக்டர் உ.வே வெங்கடேஷ்

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்