SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேதனை நீக்கி நிம்மதி அருளும் கைலாசநாதர்

2019-04-17@ 09:37:38

திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டியில் உள்ள கைலாசநாதர் கோயில் பல சிறப்புகளை பெற்றதாக விளங்குகிறது. கந்தபுராண வரலாற்றில் இந்த தலம் பற்றி கூறப்படுவதாவது: தட்சன் தனது 3பிள்ளைகளை தனக்கு சமமாக ஆக்க விரும்பினார். ஆனால் நாரதர் அவர்களுக்கு சிவானுபோத உபதேசம் செய்து அவர்களை நல்வழிப்படுத்தினார். தனது பிள்ளைகளை தன் வழிக்கு வரவிடாமல் தடுத்த நாரதருக்கு, உடல்நிலை கெட தட்சன் சாபம் கொடுத்தான். நாரதர் அந்த சாப நிவர்த்திக்காக நார்த்தம்பூண்டியில் உள்ள கைலாசநாதரை பூஜித்து 12 ஆண்டு காலம் தவமிருந்தார்.

இறைவன் பஞ்ச மூர்த்திகளோடு ரிஷப வாகனத்தில் நாரதருக்கு காட்சி தந்து சாபத்தை நீக்கினார். பின்பு நாரதர் முருகப்பெருமானை வணங்கி சப்த முனிவர்களின் தலைமை பதவியை அடைந்தார். இதனாலேயே நாரதரின் பெருமையை உணர்த்தும் விதமாக நார்த்தாம்பூண்டி என்று தலத்தின் பெயர் விளங்குகிறது. கோயிலுக்கு முன்பு ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை அடுத்து தொன்மை வாய்ந்த இக்கற்கோயில் பல்லவர், வள்ளால மன்னர்களால் கட்டப்பட்டு சோழ, விஜய நகர, சம்புவராயர் அரசர்களால் பராமரிக்கப்பட்டது. முகலாய தளபதி மாலிக்காபூர் தென்னிந்திய படையெடுப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட கோயில் இது என கூறப்படுகிறது.

அழகிய மதில்கள் சூழ்ந்த கோயிலுக்குள் மேற்கு பிரதான மதிற்சுவரை ஒட்டியவாறு கொத்தளத்து விநாயகர் என்கிற ஸ்ரீகோட்டைகாத்த பிள்ளையாரை தரிசிக்கலாம். ஒரு குறுநில மன்னனின் ஆட்சி பறிபோகாமல் காத்துத் தந்ததால் கோட்டை காத்த விநாயகர் என்கிறார்கள். மூலவரின் சன்னதி முன் மகா மண்டபம் தூண்களில் அழகான சிற்பங்களோடு திகழ்கிறது. அதனை அடுத்து நடராஜரின் தரிசனத்திற்காக அலங்கார மேடை உள்ளது. அடுத்து அர்த்த மண்டபமும், மூலக் கருவறையும் அமைந்துள்ளது. கைலாசநாதர் எனும் திருப்பெயரோடு ஈசன் அருள்பாலிக்கிறார். அம்பாள் தனிச்சன்னதியில் பெரிய நாயகி எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறாள். அபய வரத முத்திரையோடு, பேரெழில் பொங்கும் முகத்தோடு காட்சி தருகிறாள். அம்பாள் சன்னதிக்கு முன்பு உள்ள மகாமண்டபத்தில் விநாயகர், முருகர், நால்வர், சப்த கன்னிகள் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

கோயில் பிரகாரத்தில் கோஷ்ட தேவதைகளுக்கும், ஸ்ரீதேவிபூதேவி சமேத வேணுகோபால சுவாமி, தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளிதெய்வானை சமேத முருகப் பெருமான் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.  கோயிலில் இலந்தை மரத்தடியில் நாரதர் ஈசனையும், வள்ளிதெய்வானை சமேத முருகப் பெருமானையும் வணங்கும் சிற்பம் அமைந்துள்ளது. சகலத்திலும் நிறைந்திருக்கும் பிரம்மம் இங்கு லிங்க ரூபத்தில் உள்ளது. வேண்டும், வேண்டாமை என்பதை  பார்த்துக் கொடுப்பதில் இத்தல ஈசன் நிகரற்று விளங்குகிறார். பிரார்த்திக்கக்கூட வேண்டியதில்லை. சுவாமியை தரிசித்தாலே போதும் நம் மனக்கவலைகளை நீக்கி மனத்திற்கு நிம்மதியை தருகிறார். கைலாசநாதர், பெரியநாயகியை தரிசனம் செய்த பின்னர் சற்று நேரம் அமர்ந்தாலே நாரதரின் வீணை அகத்தில் ஒலிப்பதை எளிதாக உணரலாம். திருவண்ணாமலைபோளூர் சாலையில் நாயுடுமங்கலத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்