SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அங்கயற்கண்ணியின் அருட் பெரும் திருமணம்

2019-04-17@ 09:36:21

அங்கயற்கண்ணி  ஆலவாய் நகரில் ஆட்சி செய்து கொண்டிருந்த போது அவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று அவருடைய அன்னையாகிய காஞ்சனமாலை விரும்பினார். அதற்கு அங்கயற்கண்ணியோ, அத்தகைய உயர்ந்த செயல் நடக்க வேண்டிய காலத்தில்  தானே நடக்கும் என்றார். மேலும் தான் தற்பொழுது உலகம் முழுவதையும் வென்று வெற்றிக்கொடி நாட்டி வருகிறேன் எனக்கூறிப் படையெடுத்து உலகை வெல்ல உவகையுடன் கிளம்பினார். அங்கயற்கண்ணி எழுந்தவுடன் யானை, குதிரை, தேர், காலாட்படை என்னும் நாற்படையும் எழுந்தன. அளவில்லாத நால்வகைப் படைகளால் இந்நிலவுலகை மட்டுமல்லாமல் இந்திரன் உலகம் முதலிய உலகங்களையும், பிறவிடங்களையும் வென்று, அரசர்களின் செல்வங்கள் அனைத்தையும் தான் கொண்டார். மற்றைத் திசைக்காவலர்களாகிய அங்கி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்போரையும் வென்று அவர்களிடமும் திறைப்பொருள் கொண்டார்.

மேலும் போர் செய்யும் வேட்கையால் திரிபுரம் எனப்பெறும் மூன்று கோட்டைகளையும் வென்ற மேருமலை என்னும் வில்லைக் கையிலுடைய சிவபெருமானது திருக்கயிலாய மலையை நோக்கிச் செல்வாராயினர். கயிலையில் இருந்த தேவகணங்களை எல்லாம் தடாதகைப்பிராட்டியார் வென்றார். அதனைக் கேள்வியுற்ற சிவபெருமான் தானே எழுந்து போருக்கு வந்து நின்றார். தன்னையே நோக்கிப் பார்க்கின்ற அருள் புரியும் திருக்கண்களையும் உடைய தன் வலப் பாதியாகிய சிவபெருமானைத் தடாதகைப் பிராட்டியாரும் நேரே கண்டருளினார். தடாதகைப்பிராட்டியார் சிவபெருமானைப்  பார்த்த அளவில், அவரின் மூன்று ஸ்தனங்களுள் ஒன்று  மறைந்தது. அதனால், அவரின் உள்ளத்தின்கண் நாணமும் மடமும் அச்சமும் இடங்கொண்டு பொருந்தின.

கரிய கூந்தலானது  பிடரியில் அமைய மீன் போன்ற மையுண்ட கண்கள் புறவடியை நோக்க, மண்ணைத் திருவிரலால் கீறிக்கொண்டு மின்னலை ஒத்து நின்றருளினார். பிராட்டியிடத்து இதுவரை இருந்த ஆண்தன்மை ஒழிந்து பெண் தன்மை தோன்றியமையால் அதன் தோற்றத்திற்குக் காரணமாகிய சிவபெருமானே மணாளனாக வரும் தகுதியுடையவர் எனக் கருதி மணம் செய்விப்பது எனப் பெரியோர் முடிவெடுத்தனர். பாண்டியர்களின் முடிபோல் பவனாகிய மலயத்துவச பாண்டியன் திருப்புதல்வியாரின் திருமணங் குறித்த ஓலையை,  மன்னர்கள் பலரும் எதிர்கொண்டு வந்து, கையில் வாங்கினர்.  அதனைத் தம்முடைய  மணிமுடியின்மேல் ஏற்றி, அத்திருமுகச் செய்தியைக் கொண்டு வந்தவர்களுக்கு, அரிய அணிகளும் ஆடைகளும் அளித்து மகிழ்ந்தனர்.

மேலும் செந்தாமரை மலர்போன்ற கண்களையுடைய திருமாலும், செந்தாமரைமலரைத் தனது அழகிய பீடமாகக் கொண்ட பிரம்மனும், இந்திரன் முதலான எட்டுத் திக்குப்பாலர்களும், எட்டு வசுக்களும், குற்றமற்ற நூற் கேள்விமிக்க நாற்பத்தொன்பது மருத்துக்களும், அச்சுவனி தேவரிருவரும், வானினின்றும் வெப்பமாகிய ஒளியை வீசும் பன்னிரண்டு சூரியர்களும், குளிர்ந்த ஒளியினையுடைய ஒரு சந்திரனும்  ஆகிய தேவர்களும், கைகளிலும் கால்களிலும் கண்களைப் பெற்று, வீடுபேற்றை அடைந்த அரிய தவமாகிய செல்வத்தினையுடைய புலிக்கால் முனியும், பதஞ்சலி படத்தைக் கொண்ட முடியினையுடைய பாம்பாகிய பதஞ்சலி முனியும், பாற்கடலைக் குடித்துத் திருமாலின் முடியில், சிவந்த அடிகளை வைத்து அருளிய அகத்திய முனியும், சிவத்தை உணர்ந்த சனகர் முதலிய மெய்யுணர்வையுடைய நான்கு முனிவர்களும், வாமதேவ முனியும், சுகமுனியும், வியாத முனியும், நாரத முனியும் ஆகிய முனிவர்களும் வந்தனர்.

வந்தவர்கள் சிவபெருமான், திருமுன் வணங்கிப் போற்றினர். சிவபெருமான் அவர்களுள் சிலருக்குத் தமது திருவாயால் வார்த்தையருளியும், சிலருக்கு அருளோடு கூடிய புன்னகை அரும்பியும், சிலருக்குத் திருநோக்கருளியும், சிலருக்கு நீண்ட முடியினை அசைத்தும், அருட்கொடை நல்கி, அண்டங்கள் அழியாது நஞ்சினையுண்டு காத்தருளிய திருமிடற்றுடன் எழுந்து, மண்டபத்துள் புகுந்து, திருமணக் கோலம் கொள்ளுதற்குத் திருவுள்ளங்கொண்டார். எல்லா உயிர்களையும் ஆண்டருளிய இறைவனது திருவுள்ளக் குறிப்பினை அறிந்த அளகைப் பதியின் தலைவனும் சிவபெருமானின் தோழனுமாகிய  குபேரன், உள்ளத்தில்  எழுந்த அன்பும், தனது தூய உண்மைத் தவப்பயனும் வந்து கைகூட, அம்மண்டபத்திற் சென்று, அளவில்லாத வேதங்களும், திருமால், அயன் என்னும் இருவரும், முனிவர்களும், தீண்டுதற்கரிய திருமேனியைத் தன் கையாற் தொட்டுத் திருமணக் கோலம் செய்யத் தொடங்கினான்.

திருமால், பிரம்மன், இந்திரன் முதலிய தேவர்களுக்கும் மற்ற யாவருக்கும், கடைக்கண் நோக்கத்தால் எல்லா நன்மைகளையும் அளிக்கவல்ல இறைவன், தான் ஒரு மங்கலக் கோலஞ் செய்து கொண்டவன் போலத் திருவுளங்கொண்டு, கும்போதரன் முதுகின்மேல் தனது திருவடியை வைத்து,  எதிரே வந்த உயர்ந்த பெரிய இடபத்தில் ஏறி, நடந்தருளினான். தேவர்கள் மலர்மாரி பொழிந்து வாழ்த்தினர். ஆயிரந்தலைகளையும் இரண்டாயிரம் திண்ணிய தோள்களையும் உடைய பானுகம்பன், ஆயிரம் சங்குகளை வைத்து, இரண்டாயிரம் நீண்ட கைகளாலும் பிடித்து ஊதினான்.

“தேவர்கள் தேவன் வந்தான் செங்கண்மால் விடையான் வந்தான்
மூவர்கண் முதல்வன் வந்தான் முக்கண்எம் பெருமான் வந்தான்
பூவலர் அயன்மால் காணாப் பூரண புராணன் வந்தான்
யாவையும் படைப்பான் வந்தான் என்றுபொற் சின்ன  மார்ப்ப”.

சிவபெருமான் நடந்து வந்தார். அதனைப் பார்த்த மக்கள், தடாதகைப்பிராட்டி என்ன தவம் செய்தாளோ! சிவபெருமானைப் பெறுதற்கு என்றும், சிவபெருமான் என்ன தவம் செய்தாரோ! பிராட்டியைப் பெறுதற்கு என்றும், மதுரை என்ன தவம் செய்ததோ! என்றும், இத்திருமணக்காட்சியைக் காண நாமெல்லாம் என்ன தவம் செய்தோமோ! என்றும் பேசி மகிழ்ந்து நின்றனர். அங்கிருந்த மக்கள் கூட்டத்தில் ஒருத்தி, வலதுபுறம் பிரம்மன் வருதலையும் காணாள், திருமால் இடம் காணாள், தேவர்கள் கூட்டத்தையும் காணாள், மக்கள் கூட்டத்தையும் காணாள், மெய்யுணர்வுடைய ஞானியர் போல, பார்த்த பொருள் அனைத்திலும், மழுவையும் மானையும் சிவந்த கையிடத்துடைய சிவபெருமானது திருவுருவமாகவே பார்த்தாள். மெய்ஞ்ஞானிகட்கு, ‘‘பிரபஞ்ச பேதமெலாந் தானாய்த்தோன்றி” என்றபடி எல்லாம் சிவனுருவாய்த் தோன்றுமாகலின் ஞானப்புலத்தவர் பால என்றார். சிவனை அன்றி வேறு ஒருவரையும் கண்டிலள் என்பது கருத்து ஆகும்.

மங்கல நாண் உடைய பெண்களோடும் காஞ்சனமாலை வந்து, கங்கையினின்றும் கொண்டு வந்த, சிவந்த பொன்னாலாகிய கரகத்திலுள்ள நீரை, அப் பெண்கள் வார்க்க, திங்களாகிய அழகிய மாலையை அணிந்த, சிவபரஞ்சுடரின் திருவடித் தாமரைகளை விளக்கி, அங்ஙனம் விளக்கிய தீர்த்தத்தைச் தலையில் தெளித்து உள்ளும் பருகி நின்றாள். சிவபெருமான் மண்டபத்தினுள் வந்து தன் இருக்கையில் அமர்ந்தவுடன் திருமால், பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரையும் அமருமாறு பணித்தார். இறைவன் மணமேடையில் காத்திருக்க, பிராட்டியை தேவ மகளிர் மணக்கோலம் கூட்டினர். சுந்தரவல்லியாகிய பிராட்டியாரை மங்கலம் என்று வாழ்த்துப் பாடி, இரு பக்கங்களிலும் வந்து, தங்கள் தங்களுடைய மாந்தளிர் போன்ற மெல்லிய கைகளை நீட்டினர். அவற்றைப், பூங்கொத்து அலர்ந்த கூந்தலையுடைய பிராட்டியாரும், முப்பத்திரண்டு அறங்களும் குடி கொண்டு ஏறிய, அழகிய தளிர் போன்ற தனது சிவந்த கைகளால் பற்றிக் கொண்டு வேதங்கள் ஒலிக்க எழுந்தருளினார்.

திருமண முரசங்கள் ஒலித்தன; சங்கங்கள் முழங்கின; தேவர்கள் பொழியும் மிக்க மலர் மழை நிறைந்தன; சாமரைகள் வீசப் பெற்றன; மங்கல வாழ்த்து என எழுகின்ற செல்வங்கள், அணிகளையுடைய மகளிர் வாயினின்றும் தோன்றிச் சிறந்தன. நான்கு புறங்களிலும் நான்கு வேதங்களும் ஒலிக்கவும், இயங்களும் சங்கங்களும் ஒலிக்கவும், வேதங்களை உணர்ந்த பிரம்மன், வேத சிவாகமம் கூறிய முறையால், திருமணச் சடங்குகளைக் குறைவின்றி முடிக்க, இருவகைப் பற்றும் அற்றவர்க்கே வீட்டின்பத்தை அருளும் பரமயோகியாகிய இறைவன், திருமங்கல நாணைப் பூட்டி, எல்லா உலகங்களையும் பெற்றருளிய பிராட்டியாரின் சிவந்த திருக்கரங்களைப் பற்றியருளினான்.  இந்தத்திருக்காட்சியை மக்கள், தேவர் என்னும் வரம்பில்லாதவராய்த் திருமணத்தைத் தங்கள் துன்பம் நீங்குமாறு கண்டு, மகிழ்ந்து நின்றார். இதன்வழி, இத்திருமணத்தைக் காண்பார் துன்பத்தினின்று நீங்குவர் என்பது குறிப்பாம்.

ஒலிக்கும் இடபக்கொடி அழகிய மீனக் கொடியாகவும், பாம்பணிகள் பொன்னணிகளாகவும், இதழ் விரிந்த கொன்றை மலர் மாலை வேப்பம்பூ மாலையாகவும், புலித்தோல் ஆடை பொன்னாடையாகவும், சந்திரனை அணிந்த சடாமுடி அழகிய வைர முடியாகவும், வேதங்கள் தங்கி ஒலிக்கின்ற பெரிய மதுரைப் பதியில் வீற்றிருக்கும், சோமசுந்தரக் கடவுள் சுந்தர பாண்டியனாய் வீற்றிருந்தருளினார். இவ்வாறு அங்கயற்கண்ணியை மணந்து சோமசுந்தரக்கடவுள் நம் பொருட்டு ஆலவாய் நகரில் அருட்பாலித்து நிற்கும் நன்னாள் சித்திரைத் திங்கள் நான்காம் நாள் (17.04.2019) ஆகிய இந்நாள் என்பதால் இந்நன்னாளில் அம்மையையும் அப்பனையும் வணங்கி அருள் பெற்று உய்வோமாக!

“மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே”                 
(திருஞானசம்பந்தர்)

முனைவர் மா. சிதம்பரம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

 • karvachauth_2019

  கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்