SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘மிஃராஜ்’ எனும் விண்ணேற்றம்

2019-04-16@ 17:05:10

ஹிஜ்ரி நாள்காட்டியின் அடிப்படையில் ரஜப் மாதம் 27ஆம் இரவு   நடைபெற்ற ஓர் இறையற்புதச்செயல் தான் நபிகளாரின் விண்ணேற்றப் பயணம்.  மக்கா நகரில் தம்முடைய சத்திய சன்மார்க்கப் பணிகளை நபிகளார் தொடங்கியபோது கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டார்கள். திட்டுதல், வசைபாடுதல், கேலி   கிண்டல் செய்தல், மன உளைச்சலுக்கு ஆளாக்குதல், உடல் ரீதியான துன்பம், சமூகப் புறக்கணிப்பு என எல்லா வகை இன்னல்களுக்கும் இறைத்தூதர்  ஆளானார்கள்.“பட்ட காலிலேயே படும்” என்பது போல், இக்கட்டான சூழல்களில் நபிகளாருக்கு உற்ற துணையாக இருந்த பெரிய தந்தை அபூதாலிபும்  இறப்பெய்தினார். தொடர்ந்து அண்ணலாரின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கு கொண்டு பெரும் ஆதரவாக இருந்த அன்புத் துணைவியார் கதீஜாவும்  காலமானார்.

இறையுதவி ஒன்றைத் தவிர வேறு எந்த உதவியும் இல்லாத தனிமரம் போல் நபிகளார் வேதனையில் மூழ்கியிருந்த நேரம் அது. ஒரு நாள் இரவு நபிகளார்  உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது  வானவர் தலைவர் ஜிப்ரீல், இறைத்தூதரிடம் வந்து “இறைவன் உம்மை அழைத்துவரும்படி ஆணையிட்டுள்ளான்” என்று  கூறி,  ஒரே இரவில் மக்காவிலிருந்து ஜெருசலம் (பைத்துல் முகத்தஸ்) வந்து, பிறகு அங்கிருந்து ஒளியின் வேகத்தைவிட விரைந்து செல்லும் புராக் எனும்  வாகனத்தில் ஏறி விண்ணுலகம் அடைந்தனர். பேரண்டத்தில் நடைபெறும் இறைவனின் ஆட்சி, சொர்க்கம், நரகம், பாவ  புண்ணியம் செய்தவர்கள், நரக தண்டனை  அனுபவிப்பவர்கள், சொர்க்கப் பூங்காக்களில் மகிழ்ந்திருப்பவர்கள் என்று அனைத்தையும் நேரில் கண்டார் நபிகளார். இறையாற்றலை நேரில் கண்டதால்  அவருடைய இதயமும் ஆறுதல் பெற்றது.

இறைத்தூதரின் விண்ணேற்றத்தின் போதுதான்  தொழுகை கடமையாக்கப்பட்டது. முதலில் ஐம்பது நேரம் தொழவேண்டும் என்று இறைவன் கட்டளை  பிறப்பித்தான். அந்தக் கட்டளையுடன் நபிகளார் திரும்பி வந்தபோது, வானுலகில் மூஸா நபியைச் சந்தித்தார். ஐம்பது நேரத் தொழுகை என்பதை அறிந்த மூஸா  நபி, “முஹம்மதே, உங்கள் சமுதாயத்தினரால் ஐம்பது வேளை தொழ முடியாது. சிரமம் ஆகிவிடும். இறைவனிடம் குறைத்துத் தரும்படிக் கேளுங்கள்” என்றார்.  நபிகளார் மீண்டும் இறைவனிடம் வந்து முறையிட, நாற்பது வேளையாக இறைவன்  குறைத்தான். மூஸா நபியின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, மீண்டும் மீண்டும்  நபிகளார் வந்து இறைவனிடம் முறையிட, படிப்படியாக எண்ணிக்கை குறைக்கப்பட்டு, இறுதியில் ஐந்து வேளைத் தொழுகை என்று முடிவாயிற்று. அப்போது  இறைவன், “யார் இந்தக் கட்டளையை ஏற்று ஐவேளைத் தொழுகையை முறையாக நிறைவேற்றுகிறாரோ அவருக்கு ஐம்பது வேளை தொழுத நன்மைகளை  அருள்வேன்” என்று கூறினான். தொழுகை எனும் மிக உயர்ந்த பரிசுடன் அதே இரவில் நபிகளார் மக்கா திரும்பினார்கள்.

இந்த வார சிந்தனை

“(விண்ணுலகிற்கு எதற்காக அழைத்துச் சென்றான் எனில்) தன்னுடைய சான்றுகளை அவருக்குக் காண்பிப்பதற்காக. உண்மையில் அவன் அனைத்தையும்  செவியுறுபவனாகவும் பார்ப்பவனாகவும் இருக்கிறான்.”(குர்ஆன் 17:1)

சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்