SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாதயாத்திரைக்கு தனி பலன் உண்டா?

2019-04-16@ 16:57:34

நிச்சயமாக உண்டு. போக்குவரத்து வசதி எளிதாக நிறைந்திருக்கும் இந்த காலத்திலும் பழனி, திருப்பதி, திருச்செந்தூர், வேளாங்கண்ணி போன்ற ஆலயங்களுக்கு லட்சக்கணக்கானோர் இன்னமும் பாதயாத்திரையாக சென்று தரிசனம் செய்கிறார்கள் என்றால் அதற்கான பலனை அவர்கள் அனுபவித்து உணர்கிறார்கள் என்றுதானே அர்த்தம். சபரிமலையில் பம்பை வரை சாலை போக்குவரத்து வசதி இருந்தாலும் இன்னமும் பெரும்பாதை வழியாக 48 மைல் தூரத்தினை நடந்து சென்று ஐயப்பனை தரிசிப்பதற்காக
பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.

இதனை கால நேர விரயம் என்றோ, வீணாக உடலை வருத்திக்கொள்கிறார்கள் என்றோ கருத முடியாது. பாதயாத்திரை மட்டுமல்ல, பால்குடம் எடுத்தல், காவடி சுமத்தல், அலகு குத்திக் கொள்ளுதல், தீமிதித்தல் என்று உடலை வருத்திக்கொண்டு இறைசக்தியை தரிசனம் செய்யும்போது கிடைக்கின்ற தெய்வீக உணர்வே அலாதியானது. இவ்வாறு உடலை வருத்திக் கொள்ளும்போது இறைவனின்பால் மனம் லயிக்கிறது. சாதாரணமாக பக்கத்தில் உள்ள கடைத்தெருவிற்கு செல்வதற்குக் கூட இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகிறோம்.

நடந்தால் கால் வலிக்கும் என்று எண்ணுகிறோம். உடலில் நம்மையும் அறியாமல் சோம்பேறித்தனம் குடிபுகுந்துவிடுகிறது. இது போன்ற காலச் சூழலிலும் நடந்து வந்து இறைவனை தரிசிக்கிறேன் என்று எண்ணி பாதயாத்திரை மேற்கொள்ளும்போது அந்த இறைவன் நமக்கு துணை இருக்கிறான் என்று நம்புகிறோம். எப்பேற்பட்ட கஷ்டமான சூழலிலும் இறைவனின் துணையுடன் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வளர்கிறது. மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்கிறார்கள்.

அரை கிலோமீட்டர் கூட நடக்காத இளைஞர்கள் அங்கே பதினான்கு கிலோமீட்டர் தூரத்தை எந்தவிதமான தயக்கமுமின்றி எளிதாக வலம் வருகிறார்கள் என்றால் அதற்குரிய பலனை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள் என்பது தான் நிஜம். கஷ்டப்பட்டு ஒரு இலக்கினை அடையும்போது அதில் கிடைக்கும் ஆனந்தமும், பூரிப்பும் வேறு எங்கும் கிடைக்காது என்பது அனுபவபூர்வமான உண்மை. அவ்வாறே இறைவனை பாதயாத்திரையாகச் சென்று தரிசிப்பதன் மூலம் சர்வ நிச்சயமாக தனி பலன் என்பது உண்டு என்று அறுதியிட்டுச் சொல்லலாம்.

மனைவியால் அங்க பிரதட்சணம் செய்ய முடியாத நிலையில் கணவன் அதனைச் செய்யலாமா?  - சந்தானம், வாழைப்பந்தல்.

தாராளமாகச் செய்யலாம். மனைவியின் வேண்டுதலை அவரால் செய்ய இயலாத பட்சத்தில் அதனை கணவன் நிறைவேற்றலாம். அங்கப்ரதட்சிணம் உட்பட அனைத்து வேண்டுதல்களுக்கும் இந்த விதி பொருந்தும். அவ்வாறே கணவன் நேர்ந்துகொண்ட ஒரு வேண்டுதலை அவரால் செய்ய முடியாத சூழலில் மனைவியானவள் செய்து முடிக்கலாம். இந்த விதியினை நிர்ணயிப்பதுதான் திருமணம்.

திருமணத்தின் போது சொல்லப்படுகின்ற மந்திரங்களில் இந்த விதிமுறைகளைக் காணலாம். நீயும், நானும் இணைந்து நூறு ஆண்டுகள் வாழ்வோம் என்று சொல்வதுடன் உன்னால் இயலாதவற்றை நான் செய்கிறேன், என்னால் செய்ய முடியாதவற்றை நீ செய்து முடிக்க வேண்டும் என்று பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உறுதி கூறுவர். திருமண நாள் முதல் நீ வேறு, நான் வேறு அல்ல, நாம் இருவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று அந்த ஆண்மகன், தனது மனைவியின் கரத்தினைப் பற்றிச் சொல்கிறான்.

அவன் தந்த அந்த உறுதிமொழியின் அடிப்படையில் மனைவியால் செய்ய இயலாத பட்சத்தில் அவளது விருப்பத்தினையும், வேண்டுதலையும் நிறைவேற்றி வைப்பது கணவனின் தலையாய கடமை ஆகும். எனவே மனைவியால் அங்க பிரதட்சணம் செய்ய இயலாத சூழலில் அவளது அந்த வேண்டுதலை கணவன் தாராளமாகச் செய்து முடிக்கலாம். இதில் எந்தவிதமான தவறும் இல்லை என்று சொல்வதை விட மனைவியின் வேண்டுதலை கணவன் கட்டாயம் செய்து முடிக்க வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

ஆலயங்களில் சிதறு தேங்காய் உடைப்பதன் தத்துவம் என்ன? - அயன்புரம் த.சத்தியநாராயணன்.

நமது துன்பங்களும், செயலில் உண்டாகும் தடைகளும் இறைவனின் அருளால் சிதறி ஓட வேண்டும் என்பது தான் அதன் அடிப்படைத் தத்துவம். ஒரு செயலைச் செய்யத் துவக்கும் முன்பாக சிதறு தேங்காய் உடைப்பது வழக்கம். பெரும்பாலும் சிதறு தேங்காயினை விநாயகப் பெருமான் ஆலயத்தில் உடைப்பார்கள். விக்னேஸ்வரன் என்றாலே தடைகளை நீக்குபவன் என்று பொருள். எந்த ஒரு விசேஷத்தைச் செய்தாலும் முதலில் பிள்ளையார் பூஜையை செய்து விட்டுத்தான் செயலைத் துவக்குகிறோம்.

சுபநிகழ்வாக இருந்தாலும் சரி, அசுபகாரியமாக இருந்தாலும் சரி ‘சுக்லாம் பரதரம்’ என்று இருகைகளாலும் தலையில் பிள்ளையார் குட்டு குட்டிவிட்டுத்தான் அந்தச் செயலைத் துவக்குகிறோம். செய்கின்ற செயலில் எந்தவிதமான தடையும் இன்றி நல்ல படியாக செயலை முடித்துத் தாருங்கள் என்று விநாயகரைப் பிரார்த்திக்கிறோம். ஒரு செயலைத் துவக்கும்போது இடையில் வரக்கூடிய தடைகள் யாவும் சிதறி ஓட வேண்டும் என்பதன் அடையாளமாக சிதறு தேங்காயை உடைக்கிறார்கள்.

அதே போல செயலைச் செய்து முடித்த பிறகும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் சிதறு தேங்காயை உடைக்கிறோம். தத்துவ சிந்தனை உடைய ஞானிகள் இதனை வேறுவிதமாகச் சொல்வார்கள். மனிதனுக்கு எந்தச் சூழலிலும் தலைகனம் உண்டாகிவிடக் கூடாது. துவக்கத்தில் இந்தச் செயலை நம்மால்தான் செய்ய முடியும் என்றோ, அல்லது செய்து முடித்த பிறகு நமது திறமையால்தான் இந்தச் செயலைச் செய்ய முடிந்தது என்றோ தலைக்கனத்துடன் இருக்கக்கூடாது என்பதற்காக சிதறுதேங்காய் உடைக்கப்படுகிறது என்பது அவர்கள் தரப்பு விளக்கம்.

மனிதனுக்கு உண்டாகும் தலைக்கனம் இந்த தேங்காயைப் போல் நொடிப் பொழுதிற்குள் சிதறி ஓட வேண்டும் என்பதற்காக இந்தச் செயலைச் செய்கிறோம் என்று சொல்வார்கள். எப்படி இருந்தாலும் சிதறு தேங்காய் உடைப்பது என்பது நமக்கு உண்டாகும் பிரசினைகள் தீர்வதற்காக என்று புரிந்து கொள்ளலாம்.

ராமேஸ்வரம் சென்றால் குழந்தை வரம் கிடைக்கும் என்கிறார்கள், ராமேஸ்வரத்தில் வசிக்கும் சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லையே, இது பற்றி..? - அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.

உடம்பு சரியில்லை என்று டாக்டரிடம் செல்கிறோம், அந்த டாக்டருக்குக் கூட உடம்பு சரியில்லாமல் போகிறதே என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி. டாக்டரும் ஒரு மனிதர்தானே. ராமேஸ்வரத்தில் வசிப்பவர்களும் மனிதப் பிறவிதானே.. மனிதப்பிறவி என்பதே பூர்வ ஜென்ம கர்மாவினை அனுபவிப்பதற்காகத்தான். கர்மாவின் அடிப்படையில் அவரவருக்கான வாழ்க்கை என்பது அமைகிறது. இதில் பாவ புண்ணியத்தின் விகிதாச்சாரம் முக்கியத்துவம் பெறும்.

புண்ணியத்தின் அளவு கூடுதலாகவும், பாவத்தின் அளவு குறைவாகவும் இருக்கும்போது பரிகாரம் செய்வதால் அதற்குரிய பலன் கிடைக்கிறது. சாபத்திற்கு விமோசனம் என்பது உண்டு என்பது போல் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் என்பதும் உண்டு. அவ்வாறு பிராயச்சித்தம் செய்வதற்காக ராமேஸ்வரத்திற்கு செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். ராமேஸ்வரத்திற்குச் சென்றால் மட்டும் குழந்தை வரம் கிடைத்துவிடும் என்று யாரும் சொல்லவில்லை. அங்கு சென்று செய்ய வேண்டிய கிரியைகளைச் சரிவர செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

எங்கு வேண்டுமானாலும் அந்த பிராயச்சித்த பரிகாரத்தை செய்யலாமே, அதற்கு ஏன் ராமேஸ்வரத்திற்குச் செல்ல வேண்டும் என்ற கேள்வி எழலாம். இதயமாற்று அறுவை சிகிச்சை என்பதை எல்லா மருத்துவமனைகளிலும் செய்துவிட முடியாது. அதற்கென்று இருக்கும் சிறப்பு மருத்துவமனைகளில் மட்டுமே செய்ய இயலும். அதேபோல சிறப்பு பரிகாரம் என்பதை எல்லா ஊர்களிலும் செய்ய இயலாது. எந்தவிதமான பிராயச்சித்தம் தேவைப்படுகிறதோ, அதற்கேற்றார்போல் ராமேஸ்வரம் போன்ற ஸ்தலங்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.

இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்வதில்லை. அதேபோல் ராமேஸ்வரத்தில் வசிப்பவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றால் அவருக்குத் தேவைப்படுகின்ற பிராயச்சித்தம் வேறொரு இடத்தில் செய்ய வேண்டியதாய் இருக்கலாம். அதனைத் தெரிந்துகொண்டு அவர் அந்தப் பிராயச்சித்தத்தை செய்து முடிக்கும் பட்சத்தில் அவருக்கு சந்தானப்ராப்தி கிடைக்கலாம். அவரது ஜாதகத்தில் நிச்சயமாக குழந்தைப்பேறுக்கான வாய்ப்பு இல்லை என்று உறுதியாகத் தெரியும் போது பரிகாரம் செய்யும்படி ஜோதிடர்கள் சொல்வதில்லை. நம்பிக்கையுடன் ஒரு செயலைச் செய்யும்போது அதில் குறைகண்டு விதண்டாவாதம் செய்யாமல் அவரது நம்பிக்கைக்குத் துணை செய்யும் விதமாகப் பேசி நேர்மறையான சிந்தனைகளை வளர்ப்பதே சான்றோர்களின் செயல்.

பஞ்சாங்கம் என்பதில் திதி, நாள், நட்சத்திரம் என்பது பரவலாக தெரிந்ததுதான். யோகம், கரணம் என்பது என்ன?  - அண்ணா அன்பழகன்,  அந்தணப்பேட்டை.

பஞ்சாங்கம் என்ற ஐந்து அங்கங்களில் திதி, வார, நட்சத்திரத்திற்கு அடுத்தபடியாக நான்காவதாக வருவது யோகம். இங்கே யோகம் என்று அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம் ஆகியவற்றை குறிப்பிடுவதில்லை. இந்த மூன்று யோகங்களை அமிர்தாதி யோகங்கள் என்று தனித்துக் குறிப்பிடுவர். ஐந்து அங்கங்களில் வருகின்ற யோகம் என்பது மொத்தம் 27 ஆகும். விஷ்கம்பம், ப்ரீதி, ஆயுஷ்மான், ஸௌபாக்யம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், த்ருதி, சூலம், கண்டம், வ்ருத்தி, த்ருவம், வ்யாகாதம், ஹர்ஷணம், வஜ்ரம், ஸித்தி, வ்யதீபாதம், வரீயான், பரிகம், சிவம், ஸித்தம், ஸாத்யம், சுபம், சுப்ரம், ப்ராம்மம், மாஹேந்த்ரம், வைத்ருதி ஆகியவை 27 யோகங்கள். யோகத்தினைத் தொடர்ந்து ஐந்தாவதாக வருவது கரணம். கரணம் என்பது திதியின் சரிபாதி அளவு ஆகும். இந்த கரணம் என்பதில் சர கரணம் ஏழு என்றும் ஸ்திர கரணம் நான்கு என்றும் மொத்தம் 11 கரணங்களைச் சொல்வார்கள்.

பவம், பாலவம், கௌலவம், தைதுலம், கரஜை, வனஜை, பத்ரம் ஆகிய ஏழும் சர கரணங்கள் என்றும் சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர கரணங்கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. சர கரணங்கள் ஏழும் அடுத்தடுத்து வந்து போகும். மீதமுள்ள நான்கு ஸ்திர கரணங்களும் மாதம் ஒரு முறையே வந்து போகும். அமாவாசைக்கு முதல் நாள் ஆகிய சதுர்த்தசி திதியின் இரண்டாவது பாதியில் சகுனி கரணமும், அமாவாசை நாளில் சதுஷ்பாதம், நாகவம் என்ற கரணங்களும், வளர்பிறை பிரதமை திதியின் முதல் பாதியில் கிம்ஸ்துக்ன கரணமும் வரும். நட்சத்திரங்களைப் போலவே கரணங்களுக்கும் உருவத்தினைத் தந்து உருவகப்படுத்தி வைத்திருப்பார்கள். பவம் - சிங்கம், பாலவம் - புலி, கௌலவம் - பன்றி,  தைதுலை - கழுதை, கரஜை - யானை, வனஜை - எருது, பத்ரம் - கோழி என்றும், சகுனி - காகம், சதுஷ்பாதம் - நாய், நாகவம் - பாம்பு, கிம்ஸ்துக்னம் - புழு என்றும் ஒவ்வொன்றிற்கும் அந்த கரணம் தருகின்ற பலனின் அடிப்படையில் உருவத்தினை வகுத்திருப்பார்கள்.

நட்சத்திரங்களுக்கு தனியாக பலன் இருப்பது போல் இந்த யோகங்களுக்கும், கரணங்களுக்கும் தனியாக பலன் என்பது உண்டு. ஆனால், தற்காலத்தில் பெரும்பாலும் ஜோதிடர்கள் இந்த யோகங்களுக்கும், கரணங்களுக்கும் அத்தனை முக்கியத்துவம் தருவதில்லை.

திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் சர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rally

  சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 • slide

  சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

 • torch

  சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

 • statue

  சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

 • fire

  லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்