SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உமையவளே! ஒளிப்பெருஞ் சுடரே!

2019-04-16@ 16:53:54

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 39

திருவெண்காட்டு உமையம்மையின் பெயர் பிரம்மவித்யா. பிரம்மவித்தை என்பதற்கு ப்ரணவம் என்று பொருள். அதை அறிபவர்கள் அதுவாகவே ஆகிறார்கள். அந்த ப்ரணவம் என்ற சொல்லிற்கு என்றும் புதிய என்பது பொருள். மறைமுகமாக ‘‘புது’’ என்ற சொல்லால் ‘‘ஓம்’’ என்ற மந்திரத்தையே குறித்தார். ‘‘மலர்த்தாள்’’ மலர்த்தாள் என்று சொன்னால் உபாசனையில் இறைவியின் திருவடியாக கருதி வழிபடப்படும் தாமரை போன்ற அமைப்பு, அதன்மேல் இரண்டு திருவடிகளும் இருக்கும்.

இதை உமையம்மையாகக்கருதி வழிபடுவர். இந்த அமைப்பை சென்னை மாங்காடு சுக்கிரேசர், எதிரில் அமைந்துள்ள தாமரை வடிவிலான உமையம்மை, திருப்பெருந்துறை யோகாம்பாள், தில்லை திருவண்ணாமலை அடி அண்ணாமலை அருகில் உள்ள மாணிக்கவாசகர் போன்ற தலங்களில் காணலாம். இந்த அமைப்பு உடைய உமையம்மையையே மலர்த்தாள் என்கிறார். இந்த வடிவத்தில் வழிபட்டால். வணங்குபவர் இதயத்தில் தன் ஒளிப் பெருஞ்சுடராய் காட்சியளிப்பாள். இக்காட்சியானது யோகத்தில் வெற்றியைக் குறிக்கும்.
‘‘அல்லும்’’ இச்சொல்லை தொழும் என்ற சொல்லோடு இணைந்தே பொருள் கொள்ள வேண்டும். தொழுவது பற்றி விளக்கிக் கூறும் ஆகமங்களானது (வழிபாட்டு நூல்கள்) பூஜைக்காக காலத்தை தெளிவாகக் கூறுகின்றது. அந்த வகையில் அதை இரண்டாக பிரிக்கலாம்.

காலத்தை முதன்மையாகக் கொண்டு செய்யப்படுகிற பூசனை. பூஜையை முதன்மையாக கொண்டு செய்யப்படுகிற காலம். உதாரணம் - காயத்ரி என்ற பெண் தெய்வத்தை காலை, மதியம், மாலை என்று காலத்தை முதன்மையாகக் கொண்டு பூசனை செய்யப்பட வேண்டும். காலம் தவறி பூசனை செய்வது என்பது குற்றத்தை விளைவிக்கும் என்பதை பிராயச்சித்த அர்க்கியம் செலுத்துவதிலிருந்து நன்கு உணரலாம். காலச்சிறப்பு ‘‘அல்லும்’’ என்ற சொல்லால் விளக்கப்படுகிறது. இதற்கு இரவு என்பது பொருள்.

பூசனையை முதன்மையாகக் கொண்டு பின்பற்றப்படுகின்ற காலம். இறைவனுக்கு செய்யப்படுகிற வழிபாட்டு முறையில் சில செயலுக்கான கால அளவு வரையறுக்கப்படுகிறது. அந்த வகையில் அபிஷேகம் 24 நிமிடம், அலங்காரம் 24 நிமிடம், உபசாரம் 24 நிமிடம் என்று கூறியிருப்பதிலிருந்து காலத்தோடு பூசனைக்கு உரிய நெருங்கிய தொடர்பை ‘‘அல்லும்’’ என்ற இச்சொல்லால் விளக்கியிருக்கின்றார், இதை ‘‘யாமம் வயிரவர் ஏத்தும்பொழுது - 73 என்பதிலிருந்து அறியலாம்.

‘‘பகலும் ’’ என்ற வார்த்தையால் ஒரு நாளின் முழு பகுதியை சரியாக இருபகுதிகளாகப் பகுப்பதனால் பகல் என்பது பெயர். (இரவு ,பகல்) இந்த இரண்டையும் பகுக்கிற பொழுதாகிற காலையும், மாலையும், சூரிய உதயம், சூரியனின் மறைவு என்ற இரண்டு நேரங்களிலும் இவற்றின் இடைப்பட்ட பொழுதாகிறகாலை, மதியம், உச்சி, பிரதோஷம், மாலை , இரவு இந்த பொழுதுகளிலும் இறைவனை பூஜிக்கச் சொல்லுகிறது ஆகமம். இதை வழக்கில் காலை பள்ளியறை பூஜை, உஷக்காலம், காலசந்தி, உச்சிகாலம், சாயரட்சை, இரண்டாங்காலம், அர்த்த ஜாமம், இரவு பள்ளியறை என்று ஆலய வழக்கில் இன்றும் உள்ளது அதையே பகுத்தலால் பகல் என்று குறிப்பிடுகிறார்.

‘‘அல்லும் பகலும்’’ என்று இணைத்தால் பண்டைய வர்ணாசிரம முறைப்படி குறிப்பிட்ட காலமல்லாது எப்பொழுதுமே இறைவனை இடைவிடாது தியானித்துக் கொண்டேயிருப்பவர்கள் துறவியர்கள் ஆவார்கள். அதை சுட்டுவதற்கே ‘‘அல்லும் பகலும்’’ என்று இணைத்து பயன்படுத்துகிறார். பகல் நேரத்தில் மட்டும் வணங்குபவர்கள் மாணவர்களாகிற பிரம்மச்சாரிகள், பகலிலும், இரவிலும் வணங்குபவர்கள் இல்லறத்தார்கள் (கிரஹஸ்தர்கள்) அல்லும் பகலும் இணைகின்ற நேரமாகிற போது வணங்குபவர்கள், சூரிய உதயம், சூரிய உச்சி, இரவு உதயம், நடு இரவு என்ற நான்கு வேளைகளிலும் வணங்குபவர்கள், காட்டில் வாழும் இல்லற தவநெறியார்கள் (வானபிரஸ்தர்கள்) இந்த நான்கு வர்ணத்தாரும் முறையே வணங்கும் பொழுதையும், அதன் சிறப்பையும், தனித்தன்மையையும், ‘‘அல்லும், பகலும்’’ என்ற வார்த்தையால் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றார்.

‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ - 1 ‘‘இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் ’’- 83 என்ற வார்த்தையால் மேலும் அறியலாம். ‘‘தொழும்’’ தொழுவது என்பது இறைவனைப் போற்றுவது என்ற பொருளில் பயன்படுத்துகிறார் ‘‘தோத்திரம் செய்து தொழுது’’- 67 என்ற பாடலைக் கொண்டு நோக்கினோம் என்றால் இறைவணக்கப் பாடல்களை கொண்டு தொழவேண்டும் என்று விளக்குகிறார். எந்த பாடல்களைக் கொண்டு நாம் தொழவேண்டும் என்று நமக்குள் ஓர் குழப்பம் ஏற்படும். அதை ‘‘மறை சொல்லிய வண்ணம் தொழ’’ - 91 என்று யாருக்கும் தெரியாத ஆகம மந்திரத்தை பெற்றுத் தொழு என்று சொல்லியும், வேதம் சொல்லித் தொழு என்பதாக அவரே பரிந்துரை செய்கிறார். எப்படித் தொழவேண்டும் என்ற வினாவிற்கு ‘‘பரமாகம பத்ததியே ’’- 6 என்று ஆகமத்தில் கூறியுள்ள படி தொழு. யாரைத் தொழவேண்டும்.

‘‘தொழும் தெய்வமும்’’ என்று திரிபுரசுந்தரியைக் கூறினார். எந்த உணர்வோடு தொழவேண்டும். ‘‘பெற்ற தாயும்’’- 2 தாயாகக் கருதி தொழவேண்டும். மேற்கண்ட தொழும் என்ற வார்த்தையினால் எப்படி, ஏன், யாரை, எதற்கு என்ற கேள்விக்கு ‘‘தொழுவார்க்கு ஒரு தீங்கிலையே நூல் பயன் தொழுவதன் பயனையும் கூறியதனால் நன்கு அறியலாம்.‘‘அவர்க்கே ’’ என்ற வார்த்தையால் தொழுபவரை மட்டும் பிறரிடத்திலிருந்து (தொழாதவர்கள்) பிரித்துக் காண்பிப்பதற்கு பயன்படுத்துகிறார்.

உபாசனை நோக்கில் சாமான்யமாக கோயில்களில் சென்று வணங்குபவர்களை பக்தர்கள் என்றே குறிப்பிடுகின்றார். ஆனால் தொழுபவர் என்றால் குருவினிடத்திலிருந்து மந்திரம் பெற்று பிற தெய்வங்களை வணங்காது, தனக்குரிய (தான் விரும்பிய) தெய்வத்தை வணங்குபவர்களை மட்டுமே தொழுபவர்கள் (தீக்ஷை பெற்றவர்கள்) என்று பொருள் கொள்வர். ங்கு தலைமேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட திருவடி தீக்ஷையைக் குறிப்பிடுகின்றார்.

‘‘மன்னியது உன் திரு மந்திரம் - 6 மந்திரம் பெற்றிருப்பதை குறிப்பிடுகின்றார்.
‘‘பின்னே திரிந்து நின் அடியாரைப் பேணி ’’- 25

குருவினிடத்து மந்திரம் பெற்றமையை குறிப்பிடுகின்றார். ‘‘கொள்ளேன் மனதில் நின் கோலமல்லாது’’ - 23 என்தனால் பிற தெய்வத்தை வணங்காததை குறிப்பிடுகின்றார். இந்த அனைத்து ஒருங்கிணைந்த பண்பைக் கொண்டவரையே ‘‘தொழும் அவர்க்கே’’ என்கிறார். ‘‘அழியா அரசும்’’ என்ற சொல்லால் பண்டைய காலங்களில் மன்னர்களின் பரம்பரையே அரசாண்டனர். அந்த மன்னர்களின் பரம்பரை முழுவதுமாய் அற்றுப்போனால் அந்த அரசு அழிந்து விட்டது என்று பொருள்.

ஒரு மன்னரின் தன்னாட்சிக்கு உட்பட்ட பகுதியே அரசு எனப்படுகிறது, அப்படி மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியானது எதிரி நாட்டு அரசனால் கொள்ளையடிக்கப்பட்டோ தீயிற்கு இறையாக்கப்பட்டோ, அப்பகுதி மக்களை பிற நாட்டு அரசன் அடிமையாக ஆக்கி தன் நாட்டிற்கு அழைத்துச் சென்றாலோ, அப்பகுதியின் ஆட்சியுரிமை அதை ஆண்ட மன்னரிடத்திலிருந்து வேறு ஒரு மன்னனுக்கு மாற்றப் பட்டாலோ, அது அழிந்த அரசு எனப்படுகிறது. அபிராமி பட்டர் கூறுவதோ மேற்கண்ட அழியும் அரசிற்கு நேர் எதிரான அழியா அரசு அது உமையம்மையை வணங்குவதனால் கிடைக்கும் பயனில் ஒன்று என்கிறார்.

மரணமற்ற, வெல்ல முடியாத, எல்லா நலன்களோடும் கூடிய அறத்தோடு விளங்கும் புகழ் சேர்ந்த, நாடா நலம் கொண்ட அரசே அழியா அரசு. அதை உமையம்மையை வணங்குவோர்க்கு அரசு பதவியையும், அரசன் வணங்கினால் அவனுக்கு மேற்கண்ட நன்மையையும் வழங்குவாள் என்கிறார். ‘‘தவநெறியும்’’ - தவம் என்ற சொல்லை அபிராமி பட்டர் தத்தம் வர்ணத்திற்கும் நிலைக்கும் உரிய ஒழுக்கம் என்ற பொருளில் அந்த நெறியை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என்கின்ற எண்ணம், அதை பின்பற்றுகிற ஆற்றல், இறைவனைக் குறித்து பின்பற்றுகிற பொழுது அந்த தேவதையின் அருள், பின்பற்றுகின்ற முறை இவை எல்லாவற்றையும் உமையம்மையின் அருளானது தரும் என்கிறார். உதாரணத்திற்கு - உழவர் நெறி விதைத்தல் முதலானவை, வணிகர் வியாபார நெறி, அந்தணர் வேத நெறி, இது போல் பிறவுமென. அந்தந்த நெறியை அவரவர்கள் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

‘‘விரும்பித் தொழும் அடியார் ’’- 94
‘‘எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே’’- 40

அறம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்தை வலியுறுத்துகிறார். எல்லா அறத்தையும் பின்பற்ற ஓர் ஆற்றல் வேண்டும், அந்த ஆற்றலுக்கு தவம் என்று பெயர். அதையே ‘‘ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செயும்’’ - 57 சமயம் சார்ந்த நெறி முறைகளையே தவநெறி என்கிறார்.

‘‘வேதம் சொன்ன வழிக்கே வழிபட 79 என்ற பாடலின் வழி பின்பற்றுகின்ற முறையை (வைதீக நெறி) குறிப்பிடுவதிலிருந்து நன்கு அறியலாம். தானம், புண்ணியம், கற்பு, இவைகளும் தவம் என்றே அழைக்கப்படுகிறது. தனம் - கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே 99 என்று கன்னிகாதானத்தை குறிப்பிடுகிறார் புண்ணியம் - ‘‘புண்ணியம் செய்தனமே மனமே’’ - 41 என்று புண்ணியத்தைக் குறிப்பிடுகின்றார்.

கற்பு - ‘‘சதாசிவ பதிவிரதா’’- என்று லலிதா ஸஹஸ்ர நாமமும் ‘‘எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் ’’- 44 (மனை மங்கலம் - கற்பு) ‘‘தவ’’ என்கின்ற வார்த்தை ராஜச, தாமச என்ற இரண்டு குணங்களையும் குறிக்கும். இதையே பட்டர் குணக்குன்றே என்றார். ‘‘தவ’’ என்கின்ற வார்த்தைக்கு காட்டு தீ, காடு, யாகத்தீ, வெப்பம், என்ற பொருளும் உண்டு ‘‘கடம் பாடவீ’’- 99 என்று காட்டையும் ‘‘செம்முகனும்’’- 65 யாகத்தீயில் தோன்றியவன் என்கின்ற எல்லாப் பொருளிலும் உமையம்மையின் அருள் விரவியிருப்பதையும். அதை பெற்றுத் தரும் சாதனமான இறை ஒழுக்கத்தையே ஆசாரம் தவநெறி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.

‘‘சிவலோகமும்’’ சிவலோகம் என்பது இறைவன் இருக்குமிடத்தைக் குறிப்பது. இறைவன் இருக்குமிடத்தின் சிறப்புகள் என்ன? அழிவற்றது, 2. மாறுதலற்றது, 3. அனைவருக்கும் சரணமளிப்பது, 4. துன்பம்புகாதது, 5. இன்பம் வளர்ப்பது, 6. நன்மை மட்டுமே உள்ளது, 7. உயர்வு தாழ்வற்றது, 8. இறைவன் அருளினாலே மட்டும் கிடைப்பது, 9. பிற ஆன்மாக்கள் தன் முயற்சியால் பெற இயலாதது, 10. அனைத்து ஆன்மாக்களாலும் விரும்பத்தக்கது, 11.

இறையருளோ தவமோ அன்றி மற்றவர் அறியாதது, 12. அருளால் பெறுவது, 13. அடியார்கள் முக்தியடைந்தால் அடைவது, 14. ஒவ்வொரு தேவர்க்கும் அவருக்கென்ற தனியான இருப்பிடம், 15. நிரந்தரமாக வசிக்கும் இடம், 16. ஒவ்வொரு தேவதைக்கும் பரிவார தேவதைகளுடன் (இணைபிரியாத) என்று பதினாறு இயல்புகளை கொண்டதாக உள்ளது சிவலோகம். அத்தகைய சிறப்பு தன்மைகளைக் கொண்ட சிவலோகத்தை உமையம்மையின் அருளானது கிடைக்கச் செய்யும் என்கிறார் பட்டர்.

சிவலோகம் என்ற ஒரு சில திருக்கோயில்களும் உண்டு. அந்த கோயில்களில் எழுந்தருளியுள்ள உமையம்மையையும் குறிப்பிடுகிறார். சிவம் என்ற சொல்லிற்கு மங்களம், நன்மை என்பது பொருள். எப்பொழுதும் இவ்வுலகத்தை அடியாரைப் பொறுத்தவரை நன்மையாகவும், இன்பமாகவும், இறையருளானது மாற்றியமைக்கிறதோ, அப்போது இவ்வுலகமே சிவலோகமாம் என்பதை மறை முகமாக நமக்கு அறிவுறுத்துகிறார். ‘‘சித்திக்குமே’’ என்ற சொல்லானது கைவரப் பெறுவது என்பதைக் குறிக்கிறது.

எது கைவரப் பெறுவது என்கின்ற வார்த்தைக்கு யாதொரு மனிதராலும் தேவராலும் எளிதில் அடைய முடியாத உயர்ந்த தன்மை கொண்ட ‘‘அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் இந்த மூன்றும் சிவகாம சுந்தரியோடு கூடிய நடராஜப் பெருமானுடைய அருளால் அவர்கள் இணைந்து விளங்கும், சொல்லாகிற மந்திரத்தை உச்சரிப்பதனாலும், பொருளாகிற இறைத் தன்மையை சாத்திரங்கள் கூறிய படி அறிவதனாலும், அறிந்ததை தவநெறியாய் வழுவாது பின்பற்றுவதனாலும், அதன் வழி தோன்றிய அனுபவமானது சொர்க்கம், துன்ப நீக்கம், ஞானம், மோட்சம், எல்லாவற்றையும் தரவல்லது. இவையாவும் இறையருளால் அனுபவ சாத்தியப்படும், அந்த அனுபவச் சாத்தியத்தையே ‘‘சித்திக்குமே’’ 28 என்ற வார்த்தையால் அபிராமி பட்டர் குறிப்பிடுகின்றார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்