SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடும் வீடும் போற்றும் பிள்ளை..!

2019-04-16@ 16:51:24

தனியார் வங்கியில் பணி புரியும் நான் அரசுப் பணிக்காக முயற்சித்து வருகிறேன். அலுவலகத்தில் உரிய மரியாதை கிடைப்பதில்லை. உடல்நிலையில் அவ்வப்போது அசதி உண்டாகிறது. எனக்கு அரசுப்பணி கிடைக்குமா? நிம்மதியாக வாழ இயலுமா? என்ன பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும்? - ரவிகுமார், கோவை.

தங்களுடைய ஜாதகத்தை வாக்ய பஞ்சாங்க முறையில் ஆய்வு செய்ததில் தற்காலம் 16.04.2020 வரை ராகு தசையில் சனி புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லக்னத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் நீங்கள் சுய கௌரவத்தை எதிர்பார்க்கும் மனிதர் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. நீங்கள் எதிர்பார்க்கும் கௌரவம் கிடைக்கவில்லை எனும்போது உங்களுடைய தற்போதைய நிலையின் காரணமாக எதுவும் செய்ய இயலாத சூழலில் உண்டாகும் விரக்தியானது உங்களது வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

சூரியன் மற்றும் குரு ஆகிய இருவரும் இணைந்து லக்ன கேந்திரம் பெற்று இருப்பது நல்ல நிலையாகும். அனுதினமும் காலையில் சூரிய உதயத்தின்போது குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது சூரிய ஒளி படும் இடத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். கண்களுக்குத் தெரியும் கடவுளாம் சூரியனின் திருவருளால் தன்னம்பிக்கை அதிகரித்து வாழ்வினில் வெற்றி பெறுவீர்கள். ஆறாம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் 12ல் சென்று மறைவதால் ரத்தத்தில் போதிய எதிர்ப்பு சக்தி இல்லாத நிலையில் உள்ளீர்கள்.

அனுதினமும் இரவினில் பசும்பாலில் தேன் கலந்து பருகி வரவும். பால், தேன், கீரை வகைகள் நலம் தரும். சனி பகவானின் அருளால் தீர்க்காயுளைப் பெற்றுள்ளீர்கள். கவலை வேண்டாம். அரசுப் பணிதான் என்றில்லை. நிரந்தர உத்யோகம் என்பது தங்களது ஜாதகத்தில் உள்ளது. பணி செய்வீர்கள். ஜீவன ஸ்தானமாகிய 10ம் இடத்திற்கு அதிபதியான குரு பகவானின் அருள் வேண்டும் என்பதால் வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று நவக்ரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். உங்கள் மனநிலையிலும், உடல்நிலையிலும் முன்னேற்றம் காண்பீர்கள்.

எனது மகன் நன்றாகப் படிக்கிறான். நன்றாக கால்பந்து விளையாடுகிறான். ஆனால் அவ்வப் போது உடலில் அடிபடுகிறது. அதில் இருந்து தேறி வந்து மீண்டும் விளையாடுகிறான். ஜாக்கிரதையாக விளையாடினாலும் யாராவது வந்து தள்ளி விடுகிறார்கள். எதனால் இப்படி நடக்கிறது? பரிகாரம் செய்ய வேண்டுமா? - சரஸ்வதி, பெங்களூரு.

மிகச்சிறந்த விளையாட்டு வீரரைப் பிள்ளையாகப் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் மகனின் ஜாதக பலத்தின்படி அவர் விளையாட்டுத் துறையில் புகழ் பெறுவதோடு அந்தத் துறையின் துணைகொண்டு தனது எதிர்காலத்தை நிர்ணயம் செய்துகொள்வார். ஹஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, விருச்சிக லக்னத்தில் (நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் தனுசு லக்னம் என்று தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது) பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்துகொண்டிருக்கிறது.

விளையாட்டில் ஆர்வத்தினைக் குறிக்கும் ஐந்தாம் பாவகத்தில் சூரியன், செவ்வாய், புதன், சனி ஆகிய நான்கு கிரஹங்கள் இணைந்துள்ளன. இந்த நான்கு கிரஹங்களின் வலிமையே அவரை விளையாட்டுத் துறையில் பிரகாசிக்கச் செய்யும். விளையாடும்போது அடிபடுவது சகஜம்தான். இது எல்லோருக்கும் நடக்கின்ற சாதாரண நிகழ்வுதான். இதனை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொண்டு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ராகு தசை நடந்து வந்தாலும் உங்கள் மகனின் ஜாதகத்தில் ராகு பகவான் ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். ராகுவின் தசை நடக்கும் வரை அதாவது அவரது 29வது வயது முடியும் வரை அவரால் விளையாட்டுத்துறையில் நன்றாக பிரகாசிக்க இயலும். அதற்குள்ளாக அவருடைய உத்யோகமும் நிரந்தரமாகி விடும். 30வது வயது முதல் அவர் களத்தில் நேரடியாக விளையாட வேண்டிய அவசியம் இருக்காது. ராகுவினைத் தொடர்ந்து வரும் குரு தசை சுகத்தினைத் தரும் வகையில் அமையும். குரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்தில் அமர்ந்து ஜீவன ஸ்தானத்தின் மீது தனது நேரடி பார்வையை செலுத்துவதால் நிம்மதியாக வாழ்வார்.

நீங்கள் கடிதத்தில் எழுதியிருப்பது போல் சனி பகவானால் எந்தவிதமான பிரச்னையும் உங்கள் மகனுக்கு உண்டாகவில்லை. ராகுவின் தசை நடந்து வருவதாலும், சூரியனின் வீடான சிம்ம ராசியில் ராகு அமர்ந்திருப்பதாலும் ஞாயிறு தோறும் ராகு கால வேளை முடிவுறும் நேரத்தில் சரபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள். சரபேஸ்வர வழிபாடு உங்கள் பிள்ளையை மேலும் வலிமை மிகுந்தவராக மாற்றும். விளையாடும் போது யாராவது தள்ளிவிட்டால் கூட கீழே விழாமல் சுதாகரித்துக் கொள்வதோடு சிறப்பான வெற்றியையும் கண்டு வருவார்.

உங்கள் மகனின் ஆரோக்யமும் எதிர்காலமும் ஆண்டவனின் அருளால் சிறப்பாகவே அமைந்துள்ளது. தனது விளையாட்டுத் திறமையின் மூலம் பெற்றோராகிய உங்களுக்கு பெருமை தேடி தருவார் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. நாடும் வீடும் போற்றும் பிள்ளையை பெற்றதற்காக நீங்கள் பெருமைப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

என் மகனுக்கு திருமணம் ஆகி மூன்றரை வருடங்கள் கடந்துவிட்டது. இன்னும் மழலை பாக்கியம் ஏற்படவில்லை. எப்பொழுது அந்த யோகம் கிட்டும்? பரிகாரம் இருந்தால் பரிந்துரைக்கவும். - கல்யாணி, அரியலூர்.

குழந்தை பாக்கியத்தை குறிக்கும் ஐந்தாம் வீட்டில் சூரியன், புதன், குரு, சுக்கிரன், சனிபகவான்  என ஐந்து கிரஹங்களின் இணைவினைப் பெற்றிருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி மழலைச் செல்வம் என்பது நிச்சயமாகக் கிடைக்கும். திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது.

உங்கள் மருமகளின் ஜாதகத்திலும் புத்ர காரகன் குருவும், ஜென்ம லக்னாதிபதி செவ்வாயும் ஒன்றாக இணைந்து ஒன்பதாம் வீடாகிய பாக்ய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது வலுவான நிலையே. அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. தம்பதியரின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் சூரியன் மட்டும் சற்று சிரமத்தைத் தந்துகொண்டிருக்கிறார் என்பது புலனாகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் தம்பதியரை காலை நேரத்தில் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று பாலபிஷேகம் செய்து வழிபட்டு வரச் சொல்லுங்கள்.

வீட்டில் பாணலிங்கம் வைத்து பூஜை செய்யும் வழக்கம் இருந்தால் வீட்டிலேயே மகனையும் மருமகளையும் தங்கள் கைகளால் பாலபிஷேகம் செய்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். தொடர்ச்சியாக 11 மாதங்களுக்குச் செய்து வரச் சொல்லுங்கள். இறைவனின் திருவருளால் 11 மாதங்கள் முடிவதற்குள் உங்கள் மருமகள் கர்ப்பம் தரித்துவிடுவார். அவ்வாறு கர்ப்பம் தரித்த பின்னரும் 11 மாதம் முடியும் வரை தடைபடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்டினைச் செய்து வரச் சொல்லுங்கள்.

 வரும் வருடத்தில் உங்கள் மருமகளின் மடியில் மழலைச் செல்வம் நிச்சயமாகத் தவழும். உங்கள் மகனின் ஜாதக பலத்தின்படி வனப்பகுதியில் அருட்பாலிக்கும் சாஸ்தா போன்ற அம்சத்தினை உடைய தெய்வமே உங்கள் குலதெய்வம் என்பது புலனாகிறது. குடும்பப் பெரியவர்களையோ அல்லது பூர்வீகத்தில் வசிக்கும் உறவினர்கள் மூலமாகவோ அறிந்துகொண்டு குலதெய்வ வழிபாட்டினைத் துவக்குங்கள். குலம் விருத்தி அடைவதில் தடையேதும் இருக்காது.

எனது பேரனின் திருமணத்தைக் காண ஆவலாக உள்ளேன். அவருக்கு திருமணம் எப்போது நடக்கும்? தற்போது வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளதா? திருமணம் முதலில் நடக்குமா? வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையுமா? எனக்கு பதிலளித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். - கணேசன், திருச்சி.

வாக்ய பஞ்சாங்க கணிதப்படி தற்காலம் உங்கள் பேரனுக்கு குரு தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. இந்த தசாபுக்தி முடிவுறும் தருவாயில் அதாவது 16.07.2019 வாக்கில் அவருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நிரந்தரமாக வெளிநாட்டில் உத்யோகம் பார்க்கும் வாய்ப்பு அவரது ஜாதகத்தில் காணப்படவில்லை. 2021ம் ஆண்டின் இறுதி வரை அவரால் அங்கு பணி செய்ய இயலும். சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தின்படி திருமணம் என்பது 10.12.2021ற்குப் பிறகு நடைபெறும்.

களத்ர ஸ்தான அதிபதி சனி பகவான் என்பதாலும், அவர் ஆறாம் வீட்டில் மறைவதாலும் திருமணம் நிதானமாகத்தான் நடைபெறும். உங்கள் பேரனை தற்போது வெளிநாட்டிற்குச் செல்ல அனுமதியுங்கள். சில காலம் வெளிநாட்டில் சம்பாதித்துவிட்டுத் திரும்பிய பிறகு திருமணத்தை நடத்தலாம். 30வது வயது முடிந்து 31வது வயது துவங்கும் நேரத்தில் அவரது மணவாழ்வு எந்தவிதமான தடையுமின்றி துவங்கிவிடும். திருமணத்திற்குப் பிறகு அவரது எதிர்கால வாழ்வு என்பது உள்நாட்டிலேயே சிறப்பாக அமையும்.

எனக்கு ஆறு பெண் குழந்தைகள். ஐந்து பெண்களுக்குத் திருமணம் ஆகி நன்றாக உள்ளார்கள். இன்னும் ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகவில்லை. குடும்பப் பொறுப்பினை சுமப்பதற்காக வெளிநாட்டில் வேலை செய்து வரும் அவருக்கு எப்போது திருமணம் நடைபெறும்? நல்ல கணவர் அமைவாரா? - ராஜமூர்த்தி, தேவகோட்டை.

சுபகிரஹங்களில் முதன்மையான குரு, அசுபர்களில் முதன்மையான சனி ஆகிய இருவரும் இவரது ஜாதகத்தில் வக்ர கதியில் சஞ்சரிக்கிறார்கள். குடும்பத்திற்காக தனது சொந்த விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்து வரும் உங்கள் மகளை எத்தனை பாராட்டினாலும் தகும். ஆண்பிள்ளைகளே பெற்றோரை கவனிக்காத இந்தக் காலத்தில் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் பொறுப்புகளைச் சுமந்து வாழ்ந்து வரும் உங்கள் மகளை நினைத்தால் நெஞ்சம் கனக்கிறது.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் தற்போது சனி தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. இந்த நேரத்தில் அவரது திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு. 24.05.2020ற்கு மேல் அவரது திருமணத்திற்கான காலநேரம் கூடி வருகிறது. ஜீவன ஸ்தான அதிபதி சூரியன் வாழ்க்கைத் துணைவரைக் குறிக்கும் ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் இவர் வேலை பார்க்கும் இடத்திலேயே வரன் அமைவதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது.

திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோரையும், குடும்பத்தையும் நல்லபடியாக கவனித்துக் கொள்வார். இப்பொழுது போலவே எப்பொழுதும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார். அவருக்கு வருகின்ற கணவரும் அவர் செய்து வரும் சேவைக்கு முழுமையாக ஒத்துழைப்பார். வருகின்ற 2020ம் ஆண்டின் பிற்பாதியில் இவரது திருமணம் நடைபெறும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் அருகிலுள்ள அம்மன் கோயிலிற்குச் சென்று 2 அகல்விளக்குகளை ஏற்றி வைத்து உங்கள் மகளின் வாழ்வு நல்லபடியாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வாருங்கள். அம்பிகையின் திருவருளால் உங்கள் மகளின் மணவாழ்வு மலரட்டும்.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்? ஆன்மிகம், தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004

சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nisarkaa4

  மகாராஷ்டிராவை நிலைகுலைய வைத்த நிசர்கா புயல்: ஆட்டம் கண்ட கப்பல்கள்; மின்னல் தாக்கி பற்றி எரிந்த மரம்!

 • gujarat4

  குஜராத் மாநிலத்தில் வேதிப்பொருள் ஆலையில் கொதிகலன் வெடித்து விபத்து: 8 பேர் பரிதாப பலி..30க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!!

 • ballon3

  பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்கள்: புகைப்படங்கள்

 • police3

  அமெரிக்காவில் 8-வது நாளாக தணியாத போராட்டம்: அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு ஆதரவு அளித்த போலீசார்!!!

 • mkstalin3

  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்