SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமநவமியன்று ரகுநாத நாயக்கர் அளித்த கொடை

2019-04-16@ 11:36:55

கல்வெட்டு சொல்லும் கதைகள் - திருக்கண்ணமங்கை

விஜய நகரப் பேரரசர்கள் காலத்தில் சோழ மண்டலமாகிய தஞ்சாவூர் தேசத்தை அப்பேரரசர்களின் பிரதி நிதிகளாக செவ்வாய் நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத  நாயக்கர், விஜயராகவ நாயக்கர் என்ற நால்வர் ஒருவர் பின் ஒருவராக ஆட்சி செய்தனர். இவர்களில் முதல் மூவருக்கும் பிரதானியாகவும், ராஜ குருவாகவும் விளங்கியவர் கோவிந்த தீட்சிதர் ஆவார். அவர் தம் வழிகாட்டலோடு தஞ்சை நாயக்க அரசர்கள் பல திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்ததோடு புதிய கோயில்களையும் எடுப்பித்தனர். ரகுநாத நாயக்கர் காலத்தில் கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் சோடச மகா தானங்கள் எனப்பெறும் பதினாறு வகையான தானங்களைச் செய்ததோடு அந்த தானங்கள் செய்ய பதினாறு சிவாலயங்களையும் அவை முன்பு பதினாறு மண்டபங்களையும் இணைத்துக் கட்டியதோடு, அம்மண்டப விதானங்களில் எந்தெந்த  தானங்களைத் தீட்சிதர் ஐயனோடு மன்னர் ரகுநாத நாயக்கர் செய்தாரோ அவற்றின் காட்சிகள் சிற்பங்களாக இன்றும் திகழ்வதை நாம் காணலாம்.

வடமேற்குத் திசையில் திகழும் ஒரு பெருமண்டபத்தில் துலாபார தானம் செய்த காட்சிகள் உள்ளன. மன்னர் தராசு தட்டு ஒன்றில் வாளும் கேடயமும் ஏந்தி  அமர்ந்திருக்க மறுதட்டில் தங்கம் குவியலாகக் காணப்பெறும் எழில்மிகு காட்சி இரு இடங்களில் இடம் பெற்றுள்ளன. மன்னார்குடி ராஜகோபாலசாமி  திருக்கோயிலினைப் பெருங்கோயிலாக மாற்றிய பெருமை தஞ்சை நாயக்கர்களையே சாரும். குறிப்பாக ரகுநாதன் ராஜகோபாலசாமி சந்நதி எதிரே காணப்பெறும்  மண்டபத்தில் கோதானம் (பசு தானம்), துலாமேரு தானம் போன்ற பல தானங்களைச் செய்தான் என்பதைக் காட்ட அங்கு நான்கு தூண்களில் அக்காட்சிகளைப்  பதிவு செய்துள்ளான்.

இம்மன்னவனின் ராம பக்தியின் வெளிப்பாடாக அவனால் எடுக்கப் பெற்ற கோயில்கள் கும்பகோணம் ராமசாமி கோயிலும், வடுவூர் ராமர் கோயிலும்  குறிப்பிடத்தக்கவையாகும். இவை போன்றே இவனால் கற்றளியாகப் புதுப்பிக்கப் பெற்ற வைணவ ஆலயம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்  பெற்ற திருக்கண்ண மங்கை திருக்கோயிலாகும். இத்தலம் திருவாரூர் - குடவாசல் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருவாரூருக்கு அருகிலேயே உள்ளது.ரகுநாத நாயக்கரின் ராமபக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது கும்பகோணம் ராமசாமி கோயிலே என உறுதியாகக் கூறலாம். பொதுவாக வைணவ  ஆலயங்களின் மூல ஸ்தானத்தில் ராமருக்காக எடுக்கப்பெறும் தனி சந்நதிகளில் ராமர், சீதா பிராட்டி, இலக்குவன் ஆகியோர் திருமேனிகளும் எதிர் சந்நதியில்  வணங்கிய நிலையிலுள்ள அநுமனின் திருமேனியும் காணப்பெறுபவை ஆகும்.

ஆனால், கும்பகோணம் ராமசாமி கோயிலின் மூல ஸ்தானத்தில் மிகப் பிரமாண்டமான திருமேனிகளாக ராமன், சீதாபிராட்டி, இலக்குவன், பரதன், சத்ருக்னன்  ஆகியோர் ராம பட்டாபிஷேக கோலத்துடன் காணப் பெறுவர். இவர்களுக்கு அருகே பக்கவாட்டில் அனுமன் மண்டியிட்டு அமர்ந்தவாறு ஒருகையில் ரகுநாதேந்திர  வீணையினை ஏந்தியவாறு ஒரு கையில் இராமாயணச் சுவடியை ஏந்தியவாறு ராம காதையினை வீணை இசையோடு பாடுபவராகக் காணப் பெறுகின்றார். இந்த  ராம பட்டாபிஷேக காட்சிக்கு ஈடாக வேறு ஒரு படைப்பினைக் கூற முடியாது. இங்கு மட்டும் ஏன் மூலமூர்த்தியாக பட்டாபிஷேக ராமன் திகழ்கின்றார் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு. விஜய நகர பேரரசர் குடும்பத்தை சிலர் அழிக்க முற்பட்டபோது தஞ்சை ரகுநாத நாயக்கர் உதவியுடன் ரகசியமாக அந்தக் குடும்பத்து சிறுவன் ஒருவனைக் கடத்தி வந்து குடந்தையில் தங்க வைத்தான், ரகுநாதன். பின்பு எதிரிகளை போரிட்டு அழித்து விட்டு அந்தச் சிறுவனுக்கு கும்பகோணத்தில் விஜயநகரப் பேரரசனாக மணிமுடி சூட்டி பேரரசனாக அறிவித்து தர்மத்தை நிலை பெறச் செய்தான். அந்தச் சிறுவனின் பெயர் ராமன் என்பதாகும். அவன்தான் பின்னாளில் சிறந்து விளங்கிய ராமராயர் எனும் விஜயநகரப் பேரரசர் ஆவார்.

ராமன் என்ற சிறுவனுக்கு எந்த இடத்தில் பட்டாபிஷேகம் செய்தானோ அதே இடத்தில் அவனால் எடுக்கப் பெற்றதுதான் கும்பகோணம் ராமசாமி கோயிலாகும்.  அந்தக் கோயிலின் முன் மண்டபத் தூண்களில் ராம பட்டாபிஷேகம். சுக்ரீவ பட்டாபிஷேகம், வீபீஷணன் பட்டாபிஷேகம் போன்ற அரிய காட்சிகளை நாம்  காணலாம் அவை மட்டுமின்றி தஞ்சை நாயக்க அரசர் ரகுநாத நாயக்கர், அவர் மனைவியரான கலாவதி, செஞ்சுலட்சுமம்மா போன்றோரோடு மூலஸ்தான  பட்டாபிஷேக காட்சியை வணங்கும் கோலத்தில் திகழ்கின்றனர். ராமபிரான் பிறந்த ராமநவமி நாளில் அப்பேரரசன் திருக்கண்ணமங்கை கோயிலுக்கு அறுபது வேலி நிலத்தினை கொடையாக வழங்கி, ராமநவமி விழாவினைக் கொண்டாடியதோடு அக்கொடை பற்றியும் அது அக்கோயிலுக்கு அன்று அவன் வருகை புரிந்த காட்சியையும் வரை கோட்டு ஓவியமாக ஒரு அரிய செப்பேட்டினையும் வழங்கியுள்ளான்.

திருக்கண்ணமங்கை திருக்கோயிலில் திகழும் இச்செப்பேடு 34.5 செ.மீ நீளமும் 25.5 செ.மீ அகலமும் உடையதாகும். இச்செப்பேட்டின் முன் பக்கத்தில் முக்கால்  பாகம் வரை கோட்டு ஓவியக் காட்சியுள்ளது. அதற்குக் கீழேகால் பாதம் சாசனத்தின் தொடக்கப் பகுதி அமைந்துள்ளது. பின்புறம் முழுவதும் சாசனம் தமிழில்  எழுதப் பெற்றுள்ளது. இருபக்கங்களிலும் பதிவுகள் உள்ள இச்செப்பேட்டினை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதல் பகுதி ஓவியக் காட்சியும், இரண்டாம்  பகுதியில் விஜய நகர, நாயக்க அரசர்களின் வம்சாவளி மற்றும் விருதாவளி பற்றிய செய்திகளும் மூன்றாம் பகுதியில் திருக்கண்ணமங்கை தலத்தின் ஸ்தல  மகாத்மியமும் விவரிக்கப் பெற்றுள்ளன. நான்காம் பகுதியில் கி.பி. 1609 ஆம் ஆண்டில் திருக்கண்ணமங்கை கோயிலுக்கு ராமநவமி நாளில் மன்னன் ரகுநாதனால்  வழங்கப்பெற்ற அறுபது வேலி நில தானம் பற்றி விவரிக்கப் பெற்றுள்ளது.

ஓவியக் காட்சியில் சூரியனும் சந்திரனும் மேலே திகழ திருக்கண்ணமங்கை இறைவன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதராகக்  காட்சி நல்குகின்றார். இவர்களுக்கு வலப்புறம் அமர்ந்த கோலத்தில் தாயாரும், இடப்புறம் நின்ற கோலத்தில் ஆண்டாளும் திகழ்கின்றனர். இவர்கள் ஐந்து  பேருக்கும் மேலாக திருவாசி அலங்கரிக்கின்றது. நடுவே திகழும் பெருமானை இத்தலத்தில் பத்தராவிப் பெருமான் என்றும் தாயாரை அபிஷேக வல்லித்தாயார்  என்றும் குறிப்பிடுகின்றனர். இவ்வரிசைக்கு கீழாக நம்மாழ்வார், காளிங்க நர்த்தனன், சிவன், பிரம்மன், சூரியன், ஆழ்வார்கள், அநுமன் போன்ற பத்து  திருவுருவங்கள் இடம் பெற்றுள்ளன.

கீழாகவுள்ள மூன்றாம் வரிசையில் கருடாழ்வார் சந்நதி மேலே திகழ எதிரே கொடி மரமும், பலிபீடமும் உள்ளன. ஒருபுறம் ரகுநாத நாயக்கர் பத்தராவிப்  பெருமானை வணங்கி நிற்க, அவர் அருகே ஜீயர் ஒருவரும், மெய்க்காவலனும் உள்ளனர். எதிர்ப்புறம் பட்டர் பூரண கும்பம் காட்ட, ஒருவர் மணி அடிக்க, அரச  குடும்பத்தைச் சார்ந்த மற்றொருவர் (விஜயராகவ நாயக்கர்) வணங்கி நிற்கின்றார். ரகுநாத நாயக்கருக்காக அன்று (கி.பி. 1699) ராமநவமி நாளில் நிகழ்ந்த சிறப்பு  பூஜைக் காட்சியே இங்கு இடம் பெற்றுள்ளது. இதுவொரு புகைப்படப் பதிவு போன்ற ஒரு அரிய காட்சியாகும்.

மன்னர்களின் வரிசையும் புகழும் உரைக்கப் பெற்ற பின்பு, திருக்கண்ண மங்கை தலபுராணம் விரிவாக எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. இலக்குமித்தாயார் பத்தராவிப்  பெருமானை இத்தலத்தில் மணம் புரிந்து கொண்டது. தேவர்களும், மற்றவர்களும் இத்தலத்தில் பேறு பெற்றது போன்றவை விவரிக்கப் பெற்றுள்ளன. இறுதிப்  பகுதியான கொடை அளித்த பகுதி விரிவுபட எடுத்துரைக்கப் பெற்றுள்ளது. சக வருடம் 1530 கலி ஆண்டு 4709 (இதற்கு சமமான ஆங்கில ஆண்டு 1609) ஆன  சௌமிய வருஷம், பங்குனி மாதம் 18ஆம் நாளாகிய வியாழக் கிழமையான புனித ராமநவமி நாளில் மன்னர் ரகுநாத நாயக்கர் திருக்கண்ணமங்கை  திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து 60 வேலி நில தானத்தை கோயிலுக்கு அளித்து அதனை ஜீயர் ஒருவர் மேற்பார்வையில் கொடுத்து பத்தராவிப்  பெருமானுக்கு நிவேதனம், பூஜை விழாக்கள் நடத்துவதற்காக அளித்தமை குறித்து விவரிக்கப் பெற்றுள்ளது. அந்த நிலங்களின் விவரம் பின்வருமாறு குறிக்கப்  பெற்றுள்ளது.

திருக்கண்ணமங்கைக்கு வடக்கும், கீழத்தலை சாத்தங்குடிக்கு கிழக்கும், திருவிடையாட்ட நிலத்திற்கு தெற்கும் வடகண்டம் எனும் ஈவினை நல்லூருக்கும்,  பத்தராவிப் பேட்டை வடக்கும் உள்ள 12 வேலி நிலம் இத்தானத்தில் அடங்கும். இது போன்றே பத்தராவி பேட்டைக்கு தெற்கும், பசலை வட்டத்திற்கு மேற்கும்,  பெரும் புகமூர் வாய்க்காலுக்கு வடக்கும் திருக்கண்ண மங்கைக்கு கிழக்கும் 4 வேலி தோப்பு துறவுகளும் அடங்கும். வடகண்டத்திற்கு தெற்காக 12 வேலி  நிலமும், தாதனேரின பட்டியில் 6 வேலியும், 7 வேலி ஜெகநாதன் பாலையிலும், 5 வேலி ஆத்தங்கரை தோட்டத்திலும் 6 வேலி அம்மையப்பன் இளங்கார்குடி  பகுதியிலும் மேலும் 8 வேலி என 60 வேலி நிலம் பற்றிய விரிவான குறிப்புகளும் நான்கு எல்லைகளும் இந்த செப்பேட்டில் காணப்பெறுகின்றன. ராமநவமி  நாளில் ரகுநாதன் திருக்கண்ணமங்கை கோயிலில் வழிபட்ட காட்சியை ஓவியமாகவும், அந்தப் புனித நாளில் அவன் வழங்கிய கொடையையும், தல  புராணத்தையும் செப்பேட்டில் எழுதியவர் தஞ்சாவூர் லட்சுமண ஆச்சாரி மகன் வெங்கடாசல ஆச்சாரியாவார்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-01-2020

  20-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-01-2020

  19-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-01-2020

  18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 17-01-2020

  17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • Madurai Avaniyapuram Jallikattu

  15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்