SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெருவாழ்வு அளிப்பாள் பெரியாயி

2019-04-15@ 17:27:54

நம்ம ஊரு சாமிகள் - புதுநல்லூர், குன்றத்தூர், சென்னை

வல்லாள கண்டன் என்ற அசுரன் தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என்று சிவனை நோக்கி வலிமையான தவம் புரிந்தான். அவனின் தவத்தைக் கண்ட அரனார், அவன் முன் தோன்றினார். ‘‘என்ன வரம் வேண்டும்’’ என்று கேட்டார். ‘‘எனக்கு மரணமே நேரக்கூடாது’’ என்று அவன் கூற, சிவன், அவ்வாறு யாரும் வாழ முடியாது என்று பதிலுரைக்க, ‘‘அப்படியானால்... ’’ ‘‘நீயே சொல் உன் ஆயுள் எப்படி முடிய வேண்டும் என்று’’ என்ற சிவனாரிடம்...
‘‘முதுமைப் பருவம் கண்டு வயோதிக நிலையில் இருக்கும் பெண் ஒருவரால் தான் எனக்கு மரணம் நேர வேண்டும். அதுவும் இரவுப் பொழுதில் தான் ஆயுள் முடிய வேண்டும்’’ என்றான். சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்றார். வல்லாள கண்டனுக்கு பெரிய சந்தோஷம். காரணம் வயதோதிக நிலையில் இருக்கும் பெண் எப்படி ஆயுதம் ஏந்துவாள். அதுவும் இரவுப் பொழுதில் எப்படி அவளுக்கு கண் பார்வை துல்லியமாக தெரியும். அதனால் இந்த ஜென்மத்தில் தனக்கு மரணம் எந்த வகையிலும் நேராது என்று இறுமாப்புடன் இருந்தான். தலை, கால் புரியாமல் ஆட்டம் போட்டான்.

தேவர்கள் உள்பட பலரையும் வஞ்சித்தான். தான் ஆளும் பகுதியில் வாழும் குடிமக்களை கொடும் துயரத்திற்கு ஆளாக்கினான். இந்நிலையில் எல்லா வளங்களும் பெற்றிருந்தாலும் தனக்கு வாரிசு இல்லையே என்கிற குறை வல்லாளகண்டனிடம் இருந்தது. அதைவிடப் பல மடங்கு அவனது மனைவியான வல்லாள கண்டியிடம் இருந்தது. அரக்கனை மண முடித்திருந்தாலும் வல்லாள கண்டி பராசக்தியின் பக்தையாகத் திகழ்ந்தாள். தனது கணவனுக்குத் தெரியாமல் தன் பக்தியை வெளிப்படுத்தினாள். சக்திக்கு உரிய பூஜையை செய்து வந்தாள். சிவனிடம் ஏற்கனவே வரம் வாங்கிய வல்லாள கண்டன், மழலை வரம் கேட்டு மகேஸ்வரனை நோக்கி மீண்டும் தவம் புரிந்தான். அதன் பயனாக அவன் முன் தோன்றிய சிவபெருமான். ‘‘என்ன வரம் வேண்டும்’’ என்று கேட்க, ‘‘அண்ட சராசரங்களை அடக்கி ஆளும் ஆதி பரமேஸ்வரனே எனக்கு மகனாக பிறக்க வேண்டும்.’’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் ‘‘அப்படியே ஆகட்டும்’’ என்றார். இதனிடையே வல்லாள கண்டன் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள், காத்தலுக்குரிய கடவுளான மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.

மகாவிஷ்ணு, தங்கை சக்தியிடம் கூறினார். வல்லாள கண்டன் பெற்ற வரம் பற்றியும், அவனுக்கு சிவனே குழந்தை வரம் அளித்ததையும் கூறினார்.  எப்படி வல்லாள கண்டனை வதம் செய்வது என யோசித்த தேவியிடம் நீயே வயோதிகப் பெண்ணாக செல் என்றார். மேலும் ‘‘அரக்கியின் வயிற்றிலிருந்து குழந்தை பிறக்கும்போது,  அரக்கியின் உதிரம் இந்த மண்ணில் விழும். அவ்வாறு உதிரம் விழுந்தால், ஒவ்வொரு துளியிலிருந்தும் பெரும் தீவினைகள் விளையும்! ஆகவே குழந்தையை வல்லாளகண்டி பெற்றெடுக்கும் முன்னே  வல்லாள கண்டியை வதம் செய்ய வேண்டும். மகவு அந்த மகேஸ்வரன் என்பதால், வயிற்றுப் பாரத்தை இறக்கிவிட்டு வதம் செய் என்றுரைத்தார். இதையடுத்து, சக்தியும் அண்ணன் மகா விஷ்ணுவின் ஆலோசனைப்படி, பூலோகம் வந்தாள்.  வல்லாள கண்டிக்குப் பிரசவ வலி ஏற்பட்ட நேரத்தில், ஊரில் இருந்த அனைவரையும் மாயமாக மறையச் செய்தார் மாயவன் மகாவிஷ்ணு. அப்போது, வயது முதிர்ந்த மருத்துவச்சி வடிவில் (குடிமகளாக) ஊருக்குள் வந்தாள் பராசக்தி! ‘‘மனைவிக்குப் பிரசவம் பார்க்க, ஊருக்குள் எவருமே இல்லையே!’ என்று பரிதவித்த வல்லாள கண்டன், முதுமை நிறைந்த மருத்துவச்சியைக் கண்டதும் மகிழ்ந்தான். அவளையே மருத்துவம் பார்க்கச் சொன்னான்.

வல்லாளகண்டி படுத்திருந்த அறைக்குள் சென்றதும் மருத்துவச்சி (உமையவள்) முறம், அரிவாள் மற்றும் ஒரு அகன்ற பாத்திரம் (சட்டி) ஆகியவற்றை கொண்டு வரும்படி வல்லாளகண்டனிடம் கூறினாள். ‘‘இதெல்லாம் எதற்கு?’’ என்று வினவினான் வல்லாள கண்டன். ‘‘அரிவாள் தொப்புள் கொடி அறுக்க, முறம்  உதிரத்தை அள்ள, சட்டி  தண்ணீர் எடுத்துக் கழுவ’’ என்றாள் மருத்துவச்சி. மூன்றையும் கொண்டு வந்து கொடுத்தான் அரக்கன். வல்லாள கண்டிக்கு பிரசவ வலி உச்சம் அடைந்த நேரத்தில், பதினாறு கைகளுடன் விஸ்வரூபம் எடுத்தாள் பராசக்தி. வல்லாள கண்டியின் வயிற்றை சூலத்தால் கிழித்தாள். மழலை வடிவில் இருப்பது மகேசன் வடிவம்தான் என்பதால் இருண்ட நேரத்தில் உச்ச இரவு பொழுதில் பிறந்தவனை சக்தி கூறினாள். இருளா, வெளியே வா என்றாள். கிழிக்கப்பட்ட வல்லாளகண்டியின் வயிற்றிலிருந்து வந்தாள் இருளன் என்ற இருளப்பன்.

கைக்குழந்தையை கரத்தில் வைத்த முறத்தில் ஏந்திய சக்தி, வல்லாள கண்டனை வதம் செய்தாள். உக்கிரம் பொங்கியிருந்த சக்தியிடம் வல்லாளகண்டி ‘‘அம்மா, அரக்கனுக்கு வாக்கப்பட்டதை தவிர, நான் பாவம் செய்தேன். என்னை ஏன் வதம் செய்யப்போகிறாய் என்றுரைத்தாள். ஆங்காரம் கொண்டிருந்தாலும் ஆதிபராசக்தி, உலகையே ஆளும் தாயல்லவா. மனம் இறங்கினாள். சரி, உனக்கு கொல்லும் வரம், வெல்லும் வரம் அண்டியவர்களை காக்கும் வரம் யாவும் தருகிறேன். ஆனால் பாதாள லோகம் சென்று உன்னை வணங்கும் பக்தர்களை காத்தருள் செய் என்று வரமளித்தாள். இந்த வல்லாளகண்டி, பாதாளகண்டி அம்மன் என்னும் பெயரில் இருளப்பன், இருளாயி, சுடலைமாடன், இசக்கியம்மன், பேச்சியம்மன் ஆகிய தெய்வங்கள் கோயில் கொண்டிருக்கும் பகுதிகளில் பரிவார தெய்வங்களாக (21 பந்தி தெய்வங்கள்) நிலையம் பெற்றுள்ளார். வல்லமை கொண்ட வல்லாள கண்டனை வதம் செய்த பின்னர். ஆதிசக்தியின் ஆங்காரம் தணியவில்லை!

ஆனை போல அதறினாள், அங்கும் இங்கும் ஓடினாள், நாவைத் துருத்தி, சடையை விரித்து விரிபல் கொண்டு ஆதாளி போட்டு ஆடி நின்றாளே ஆங்கார ரூபணி, ஆதிபராசக்தி அவள். சக்தியின் கோபம் தணிய என்ன வழி செய்யலாம் என்று யோசித்த மகாவிஷ்ணு, சக்தியை சாந்தப்படுத்தும் வகையில், தேவர்களை வரவழைத்து தேர் ஒன்றை உருவாக்கி, அதில் உமையாளை போற்றிப்பாடி அமரச் செய்தனர். பின்னர் அந்த ரதத்தை இழுத்து வந்தனர். அப்போதும் அவளின் சீற்றம் தணியவில்லை. ‘‘பராசக்தியை மல்லாக்கப் படுக்கவைத்து விட்டால், அவளது சீற்றத்தைத் தணித்து விடலாம்’’ என்று எண்ணிய தேவர்கள்,  துதிகள் பல பாடி உமையாளை உறங்கச் செய்ய மல்லாக்கப் படுக்க வைத்தனர். மல்லாக்கப் படுத்தாலும் மகேஸ்வரி தூங்க வில்லையே, கண் மூடவில்லையே இருப்பினும் ரதத்தை தேவர்கள் இழுத்துக் கொண்டே சென்றனர். இப்படி எவ்வளவு நாழிகை தான் இழுப்பது என வினவிய தேவர்களிடம், மகாவிஷ்ணு சிறிது தூரம் இழுங்கள் என்று கூறிவிட்டு ரதம் போன்ற திரடு, (மண்ணால் ஆன மேட்டுப்பகுதி) அதை திருவண்ணாமலை அருகேயுள்ள வனப்பகுதியில்(தற்போது மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் இருக்கும் பகுதியின் அருகே ரதம் வந்ததும், திரட்டை உருவாக்கி வைத்துவிட்டு ரதத்தை மாயமாக்கினார். அந்த மாயவன்.

அங்கே வந்த மல்லாக்கப் படுத்த மகா சக்தி, மகேஸ்வரி, அப்படியே படுத்தாள். சினம் தணிந்தாள். அவள் படுத்த இடத்தில் அந்த சக்தியின் ரூபம் அப்படியே இருந்தது. அங்காள பரமேஸ்வரிக்கு முந்தியே இந்த நிகழ்வு நடந்ததால் இவளே பெரியவள் என்று கருதும் வகையில் அங்காள பரமேஸ்வரி தாயாகவும், மல்லாக்க படுத்த நிலையில் இருக்கும் இந்த சக்தி பெரியதாயாகவும் அழைக்கப்பட்டாள். பெரியதாய் என்ற பெயரே நாளடைவில் பெரியாயி என மறுவியது.  அதுவே  தற்போதும்   தொடர்கிறது. பெரியாயி என்ற நாமத்தில் அம்மன் அழைக்கப்படுகிறாள்.படுத்த நிலையில் இருந்து பக்தர்களின் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்து வருகிறாள் பராசக்தி. பெரியாயி அம்மனுக்கு தலைமை பதி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் தான்.

இருப்பினும் தனது பக்தர்களிடம் கனவிலும், அருள் வாக்குமூலமும் சென்று தனக்கு கோயில் எழுப்பி வழிபட செய்யச்சொல்லியே பல ஊர்களில் கோயில் கொண்டுள்ளாள். அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டையில் பிறந்து வளர்ந்த ரகு என்பவரிடம் தனக்கு கோயில் கட்டி வழிபட வேண்டும் என்று கேட்டு குன்றத்தூர் அருகேயுள்ள புதூர்நல்லூரில் அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலிலும் ஒரு நிலையம் வாங்கி உள்ளாள் பெரியாயி. சென்னை, குன்றத்தூர் அருகேயுள்ள புதூர் நல்லூரில் ஏரிக்காத்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோயில் ஏரிக்கரையின் மேல உள்ளது. ஸ்ரீ பெருமந்தூர் சாலையில் உள்ள இந்தக் கோயிலில் பெரியாயி நிலையம் கொண்டுள்ளாள். ஞாயிறு, வெள்ளி, செவ்வாய், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய தினங்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில், அருள்வாக்கு மேடையில் அமர்ந்து ரகு அருள்வாக்கும் சொல்கிறார்.

சு.இளம் கலைமாறன்

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்