SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரச்னைகளைக் கண்டு மிரளாதீர்கள்!

2019-04-15@ 17:26:20

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது - 11

ஞானிகளால் உச்சரிக்கப்பட்டவை மகாவாக்கியங்கள். மகாவாக்கியங்கள்  கொண்டிருக்கும் மகத்தான பண்புகளில் ஒன்று சூழலுக்கு ஏற்ப பொருள் தருதல். தமஸோமா ஜோதிர் கமய என்பது அத்தகைய மகாவாக்கியம். இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு என்னை அழைத்துச் செல் என்னும் இறைஞ்சுதல் வாக்கியம் இது.
எந்த இருட்டிலிருந்து எந்த வெளிச்சத்திற்கு இறை சக்தி நம்மை அழைத்துச் செல்கிறது என்பதற்கு அவரவர் வாழ்வின் தருணங்களுக்கு ஏற்ப நாம் பொருள் கொள்ள முடியும். ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள் என்றால் அவளுடைய உற்றார், உறவினர்களின் வேண்டுதல் நல்ல வண்ணம் குழந்தையை அவள் பெற வேண்டும் என்பதாகும். மகளின் மகப்பேற்றுக்குப் தாய் வர நினைத்து, காவிரியில் வெள்ளம் பெருகியதால் பயணம் தடை உற்று, வர இயலாமல் போக சிவபெருமானே தாய் வடிவில் வந்ததை தெரிவிப்பதுதான் தாயுமானவர் சந்நதி மகத்துவம்.

அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்ல. பொதுவாகவே கருவறையில் இருக்கும் குழந்தை வெளிப்பட வேண்டும் என்றால் அதற்கும் இறை சங்கல்பம் வேண்டியிருக்கிறது. கருவறையின் இருட்டிலிருந்து உலகின் வெளிச்சத்திற்கு ஒரு குழந்தை வருகிறது. விஜயதசமி நன்னாளில் நல்லாசிரியர் ஒருவரை அணுகி குழந்தை ஹரி நமோத்து சித்தம் என்று அரிசி நெல்லில் எழுதி தனது அறிவுலக பயணத்தை தொடங்குகிறது. அறியாமலென்னும் இருட்டிலிருந்து அறிவின் வெளிச்சப் பிரதேசத்துக்குள் அது பிரவேசிக்கிறது. அதன் பின்னர் உலக வாழ்வில் ஈடுபடும் தகுதி முழுமை பெறும் போது ஒவ்வொரு நாளும் பிரார்த்தனையும் சமய நியமங்களும் பின்பற்றப்பட்டால் வாழ்வின் அனுபவங்கள் வெறுமனே கடந்து போகாமல் அது ஒருவிதமான அறிவின் துலக்கத்தை அளித்துவிட்டு போகிறது. முதுமை வந்த பிறகு வாழ்வின்  மாயம் ஒவ்வொன்றாய் அகன்று பிறவாமை என்னும் பேரொளி தன்னை ஆட்கொள்ள வேண்டும் என்று அந்த உயிர் பிரார்த்திக்கிறது.

கருவிலிருந்து பிறப்பு எடுப்பது ஒரு வெளிச்சம் என்றால் பிறப்பிலிருந்து விடுபடுவது பெருவெளிச்சம். இப்படி நொடிக்கு நொடி சம்பவத்துக்கு சம்பவம் மனிதன் அறியாமையிலிருந்து விடுபட தவியாய்த் தவிக்கிறான். ஒவ்வொரு காலகட்டத்திலும் தெய்வத்தின் திருவருளோடு தன் தேடலுக்கு உகந்த வழிகாட்டியை அவன் சந்திக்கிறான். என்றாலும் உலகியல் சார்ந்த அம்சங்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் அவனே சிந்தித்து முடிவெடுக்கிறான். இதில் நிர்வாக நிலையிலும் குடும்ப நிலையிலும் சில முடிவுகளை எடுக்கமுடியாமல் தயக்கம் பிறக்கிறது. தகுந்த முடிவு என்று தெரிந்தாலும் பெரும்பாலான நேரங்களில் அந்த தயக்கமே தடுக்கிறது. தயக்கமென்னும் இருளில் இருந்து  தீர்வு என்னும் ஒளியை நோக்கியபயணம் ஒவ்வொரு தருணத்திலும் சவாலாகவே இருந்து வருகிறது. ஒரு முடிவு எடுப்பதில் உங்களுக்கு தயக்கம் வருகிறது என்றால் முதலில் நீங்கள் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

ஏனெனில் தவறான ஒரு முடிவை அவசரப்பட்டு எடுத்து அதை நினைத்து வாழ்க்கை முழுவதும் வருத்தப்படுவதை விட தயக்கம் என்னும் தடுப்பை எழுப்பி உங்களை தவறான முடிவு நோக்கி செல்லவிடாமல் தடுத்தாட்கொண்ட தயவுக்காகவே நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு சிக்கலில் முடிவெடுப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. அத்தகைய சூழ்நிலைகளில் நாம் முதலில் செய்ய வேண்டியது, அந்த சிக்கலும் பதட்டமும் நம்மை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது. ஏனெனில், இப்படி ஒரு சிக்கல் வந்துவிட்டதே என்று பதறினால் அப்புறம் நமக்கு ஒன்றுமே  தோன்றாது. அதேநேரம் பதட்டத்திலேயே இருப்பதால் சிக்கலும் தீராது. எனவே நம்முடைய ஞானிகள் வெளிச் சூழலை வெளிச்சூழலாக மட்டுமே பார்ப்பதற்கு நமக்கு கற்றுக் கொடுத்தார்கள். தியானத்தின் வழியாக நம் எண்ணங்களுக்கும் நமக்கும் நடுவில் ஓர் இடைவெளியை ஏற்படுத்திக்கொள்ள அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

தியானத் தன்மையுடன் ஒரு மனிதன் இருப்பார் என்று சொன்னால் வெளிச் சூழலில் வரக்கூடிய ஒரு சிக்கலை தனக்கு உள்ளே இழுத்து விட்டுக் கொண்டு சங்கடப்பட மாட்டார். எத்தனை பெரிய பிரச்னை என்றாலும் ரத்த அழுத்தம் எகிறாது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நோக்கியே சிந்தனை  செல்லும். அந்த நிதானமே தீர்வை நோக்கிய பயணத்தை தீவிரப்படுத்தும். நாம் நம் குழந்தைகளை வாழ்வுக்கு தயார் படுத்துகிறோம் என்றால் அவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என்று பலரும் கருதுகிறோம். அது சாத்தியமே இல்லை. நாம் போடுகிற வேலிகளைத் தாண்டி சில சிக்கல்கள் வரத்தான் செய்யும். எனவே, சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முயன்று தோற்பதை விட எந்த சிக்கலையும் எதிர்கொள்ளக்கூடிய தகுதியையும் நிதானத்தையும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தான் புத்திசாலித்தனம்.

பதின் பருவத்திலேயே யோகா, தியானம் போன்ற முறையான வகுப்புகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் யோகா, தியானம், பிரார்த்தனை போன்றவை அன்றாட வாழ்வில் அம்சங்களாக மாறும் போது  நம்முடைய  உள்ளுணர்வு  கூர்மைப்படுகிறது. ஒரு சிக்கல் வரும் முன்னே அதனை உணர்த்துவதிலும் வந்த சிக்கலை சரியாக கையாண்டு தீர்ப்பதிலும் உள்ளுணர்வுக்கு நிறைய பங்கு உண்டு. இந்த உலகில் சமூக வாழ்க்கையில் பொருளாதாரத்திலும் பிற விஷயங்களிலும் போதாமையில் பலர் இருக்கிறார்களே என்கிற கேள்விக்கு மிகவும் புதிய கோணத்தில் திருவள்ளுவர் அதற்கான காரணத்தை சொல்கிறார். வளங்கள் சிலருக்கு குறையக் காரணம் அவர்களுக்கு தவம் செய்யும் பழக்கம் இல்லாததுதான் என்கிறார் திருவள்ளுவர்.  இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர் பலர் நோவா தவர் என்கிறார்.

பலரும் விளக்கம் சொல்ல முடியாமல் இந்த திருக்குறளைக் கடந்து போய்விடுவார்கள் அன்றாட வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் அம்சங்களில்  வெற்றி பெறுவதற்கு தியானத்தன்மை எவ்வளவு அவசியம் என்பதை இந்தக் குறள் உணர்த்துகிறது. ஒருவர் தன்னுடைய அன்றாட கடமைகளை ஒழுங்குபட செய்கிறார் என்றால் அவர் தவம் செய்பவராக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு திருவள்ளுவர் வருகிறார். இன்னொரு பக்கம், எதையோ தொடங்கி அது எதிலோ சென்று முடிந்து  தடுமாறுபவர்களைப் பார்த்து இவர்கள் தங்கள் வேலையை செய்வதாய் நினைத்து அவம் செய்கிறார்கள் என்கிறார் தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றெல்லாம் அவம் செய்வார் ஆசையுட் பட்டு என்கிற திருக்குறளையும் இங்கே இணைத்து நினைத்துக் கொள்ளலாம். எனவே,  எவ்வளவுதான் சிக்கல் வந்தாலும் பதறாமல் இருப்பதே முதல் வெற்றி. அதன் பிறகு சூழ்நிலையை சரியாக ஆராய்ந்து நாம் மேற்கொள்கிற முடிவால் அந்த சிக்கலிலிருந்து மீள்வதற்குரிய புதிய வழியை நாம் கண்டடைய வேண்டும்.

அடுத்து நாம் வைத்திருக்கிற வகுத்து வைத்திருக்கிற லட்சியங்களுக்கு முரண்பாடு வராத விதத்தில் இந்த முடிவுகளை செயல்படுத்த வேண்டும். எடுக்கும் முடிவு கடுமையாக இருந்தாலும் அது நாம் வகுத்திருக்கும் வாழ்வில் கோட்பாட்டுக்கு முரண்படாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். சிவனடியார்கள் எவராக இருந்தாலும் அவர்களை வணங்குவது என்பது மெய்ப்பொருள் நாயனார் வகுத்துக்கொண்ட தன்னறம். போர்க்களத்தில் அவரை வெற்றி கொள்ள முடியாத பகை அரசன் முத்தநாதன் சிவனடியார் போல வேடமிட்டு அவரைக் காண வருகிறான். சிவனார் அருளிய ஆகம நூல் தன்னிடம் இருப்பதாகவும் அதை உபதேசிக்க வந்ததாகவும் அவன் சொல்கிறான். அவனை வணங்கி ஆசனத்தில் விருத்தி கீழே அமர்ந்து தலையால் பணிந்து மெய்ப்பொருளார் பாடம் கேட்க முற்படுகிறார். சுவடிகள் நடுவே வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து அவன் பயன்படுத்துகிறான்.

ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதை உணர்ந்து  வெளியே நிறுத்தப்பட்டிருந்த  மெய்க்காப்பாளன் தத்தன், உடைவாளை உருவிக் கொண்டு ஓடோடி வருகிறான். பொய் வேடமிட்டு பகையரசன்  தங்கள் மன்னரின் உயிரை மாய்க்க வந்து அந்த திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டதை தத்தன் உணர்கிறான். உருவிய வாளுடன் வருகிற மெய்க்காப்பாளனை மெய்ப்பொருளார் காண்கிறார். உயிர் பிரியக்கூடிய சூழலில் சில விநாடிகளில் அவர் முடிவெடுக்க வேண்டி வருகிறது.மெய்க்காப்பாளன் தன் கடமையை செய்தால் அதில் தவறு ஏதும் இல்லை ஆனால் சிவனடியார்களுக்கு எந்த பங்கமும் வராமல் காப்பது என்னும் தன் லட்சியம் பொய் வேடமிட்டு வந்த  ஒருவனிடம் கூட பொய்யாகி விடக்கூடாது என்று மெய்ப்பொருளார் முடிவெடுக்கிறார்.

முத்தநாதனை காட்டி இவர் நம்முடையவர் என்று பிரகடனம் செய்து நாட்டு எல்லை வரை பாதுகாப்பாகச் சென்று அவரை விட்டு வர வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார். ஒருவேளை. தன்னுடைய முடிவை மாற்றி பொய்வேடம் இடுதல் கொலை செய்தல் போன்ற குற்றங்களுக்காக முத்தநாதனை கொல்ல ஆணையிட்டிருந்தால் யாரும் குறை சொல்லப் போவதில்லை.ஆனால் அந்த சிந்தனையே அவருக்கு வரவில்லை.  தான் வகுத்துக்கொண்ட லட்சியத்தை தன் உயிருக்கும் மேலாக கருதியதால் துளிகூட தயக்கமின்றி அந்த வினாடியில் அவர் முடிவெடுக்கிறார். இந்தத் துணிவு தான்  இறை அன்பினாலும் அடியார் மேல் உள்ள பக்தியாலும் ஏற்படும் துணிவு. அதனால் தான் திருத்தொண்டர்களைப் பற்றி சொல்கிறபோது சேக்கிழார்.

ஈர அன்பினர் யாதும் குறைவிலார்
வீரம் என்னால் விளங்கும் விளங்கும்
தகையதோ


என்று வியக்கிறார். நம்முடைய தீர்மானங்களை நாமே மதிப்பதற்கும் சற்றும் தயங்காமல் முடிவெடுப்பதற்கும் கூர்மையும் வேண்டும் நேர்மையும் வேண்டும்.  பதட்டம் என்னும் இருளில் இருந்து தீர்வு என்னும் வெளிச்சம் நோக்கி செல்வதற்கே அறிவு. அந்தப் பயணத்தில் ஆற்றுப்படுத்துவதே ஆன்மிகம்.

மரபின் மைந்தன் முத்தையா

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-10-2019

  18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • RoboChefOdisha

  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

 • AIADMK48

  அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

 • KateWilliamNorthPak

  அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

 • SouthPhilippinesEQ

  பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்