SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறப்பான எதிர்காலம்!

2019-04-15@ 17:23:35

மெரைன் இன்ஜினியரிங் படித்திருக்கும் என் மகன் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தலையில் அடிபட்டு முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் மறுபிறப்பு எடுத்து நலமுடன் உள்ளார். இதுநாள் வரை சிகிச்சையில் தான் உள்ளார். 98% சரியாகிவிட்டது. 2% ஞாபக மறதி மட்டும் உள்ளது. அவரது படிப்பு சம்பந்தமான கப்பல் வேலைக்கு அனுப்ப மனமில்லை. எதிர்காலம் குறித்து கவலையாக உள்ளது. நல்ல வழியைக் காட்டுங்கள். பரமசிவம், சிதம்பரம்.

பூசம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது கேது தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. மகனை உயிருடன் திரும்பக் கொடுத்த தெய்வம் அவர் எதிர்காலத்தையும் சிறப்பாக அமைத்துத் தருவார் என்ற நம்பிக்கையில் வாழ்வதாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். அதிலிருந்து சிறிதும் பின் வாங்காமல் அந்த நம்பிக்கையையே இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். கப்பல் வேலைக்கு அனுப்ப மனமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். அதை நீங்கள் முடிவு செய்யாதீர்கள். உங்கள் மகன் முடிவெடுக்கட்டும். மெரைன் இன்ஜினியரிங் படித்தால் கப்பலில்தான் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. கப்பல் சார்ந்த பணிகளை தரையில் இருந்து பார்ப்பதற்கும் வாய்ப்பு உண்டு.

அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி சனி வக்ரம் பெற்று 12ல் அமர்ந்திருப்பதும், ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய் எட்டில் குருவுடன் இணைந்திருப்பதும் உள்நாட்டு கம்பெனியில் இவரது உத்யோகத்தை அமைத்துத் தராது. வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் தான் இவரது பணி என்பது அமையும். ஆறாம் வீட்டில் சூரியன், சந்திரன், புதனின் இணைவும் போராட்டமான வாழ்வினை உண்டாக்கும். வாழ்வின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கஷ்டப்பட்டுத்தான் அடைய வேண்டியிருக்கும். உழைப்பதற்குத் தயாராக இருக்கும் உங்கள் மகனை பின்னோக்கி இழுக்காமல் அவரது போக்கிலேயே செல்ல அனுமதியுங்கள். உத்யோக ஸ்தானத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் ராகுவின் புக்தியே தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்த வருடத்திற்குள் அவருக்கு உத்யோகம் கிடைத்துவிடும். ராகு லக்னாதிபதி சனியின் சாரம் பெற்றிருப்பதால் அரபு நாடுகளில் வேலை அமைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவரது உடல்நிலை பற்றிக் கவலைப்படாமல் தைரியமாக அந்நிய தேச கம்பெனி வேலைக்கு விண்ணப்பிக்க அனுமதியுங்கள். திருமணம் குறித்து தற்போது அவசரப்பட வேண்டாம். உறவுமுறையில் பெண் அமைவதற்கான வாய்ப்பு குறைவு. 30வது வயதில் அவரது திருமணம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை தோறும் ராகுகால வேளையில் துர்கையின் சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். மகனின் எதிர்காலமும், உடல் ஆரோக்யமும் சிறப்பு பெறும்.

“உமாதேவீ சிர: பாது லலாடே சூல தாரிணீ
சக்ஷூஷு கேசரீ பாது கர்ணௌ சத்வர வாஸிநீ.”


எனக்கு 30 வயதாகிறது. இன்னும் திருமணமாகவில்லை. கல்லூரியில் உடன்படித்த ஒருவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். இருவருமே எம்.எஸ்.சி., பி.எட்., படித்தவர்கள் என்றாலும் சாதியைக் காரணம் காட்டி பெற்றோர் எதிர்க்கிறார்கள். எங்கள் இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடக்க நல்ல வழியைக் கூறுங்கள். தினகரன் வாசகி.

மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் காதலரின் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதக பலத்தின்படி தற்போது திருமண யோகம் என்பது வலிமையாக உள்ளது. ஆனால் அவரது ஜாதகத்தில் தற்போது நேரம் சரியாக இல்லை. வீண்வம்பு, வழக்கு பிரச்னைகள் வந்து சேரக் கூடும். அதனால் இந்த வருடத்தின் இறுதிவரை அமைதியாக இருப்பதே நல்லது.

அதற்குள் அவரது உத்யோகம் என்பது தற்போது இருப்பதை விட மேலும் சற்று உயரும். வருகின்ற ஜனவரி மாதத்தில் இருந்து அவரது ஜாதகத்தின்படி திருமண யோகம் என்பது கூடி வருகிறது. அந்த நேரத்தில் முயற்சிக்கும்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு உண்டு. வாரந்தோறும் செவ்வாய்கிழமை நாட்களில் அருகிலுள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று இரண்டு விளக்குகள் ஏற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தைச் சொல்லி வழிபட்டு வாருங்கள். 11.09.2020க்குள் உங்கள் திருமணம் பெற்றோர் முன்னிலையில் நல்லபடியாக நடந்துவிடும்.

“ஸ்ரீ கார்த்திகேய கருணாம்ருத பூர்ணத்ருஷ்ட்யா
காமாதி ரோக கலுஷீக்ருத துஷ்டசித்தம்
ஸிக்த்வாது மாமவ கலாநிதி காந்தி காந்த்யா
வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.”


எனது மகன் பிறவியில் இருந்து வாய் பேசாமல் இருக்கின்றான். எப்போதாவது ஒரு தடவை அவனாக அம்மா, அப்பா என்று சொல்லுவான். அதை மறைந்து இருந்துதான் பார்த்துள்ளோம். மூன்று மாத குழந்தையிலிருந்து வலிப்பு வந்து கொண்டிருக்கிறது. பார்க்காத மருத்துவம் இல்லை. என் மகன் எப்போது அம்மா   அப்பா என்று சொல்லுவான்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? பெருமாள், மாங்காடு.

மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் புதனும், வாக்கு ஸ்தான அதிபதி குருவும் வக்ர கதியில் அமர்ந்திருக்கிறார்கள். மேலும், குரு பகவான் எட்டாம் வீட்டில் கேதுவுடன் இணைந்திருப்பதும், வாக்கு ஸ்தானம் ஆகிய இரண்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன், ராகுவும் இணைந்திருப்பது சிரமத்தைத் தந்து கொண்டிருக்கிறது. என்றாலும் தற்போது நடந்து வரும் சுக்கிர தசையில் ராகு புக்தியின் காலம் என்பது ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.

சுக்கிரன், ராகு இருவருமே வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்லதொரு மாற்றத்தை விரைவில் காண்பீர்கள். நீங்கள் வசிக்கின்ற மாங்காடு பகுதியே சுக்கிர ஸ்தலம் ஆகும். மாங்காட்டில் அமைந்திருக்கும் வெள்ளீஸ்வரர் ஆலயத்திற்கு ராகு காலத்தில் சென்று பிள்ளையின் நலன் கருதி உங்கள் மனைவியை கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். மூலஸ்தானத்தில் அருட்பாலிக்கும் வெள்ளீஸ்வரரிடமே உங்கள் குறைகளை முறையிடுங்கள். 06.06.2020ற்குள் மகனின் செயல்பாட்டில் நல்லதொரு முன்னேற்றத்தை கண்கூடாகக் காண்பீர்கள்.

“பக்திப்ரியாய பவரோக பயாபஹாய உக்ராய துர்க பவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாமஸூந்ருத்யகாய தாரித்ர்யது:க்க தஹனாய நம:சிவாய.”


ஆறாம் வகுப்பில் படிக்கும் என் பேரன் நண்பர்களுடனும் ஆசிரியர்களிடமும் நல்லபடியாக உள்ளான். கடந்த சில மாதங்களாக வீட்டில் உள்ள எல்லோரிடமும் மிகுந்த கோபமாக நடந்து கொள்கிறான். சொல்படி கேட்பதும் இல்லை. படிப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவனது குணம் நல்வழிப்பட உரிய பரிகாரம் சொல்லுங்கள். சத்யநாராயணன், பெங்களூரு.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதோடு நீசம் பெற்ற சந்திரனுடன் 3ல் இணைந்துள்ளார். சந்திரன் மனோகாரகன் என்பதால் தற்சமயம் அவருடைய சிந்தனையில் குழப்பம் என்பது அதிகமாக உள்ளது. தனக்குள் இருக்கும் தெளிவின்மையை நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களிடத்தில் வெளிப்படுத்தாது தனக்கு நெருக்கமானவர்களிடத்தில் மட்டும் வெளிப்படுத்தி வருகிறார்.

அவரது உள்ளத்து உணர்வைப் புரிந்துகொண்டு அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். அவரது மனதில் ஒளிந்திருக்கும் சந்தேகங்களை வெளிக் கொணர முயற்சியுங்கள். அதற்கான தெளிவான பதில்களையும் பொறுமையுடன் சொல்லிப் புரிய வையுங்கள். யோகாசன வகுப்பிற்கு அனுப்பி வாருங்கள். உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வதும் அவரது மனதில் தெளிவினை உண்டாக்கும். அவரது தாயாரை வாரந்தோறும் புதன்கிழமை நாளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் நெய் விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். 27.11.2020க்குப் பின் அவரது நடவடிக்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்.

எனக்குத் திருமணம் நடந்து 12 வருடங்கள் முடிந்து விட்டன. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதற்கேற்ப வாழ்க்கை சுழன்று ஓடிவிட்டது. எனது கணவர் எதையும் மனம் விட்டுக் கூறியதில்லை. இருவரும் எந்தக் கோயிலுக்கும் சேர்ந்து சென்றதில்லை. இவ்வாறு பட்டும் படாமல் வாழ்ந்து வருவது மிகவும் மனக் கவலையைத் தருகிறது. குடும்பத்தில் எப்போது நிம்மதி பிறக்கும்? மோகனசுந்தரி, சேலம் மாவட்டம்.

ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. நீங்கள் இருவருமே ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் என்பதால் உங்களுக்குள் பொருத்தம் என்பது மிகவும் நன்றாக உள்ளது. மேலும், அவரது ஜென்ம லக்னமாகிய கன்னி ராசிக்கு ஏழாம் வீடாகிய மீன ராசியை ஜென்ம லக்னமாகக் கொண்டுதான் நீங்களும் பிறந்திருக்கிறீர்கள். லக்ன ரீதியாகவும் இருவருக்குள்ளும் பொருத்தம் என்பது மிகவும் நன்றாகவே உள்ளது. உங்கள் கணவர் உங்கள் மீது மிகுந்த பாசத்தினை வைத்துள்ளார்.

அவரது பிரச்னை தனது உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தாதது மட்டுமே. லக்னாதிபதி புதன் 12ல் மறைவதால் அவர் தனது எண்ணத்தை எங்கும் வெளியில் காண்பிப்பது இல்லை. உங்களிடம் மட்டுமல்ல, தனது நண்பர்களிடமும் அதே போல் தான் பழகுகிறார். மேலும் தனது தாயார் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்ற தயக்கமும் அவரிடத்தில் உண்டு. மாமியாரும் அதற்கேற்றார் போல் ஆதிக்க உணர்வினைக் கொண்டிருப்பதால் தயக்கத்தோடு ஒருவிதமான பயமும் அவரிடத்தில் உள்ளது. படித்த பெண்ணாகிய நீங்கள்தான் இவர்களைப் புரிந்து நடந்துகொள்ள வேண்டும். அனைத்து கூட்டுக் குடும்பங்களில் உள்ள பிரச்னையே உங்கள் குடும்பத்திலும் தோன்றியிருக்கிறது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

தனியார் பள்ளி வேலையாக இருந்தாலும் முதலில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். வேலைக்குச் செல்வது ஒன்றே உங்கள் பிரச்னைக்குத் தீர்வாகிறது. உங்களுடைய ஜாதக பலத்தின்படி தற்போது நடந்து வரும் நேரமே நன்றாக உள்ளது. சம்பளம் குறைவாக இருந்தாலும் முதலில் வேலைக்குச் செல்ல முயற்சியுங்கள். ஞாயிறு தோறும் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று ஐந்து முறை சந்நதியை வலம் வந்து வணங்குவதோடு குடும்ப ஒற்றுமைக்காக மனதில் பிரார்த்தனை செய்து வாருங்கள். விரைவில் உங்கள் பிரச்னை தீர்வடையும்.

பி.பி.ஏ., முடித்துவிட்டு வேலை ஏதுமின்றி விவசாயம் செய்து வருகிறேன். 35 வயதாகியும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஊரும் உறவும் கேலி செய்கிறது. திருமணமே வேண்டாம், பெற்றோருடன் வாழ்ந்து அவர்களுக்குப் பின் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். திருமணம் இனிமேல் நடக்காது என்று ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர். தயவுசெய்து தக்க ஆலோசனை சொல்லுங்கள். கோ.பரமசிவம், கடலூர் மாவட்டம்.

வேலை ஏதுமின்றி விவசாயம் செய்து வருவதாக எழுதியுள்ளீர்கள். விவசாயம் என்பது மட்டும் வேலையில்லையா..? கடுமையான உழைப்பாளிகளால் மட்டுமே விவசாயம் பார்க்க இயலும். நீங்கள் செய்யும் தொழிலை எண்ணி பெருமைகொள்ளுங்கள். தற்கொலை என்ற வார்த்தையை உங்கள் மனதில் இருந்து முற்றிலுமாக அழித்துவிடுங்கள். ஊரும் உறவும் கேலி செய்தால் என்ன? அடுத்தவர்களுக்காக வாழ்வதை விட நாம் நமக்காகத்தான் வாழ வேண்டும். மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது.

உங்கள் ஜாதகத்தில் திருமண வாழ்வினைக் குறிக்கும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சூரியன் மூன்றாம் வீட்டில் களத்ர காரகன் சுக்கிரனோடு இணைந்து அமர்ந்திருப்பது கடுமையான களத்ர தோஷத்தினைத் தந்திருக்கிறது. என்றாலும் களத்ர ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதாலும், தற்போது சந்திரனின் தசை நடப்பதாலும் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு என்பது நன்றாக உள்ளது. நீங்கள் பிறந்த ஊரில் இருந்து தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் இருந்து பெண் வந்து சேர்வார். விருத்தாசலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில் உள்ள ராஜேந்திரபட்டினம் ஊரில் உள்ள சிவாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை நாளில் சென்று சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 21.08.2019க்கு மேல் திருமணம் நடந்து விடும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2019

  21-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்