SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேஷ ராசியின் பொதுப் பண்புகள்?

2019-04-15@ 16:59:26

என்னோட ராசி நல்ல ராசி - 1

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா

என்ற மகாகவி பாரதியின் கூற்று மேஷ ராசிக்காரருக்கு மிகவும் பொருந்தும். இவர்களில் மார்ச் 21 முதல் ஏப்ரல் 22 வரை பிறந்தவர்கள் சூரியன் மேஷ ராசியில் இருக்கும் சித்திரை மாதத்தில் (ஏறத்தாழ ஏப்ரல் 14 முதல் மே 15 வரை) பிறந்தவர்கள் ஜாதகத்தில் மேஷ ராசிக்காரர்கள் (ராசியாதிபதி வலுவாக இருந்தால்) மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் (லக்னாதிபதி வலுவாக இருந்தால்) ஜாதகத்தின்படி  ஒருவரது குணங்களை பல்வேறு அம்சங்கள் நிர்ணயிக்கின்றன. சூரிய ராசிகளின் படி மாதக்கடைசியில் அடுத்த ராசியின் பண்புகள் கொஞ்சம் வரத் தொடங்கி விடும். ஏப்ரல் 20க்கு மேல் ரிஷப ராசியின் பண்புகள் தெரியத் தொடங்கும். மார்ச் 10ம்நாள் வரை மீன ராசியின் பண்புகளும் காணப்படும். எனவே முன் பின் ராசிகளின் பண்புகள் மற்றும் ஜாதகத்தில் ராசியாதிபதி,  லக்னாதிபதியின் வலு ஆகியவற்றையும்  குணாதிசய ஆராய்ச்சியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  மேஷ ராசிக்காரர்களில் 90% பேர் பின்வரும் குணங்களைக்  கொண்டிருப்பார்கள்

முதல் ராசி

மேஷ ராசி என்பது சூரியன் உச்சத்தில் இருக்கும் ராசியாகும் அதாவது சித்திரை மாதம் ஆகும். கேரளாவில் இந்த மாதத்தை மேட (மேஷம்) மாதம் என்பர். நாம் இந்த மாதத்தில் பௌர்ணமி வரும் நாளில் அதாவது சித்திரை நட்சத்திரத்தின் பெயரால் இந்த மாதத்தை அழைக்கிறோம். சித்திரையில்  சூரியன் நேர் கிழக்கில் உதித்து உக்கிரமாக வெப்பம் அளிக்கும். ஆடி, தை மாதங்களில் சூரியன் முறையே தெற்கு, வடக்கு மூலையில் இருந்து உதிக்கும். ஆக மேஷ ராசி என்பது அக்னி ராசி ஆகும் அதுவே முதல் ராசியும் ஆகும். சூரியன் நகராது; பூமி தான் சுற்றுகிறது என்பது தெரிந்தாலும் நம் முன்னோர் நம் கண்ணுக்கு அரை வட்டமாகத் தோன்றும் வானமண்டலத்தை 360 டிகிரியாகக் கொண்டு அதை சூரியனின் இருப்பை வைத்து பன்னிரு ராசிகள் ஆக்கி இருக்கின்றனர். இந்த கணக்கின்படி சூரியன், மேஷ ராசிக்குள் வரும் போது சித்திரை மாதம் பிறக்கும். சூரியன் அடுத்து ரிஷப ராசிக்கு செல்லும் போது வைகாசி பிறந்து விடும். சூரியன் நம் கணக்கில் ஏப்ரல் 13, 14, 15 தேதிகளில் மேஷ ராசிக்கு வந்துவிடும் ஆனால் மேலை நாட்டில் இதை சூரியன் மேஷத்தில் வரும் நாளை மார்ச் 21 என்று கணித்துள்ளனர். நாள் கணக்கில் சிறிது வேறுபாடு காணப்பட்டாலும் அங்கும் இங்கும் வருடத் தொடக்கத்தில் சூரியன் வரும் ராசி மேஷமே ஆகும். இனி இந்த மேஷ ராசியில் பிறந்தவர்களின் பொதுவான குணாம்சங்கள் குறித்து சற்று சுருக்கமாக காண்போம்.

பிள்ளை மனம்

முதல் ராசியான மேஷம் பிறப்பைக் குறிக்கின்றது. கடைசி ராசியான மீனம் இறப்பைக் (முதிர்ச்சியை) குறிக்கின்றது.  எனவே மேஷ  ராசிக்காரர்கள் குழந்தை குணம் கொண்டவர்களாக  இருப்பார்கள். அதே சமயம் இவர்கள் மிகுந்த தன்முனைப்பும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். நீதி நேர்மை உழைப்பு முன்னேற்றம் என்ற சிந்தனையும் பேச்சுமாக இருப்பார்கள். தன் கொள்கையில் கொண்ட கருத்தில் உறுதியாக இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு இடத்துக்கு ஏற்றபடி சுற்றுப்புறச் சூழ்நிலை அறிந்து பின் விளைவுகளை உணர்ந்து பேசவோ நடக்கவோ தெரியாது. அதற்காக இவர்களை சுயநலக்காரர் என்றோ கொடூர குணம் படைத்தவர் அறிவில்லாதவர் என்றோ சொல்லிவிட முடியாது. அவர்கள் குழந்தைகள். தானே தங்கள் மனம் சொன்னபடி நடந்துகொள்வாரே தவிர யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கிடையாது.

தன் நிலையை உரைப்பதில் உறுதி

மேஷ ராசிக்காரருக்கு பசி எடுத்தால் வீடோ அலுவலகமோ விருந்தினர் வீடோ எத்தனை பேர் அங்கிருந்தாலும் எவ்வளவு பெரிய மனிதர் இருந்தாலும் பசிக்குது பசிக்குது என்று சொல்ல ஆரம்பித்துவிடுவர். ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் உடனே தன் கருத்தை வெளிப்படையாக சொல்லிவிடுவர். யாராவது இது தவறு என்று கண்டித்தால் என்ன தவறு? என்று தன் பக்கத்து நியாயத்தை சரியாக எடுத்துக்கூறுவார்களே தவிர ‘’ஆம் நான் பலர் மத்தியில் இது பிடிக்கவில்லை என்று சொன்னது தவறு’’ என ஒப்புக்கொள்ளவோ, மன்னிப்பு கேட்கவோ மாட்டார்கள். அமைதியாக இருக்கவும் மாட்டார்கள். தான் சரி என்று நினைத்ததையே இவர்கள் செய்வார்கள் அதை சரி என்று எந்த சபையிலும் வாதிடுவார்கள். எனவே இவர்களின் கருத்தை மாற்ற முயல்வது வீண் முயற்சியே ஆகும்.

பெரியவர் சிறியவர் வித்தியாசம்

மேஷ ராசிக்காரர் எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் வைத்திருப்பார். யாரிடமும் முகஸ்துதி செய்யமாட்டார். பெரிய ஆள் என்று பணிந்து வணங்கி சிரித்துப் பேச மாட்டார். அவர்களின் அறிவோ ஆற்றலோ இவரைக் கவர்ந்தால் அவருக்கு உரிய மரியாதையை அளிப்பார். அவரைப் பற்றி தன் நண்பர்களிடம் வியந்து பேசுவார். அவரைத் தன் தெய்வமாகக் கூட போற்றுவார். இவர்களுக்கு நல்ல தாய் தந்தை குருமார் நண்பர்கள் அமைவதுண்டு. மேஷ ராசிக்காரர் எவரிடமும் பணத்துக்கு மயங்க மாட்டார். பணக்காரர், உயர் பதவியில் இருப்பவர் பரிச்சயம் இவருக்கு இருந்தாலும் இவர்களால் நாளைக்கு நமக்கு ஏதாவது உதவி கிடைக்கும் என்ற எண்ணம் இவரிடம் இருக்காது. அதனால் பணக்காரர்களை இவர் பொருட்படுத்த மாட்டார் அதனால் இவருக்கு இயல்பாகவே பல பணக்காரர்கள் உயர் அந்தஸ்தில் இருப்பவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். இவர் அவர்களிடம் எந்தப் பலனையும் எதிர்பார்க்க மாட்டார். அவர்களுக்கு எப்போதும் நல்ல ஆலோசனைகளை வழங்குவார். அதனால் நெருங்கிய நட்பு வட்டத்துக்குள் இருப்பார். குழந்தை போல இருந்தாலும் இவர் அறிவில்லாதவர் அல்ல; ஆசை இல்லாதவர்.

நீதிக்கு போராடுவார்

மேஷ ராசிக்காரருக்கு அநியாயம் அக்கிரமம் செய்வது பிடிக்காது என்பதால் இப்படி செய்பவர்களை காட்டி கொடுக்கத் தயங்கமாட்டார். யாராவது தப்பு செய்தால் உடனே மாட்டிவிட்டு விடுவார். பெரியவர்கள் அநியாயம் செய்தாலும் அதைப் பற்றி ஊரறியச்  சொல்லிவிடுவார். அவரால் ஏற்படும் தொல்லைகளைத் தனியாளாகத்   துணிச்சலுடன் சந்திப்பார். இழப்புக்களைப் பற்றி கவலைப்படாமல் நீதிக்காக போராடுவார்.

ரகசியம் பரம ரகசியம்

மேஷ ராசிக்காரரிடம் ஒருவர் இது ரகசியம் யாரிடமும் சொல்லாதே உன்னை நம்பித்தான் சொல்கிறேன் என்றால் மூச்சுவிட மாட்டார்கள். சொன்னவர் செய்வது சரியோ தவறோ அவருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி அவரை ஊக்குவிப்பார். அதனால் தனக்கு எந்த ஆபத்து வந்தாலும் துணிந்து நிற்பார். இவரிடம் தன்னைப் பற்றிய  ரகசியம் எதுவும்  தங்காது. தன்னையும்   தனது குடும்பத்தையும்  பற்றிய விவரங்களை எல்லோரிடமும் சொல்லிவிடுவார். எதையும் மனதில் போட்டு குழப்பிக்கொள்ள மாட்டார்  ஏதாவது சந்தேகம் வந்தால் சம்பந்தப்பட்டவரிடம் நேரில் போய் கேட்டுத் தெளிவு பெறுவார். இதனால் பெரும்பாலும் இவரது நண்பர்கள் தம் காதல் ரகசியத்தை இவரிடம் கடைசியில் சொல்வார்கள். முதலில் சொன்னால் இவர் அதை எதிர்க்கலாம் அல்லது அவர்கள் வீட்டிலேயே கூட போய் சொல்லிவிடலாம் என்று அஞ்சுவார்கள்.

நட்பும் நம்பிக்கையும்

மேஷ ராசிக்காரர் பழகுவதற்கு இனியவர்களாக இருப்பார்கள். ஆனால் பத்து காசு செலவழிக்க மாட்டார்கள். எவ்வளவு நேரம் இவர்களோடு இருந்தாலும் மனதுக்கு சுகமளிப்பவர்களாகவே இருப்பார்கள் (உடலுக்கு அல்ல) ஒரு காபி கூட வாங்கி தர மாட்டார்கள்.  உலக விஷயங்களைப் பேசி செவிக்கு உணவு அளிப்பர். நண்பர்களை உயிரைப் போல கருதுவர். நம்பியவருக்காக உயிரைக் கூட கொடுப்பவர் என்றால் அது மேஷ ராசிக்காரர் மட்டுமே. தன் உடன் பழகுவோர் அனைவரும் நல்லவராக இருக்க வேண்டும் என்று விரும்புவார். அவர்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் முதலில் வருபவர் மேஷ ராசிக்காரர் தான். ஆனால் அதன் பிறகு ஒதுங்கிவிடுவார். நாம் தானே அவருக்கு கஷ்டத்தில் உதவினோம் நமக்கு அவர் உதவினால் என்ன என்ற எதிர்பார்ப்புடன் அவரிடம் எந்த உதவியும் வேண்டி நிற்கமாட்டார்.

இன்பமும் துன்பமும்

மேஷ ராசிக்காரருக்கு என்று தனிப்பட்ட இன்ப துன்பங்கள் இருக்காது அனைத்தும் அனைவரோடும் பகிரப்படுவதால் அவை அனைவரது இன்ப துன்பமாகி மாறிவிடும். இதனால் இக்குழந்தைக்கு இன்பத்திலும் துன்பத்திலும் அநேகம் பேர் உடன் இருப்பர். யாராவது இவரைத்  தனியாக விட்டுவிட்டால் இவருக்கு மிகவும் வருத்தமாகிவிடும். உடனே அங்கிருக்கும் வேறொருவரிடம் அவர் யாராகவும் இருக்கலாம் அவருடன் போய் ஒட்டிக்கொள்வார். இதைத்தான் குழந்தை மனோபாவம் என்கிறோம். இவருக்கு துன்பம் விளைவித்தவரைக் கூட இவர் வெறுக்க மாட்டார். இவர் சபிக்க மாட்டார். இவரிடம் வெறுப்பு வன்மம் ஆகியவை இருக்காது. அவர் மீண்டும் தன்னுடன் சேர வேண்டும் என்றே ஆசைப்படுவார். குழந்தைகள் சண்டை போட்டுக்கொண்டு பின்பு சேர்ந்துவிடும் அல்லவா அப்படித்தான். ஆனால் உடன் பழகியவர் அனைத்தும் மேஷ ராசிக்காரர் அல்லவே. அந்தச் சூழ்நிலையில் ஒரு அப்பாவிக் குழந்தையின் கண்ணீருக்கு இறைவன் இரங்குவார்.  

உடலும் உள்ளமும்

மேஷ ராசிக்காரருக்கு உள்ளத்தில் இருக்கும் உறுதி உடலில் இருப்பதில்லை. உற்சாகத்தில் ஓடி ஆடி எங்கேயாவது முட்டி மோதி விழுந்து எழுந்து கை கால்களில் சிராய்ப்பு சிறிய ரத்த காயம் என இவருக்கு அடிக்கடி உண்டாகும். மற்றவர் சுருண்டு படுக்கும் காய்ச்சல் வந்தாக் கூட மேஷ ராசிக்காரர் எழுந்து நடமாடுவார். அதற்கு அவருடைய அபார தன்னம்பிக்கையே காரணம் தன் கை மருந்தில் நம்பிக்கை வைத்திருப்பார். மிக ஆபத்தான நிலையில் மட்டுமே மருத்துவமனை செல்வார். அங்கும் மருத்துவருக்குத் தன் நோயின் விவரங்களைக் கூறி இன்ன மருந்து கொடுங்கள் என்பார்.

இரவும் பகலும்

மேஷ ராசிக்காரர் இரவும் பகலும் உழைப்பார். இவருக்குச் சோர்வு என்பதே வராது. மனம் உற்சாகமாக இருப்பதால் இவருக்கு இரவில் கூட தூக்கம் வராது. வயதானாலும் தூக்க மாத்திரை போடாமல் விழித்துக் கொண்டே இருப்பார். தன் விருப்பம் ஈடேறும் வரை தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருப்பார்.
பெரும்பாலும் இவர் சம்பளத்துக்கு வேலைக்கு போக மாட்டார். போனால் தன்னுடன் வேலை பார்ப்பவர்களையும் தன்னைப் போல கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என்று அதட்டி வேலை வாங்குவார். இவருக்கு இரவிலும் இந்த உலகம் அழகாக தோன்றும்; பகலிலும் அழகாக தோன்றும். அதனால் அதிக நேரம் விழித்திருந்தாலும் சந்தோஷமாக இருப்பார். மேஷ ராசிக்காரருக்கு  ஏதேனும் துன்பம் வந்தால் அதைப் பற்றி யோசித்துக்கொண்டே இருப்பார். தன் கஷ்டங்களுக்கு அடுத்தவரைக் காரணம் காட்ட மாட்டார். அதே சமயம் தன் மீது தவறு என்றும் ஒப்புக்கொள்ள மாட்டார் எல்லாம் என் தலையெழுத்து என்றும் புலம்பமாட்டார். எப்படி நடந்தது ஏன் நடந்தது என்று தானும் விடிய விடிய யோசித்து மறுநாள் உறவினர் மற்றும் நண்பர்களிடமும் அதைப் பற்றி விவாதித்து ஒரு முடிவுக்கு வர முனைவார்.  இதைப்போல அடுத்தவர் இன்ப துன்பங்களைப் பற்றியும் விடிய விடிய சிந்தித்துத்  தீர்வு கண்டு அவர்களுக்கு எடுத்துச் சொல்வார்.

அடக்கமும் அதிகாரமும்

மேஷ ராசிக்காரர் சுய தொழிலில் ஆர்வம் காட்டுவார். பிறரிடம் பணியாளராக வேலை பார்க்க விரும்பமாட்டார். அப்படியே பார்த்தாலும் அந்த பணித்தளத்தில் அவர் சொல்லுக்கு உரிய மரியாதை தரப்பட்டால் மட்டுமே இருப்பார். எத்தனை லட்சம் சம்பளம் தந்தாலும் மேஷ ராசிக்காரர் சம்பளத்துக்காக வேலை பார்க்க மாட்டார். அதே வேலை இந்த நிறுவனத்தை நீயே கவனித்து கொள்  என்றால் அதில் இருந்து பத்தாயிரம் சம்பளம் கிடைத்தால் கூட இரவும் பகலும் வேலை செய்வார். அவருக்கு அவர் தான் முக்கியமே தவிர சம்பளம் கிடையாது. இவரிடம் அதட்டி மிரட்டி வேலை வாங்க முடியாது அவராக வேலை பார்த்தால் உண்டு. வேலை நேரத்தில் சில சமயம் முனிவரை போல ஐம்புலனடக்கி பசி நோக்காமல் கண் துஞ்சாமல் வேலை செய்வார். இவர் வேலை முடிந்ததும் கதை பேச ஆரம்பித்துவிடுவார். மற்றவர்களை அனுசரித்துச்  செல்வது இவர் அகராதியிலேயே கிடையாது. மற்றவர்கள் இவரை அனுசரித்துச் சென்றால் குறைந்த சம்பளம் கொடுத்து நன்றாக வேலை வாங்கலாம். வேலை பார்க்கும் இடத்தில் இவர் ஒரு காட் ஃபாதர் போல நடந்து கொள்வார்.  

முன்கோபம்

மேஷ ராசிக்காரர்கள் முன் கோபக்காரர்கள். இவரது நேர்மையை யாராவது சந்தேகித்தால் அவரை உண்டு இல்லையென்று செய்துவிடுவார்கள். இவர்களை யாராவது மரியாதை இல்லாமல் பேசிவிட்டாலோ இவர் சொன்ன படி வேலையைச்  செய்யாமல் இருந்தாலோ இவருக்குக் கடுங்கோபம் வரும். மற்றவர்கள்  எதிர்பாராத நேரத்தில் கூட இவர்களுக்கு சுள் என்று கோபம் வரும். கோபம் வந்தால் கையில் கிடைத்ததை தூக்கி எதிரே இருப்பவர் மீது எறிவார்கள். சில சமயம் அவர்களை  அடித்து துவைத்து விடுவார்கள். இவர்களுக்கு கண்மண் தெரியாமல் கோபம் வரும். மரியாதை இல்லாமல் பேசிவிடுவார்கள் ஆனால் பிறகு ஒன்றுமே நடக்காதது போல பேசுவார்கள். இவர்களது கோபம் பெரும்பாலும் தனி நபர் மீது இராது அவர்களின் மனோபாவம் அல்லது கொள்கை, நம்பிக்கை, கருத்தியல் மீது தான் இருக்கும். எனவே இவரால் தன் கோபத்தை வெளிப்படுத்திய சிறிது நேரத்தில் கோபப்பட்டவரிடம் சகஜமாக பழக முடியும். அவர் முகத்தை திருப்பிக்கொண்டு போனால் இவர் அது குறித்து கவலைப்பட மாட்டார். மன்னிப்பும் கேட்க மாட்டார்.  

கொள்கைக் குன்று

மேஷ ராசிக்காரர் தன் கொள்கையில் பற்றுள்ளவர்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனை உடையவர்கள். இந்த உலகம் அழகானது உலகத்தில் எங்கு வேண்டுமாலும் போய் பெண் கட்டலாம். வேலை பார்க்கலாம் வசிக்கலாம்.  அனைவரும் நம் உறவினர்  சாதி மதம் நாடு மொழி என்ற குறுகிய வட்டம் தேவையில்லை என்பார்கள். இவர்  தன்  கொள்கைக்கு மாறானவர்கள் கூட,  பேசுவதை விரும்ப மாட்டார்.

அதிசயம் அற்புதங்களில் நம்பிக்கை

மேஷ ராசிக்காரர் உலகில் இன்னும் பல அதிசயம் நடக்கும் என்று சொல்வார். தன் வாழ்விலும் பல அதிசயங்கள் தான் எதிர்பாராத போது நடந்தது என்பார். கடவுள் நம்பிக்கை உடையவர். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சமாட்டார். எங்கு போனாலும் நமக்கு ஆள் உண்டு சமாளித்துவிடலாம் என்ற தன்னம்பிக்கை மிகுந்தவர். யாரிடமும் எளிதாகப் பேசி பழகிவிடுவார் மனித நேயம் மிகுந்தவர் யார் வந்து உதவி கேட்டாலும் செய்வார். தன்னால் முடியவில்லை என்றால் தன் உறவினர் மற்றும்  நண்பர்கள் மூலமாகச் செய்து தருவார். இவர் அரசியல் மற்றும் சமூக சிந்தனை உடையவர். சமூக அரசியல் பிரச்னைகள் குறித்து நீண்ட நேரம் விவாதம் செய்வார். இவர்களே அதிக நேரம் பேசுவார். இவர்களுக்கு தேவையான விஷயங்களைப் பிறர் பேசினால் மட்டுமே காது கொடுத்து, கேட்டு மனதில் அவற்றைப்  பதிய வைத்துக்கொள்வார். பல துறை அறிவு பெற்றிருப்பார். ஆடம்பரத்தில் விருப்பம் இல்லாதவர். ஆனால் தன் வசதிகளை யாருக்காகவும் குறைத்துக்கொள்ள மாட்டார். நுண்கலைகளில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டிருப்பார். அவற்றைப் பற்றி நிறைய தெரிந்தும் வைத்திருப்பார்.

வாழ்க்கை நெறி

போராட்ட குணம் படைத்தவர். அதனால் இவரிடம் இது முடியாது என்று சொன்னால் ‘‘என்னால் முடியும்’’ என்று சவால் விட்டு முடித்து காட்டுவார். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்ச மாட்டார். அயராமல் உழைக்கும் சக்தி படைத்தவர். அடுத்தவர் தயவை எதிர்பார்க்க மாட்டார். தன் கையே தனக்குதவி என்று வாழ்வார். பணம், காசு, வசதி, வேலை, பதவி போன்றவற்றை எதிர்பார்த்து யாரிடமும் போய் வணங்கி நிற்க மாட்டார். இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவர். அதைப் பிறருக்கும் கற்றுத் தருவார். மேஷ ராசி குழந்தை அல்லவா அதனால் ஆட்களோடு இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் உணர்வார். இவர்களில் பலருக்கு இளமையில் கஷ்ட ஜீவனம் அமையும். முதிய வயதில் நல்ல தெளிவும் தேர்ச்சியும் பெற்றிருப்பர். பலருக்கு வழிகாட்டியாக விளங்குவர். அன்பும் அறிவும் அனுபவமும் நிறைந்தவராக இருப்பார். இனி மேஷ ராசியில் பிறந்த ஆண், பெண் குழந்தை முதலாளி பணியாள் இவரோடு நட்புக்கும் உறவுக்கும் பொருந்தி போகும் ராசியினர் என்றும் காணலாம்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 01-06-2020

  01-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 31-05-2020

  31-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 30-05-2020

  30-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்