SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலை உச்சியில் அருள்பாலிக்கிறார் வரதராஜ பெருமாள்

2019-04-15@ 09:44:45

நாமக்கல் நகரில் இருந்து புதன்சந்தை வழியாக 14 கி.மீ தூரத்திலும், புதன்சந்தையில் இருந்து சேலம் - திருச்சி பிரதான சாலையில் இருந்து 3 கி.மீ தூரத்திலும், சேந்தமங்கலத்தில் இருந்து 5 கி.மீ தூரத்திலும் நைனாமலை அமைந்துள்ளது. எங்கு நோக்கினும் பசுமை அழகுடன், இயற்கை அன்னையின் எழில் கோலம், காண்போர் உள்ளமெல்லாம் துள்ளும் வண்ணம் அமைந்த இப்பகுதியில் ஈடும், இணையுமில்லாத வனப்புடன் இம்மலை திகழ்கிறது. உயர்ந்த பசுமையான இந்த மலையின் உச்சியில் சுமார் 2600 அடி உயரத்தில் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. குவலயவல்லித் தாயார் சமேத வரதராஜப்பெருமாள் நின்ற கோலம் தாங்கி அருள்பாலிக்கிறார். புதன்சந்தை கிளைச்சாலையில், திருக்கோயில் நுழைவுப்பாதை தொடங்குகிறது. மலையின் அடிவாரத்தில் பாத மண்டபத்திலிருந்து மலையின் படிகள் தொடங்குகின்றன. பாத மண்டபத்தில் கூப்பிய கரங்களுடன் பக்தர்களின் நலனுக்காக இறைவனை வேண்டி வணங்கிய நிலையில் பக்த ஆஞ்சநேய பெருமாள் திருவருள்பாலிக்கிறார்.

மலையில் ஏறுவோர், பக்த ஆஞ்சநேய பெருமானை வணங்கி அருள்பெற்ற பின்னரே படிகளில் ஏறுவது மரபாகும். பாத மண்டபத்திலிருந்து மலையின் உச்சியில் அமைந்திருக்கும் கோயில் வரை 3360 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மலையின் உச்சியில் முகப்பிலேயே திருக்கோவிலின் பெரிய மண்டமும், திருமடைப் பள்ளியும் கட்டப்பட்டுள்ளன. மண்டபத்தில் விழாக்காலங்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுத்துச் செல்லும் வண்ணம் விசாலமாக கட்டப்பட்டுள்ளது. திருமடை பள்ளியை தாண்டியதும் கோயில் படிகள் தொடங்குகின்றன. இத்திருக்கோயில் திருமலை நாயக்க மன்னரின் தம்பியான கோவிந்தப்ப நாயக்கரால் கட்டப்பட்டதாகும். உபய வரதராஜ பெருமாளின் திருக்கோயிலுக்கு வலப்புறம், பாறையில் வாலி சுக்ரீவர் திருவுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதை தாண்டி சென்றதும், கோயிலின் தல விருட்சமான நெல்லி மரம் உள்ளது. அதனையடுத்து பிரதட்சணம் வருகையில் எம்பெருமாள் வரதராஜ பெருமான் சந்நிதி, கம்பீரமாக மலையின் உச்சியில் அமையப்பெற்றுள்ளது. மூலவராக வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழில்கோலம் தாங்கி அருள்பாலித்து வருகிறார்.

கோயிலில் கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் என மூன்று மண்டபங்கள் உள்ளன. மகா மண்டபத்தில் ராம லட்சுமணர், சீதாதேவி, நவநீத கிருஷ்ணர், ராதா ருக்மணி வேணுகோபால், துவார பாலகர்கள் ஆகியோரின் விக்கிரகங்கள் உள்ளன. கருடாழ்வார் கோயிலின் எதிரில் உள்ளார். கல்லாலான தீபஸ்தம்பமும் உள்ளது. தீபஸ்தம்பத்தில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்விக்கும் போதெல்லாம், திருக்கோடி தீபம் ஏற்றுதல் இக்கோவிலின் சிறப்புகளுள் ஒன்றாகும்.பெருமாளின் வலது புறத்தில் குவலய வல்லி தாயாரின் தனி சந்நிதி அமைந்துள்ளது. தமிழ் வருடம் ஆனி முதல் தேதியிலிருந்து, ஆடி மாதம் 30ம் தேதி முடிய இரண்டு மாதங்களும் கதிரவன் உதிக்கும் போது கதிரவனின் கதிர்கள் சுவாமியின் மீது நேரே விழுந்து பிரகாசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இத்திருக்கோயில் தோன்றிய காலம் இன்னதென கூற இயலாவிடினும், தற்போது உள்ள திருக்கோவில் பல்லவர் காலத்தியது என்று சொல்லப்படுகிறது. 1939ம் ஆண்டில் திருக்கோயிலின் சுற்று பிரகாரம் கட்டப்பட்டது. கோயிலின் சில பகுதிகள் திருமலை நாயக்கரின் தம்பி கோவிந்தப்ப நாயக்கரால் கட்டப்பட்டவை.

இந்த நைனாமலை இதிகாச காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்ததும், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாம் எம்பெருமான் தங்கி இருந்து அருள்பாலித்து வரும் திருத்தலங்களுள் முதன்மை ஆனதும் ஆகும். இந்த திருத்தலத்தின் பெருமை பிரம்மாவால் பாடப்பெற்ற பிரமாண்ட புராணத்தில் பதினாறாவது அத்தியாயத்தில் தெளிவாக விளக்கப்படுகிறது. இம்மலை மீது 108 தீர்த்தங்கள் இருந்தன என்று கூறுகிறார்கள். இன்றும் அரிவாள் பாழி, பெரியபாழி, இடுக்கு பாழி, அம்மம்பாழி, பாண்டவ தீர்த்தம் அல்லது ஐந்தாம் பாழி என்னும் 5 தீர்த்தங்கள் விளங்குகின்றன. தினமும் இரண்டுகால பூஜை நடைபெறுகிறது. திருக்கோடி தீபம் ஏற்றுவது சிறப்பு அம்சமாகும். திருப்பதியை போன்றே பெருமாளுக்கு வாய்ப்பூட்டு பாதுகையுடன், கோமாளி வேஷம் ஆகியவை செலுத்துவது நடைமுறையில் இருந்து வருகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பெருமாளை தரிசனம் செய்கின்றனர். விழா காலங்களில் நாமக்கல்லில் இருந்தும் சேலம், மற்றும் சேந்தமங்கலத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்