SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஹ்ர் எனும் திருமணக் கொடை

2019-04-12@ 14:33:33

இஸ்லாமிய வாழ்வியலில் திருமணம் என்பது மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு நடைமுறையாகும். திருமணத்தின்போது வரதட்சணை  அதாவது பெண்ணிடமிருந்து பணமோ பொருளோ வாங்கும் வழக்கம் மார்க்கத்தில் இல்லை. இதற்கு மாறாக, மணமகன், தன் சக்திக்கு ஏற்ப பெண்ணுக்கு மஹ்ர் எனும் திருமணக் கொடையைக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இந்த மஹ்ர் இல்லாமல் திருமணம் நிறைவேறாது. நபிகளாரின் காலத்தில் இது தொடர்பாக ஒரு சுவையான நிகழ்வு நடைபெற்றது. தம் தோழர்களுடன் நபிகளார்(ஸல்) அமர்ந்திருக்கிறார். அப்போது ஒரு பெண் அங்கு வந்து, “இறைத்தூதர் அவர்களே, நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்று கூறினார். நபிகளார் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார்.

அந்தப் பெண்ணைத் திருமணம்  செய்து கொள்ள நபிகளாருக்கு விருப்பம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட தோழர்களில் ஒருவர் எழுந்து, “இறைத்தூதர் அவர்களே,  தங்களுக்கு விருப்பம் இல்லை எனில், அந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்” என்றார். “பெண்ணுக்கு மஹ்ராக மணக் கொடையாகக் கொடுக்க உன்னிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அந்தத் தோழரோ மிகுந்த ஏழ்மையில் இருந்தவர். அவரிடம் பொருள் வசதி எதுவும் இல்லை. அவர் கூறினார்: “கட்டியிருக்கும் கீழாடையைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை.”“இரும்பால் ஆன ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்” என்றார் இறைத்தூதர் (ஸல்). அந்தத் தோழர் தம் வீட்டிற்குச் சென்று ஏதேனும் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தார். தெரிந்தவர்களிடமும் கேட்டுப் பார்த்தார். எதுவும் கிடைக்கவில்லை. இப்போது என்ன செய்வது? அந்தப் பெண்ணும் அந்தத் தோழரைத் திருமணம் செய்ய தயார்தான்.

தோழரும் தயார்தான். ஆனால், மணக்கொடையாகக்  கொடுக்க எதுவும் இல்லையே. மஹ்ர் தராவிட்டால் திருமணம் செல்லாதே. நபிகளார் யோசித்தார். பணம் இல்லை என்பதற்காக இரு உள்ளங்களைப் பிரித்து விடுவது நன்றாக இருக்காதே என்று சிந்தித்தார். உடனே, அந்தத் தோழரை அழைத்து, “இறைவேதத்தில்  குர்ஆனில் உனக்கு ஏதேனும் அத்தியாயங்கள் மனப்பாடமாக உள்ளனவா?” என்று கேட்டார். அவர், “ஆம்; இறைத்தூதர் அவர்களே, எனக்கு இன்ன இன்ன அத்தியாயங்கள் மனப்பாடமாகத் தெரியும்” என்றார். “அப்படியானால் அந்த அத்தியாயங்களையே மஹ்ராகக் கொண்டு அந்தப் பெண்ணை உனக்கு மணமுடித்துத் தருகிறேன். நீ மனப்பாடம் செய்துள்ள வேத அத்தியாயங்களை அவளுக்குச் சொல்லித்தர வேண்டும்” என்றார். திருமணம் நிறைவேறியது.

இந்த வார சிந்தனை

“பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹ்ரை(கடமை எனக் கருதி) மனமுவந்து அளித்துவிடுங்கள்.” (குர்ஆன் 4:4)

சிராஜுல் ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்