SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மங்காத வாழ்வளிப்பாள் பங்காரு காமாட்சி

2019-04-09@ 09:42:32

அகிலம் முழுவதையும் அசைத்தும், அழகூட்டியும் அலகிலா விளையாடல் புரியும் சிவனும், உமையும் செய்த லீலைகள் பலகோடி. அவற்றிலும் காமகோடி நாயகியான காமாட்சி, மானிட உயிர்களின் மேல் கொண்ட அபார கருணையில் சில தலங்களில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அற்புதமானவை. திவ்ய க்ஷேத்திரமான காஞ்சியில் காமாட்சி, இன்னும் இரண்டு தேவிகளை தன்னிலிருந்து தோற்றுவிக்கும் அதிசயம் நிகழ்ந்தது. அது கிருத யுகத்தின் தர்மம் தழைத்தோங்கிய காலம். சுவேத வராஹ கல்பம், ஏழாவது மன்வந்திரத்தில் ஸ்ரீமுக ஆண்டு நடைபயின்ற நேரம். ஐப்பசி பூரம் நட்சத்திரம் வானில் ஒளிர்ந்தது. பொன்னார் மேனியனான ஈசனைப்போல தங்க நிறம் வானத்தை வியாபித்திருந்தது. காமாட்சி அன்னையின் திருமுகம் கருணை சூழ் மேகமாகப் பூரித்திருந்தது. நெற்றிக் கண் அருளோடு ஒளியையும் சேர்த்துப் பாய்ச்சியது.

ஜோதி வடிவினதாக மஞ்சள் வெயில் நிறத்தினளாக தகதகக்கும் தங்க மேனியோடு அந்த ஜோதி விளங்கியது. ஒளியாய் திகழ்ந்தவள் இப்போது உருவம் பெற்றாள். தாமரை போன்ற இரு கண்களும் பனித்து கருணையைப் பொழிய, வலது கரம் கிளியை ஏந்தியும், இடது கரம் நளினமாக வளைந்து கீழே தொங்க விடப்பட்டும் இருந்தது. மூன்று வளைவுகளோடு வில் போன்று வளைந்து ஒயிலோடு திகழ்ந்தாள். அழகு செழித்திருந்தது. ரத்தின குண்டலங்கள் காதுகளில் ஒளியை சிந்தின. தங்க நிறத்தவளைக் கண்ட நான்முகனான பிரம்மா பேரானந்தமுற்றார். காமாட்சியும் பிரம்மனிடம், ‘இவளின் பிரதிபிம்பத்தை இதே அச்சாக நீயே படைத்துவிடு. இவளே வருடந்தோறும் புதுமணப் பெண்ணாக வலம் வரட்டும்’ என்றாள்.

சொர்ண மயமான தங்க காமாட்சிக்கு பிரம்மா வடிவம் கொடுத்தார். பங்குனி மாதத்தில் காஞ்சியில் ஏகாம்பரேஸ்வரருக்கு சாஸ்திர பூர்வமாக அவளைத் திருமணம் செய்வித்தார். திருக்கல்யாணம் முடிந்த வுடன் சுவர்ண காமாட்சியை, அசையா  மூர்த்தமாக பிரதிஷ்டை செய்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதி அது. அந்நியர் படையெடுப்பாலும், வேற்று மதத்தினராலும் வட இந்தியாவும், தென் இந்தியாவும் சொல்லொணாத் துன்பம் கொண்டிருந்தன. ‘திருக்கோயில்களின் விக்ரகத்தில் ஏதுமில்லை, அதைத் தூக்கியெறியுங்கள். உங்கள் வேத நூல்களை தீயிலிட்டு பொசுக்குங்கள்’ என கோரத் தாண்டவமாடினர், அந்நிய நாட்டினர். கோயிலுக்குச் சொந்தமான தங்க விக்ரகங்களையும், வைர கிரீடங்களையும் கொள்ளையடித்தனர். மக்கள் துடிதுடித்துப்போயினர். காஞ்சிக் கோயிலுக்கும் அந்த கதி வந்துவிடுமோ என்று அஞ்சினர்.

அப்போதைய காஞ்சி காமகோடி பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் (கி.பி. 1746-1783) பிரம்மனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சொர்ண காமாட்சியைக் கண்டு கண்கலங்கினார். அவர் ஆணைப்படி நிலவறையில் தங்க காமாட்சியை பத்திரமாக பாதுகாத்தனர். பீடாதிபதியுடன் கோயில் நிர்வாகிகள் சொர்ண காமாட்சியை பத்திரமாக சுற்றி கையில் எடுத்துக்கொண்டு கண்களில் நீர் கொப்பளிக்க காஞ்சியைவிட்டு வெளியேறினர். சில ஆண்டுகள் செஞ்சியிலும், உடையார்பாளையம் ஜமீன்தார்களின் பேரன்பாலும், ஆதரவாலும் சுவர்ண காமாட்சியை நிம்மதியாக பூஜித்தார்கள். அனக்குடி மிராசுதாரர் சங்கராச்சாரியரை வரவேற்று சில காலம் தங்க வைத்தார். சொர்ண காமாட்சி அருளை இரைத்துக் கொண்டே நாகூர், சிக்கல், திருவாரூர் விஜயபுரம் வழியாக தஞ்சையில் தன் பூப்பாதம் பதித்தாள். அப்போது தஞ்சையை மராட்டிய மன்னனான பிரதாப சிம்மன் ஆட்சிபுரிந்து வந்தான்.

தஞ்சை பெருவுடையார் அருவமாக பரவசப்பட்டார். ஆதிமாதாவானவள் இவ்வளவு அருகிலா என்று மன்னன் பிரதாபசிம்மன் நெக்குருகினான். ஓடிச்சென்று ‘‘நா பங்காரு.... நா பங்காரு...’’ என்று தெலுங்கில் பரவசப்பட்டான். பங்காரு என்றால் தங்கம் என்று பொருள். தஞ்சை விழாக்கோலம் பூண்டது. பங்காரு காமாட்சிக்குக் கோயில் எழுப்ப வேகமாக முனைந்தது. கி.பி. 1746 முதல் 1887ம் ஆண்டு வரை அடுத்தடுத்து கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கருவறை, விமானம், திருமதில், மண்டபம், கோபுரம் எல்லாமுமே வெவ்வேறு காலங்களில் பல்வேறு மன்னர்களால் கட்டி முடிக்கப்பட்டன. சியாமா சாஸ்திரிகள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். அவருடைய இயற்பெயர் வேங்கடசுப்ரமணியம். கிருஷ்ணனை பக்தியால் வசப்படுத்தி உள்ளத்தில் வைத்து தியானித்ததால் சியாம கிருஷ்ணன் என்று அழைக்கப்பட்டார்.

தங்கக் காமாட்சி சிலகாலம் திருவாரூரில் இருந்தபோதே மெய்மறந்து அவளின் திருவழகில் லயித்திருப்பார். இப்போது தஞ்சையில் குடியேறிவிட்டதால் அம்மனின் அழகை வெகு அருகே நின்று ஆராதித்தார். கலையையும், ஞானத்தையும் அருள்வதில் இணையிலா நாயகியாக விளங்கும் காமாட்சி, சியாமா சாஸ்திரிகளுக்கு ஞானத்தை அள்ளித் தந்தாள். அவரும் பதிலுக்கு ஏராளமான கீர்த்தனைகளை அவள் திவ்ய பாதங்களில் சமர்ப்பித்துப் பாடிக் களித்தார்.  கோயில், சிறிய ராஜகோபுரத்தோடு அழகுற அமைந்துள்ளது. எளிமையாக, சிறியதாக இருந்தாலும் உள்ளிருக்கும் மூர்த்தி புராணப் பெருமை கொண்டவள். கோயிலின் வாயிலுக்கும், கருவறைக்கும் இடையே ஒரு மண்டபம் உள்ளது. துவாரபாலகிகளின் அனுமதியோடு கருவறையை நெருங்கும்போது குங்குமத்தின் மணம் மனதை நிறைக்கிறது. விளக்கு ஒளியில் பங்காரு காமாட்சி சுடர்விட்டுப் பிரகாசிக்கிறாள்.

ஸ்ரீபுரத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் லலிதையே இப்படித்தான் இருப்பாள் என்பது போல அவளுடைய பிரகாசம் கருவறையை நிறைக்கிறது. கிளியைத் தாங்கி நிற்கும் கையும், சற்றே இடுப்பை ஒடித்து நளினமாக காட்சி தரும் ஒயிலும், நம்மை பிரமிக்கச் செய்கின்றன. இப்போதுதான், சற்றுநேரம் முன்னர்தான் பிரம்மனால் வடிக்கப்பட்டவள்போல பேரழகுடன் காட்சி தருகிறாள். காமாட்சி இகலோகத்திலுள்ள அனைத்து சுகங்களையும் தருவாள். செல்வமும், கல்வியும், கலைகளும், போகமும் தந்து எல்லை மீறாத புத்தித் தெளிவையும் அருளி, ஞானமெனும் அமுதப் பாலையும் தானே ஊட்டும் மகாதிரிபுரசுந்தரி இவள். பிரார்த்தனைகூட செய்ய வேண்டாம். ஏனெனில் பசியறிந்து பிள்ளைக்கு உணவளிக்கும் தாயாயிற்றே இந்த தேவி! அருகேயே உற்சவ மூர்த்தியையும் காணலாம்.  காஞ்சி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச் சாரிய சுவாமிகள் கோயிலின் பரம்பரை அறங்காவலராக உள்ளார். ஆலயம் இந்து அறநிலையத்துறையினரால் நிர்வகிக்கப் பட்டு வருகிறது. பூஜைக்கான உரிமையை காஞ்சி முதல் தஞ்சை வரை பங்காரு காமாட்சியுடன் பயணித்து பிரதிஷ்டை செய்ய உதவிய மூன்று கோத்திரக்காரர்களான ஸ்தானிக பரம்பரையினர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சி மடத்தில் எந்த ஒரு விழாவானாலும் முதல் பிரசாதம் பங்காரு காமாட்சியிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். ஆறுகால வழிபாடுகள் நாள்தோறும் நடைபெறுகின்றன. சிவசக்தி ஐக்கியமாக இவள் இருப்பதால் இவளுக்கு பூணூல் உண்டு! காமாட்சியம்மனுக்கு ஆண்டுதோறும் பதினொரு அபிஷேகங்கள் மட்டும்தான் நிகழ்த்தப்படுகின்றன. பங்காரு காமாட்சி மூல ஸ்தானத்தை விட்டு வெளியில் வருவதில்லை. காமகோடி அம்மன் எனும் உற்சவ மூர்த்திக்கும் கனுப் பொங்கல் அன்று முழுத் தேங்காயை, உடைக்காமல் நிவேதனம் செய்யும் சம்பிரதாயம் இங்கு மட்டும்தான் உண்டு. அதுபோல கிருஷ்ண ஜெயந்திக்கும் முறுக்கு, சீடையை நிவேதனம் செய்கிறார்கள். வைணவ ஆலயங்களைப் போலவே சடாரி சார்த்தும் வழக்கம் இருந்து இப்போது மறைந்துவிட்டிருக்கிறது. அம்பாளின் ஜென்ம நட்சத்திரம், ஐப்பசி மாத பூரம். அன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் தஞ்சை அரச குடும்பத்தினர் அம்மனுக்கு திருமாங்கல்யம் அளிப்பர்.

அதை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அம்மனை அரண்மனைவரை அழைத்துச் செல்வர். அவர்களும் பிரசாதம் பெற்று இன்புறுவார்கள். தை, ஆடி மாதங்களிலும் நவராத்திரி காலங்களிலும் கோயில் களைகட்டும். கார்த்திகை மாதத்தில் ஆலயத்தை ஆயிரத்தெட்டுமுறை வலம் வந்தால் எண்ணியது நிறைவேறும் என்கிறார்கள். கார்த்திகையில் இவ்வாறு வலம் வரும் பக்தர்களை பெரிய எண்ணிக்கையில் இங்கே காணலாம். கோயிலை வலம் வரும்போது இருபுறமும் ராமர் கோயிலையும், கிருஷ்ணன் கோயிலையும் காணலாம். கருவறை விமானத்தில் அம்பாளின்  பல்வேறு ரூபங்களை விளக்கும் சுதைச் சிற்பங்களைக் கண்டு களிக்கலாம். தல விருட்சமான வில்வத்தின் அருகே நிறைய நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். நிலம்பட வணங்கி எழும்போது பொன்னொளி பிரகாசமொன்று இதயத்துள் இலங்குவதை எளிதாக உணர முடிகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்