SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்நோய் தீர்க்கும் கரியமாணிக்கப் பெருமாள்

2019-04-05@ 16:48:17

திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் பின்புறம் மகா விஷ்ணு, கரிய மாணிக்கப் பெருமாள் என்ற திருநாமத்தில் கோயில் கொண்டுள்ளார். இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன திருக்கோலங்களில் சேவை சாதிக்கிறார்.  இவர் தை மாத ரத சப்தமியில் ஒரே நாளில் 7 முறை வீதி புறப்பாடு செய்து மக்களுக்கு அருள்பாலிக்கிறார். பங்குனி திருவோணத்தில் 4 ரதவீதிகளில் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். கருட சேவை சங்கமம், பெரிய தேர் முதலான வைபவங்கள் இந்த திருத்தலத்தின் முக்கிய விழாக்களாகும். நிகழ்ச்சியில் உற்சவர்களாக தென்திருப்பதி ஸ்ரீ வேங்கட நாத பெருமாள், ஸ்ரீமகிழ் வண்ணநாதர், ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள், சங்காணி ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீகரிய மாணிக்க பெருமாள் ஆகியோர் கருட வாகனத்தில் சேவை சாதிப்பது விசேஷமாகும்.

இந்த ஆலயம்  2 ஆயிரம் ஆண்டு பழமையானது. ராஜ ராஜ சோழ மன்னனுக்கு கரிய மாணிக்கன் என்ற சிறப்பு பெயர் உண்டு. இம்மன்னனின் ஆட்சி காலத்தில்  இக்கோயில் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது  குறிப்பிட தக்கது. இதனால்தான் இவருக்கு கரியமாணிக்கனார் என்ற பெயர் உண்டானது என்பர்.
மகா பாரதத்தை நமக்கு அருளிய வியாச மா முனிவரின் முதல் சீடரான பைலர் தாமிரபரணி நதிக்கரையில் வாழ்ந்து வந்தார். இவர் தான்  தாமிரபரணி கரையில் திருவேங்கடாநாதபுரம் ஸ்ரீனிவாசர் தீர்த்தக்கட்டம் உருவாக காரணமானவர். ஒருநாள் இவர் தாமரபரணி கரையில் குறுக்குத்துறையில் அமர்ந்து ஸ்ரீனிவாசப்
பெருமானை நினைத்து தவம் புரிந்தார். இங்கு கோயில் இல்லாத காரணத்தினால் பைலர் மனதிற்குள் பெருமானை நினைத்து பூஜை செய்தார். சுமார் 1 கோடி மலரை அர்ச்சனை செய்தார். அந்த கோடி மலரும் ஒன்றாக சேர்ந்து மிக பிரகாசமான நீலரத்தினமாக மாறியது.

அதன் பின் அவரே கரிய மாணிக்கனாராக  தாமிரபரணி நதிக்குள் காட்சி தந்தார். அவரை பைலர்  “நீலமணி நாதர்” என்ற திருநாமம் சூட்டி வணங்கினார்.  பகவானே உங்கள் வடிவத்தை நான் காணப்பேறு பெற்றுள்ளேன். வடக்கே வேங்கட மலை திருப்பதியில் குடி  கொண்ட வெங்கடாசலபதி பெருமானே இந்த அடியவனுக்கு காட்சி கொடுத்தது போலவே நீவிர் புடை சூழ தோன்றிப் பக்தர்களுக்கு அருள் வழங்க வேண்டும். உம்மைத் தேடி வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உமது விருப்பப்படியே ஆகட்டும் என்று பெருமாளும் அருளினார். இந்த க்ஷேத்திரம் ஸ்ரீ நீல ரத்ன க்ஷேத்திரமானது. கரி என்றால் சனிபகவானையும் மாணிக்கம் என்றால் ஆதித்யனையும் குறிப்பிடுவார்கள். ஆகவே சனி, சூரியன் ஆகிய கிரகங்களினால் ஏற்பட்ட உபாதைகளை நீக்கி நல்லருள் அளிக்கும் பெருமாளின் தலமாக இத்தலம் திகழ்கிறது. கண்ணுக்கு ஒளி தரும் என் கரிய மாணிக்கமே என நம்மாழ்வாரால் பாடல் பெற்ற  க்ஷேத்திரம் இந்த க்ஷேத்திரமாகும்.

மூன்று நிலைகளில் அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் இங்கு தரிசனம் கொடுக்கிறார். மூலவர் நின்ற திருக்கோலத்தில்  ஸ்ரீ கரிய மாணிக்கப்பெருமாள் என்றும் சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீ அனந்த பத்மநாப பெருமாள் என்றும் அமர்ந்த திருக்கோலத்தில்  லட்சுமி நாராயணன் கோலத்தில் காட்சி தருவது மிகச்சிறப்பானதாகும். இந்த க்ஷேத்திரம் நீலரத்ன க்ஷேத்திரம், ஸ்தலம் வேணுவனம், தீர்த்தங்கள் ஸ்ரீபத்பநாப தீர்த்தம் (குறுக்குத்துறை), தாமிரபரணி தீர்த்தம், விமானம் ஆனந்த விமானம், வடக்கு நோக்கி ஜெய ஹனுமான் சந்நதி, கோயில் பரப்பளவு 17,800 சதுர அடி,  இக்கோயிலில் சூரியன், சனி, ராகு, கேது ஆகிய பரிகார ஸ்தலமாகும். இங்குள்ள தாயார்கள் அருள்தரும் சௌந்தரவல்லித் தாயார்,  அருள்தரும் கோதைவல்லித் தாயார் ஆகியோர் கோயில் வளாகத்தில் சனி சந்நதியில் காட்சியளிக்கிறார். கோயில் தல விருட்சம் மூங்கிலாகும்.

திருமலையை போலவே இந்த ஆலயத்தில் ஏழு நிலை கடந்தே பகவானை தரிசிக்க வேண்டியது உள்ளது. பந்தல் மண்டபம், வேணுகோபால் பஜனைமடம் உள்ள கொடைவரை வாசல்மண்டபம், மகாமண்டபம், மணி மண்டபம், கருட மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் என்ற 7 நிலை இருப்பதால் இது தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.  இந்த ஆலயத்தில் சித்திரை விஷு திருவிழா,  வைகாசி விசாகத் திருவிழா, ஆனிமாத திருமஞ்சனம், ஆடி சுவாதி, ஆவணி உறியடி திருவிழா, புரட்டாசி சனிக்கிழமை கருட சேவை, ஐப்பசி விஷு கருடசேவை,  கார்த்திகை மாதம் சொக்கபனை திருவிழா, மார்கழி மாதம் 30 நாளும் திருப்பாவை திருவிழா ஆகியவை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியும்,  11 நாள் பரமபதவாசல் திறப்பு  விழா மிக விசேஷமாகும். தை மாதம்  வருஷாபிஷேகத்தின் போது இரண்டாம் நாள் லட்சார்ச்சனை புஷ்பாஞ்சலி கண்கொள்ளா காட்சியாக நடைபெறும். இக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழாவும் இங்குண்டு. இத்திருவிழாவின் முக்கிய நாளான ஐந்தாம் திருவிழா அன்று மூன்று கருட சேவைகள், ஹனுமந்த வாகனம், அன்ன வாகனம் என ஐந்து வாகனங்களில் சுவாமி புறப்பாடு செய்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளுவார்.  

பத்தாம் திருநாளன்று திருத்தேரோட்டம் நடைபெறும். பங்குனி வளர்பிறை ஸ்ரீ ராம நவமி உற்சவத்தின் போது சுவாமி திருவீதி உலா வருவார். இத்தல நீலமணி நாதர்  கரியமாணிக்கம் என்ற பெயரில் கண் நோய் தீர்க்கும் இறைவனாக விளங்குகிறார். இதை விளக்கும் விதமாக இங்குள்ள கருடனுக்கு இரண்டு சிவப்பு கண்கள் பொருந்தியிப்பது சிறப்பானதாகும். சனி பீடிகையில் உள்பட்டவர் சனிக்கிழமை தோறும் இங்கு வந்து வணங்கி நின்றால்  சனி பிரச்னை தீரும். புதன்கிழமை வழிபடுவோருக்கு கல்வி கிடைக்கும், வெள்ளிக்கிழமை இங்கு லட்சுமி நாராயணரை வணங்கி நிற்போர் கல்யாண வரம்பெறுவர், மார்கழி மாதம் ஆண்டாள் உற்சவத்தினை கலந்துகொண்டால், வேண்டிய வரம் கிடைக்கும்.  திருமணம் ஆகாதவர்கள் திருமண பேறு பெறுவார்கள், குழந்தைவரம் கிடைக்கும்.  

குழந்தைகளை திருவோணம் நட்சத்திரத்தில் தத்து கொடுப்போர் எண்ணிக்கை அதிகம்.  இதுபோல பல்லாயிரக் கணக்கோர், இந்த கோயிலில் குழந்தைகளை தத்து கொடுத்துள்ளனர். அந்த குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வளர்ந்து வருகிறார்கள்.  கோயிலுக்குள் நுழைந்தவுடன் பந்தல் மண்டபம், அதைத்தொடர்ந்து வேணுகோபால சுவாமி பஜனை மண்டபம் உள்ள  கொட்டகை  மண்டபம், உள்ளே நுழைந்தால் இடது புறத்தில் நாகம், சிம்மம், அன்னம், குதிரை வாகனங்கள் தொடர்ந்து உள்ளே சென்றால் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில்  கும்பிட்ட தோற்றத்தில் உள்ளார். இவர் எதிரே  படுத்த கோலத்தில் இருக்கும் பெருமானை சேவிக்கும் நிலையில்  விளங்குகிறார். பின்புறம் லிங்க வடிவத்தில் சிவபெருமான் வீற்றிருக்க, ஆலயத்தினை சுற்றி வந்தால்  சொர்க்கவாசல்  என்னும் பரமபதவாசல் உள்ளது. இத்திருத்தலம் திருநெல்வேலி நகர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ள சந்தி விநாயகர் திருக்கோயிலுக்கு பஸ் நிலையத்தில் இறங்கினால் நடந்தே சென்று விடலாம். நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. தொடர்பு எண் 9245777727, 984051514

முத்தாலங்குறிச்சி காமராசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

 • apollo

  புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்