SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பங்குனியில் கிரஹப்ரவேசம் செய்யக்கூடாது என்று சொல்வது ஏன்?

2019-04-05@ 14:45:15

அது கிரஹப்ரவேசம் அல்ல, க்ருஹ ப்ரவேசம் என்று குறிப்பிட வேண்டும். கிரஹம் என்றால் நவகிரஹங்களைக் குறிக்கும். கிரஹம் என்ற வார்த்தைக்கு கோள் என்று பொருள். வீடு என்ற வார்த்தையை க்ருஹம் என்று சொல்வார்கள். நீங்கள் புதுமனை புகுவிழா பற்றிக் கேட்டுள்ளீர்கள். புதுமனை புகுவிழா என்பதை க்ருஹப்ரவேசம் என்று சொல்ல வேண்டும். ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் க்ருஹப்ரவேசம் செய்யக் கூடாது.

க்ருஹப்ரவேசம் மட்டுமல்ல, பூமி பூஜை, வாசக்கால் வைத்தல் உள்பட புதிய வீடு சம்பந்தப்பட்ட செயல்களை செய்ய மாட்டார்கள். இந்த நான்கு மாதங்களிலும் வாஸ்து புருஷன் தன் நித்திரையில் இருந்து எழுந்திருப்பதில்லை. அவர் உறக்கத்தில் இருந்து எழுந்திருக்காத மாதங்கள் என்பதால் இந்த நான்கு மாதங்களையும் புது வீடு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் இருந்து விலக்கி வைக்கிறார்கள்.

துர்க்காதேவியின் மகத்துவம் யாது? செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கையின் சந்நதியில் கூட்டம் அலைமோதுகிறதே அதன் காரணம் என்ன? - மைதிலி ரங்கநாதன், மாம்பலம்.

மஹிஷாசுரமர்த்தினி, துர்க்கமன் என்ற அசுரனை வதம் செய்ததால் துர்க்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள். துர்க்கா என்ற ஒரு சொல்லிற்குள் தகாரம், உகாரம், ரேபம், ககாரம்,  ஆகாரம் என்ற ஐந்து வர்ணங்கள் உண்டு.  இவற்றில் தகாரம் என்பது அசுர சம்ஹாரத்தையும், உகாரம் என்பது விக்ன நாசனத்தையும், ரேபம் என்பது ரோக நாசனத்தையும், ககாரம் என்பது பாப நாசனத்தையும், ஆகாரம் பய நாசனத்தையும் தரும் என்பார்கள்.

அதாவது துர்க்கையின் பெயரைச் சொன்னால் அசுர குணம் அழிதல், தடை நீங்குதல், வியாதி குணமடைதல், பாவம் நீங்குதல், பயம் அழிதல் ஆகிய ஐந்து குணங்களும் நம்மிடம் வந்து சேரும் என்பது நிதர்சனமான உண்மை என்பார்கள் துர்க்கையின் உபாசகர்கள். சர்வ துக்கங்களையும் போக்கிடும் இந்த துர்க்காதேவியானவள் அவளது உபாஸகர்களால் சூலினி துர்க்கா, வன துர்க்கா, சாந்தி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரீ துர்க்கா என்று வெவ்வேறு வடிவங்களில் விதவிதமான மந்திரங்களால் போற்றப்படுகிறாள்.

துர்க்கா பூஜையில் ஈடுபடுபவர்களுக்கு கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், துர்க்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன் வம்ச விருத்தியையும், தன விருத்தியையும், சுபிக்ஷத்தையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான் என்றும், ஸர்ப்பங்கள், ராக்ஷஸர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவை யாவும் துர்க்கையின் பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே திசைதோறும் ஓடுகின்றன என்றும் தேவி பாகவதத்தில் வியாஸ பகவான் கூறுவதே இதற்கான ஆதாரம்.

ஆக, சத்ரு, ரோகம், கடன் ஆகியவற்றால் உண்டாகும் பிரச்னைகள், ஆவி, பில்லி, சூனியம், ஏவல் முதலான அமானுஷ்ய சக்திகளால் உண்டாகும் தொல்லைகள், சித்த பிரமை, பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாக தோஷம், புத்திர தோஷம் போன்ற குறைகளால் அவதிப்படுபவர்கள் யாவரும் செவ்வாய் மற்றும் வெள்ளி மட்டுமல்லாது, எப்போதும் துர்க்கையை வணங்கி வருவதால் மேற்சொன்ன குறைகள் யாவும் நீங்கும்.  தங்கள் குறைகள் அனைத்தையும் துர்க்கையின் தரிசனம் போக்கி விடுகிறது என்ற நம்பிக்கையே துர்க்கையின் சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவதன் காரணம் என்றால் அது மிகையில்லை.

தமிழகத்தில் தற்போது வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என்ற இரு வேறு பஞ்சாங்கம் நடைமுறையில் உள்ளது. இவை ஒன்றுக்கொன்று கிரஹ நிலையில் மாறுபடுகிறது. பலன் காண்கையில் இதனால் தெளிவின்மை உண்டாகிறது. எனவே இரண்டில் எது சிறந்தது என்பதை பெரியவர்கள் அறிவித்து அதையே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினால் நலம் பயக்கும் அல்லவா? - ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

பலன் காண்கையில் தெளிவின்மை உண்டாவது பஞ்சாங்கத்தினால் அல்ல. நமது அணுகு முறையால் தான் குழப்பம் என்பது உண்டாகிறது. ஒரு விஷயத்தை அறிந்துகொள்வதற்கு பல்வேறு நடைமுறைகள் இருக்கலாம். நாம் ஏதேனும் ஒன்றினை மட்டும்தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். இது சரி, அது தவறு என்று பிரித்துப் பார்க்க முடியாது. பஞ்சாங்கங்களில் பேதம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

எளிதாகப் புரிந்துகொள்ள மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம். உங்கள் ஊர்ராகிய பண்ருட்டியில் இருந்து அருகில் உள்ள விழுப்புரம் செல்வதற்கு வாணியம் பாளையம், கண்டரக்கோட்டை, கோலியனூர் வழியாக பேருந்திலோ அல்லது காரிலோ செல்வீர்கள். அதே விழுப்புரத்திற்கு திருத்துறையூர், சேர்ந்தனூர் வழியாக ரயிலில் இன்னமும் விரைவாகச் சென்றுவிடுவீர்கள். சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கு செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருவத்தூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர் வழியாக பேருந்து செல்கிறது.

சென்னையில் இருந்து அதே சேலத்திற்கு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக ரயில் செல்கிறது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊரினைச் சென்றடைய இரு வேறு பாதைகளையும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றில் இந்த வழியில் போவதுதான் சரியானது, மற்றொரு பாதை தவறானது என்று சொல்ல முடியுமா?  நமது நோக்கம் சென்னையில் இருந்து சேலத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பது தான்.

அதற்கு ஏதேனும் ஒரு வழியை மட்டும் பின்பற்ற வேண்டும். பாதி தூரம் வரை அதாவது காட்பாடி வரை ரயிலில் சென்றுவிட்டு இல்லை, இல்லை இந்த வழியில் தூரம் அதிகமாக உள்ளது என்று எண்ணி அதனை விடுத்து மீண்டும் பேருந்தில் செல்ல முயற்சித்து இந்த வழியில் டிராஃபிக் அதிகமாக உள்ளது என்று நினைத்து இருப்புப்பாதையை தேர்ந்தெடுத்தால் நம்மால் குறித்த நேரத்திற்கு சேலத்தினை சென்றடைய முடியாது. பாதி வழியிலேயே நிற்க வேண்டியதுதான். அதே போலத்தான் பஞ்சாங்கமும். வாக்கிய கணிதம் உங்களுக்கு எளிதாக இருந்தால் அந்த வழியை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். திருக்கணித பஞ்சாங்கம் நடைமுறைக்கு ஒத்துவருகிறது என்று நீங்கள் நினைத்தால் அதனை வைத்து பலன் காணுங்கள். இரண்டையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

ஜோதிடம் பார்ப்பதில் பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இந்திய ஜோதிடம், சீன ஜோதிடம், மேற்கத்திய ஜோதிடம் என்று பல வகைகள் உண்டு. இந்திய ஜோதிடத்தைப் பொறுத்த வரை குழந்தை பிறக்கும் நேரத்தில் சந்திரன் இருக்கும் ராசியைக் கொண்டு அதுவே அந்தக் குழந்தையின் ஜென்ம ராசி என்று தீர்மானிக்கிறார்கள். அதுவே மேற்கத்திய ஜோதிடத்தில் சூரியன் இருக்கும் ராசியைக் கொண்டு அதனை அந்தக் குழந்தையின் ஜென்ம ராசியாக கணக்கிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒரு மாதத்தில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் ஒரே ராசியைச் சேர்ந்த குழந்தைகளாக இருப்பார்கள். இதனைத் தவறு என்று சொல்ல முடியாது.

அவரவர் பின்பற்றுகின்ற நடைமுறையைப் பொறுத்தது. நமது இந்திய ஜோதிடத்திலேயே தசாபுக்தி கணக்கிடும் முறையில் கூட பேதம் உண்டு. பொதுவாக எல்லோரும் விம்சோத்தரி முறையில் தசாபுக்தியைக் கணக்கிடுவார்கள். கால சக்ர தசை என்ற மற்றொரு நடைமுறையும் உண்டு. இவற்றில் இதுதான் சரியானது, இந்த முறை தவறானது என்று சொல்ல முடியாது. அவரவர் பின்பற்றும் நடைமுறையில் தெளிவாக இருக்க வேண்டும்.

இந்து மதம், இஸ்லாம், கிறித்துவம், பௌத்தம், சமணம் என்று பல்வேறு மதங்கள் இருந்தாலும் அவரவர் பின்பற்றும் பாதையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். மதம் என்பது இறைவனை அடைவதற்கான ஒரு மார்க்கம். இதைத்தான் எல்லா மதங்களும் அறிவுறுத்துகின்றன. இதில் என் மதம்தான் சரியானது என்று எப்படிச் சொல்ல முடியாதோ, அதேபோல பஞ்சாங்கம் என்பது பலனைக் காண்பதற்காகத்தான். நீங்கள் எந்தப் பஞ்சாங்கத்தை பின்பற்றுகிறீர்களோ அதில் தெளிவாக இருங்கள். அது தரும் பலனை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். ஏதேனும் ஒரு பஞ்சாங்க நடைமுறையை மட்டும் பின்பற்றுங்கள். நீங்கள் காணும் பலனும் சரியாகவே அமையும். அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்.

சதா சர்வ காலமும் ஏதாவது அபத்தமாகவோ, கெட்டதாகவோ பேசிக் கொண்டிருப்பவர் வீட்டில் நெகடிவ் வேவ்ஸ் பரவும் என்பது உண்மையா?
 - அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.


உண்மைதான். நம்மைச் சுற்றியிருக்கும் நம் கண்களுக்குப் புலப்படாத தேவதைகள் சதா சர்வ காலமும் ‘ததாஸ்து’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்களாம். தத்+அஸ்து ததாஸ்து ஆகியுள்ளது. அதாவது ததாஸ்து என்ற வார்த்தைக்கு அப்படியே ஆகட்டும் என்று பொருள். சதா சர்வ காலமும் கெட்டதாகப் பேசிக்கொண்டே இருந்தால் தேவதைகள் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதிக்கும்போது அவர்கள் பேசுவதே நடந்து விடும். தீயவற்றைப் பேசுபவரின் இல்லத்தில் தீயவைதான் நடந்து கொண்டிருக்கும். அதனால்தான் எப்போதும் நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஞானியர் வற்புறுத்துகிறார்கள். எதிர்மறையான எண்ணங்களுடன் அபத்தமாகப் பேசிக்கொண்டிருப்பவரின் வீட்டில் எதிர்மறையான அதிர்வலைகள் பரவியிருக்கும் என்பது உண்மையே.

குளிகை என்பது என்ன? அந்த நேரத்தில் ஈமச்சடங்குகள் செய்யக்கூடாது என்று சொல்வது ஏன்? - அயன்புரம் த.சத்தியநாராயணன்.

சனி பகவானின் குமாரன் குளிகன் என்று ஒரு கதை உண்டு. ஜோதிடவியலைப் பொறுத்த வரை சனி கிரஹத்தின் துணைக்கோள் குளிகன் ஆகும். அதனால்தான் சனிக்கிழமை அன்று காலை சூரிய உதய காலத்தில் இருந்து முதல் ஒன்றரை மணி நேரம் குளிகை என்று குறிப்பிட்டிருப்பார்கள். சனிக்கிழமையில் இருந்து தலைகீழாக, அதாவது சனி, வெள்ளி, வியாழன், புதன், செவ்வாய், திங்கள், ஞாயிறு என்ற வரிசையில் குளிகனின் கால நேரம் வரிசையாக வந்து கொண்டிருக்கும்.

உதாரணத்திற்கு ஆறு மணிக்கு சூரிய உதயம் என்று வைத்துக்கொண்டால் சனிக்கிழமை அன்று காலை 06.00-07.30, வெள்ளி அன்று 07.30-09.00, வியாழன் 09.00-10.30, புதன் 10.30-12.00, செவ்வாய் 12.00-01.30, திங்கள் 01.30-03.00, ஞாயிறு அன்று 03.00&04.30 என்று குளிகையின் நேரத்தை அட்டவணைப்படுத்தி இருப்பார்கள். இந்த குளிகைக்கு உரிய கால நேரத்தில் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது மீண்டும், மீண்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்ற ஒரு கருத்து உண்டு. குளிகைக்கு உரிய காலத்தில் அசுபகாரியம் செய்தால் குடும்பத்தில் மீண்டும் மீண்டும் அசுபகாரியம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் என்ற காரணத்தால் குளிகையின் நேரத்தில் ஈமச்சடங்குகள் முதலான அசுப காரியத்தைச் செய்வதில்லை.

அமாவாசை நாளில் வீட்டு வாயிலில் கோலம் போடக்கூடாது என்கிறார்களே, இது சரியா? - ரா.பாஸ்கரன், பெங்களூரு.

தவறு. அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வதால் அவ்வாறு சிலர் நினைக்கிறார்கள். தர்ப்பணம் என்பது முன்னோர்களுக்கு செய்கின்ற கர்மா என்றாலும் அதனை அசுபமாக எண்ண வேண்டிய அவசியம் இல்லை. அமாவாசை நாளிலும் வீட்டில் நித்தியப்படி பூஜை என்பதை அவசியம் செய்ய வேண்டும். பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும். அவ்வாறே வீட்டு வாயிலில் கோலமும் போட வேண்டும். அமாவாசை நாளில் வீட்டு வாயிலில் கோலம் போடக்கூடாது என்று சொல்லப்படுவது தவறான கருத்து.

நம்மைப் படைத்துக் காத்தருளும் இறைவனை அவன், இவன் என்று நாம் அழைப்பது சரியா? - மு. மதிவாணன், அரூர்.

சரியே. அது பக்தியின் வெளிப்பாடு. இறைவனின் பால் நம் மனம் லயித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நாம் வேறு, இறைவன் வேறு என்று பிரித்துப்பார்க்காமல் இறைவனையும் நம்மில் ஒருவனாய் நினைக்கிறோம். ஆதிசங்கரரின் அஹம் ப்ரஹ்மாஸ்மி என்ற அத்வைத சித்தாந்தத்தின்படி நமக்குள்ளேயே இறைவன் உய்கிறான் என்பதை உணர்ந்து சொல்லும் வார்த்தைகள். இறைவனிடம் கொண்டிருக்கும் அபரிமிதமான பக்தியும், நீ எனக்குச் சொந்தம் என்ற உரிமையும்தான் இறைவனை அவன், இவன் என்று நம்மைச் சொல்ல வைக்கிறது.

நீ, வா, போ என்றழைப்பது உரிமையின் வெளிப்பாடு. நீங்கள், அவர், இவர் என்று அழைப்பது மரியாதையை கொடுத்தாலும் மனம் அவர்களோடு ஒன்றிணையாமல் தனித்துத்தான் செயல்படும். பெரும்பாலானோர் பெற்ற தாயை நீ, வா, போ என்று ஒருமையில் அழைப்பார்கள், தந்தையை வாங்க, போங்க என்பார்கள். இன்னும் சிலர் தந்தையிடம் கூட நீ, வா, போ என்று ஒருமையில்தான் பேசுவார்கள். அதற்காக அவர்கள் பெற்றோரிடம் அலட்சியம் காட்டுகிறார்கள் என்று எண்ண முடியாது. அதேபோல தனக்கு உரியவன் என்ற உரிமையிலும், இறைவனிடம் கொண்டிருக்கும் அன்யோன்யத்தின் வெளிப்பாடாகவும் இறைவனை அவன், இவன் என்று அழைக்கிறார்கள். அவ்வாறு அழைப்பது முற்றிலும் சரியே. இதில் குறை காண இயலாது.

திருக்கோவிலூர் K.B ஹரிபிரசாத் ஷர்மா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-08-2019

  18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்