SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பச்ச பட்டினி விரதமிருக்கும் சமயபுரத்தாள்!

2019-04-05@ 09:39:59

தாயிற்காக விரதம் இருக்கும் பிள்ளைகள் உண்டு. சாமிக்காக விரதமிருக்கும் பக்தன் உண்டு. பிள்ளைகள் நலனுக்காக பட்டினி இருக்கும் தாய் எங்கேனும் உண்டா?, பக்தனின் நலனுக்காக விரதம் இருக்கும் சாமி எங்கேனும் உண்டா? உண்டு. அதுதான் நம்ம சமயபுரத்து மாரியம்மன். தமிழகத்தில் உள்ள மாரியம்மன் தலங்களில் தலைமை தலமாகவும், அம்மன் சுயம்புவாக தோன்றிய தலமுமாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது, திருச்சிக்கு வடக்கே ஓடும் காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஒவ்வொரு வைபவங்களும் மனித வாழ்க்கையில் கடைபிடிக்கப்படும் சடங்குகள். உறவுகளிடையே பந்த பாச பிணைப்பை ஏற்படுத்தும் உயிர்ப்புள்ள வைபவங்கள். அண்ணன், தங்கை உறவின் உன்னத மாண்பே, மணமுடித்துக் கொடுத்த பின், அவளுக்கு அன்னைக்கு அன்னையாய், தந்தைக்கு தந்தையாய் திகழ்வது அவளது அண்ணன் உறவு தான். அதனால் தான் தாயை விட பத்து மடங்கு உயர்வானது தாய்மாமன் உறவு என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.

அந்த உறவின் ஆழத்தை புரிய வைக்கும் வைபவமாக தை மாதம் பொங்கல் சீர், சித்திரை சீர், கார்த்திகை சீர் வழங்கப்படுவதுண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் சமயபுரத்தாளுக்கு, அண்ணன் ஸ்ரீரங்கநாதர் தை மாதம் சீர் கொடுக்கும் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. சமயபுரம் மாரியம்மன் கோயில் தற்போது இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனது ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள் அந்த சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்று விட்டார்கள். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டார்கள்.

பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்கு ‘‘கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபட்டனர். விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றியும் பெற்று அம்மனுக்கு இங்கு தனியாக கோயில் கட்டினார்கள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்று விக்கப்பட்ட கோயில் இன்று, ‘‘சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இதற்கு முன் இருந்த கண்ணபுரம் மாரியம்மன் ஆதி மாரியம்மன் என்று அழைக்கப்படுகிறாள். இந்த அம்மனும் இந்த ஊரிலேயே ஆலயம் கொண்டுள்ளாள். பங்குனி கடைசி ஞாயிறு அல்லது சித்திரை முதல் ஞாயிறு அன்று ஆண்டுக்கு ஒரு முறை சமயபுரம் மாரியம்மன் கண்ணனூரில் உள்ள தன் தாய் ஆதிமாரியம்மனைக்காண வருகிறாள். அப்போது ஊர்மக்கள் சமயபுரத்தாளுக்கு சீர் கொடுக்கின்றனர்.

தாய் வீட்டு சீதனமாக இதைக் கருதுகின்றனர். தாயை அம்மன் காணவரும் நாளன்று இவ்வூரிலிருந்து திருமணம் முடித்து சென்ற பெண்களுக்கு தாய்வீட்டிலிருந்து சீதனமாக துணிமணிகள் எடுத்து கொடுக்கின்றனர். சிலரை வீட்டிற்கே வரவழைத்து சீர் கொடுக்கின்றனர். வசதி இல்லாதவர்கள் கூட 50 ரூபாயாவது மகளுக்கு மணியார்டர் செய்து விடுகின்றனர். காரணம் ஆத்தா கோபிச்சுக்குவா என்று அஞ்சும் பக்தர்களின் பாசமிகு செயல் இது. உண்மைதான் ‘‘ஆத்தா, என் மகனுக்கு உடம்பு சரியில்லை, 4 நாளு வேலைக்கு போனா, 5 நாளு வேலையத்து திரியானே, அவனுக்கு ஒரு நல்ல வழியா காட்ட மாட்டியா’’ என்று கோயிலில் வேண்டினாள். அருள் வந்து நபர்கள் மூலம் ஆத்தா சமயபுரத்தா உடனே சொல்லுவா என்ன தெரியுமா, என் மவளுக்கு இந்த வருஷம் ஒத்த ரூபா சீர்வரிசை கொடுத்தியா மகன், மகன்னு தானே பார்க்க, கல்யாணம் முடிச்சு கொடுத்தா உறவே முடிஞ்சுன்னு அர்த்தமா, என் புள்ளக்கு உரிய சீர நீ கொடுத்திட்டு வா, உன் மகன் உடம்பு சீராவும் என்கிறாள் சமயபுரத்தாள் அருளாளி ரூபத்தில். அந்த அளவு பொம்பள புள்ளங்க மேல பாசம் வச்சிருக்கா சமயபுரத்தா.

ஆத்தாவ நம்பி, ஆத்துல இறங்கினா கூட உடன் வந்து கரை சேர்ப்பா, கஷ்டம்ன்னு போயி கண்கலங்கி நின்னா, மறு நாளே கஷ்டத்தை மாத்தி வப்பா, அதுல இருந்து நம்மள கரை சேர்ப்பா, சமயத்தில் வரும் தாயல்லவா நம் சமயபுரத்தாள். பலவிதமான படையல்கள், பல விழாக்கள், பல வகையான நைவேத்தியங்கள் கண்ட சமயபுரத்து மாரியம்மன். உலக நன்மைக்காகவும், தம் பிள்ளைகளாகிய உலக மக்களுக்காகவும் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கடைசி ஞாயிறு அன்று பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். அன்றிலிருந்து 28 நாட்கள் விரதம் மேற்கொள்ளும் சமயபுரத்தாள் பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை தனது விரதத்தை முடிக்கிறாள். விரத நாட்களில் அம்மனுக்கு உரலில் இடிக்கப்பட்ட பச்சரிசி மாவு, வெல்லம், திராட்சை, ஆரஞ்சு, இளநீர் பானகம் போன்றவை மட்டுமே நிவேதிக்கப்படுகிறது. விரதம் முடிவுறும் நாளில் ஆத்தா சமயபுரத்தாளின் அக்காவாக கருதப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்து அபிஷேக திரவியங்கள், பட்டு வஸ்திரம், மாலை, சந்தனம், தாம்பூலம் ஆகியவற்றுடன் தயிர் சாதம், காய்கறி கூட்டு ஆகியவை தங்கை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.

அன்றைய தினம் மாலை 7 மணியளவில் திருவானைக்காவலில் இருந்து தளிகை மற்றும் அபிஷேக திரவியங்கள், மாலைகள், வஸ்திரங்களை யானை மீது எடுத்துக்கொண்டு மேளதாளங்கள் முழங்க இரவு 9 மணியளவில் சமயபுரம் வருவார்கள். சமயபுரம் மாரியம்மன் கோயிலுள்ளோர் மாலை அணிவித்து வரவேற்பார்கள். திருவானைக்காவல் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட அபிஷேக பொருட்களால் சமயபுரம் மாரியம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் தளிகை நிவேதத்துடன் தனது பச்சைப்பட்டினி விரதத்தை சமயபுரத்தாள் நிறைவு செய்வார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொண்டு குணமடைவது மிகவும் பிரசித்தி பெற்றது. இத்தலத்திலேயே குறிப்பிட்ட நாட்கள் தங்கி அங்கு கோயிலில் வேலை செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுபவர்களும் உண்டு.

ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-07-2019

  21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-07-2019

  20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • hotairballoonchina

  சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

 • CornwallJellyfishEncounter

  இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • newzealandexplosion

  எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்