SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆறுதல் தருவான் ஆறுதலையோன்

2019-04-03@ 17:20:37

எனக்கு சில வருடங்களாக மனதில் குழப்பம், எதைப் பார்த்தாலும் பயம், சந்தேகம், தலைசுற்றல், மூளையில் சூடேறுவது போல் அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் பயத்தில் மதுப்பழக்கம் வந்துவிட்டது. உடல்நிலையோ குன்றுகிறது. நான், இந்தக் கஷ்டத்தில் இருந்து மீள வழி சொல்லுங்கள். சேகர், கருப்பூர்.

கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. மனோகாரகன் ஆகிய சந்திரன் ஜென்ம லக்னத்தில் நீச பலத்துடன் அமர்ந்திருப்பது உங்கள் மனதில் தெளிவின்மையை உண்டாக்கி இருக்கிறது. நமது பிரச்னை வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பகட்டு கௌரவமும், வீண் பிடிவாதமும் உங்களை தவறான பாதையில் வழிநடத்திச் செல்கிறது. மூளைப்பகுதியில் உள்ள நியூரான்களின் இம்பேலன்ஸ் மூளையில் சூடேறுவது போன்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. உங்கள் மனதில் உள்ளவற்றை நெருக்கமானவர்களிடம் மனம் விட்டுப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களது துணையோடு உரிய மன நல மருத்துவரையும் நாடுங்கள்.

காலம் கடத்தாமல் விரைந்து செயல்பட வேண்டிய சூழலில் உள்ளீர்கள். உங்கள் ஜாதக பலத்தின்படி 10.05.2019ற்குள் நீங்கள் மதுப்பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டியது அவசியம். அடுத்து வருகின்ற ராகு புக்தியின் காலம் சிகிச்சைக்குத் துணைபுரியாது என்பதை புரிந்துகொண்டு உடனடியாக உங்கள் பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சியுங்கள். மனதினை ஒருமுகப்படுத்தும் தியானம், யோகா போன்ற பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லுங்கள். தினமும் கந்தகுரு கவசம் படித்து வருவதோடு செவ்வாய்தோறும் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு ஆலய வளாகத்திற்குள் ஒரு அரை மணி நேரம் மனதை இறைவனின் பால் செலுத்தி பிரார்த்தனை செய்யுங்கள். ஆறுதலையோனை வழிபடுங்கள். ஆறுதல் அளிப்பான் பாருங்கள்.

மாமனார், மாமியார், மூன்று மகன், மருமகள்கள், பேரன், பேத்தி என சந்தோஷமான குடும்பம். நான் மூத்த மருமகள். திடீரென வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைய மைத்துனர் சாலை விபத்தில் பலியானார். அடுத்த ஒரு வருடத்தில் மூன்றாவது மருமகள் ஆன அவரது மனைவியும், தொடர்ந்து என் கணவரும் மனநிலை பாதிக்கப்பட்டனர். அடுத்த வருடம் நன்றாக இருந்த 2வது மருமகள் மாரடைப்பால் காலமானார். இது என்ன விதியா, வேறு ஏதாவது தோஷமா? எங்கள் குடும்ப பிரச்னை தீர வழி சொல்லுங்கள். ஓர் வாசகி, ராணிப்பேட்டை.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. உங்கள் குடும்பத்தில் நடந்து வரும் நிகழ்வுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாகவே உள்ளது. இதனை அவரவருக்கான விதி என்று முடிவெடுக்க இயலாது. உங்கள் கணவரின் ஜாதகப்படி கிரஹங்களின் மூலமாக தோஷம் உண்டாகியிருப்பதாகத் தெரியவில்லை. இதனை வேறுவிதமாக, அதாவது அமானுஷ்ய ரீதியிலான பிரச்னையாக அணுகவேண்டி உள்ளது. வெளிநாட்டில் சாலை விபத்தில் பலியான மைத்துனரின் உடல் தலையில்லாமல் வெறும் உடம்பு மட்டும் வந்து சேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

காவடி எடுக்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய மறுநாள் நல்ல ஆரோக்யத்துடன் இருந்த 2வது மருமகள் மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்ற தகவலும் முரண்பாட்டினைத் தருகிறது. அகால மரணமடைந்தவர்களுக்கு முறையாகச் செய்ய வேண்டிய கடன்களை சரிவரச் செய்து முடித்தால் மட்டுமே பிற பரிகாரங்களைச் செய்ய இயலும். இதனை உங்கள் குடும்பத்தினருக்குச் சொல்லிப் புரிய வையுங்கள். உங்கள் குடும்பத்திற்கு உண்டாகியுள்ள பிரச்னையை பிரஸ்னம் பார்த்துத்தான் அறிந்துகொள்ள இயலும். மனநிலை பாதிக்கப்பட்டிருந்த 3வது மருமகள் தற்போது சரியாகிவிட்டார் என்ற தகவல் நல்ல நேரம் துவங்கியிருப்பதைக் காட்டுகிறது. உங்கள் கணவரும் விரைவில் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சோளிங்கர் திருத்தலத்திற்கு குடும்பத்துடன் சென்று பெரிய மலையில் அருட்பாலிக்கும் யோக நரசிம்மரையும், சிறிய மலையில் அமர்ந்திருக்கும் யோக ஆஞ்சநேயரையும் ஒரே நாளில் தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த இரண்டு மலைகளையும் ஒரே நாளில் எந்தவிதமான தடையுமின்றி ஏறி தரிசனம் செய்துவிட்டால் உங்கள் குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகிவிட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம். மாறாக தடையேதும் உண்டானால் உடனடியாக பிரஸ்னம் பார்த்து பரிகாரம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள் என்பதையும் குடும்பப் பெரியவர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் வணங்கி வரும் சிந்தாமணி விநாயகருக்கு தினமும் காலையில் அபிஷேகத்திற்கு உங்களால் இயன்ற அளவிற்கு பசும்பால் உபயம் செய்து பிரார்த்தனை செய்து வாருங்கள். தோஷம் உடனே மாறும். சந்தோஷம் வந்து சேரும்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நான் 21 ஆண்டுகளுக்கு முன் கோயமுத்தூரில் குடியேறினேன். அடியேன் பணி செய்த நிறுவனத்தில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் உண்டான பிரச்னை காரணமாக சிறைக்குச் செல்ல நேர்ந்தது. சிறை சென்ற 50 பேரில் நான் உட்பட இருவர் தவிர மற்ற அனைவரும் விடுதலையாகிவிட்டனர். வைணவ குடும்பத்தில் பிறந்த நான் ஆசார அனுஷ்டானத்துடன் வாழ ஆசைப்படுகிறேன். அடியேனின் விடுதலை எப்போது? கோயமுத்தூர் வாசகர்.

‘அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி’ என்பதை மெய்ப்பிப்பது போல் உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து எட்டாம் வீட்டில் சனி அமர்ந்து பிரச்னையைத் தந்திருக்கிறார். உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. சனி ஒருவரைத் தவிர மற்ற கிரஹங்கள் நல்ல நிலையில் அமர்ந்திருந்தாலும் ஊழ்வினைப் பயன் என்பது தனது கடமையைச் செய்து வருகிறது. ஆசார, அனுஷ்டானங்கள், தர்மசாஸ்திரம் ஆகியவற்றை அறிந்திருக்கும் ஒருவன் தவறு செய்தால் அவனுக்குத்தான் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற மகாபாரதக் கதையினை அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறீர்கள். தற்போது நடந்து வரும் கேது புக்தி உங்கள் மனதில் உள்ள குழப்பத்தை நீக்கி மெய்ஞ்ஞானத்தை போதிக்கும். உங்கள் ஜாதக பலத்தின்படி இந்த வருட இறுதிக்குள் விடுதலை ஆகிவிடுவீர்கள்.

பெற்றோர், உடன்பிறந்தார், மனைவி, மக்கள் என உங்கள் குடும்பத்திற்காக மட்டும் வாழவேண்டிய மனிதர் அல்ல நீங்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சாமானியர்களின் அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தை போதிக்க வேண்டிய குருவாக நீங்கள் உருவெடுக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்தி நாராயணனின் நாமத்தை நிரந்தரமாக நெஞ்சினில் நிறுத்துங்கள். சிறிய திருவடியும், பெரிய திருவடியும் உங்களுக்கு இருபுறங்களிலும் நின்று உங்களைக் காப்பார்கள். சுயநலம் விடுத்து பொதுநலம் குறித்த சிந்தனை உங்கள் மனதில் ஊற்றெடுக்கத் தொடங்கியதும் உங்கள் விடுதலை சாத்தியப்படும். மெய்ஞ்ஞானத்தை பரப்புகின்ற ஆன்மிக சேவையில் பிறப்பிற்கான பொருளினைப் புரிந்துகொள்வதோடு பரம்பொருளையும் அனுபவ பூர்வமாக உணர்வீர்கள். உள்ளத்தில் நிறுத்துங்கள் ஏழுமலையை உடனே கிடைக்கும் விடுதலை.

எனக்குத் திருமணமாகி இறைவன் அருளால் வாழ்வில் எவ்வித விரிசலும் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வருகிறேன். இதுவரை குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. கொஞ்சம் கவலையாக உள்ளது. ஜாதகப்படி எப்பொழுது மழலைச் செல்வம் கிட்டும்? தக்க தீர்வும் பரிகாரமும் கூறுங்கள். நிஷாந்தி, கரூர்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் செவ்வாய் புக்தி நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் புத்ர ஸ்தானத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டின் அதிபதியான செவ்வாய் ஜென்ம லக்னத்தில் சூரியன், புதன், ராகுவுடன் இணைந்திருக்கிறார். உங்கள் கணவரின் ஜாதகத்தில் புத்ர ஸ்தான அதிபதி சூரியன் ஜென்ம லக்னத்தில் ராகுவுடன் இணைந்திருக்கிறார்.

இருவரின் ஜாதகத்திலும் புத்ர காரகன் குருவின் தீட்சண்யம் புத்ர ஸ்தானத்தின் மீது விழுவதால் நிச்சயமாக குழந்தைப்பேறு என்பது உண்டு. மிகச்சிறந்த அறிவுக்கூர்மையை உடைய பிள்ளையைப் பெற்றெடுப்பீர்கள். இருவரின் ஜாதகத்திலும் ஜென்ம லக்னத்தில் உண்டாகியிருக்கும் சூரியன், ராகுவின் சேர்க்கை சற்று காலதாமதத்தைத் தருவதாகத் தோன்றுகிறது. பிரதி ஞாயிறு தோறும் ராகு கால வேளையில் அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று நான்கு அகல்விளக்குகளை ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபட்டு வாருங்கள். இறைவனின் திருவருளால் 05.09.2019ற்குள் கர்ப்பம் தரித்துவிடுவீர்கள். கவலை வேண்டாம். மகேஸ்வரன் அருளால் மழலை வரம் கிட்டும்

“சண்ட விநாசன ஸகலஜனப்ரிய மண்டலாதீச மஹேசசிவ
சத்ரகிரீட ஸூகுண்டலசோபித புத்ரப்ரிய
புவனேசசிவ
சாந்தி ஸ்வரூப ஜகத்ரய சின்மய காந்திமதிப்ரிய கனகசிவ
ஷண்முகஜனக ஸூரேந்த்ர முனிப்ரிய ஷாட்குண்யாதி ஸமேதசிவ”


வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-10-2019

  21-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-10-2019

  20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 19-10-2019

  19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • boniaredlady

  தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

 • chisa

  தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்