SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்வின் பொருள் புரியும்!

2019-04-02@ 16:50:17

எனது சகோதரன் அரசு வேலை, நல்ல பக்தி, ஒழுக்கமான பழக்கவழக்கங்கள் அனைத்தும் உடையவர். திருமண வாழ்க்கையை ஆண்டவன் இதுவரை அவருக்குத் தரவில்லை. அந்த நாள் எப்போது அவருக்கு வரும்? எத்தகைய வரன் பார்ப்பது உத்தமம்? ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். - பாஸ்கரன், பெங்களூரு.

ஐம்பதாவது வயது துவங்கியிருக்கும் நிலையில் சகோதரனுக்கு திருமண வாழ்வு எப்போது அமையும் என்று கேட்டிருக்கிறீர்கள். முதலில் அவர் திருமண வாழ்வினை விரும்புகிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு முயற்சியில் இறங்குங்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் உங்கள் சகோதரர் அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசியில் பிறந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அவரது ஜாதகத்தை வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணித்துப் பார்த்ததில் ரேவதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ளார் என்பதும் அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் செவ்வாய்-ராகுவின் இணைவும், திருமணத்தைப் பற்றிச் சொல்லும் களத்ர ஸ்தானம் ஆகிய ஏழாம் வீட்டில் கேதுவின் அமர்வு உள்ளதும் தெரிய வருகிறது. மேலும் ஜென்ம லக்னாதிபதி சனி மூன்றில் நீசம் பெற்றிருக்கிறார்.

செவ்வாயும், சனியும் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தாலும், மூன்றில் சனியின் நீச பலம் திருமண வாழ்வினில் ஈடுபாட்டைத் தராது. அதே நேரத்தில் சகோதரகாரகன் செவ்வாய் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதும், 11ல் சூரியன், புதனின் இணைவும் சகோதர ஆதரவை அவருக்குப் பெற்றுத் தரும். உங்களைப் போன்ற சகோதரரின் அன்பும், ஆதரவும் அவரது வாழ்வினில் சந்தோஷத்தைத் தரும். அவரது ஜாதகக் கணக்கின்படி தற்போது செவ்வாய் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. பத்தாம் இடத்துச் சுக்கிரன், ஒன்பதில் குரு என்று அவருடைய ஜாதகம் இதர விஷயங்களில் பலமாக இருந்தாலும், தற்போதைய கிரஹ சஞ்சாரத்தின்படி திருமண வாழ்வு என்பது அத்தனை சிறப்பாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

முதலில் இவருக்கே அதில் அத்தனை ஆர்வம் இல்லை எனும்போது உங்களது முயற்சி எந்தவிதத்தில் பலனைத் தரும் என்பதையும் யோசித்துச் செயல்படுங்கள். தான தருமங்களைச் செய்வதிலும், ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவி செய்வதிலும் தனது வாழ்விற்கான பொருளை இவர் தேடிக் கொள்ள வேண்டும். பரிகாரம் ஏதும் தேவையில்லை.

58 வயதாகும் எனது தந்தையின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். பின்வரும் காலம் அவருக்கு எப்படி அமையும்? ஊரில் விவசாயம் பார்த்துக் கொண்டிருக்கும் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது. தாயார் என்னுடன் இருப்பதால் அவர் தனியாகத்தான் வசிக்கிறார். விவசாய நிலங்களை விற்றுவிடலாமா? அவர் இறுதிவரை தனியாகத்தான் வசிப்பாரா? ஜாதக ரீதியான உங்களது ஆலோசனை என்ன? - ரவிச்சந்திரன், ஆதம்பாக்கம்.

வாக்ய கணித ரீதியாக இவருக்கு தற்போது 23.06.2020 வரை சனி தசையில் சூரிய புக்தி நடைபெறுகிறது. இவரது ஆயுள் தீர்க்கமாக உள்ளது. அவரது உடல் ஆரோக்கியமும் நல்ல நிலையில்தான் உள்ளது. அவரது உடல்நிலையை விட மன நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தன்னுடைய மனக் குறைகளை வெளியில் சொல்லாமல் தனக்குள்ளேயே அடக்கி வைத்து உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார். ஆக இவரது மனக் குறைகள் களையப்பட்டாலே, உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தினைக் காண இயலும். தற்போதைய கிரஹ சூழல் இவருடைய நல்வாழ்விற்கு சாதகமான நிலையை உண்டாக்கும்.

ஆனாலும் இவருக்கு விவசாயத் துறை சிறப்பான பலனைத் தரும் நிலையில் இல்லை. எனவே இவரது பெயரில் இருக்கும் விவசாய நிலங்களை விற்று கட்டிடத்தில் முதலீடு செய்யலாம். தன ஸ்தானம் தற்போது நல்ல நிலையில் இருப்பதால் நிலங்களை விற்று முதலீடு செய்வதால் நஷ்டம் ஏதும் இருக்காது. நல்ல லாபத்தினைக் காண்பீர்கள். உங்களுக்கும், உங்கள் தந்தையாருக்கும் இடையில் நல்ல உறவு உண்டு.

 வயதான காலத்தில் அவர் உங்களுடன் சேர்ந்து இருப்பதே நல்லது. முதியவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு சாதகமாகப் பேசி அவரை உங்களுடன் அழைத்துக்கொண்டு வந்துவிடுங்கள். உங்கள் தகப்பனார் அதிகம் சிரமப்பட வேண்டிய அவசியம் இருக்காது. அவர் தனியாக இருக்கக் கூடிய சூழல் எதிர்காலத்தில் இல்லை. உங்களுடன் சேர்ந்து வசிக்கும்போது அவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார். பேரப்பிள்ளைகளான உங்கள் குழந்தைகளும் ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள்.

ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டிருக்கும் எனது தொழில் நிலை எவ்வாறு உள்ளது? இதே தொழிலை தொடர்ந்து செய்யலாமா? தற்போது கடன் பிரச்னை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சொந்தமாக வீடு மற்றும் வாகன யோகம் என்பது அமையுமா? பூர்வீக சொத்தினை விற்று எனது கடன்களை அடைக்கலாமா? எனது ஜாதகப்படி பூர்வீக சொத்து பயன் தருமா? - குமரகுருபரன், சென்னை.

வாக்ய பஞ்சாங்க கணிதப்படி தற்காலம் உங்களுக்கு 25.01.2020 வரை சுக்கிர தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. நடந்து வரும் இந்த தசாபுக்தி காலத்தில் உங்கள் தொழில் நன்றாக விருத்தி அடையும். நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த தொழிலையே நன்றாக விரிவு செய்து சம்பாதிக்கும் வாய்ப்பு மிக நன்றாக உள்ளது. நிச்சயமாக இந்த தொழில் உங்களுக்கு நிலைக்கும்.

அடுத்து வரவுள்ள தசாபுக்தி உங்களுக்கு அளவிலா நன்மையைத் தரும். தொழிலுக்கும் மிகவும் அனுகூலமாக இருக்கும். கடன் தொல்லைகள் முடிவிற்கு வரும். உங்களுடைய ஜாதகத்தில் நான்காம் இடத்திற்கு அதிபதியான சுக்கிர பகவான் ஒன்பதாம் இடத்தில் ஆட்சி பெற்று இருப்பதால் வீடு, வண்டி, வாகனம், மனை ஆகியவற்றை சுய சம்பாத்யத்தில் அடைகின்ற வாய்ப்புகள் மிக நன்றாக உள்ளது. கவலை வேண்டாம்.

பூர்வீக சொத்துக்களால் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அதிக நன்மை உங்களுக்கு இருக்காது. மாறாக உங்களது பெண் குழந்தைக்கு உங்களது பூர்வீக சொத்துக்கள் மிகவும் உபயோகமாக இருக்கின்ற சூழல் உள்ளது. உங்கள் ஜாதகத்தைப் பொறுத்த வரை சுய சம்பாத்யத்தினை அனுபவிக்கும் யோகம் மட்டுமே உள்ளது. எனவே, தற்போது பூர்வீக சொத்துக்களை விற்கின்ற முயற்சியில் இறங்க வேண்டாம். உங்களது வாரிசுக்கு அந்தச் சொத்து பயன்படும்.

மூலம் நட்சத்திரம், தனுசு ராசியில் பிறந்திருக்கும் என் மகனுக்கு 24 வயதாகிறது. பி.எல்., முடித்துவிட்டு பார் கவுன்ஸிலில் பதிவு செய்திருக்கிறான். அவனுடைய தொழில் நிலை எவ்வாறு உள்ளது? திருமணம் எப்போது நடைபெறும்? எப்படிப்பட்ட பெண்ணாக வருவார்? அவருடைய ஜாதக பலம் எவ்வாறு உள்ளது? - பாலாஜி, தஞ்சாவூர்.

உங்கள் மகனின் ஜாதகத்தை ஆய்வு செய்ததில் இவர் முழுவதும் தனியாக செய்வது மிகவும் நன்மையைத் தரும். ஏதாவது ஒரு சட்ட நிறுவனத்தில் பணி புரியச் சென்றாலும் இவரது தனித்தன்மை கெடாமலும், அதே நேரத்தில் தனது தனிப்பட்ட-க்கு எந்தவிதமான இடைஞ்சல் இல்லாமலும் செயல்பட்டு நற்பெயரை அடைவார். சம்பாத்யமும் நன்றாக இருக்கும். தொழிலைப் பொறுத்த வரை தற்போதைய சூழலில் நன்கு வளர்ச்சி அடையும் நேரமாதலால் ஓய்வினை மறந்து உழைக்க வேண்டி இருக்கும்.

சனி பகவானின் திருவருளால் கடும் உழைப்பால் உயருவார். 31வது வயதில் திருமணம் நடைபெறும். மணமகள் இவரது ஜென்ம பூமியிலிருந்து வடக்கு, வடமேற்கு திசையில் உள்ள ஊரில் இருந்து வருவார். களத்ர ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்து குரு பகவானின் பார்வையைப் பெற்றிருப்பதால் அமைதியே வடிவான பெண்ணாக அமைவார். குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக, நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பார். மனைவி வருகின்ற நேரம் சிறப்பான யோகத்தினைத் தருவதால் திருமணத்திற்குப் பின் இவரது உத்யோகம் உயர்வடையும்.

நாற்பது வயதாகும் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. சிறு வயது முதலே மணவாழ்வின் மீதான வெறுப்பும், பயமும் எனக்கு பற்றுதலைத் தரவில்லை. சந்யாச யோகம் என்பது உள்ளதா? குடும்பத்தினருக்கு என் மனநிலை புரியவில்லை. உடல்நிலை வேறு அவ்வப்போது பாதிப்பிற்கு உள்ளாகிறது. பெருத்த பாதிப்பு ஏதேனும் வந்துவிடுமோ என்ற பயமும் உள்ளது. என் ஜாதகத்தை ஆராய்ந்து உரிய ஆலோசனை கூறுங்கள். - சுமித்ரா, பெங்களூரு.

வாக்ய பஞ்சாங்க கணித முறைப்படி தங்கள் ஜாதகத்தை துல்லியமாகக் கணித்ததில் தற்காலம் 15.12.2019 வரை சனி தசையில் சனி புக்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரோக ஸ்தானத்தைக் குறிக்கும் ஆறாம் இடம் தங்கள் ஜாதகத்தில் சுத்தமாக இருப்பதால் மிகுந்த தொல்லைகள் தரக்கூடிய நோய்கள் எதற்கும் ஆட்படும் நிலை தங்கள் ஜாதகத்தில் இல்லை. நீங்களே குறிப்பிட்டுள்ளது போல், தங்களது வயதிற்கு உண்டான தொல்லைகள் மட்டுமே உள்ளன. உங்களது உடல் உபாதைகள் நீங்கி, நல்ல திடமான வாழ்வினை தசாநாதன் சனி பகவானின் அருளால் நிச்சயம் அடைவீர்கள். கவலை வேண்டாம்.

தங்களது ஜாதகத்தில் தைரிய ஸ்தானமாகிய மூன்றாம் இடத்தில் தைரிய காரகன் செவ்வாய் வலுவற்ற நிலையில் ராகுவுடன் இணைவு பெற்று அமர்ந்திருப்பதே தங்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமாக அமைகிறது. இயற்கையாகவே தைரியக் குறைவினைப் பெற்றுள்ளீர்கள். அதே நேரத்தில் கோச்சார ரீதியாக ராகு பகவான் பலம் கொள்ளும்போது சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற நிலை உண்டாகும். உங்களது லக்னாதிபதி சுக்கிரன் ஏழாம் இடத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்ப்பதால் இயற்கையாகவே முகம் வெளிறிப்போய் இருப்பதைப் போன்ற அமைப்பினைப் பெற்றுள்ளீர்களே தவிர பயத்தினால் அல்ல.

பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால வேளையில் (03.00&4.30) எலுமிச்சை விளக்கேற்றி அம்பிகையை பிரார்த்தனை செய்து வரவும். அவளருளால் தைரியலக்ஷ்மியின் அருளினைப் பெற்று சராசரி மனிதரைப் போல் வாழ்வீர்கள். உங்களது ஜாதகத்தில் எந்த காலத்திலும் சந்யாச யோகம் என்பது இல்லை. கவலை வேண்டாம். லக்னத்திற்கு 9ம் இடத்தில் சனி பகவான் ஆட்சி பெற்ற நிலையில் கேதுவுடன் இணைந்து இருப்பதால் தர்ம சிந்தனைகள் மனதினில் அதிகரிக்கிறது.

தான தருமங்கள், ஆலய திருப்பணிகள் ஆகியவற்றில் அதிகம் ஈடுபாடு கொள்வீர்கள். அதனால் மற்றவர்கள் மத்தியில் நற்பெயரை அடைவீர்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் வெகு விரைவில் தங்கள் எண்ணத்தினை மாற்றிக் கொள்வார்கள். கவலை வேண்டாம். எதைப்பற்றியும் கவலை கொள்ளாது உங்களது கடமையைச் செய்யுங்கள். வாழ்வில் வளம் பெறுவீர்கள்.

சுபஸ்ரீ  சங்கரன்

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்? ஆன்மிகம், தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை - 600 004.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்