SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்!

2019-04-01@ 16:50:08

வெளிநாட்டில் வாழும் எனது மூத்த மகளுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இதுவரை புத்ரபாக்யம் கிடைக்கவில்லை. பித்ருதோஷ  பரிகாரம், குலதெய்வ வழிபாடு மற்றும் ஜோதிடர்கள் சொல்லும் அனைத்து பரிகாரங்களும் செய்து வருகிறோம். பலன் இல்லை. என் மகளின் வார்த்தைகளில்  அனல் தெறிக்கிறது. அவளது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இயலவில்லை. எங்கள் மனக்குறை எப்போது தீரும்? காரைக்குடி வாசகி.

இத்தனை நாள் பொறுத்திருந்து மகளுக்கு அவசரப்பட்டு திருமணம் செய்துவிட்டோமோ என்று நினைப்பதாக உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள்  உங்கள் மகளுக்கு 32 வயது முடிந்து 33வது வயதின் துவக்கத்தில் தான் திருமணத்தை நடத்தியிருக்கிறீர்கள். தற்போது 37வது வயதில் உள்ள அவருக்கு இன்னும்  புத்ர பாக்யம் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறீர்கள். மேலும் 30 வயதினை நெருங்கிக் கொண்டிருக்கும் இளைய மகளுக்கு இன்னமும் திருமணத்தை  நடத்தாமல் வீண் கால தாமதம் செய்து வருகிறீர்கள். உரிய வயதினில் திருமணத்தை நடத்தாமல் நமது சௌகரியத்திற்குத் தகுந்தாற்போல் கிரஹங்களின்  சஞ்சாரம் அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்  மகளின் ஜாதகத்திலும், கிருத்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகத்திலும் புத்ர தோஷம் என்பது  கிடையாது. இருவர் ஜாதகங்களிலும் புத்ர ஸ்தானம் என்பது வலிமையாகத்தான் உள்ளது.

என்றாலும் தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் புத்ரபாக்யம் கிடைப்பதற்கு துணை செய்யவில்லை. மேலும் வம்ச விருத்தி உண்டாக வேண்டும் என்ற  அக்கறையும், கவலையும் உங்களுக்கு இருக்கும் அளவிற்கு அவர்களிடம் இருப்பது போல் தெரியவில்லை. யாருக்கு உடல்நிலை சரியில்லையோ, அவர்கள்தான்  மருந்து சாப்பிட வேண்டும். மகளின் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக அவரது தாயார் மருந்து சாப்பிட்டால் சரியாகுமா? யாருக்கு புத்ர பாக்கியம்  கிடைக்க வேண்டுமோ அவர்கள்தான் பரிகாரத்தைச் செய்ய வேண்டும். அவர்களுக்காக நீங்கள் செய்யும் பரிகாரங்கள் விழலுக்கு இறைத்த நீர்தான். ஜோதிடர்  சொன்ன பரிகாரங்களை உங்கள் மகளையும் மருமகனையும் நேரடியாகச் செய்யச் சொல்லுங்கள். வெளிநாட்டு மோகத்தினை விடுத்து பணம் சம்பாதிப்பதை விட  வம்சவிருத்தி முக்கியம் என்பதனைக் கருத்தில் கொண்டு பிறந்த மண்ணுக்குத் திரும்பச் சொல்லுங்கள். உங்கள் மகளின் உடல்நிலை தாய்மண்ணின் தட்பவெப்ப  நிலைக்கு ஏற்றவாறுதான் செயல்படும். வெளிநாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலையும், உணவுமுறையும் அவரது உடல்நிலையில் சிரமத்தைத்தான் தந்து  கொண்டிருக்கும்.

வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் இருவரின் தாம்பத்ய வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை என்று வருத்தப்பட்டு  எழுதியிருக்கிறீர்கள். ஒரே ராசியைச் சேர்ந்த அவர்கள் இருவருக்குள்ளும் பரஸ்பரம் அன்யோன்யம் என்பது நன்றாகத்தான் உள்ளது. இருந்தாலும் வசிக்கும் சூழலும்,  உணவுப் பழக்கமும், தட்பவெப்ப நிலையும்தான் வம்சவிருத்தியைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணிகள். இன்னமும் காலம் கடந்துவிடவில்லை என்பதையும்,  அவர்கள் இருவரின் வயதினையும் கருத்தில் கொண்டு இருவரையும் உள்நாட்டிற்குத் திரும்பச் சொல்லுங்கள். பெரியவர்களா கிய உங்களின் ஆலோசனையும்,  ஆதரவான வார்த்தைகளும் அவர்களது உடலில் ஹார்மோன்களைத் தூண்டும். அவர்கள் இருவரின் ஜாதக பலத்தின்படி 21.11.2019ற்குப் பின் வம்சவிருத்திக்கான  சாத்தியக்கூறுகள் பிரகாசமாய் உள்ளது. கால நேரத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாய்ப்பினைத் தவறவிட்டால் மீண்டும் கிடைப்பது கடினம்.  திருச்செந்தூர் செந்திலாண்டவனின் சந்நதிக்குச் சென்று தம்பதியரை மனமுருகிப் பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். வம்சவிருத்தி சாத்தியமாகும்.
 
69 வயதாகும் எனது ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். பின்வரும் காலம் எனக்கு எப்படியிருக்கும்? மாரக தசை எப்போது வரும் என்பதே எனது முக்கியமான  கேள்விகள். ஒரு அமாவாசை நாள் அன்று சிவலோக ப்ராப்தி அடைவேன் என்பது என் எண்ணம். தங்கள் விவரமான பதிலை எதிர்பார்க்கிறேன். வெங்கட்ராமன்,  கோடம்பாக்கம்.

பிறப்பும், இறப்பும் நம் கைகளில் இல்லை. அதனை நிர்ணயிக்கக் கூடிய சக்தியும் மனிதர்களாகிய நம் எவருக்கும் கிடையாது. இறைவன் ஒருவனால் மட்டுமே  அதனை முடிவு செய்ய இயலும். பிறப்பினையும், இறப்பினையும் ஒரு மனிதனால் நிர்ணயம் செய்ய முடிந்தால் அன்று முதல் அவன் கடவுளாகிவிடுவான். மகம்  நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர். யாருக்கும், எதற்கும், எப்போதும் அஞ்சாதவர். இயற்கை  குணம் அப்படியிருக்க மரணம் குறித்த சிந்தனை எதற்கு? உங்களுடைய ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து  வருவதாகத் தெரிகிறது. பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு 11ல் அமர்ந்திருப்பது நற்பலனையே தரும். இந்த வயதில் வாழ்வியல் பந்தங்களையும்,  ஆசைகளையும் அடக்கி இறைவனின் மேல் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

வாழ்நாளில் எஞ்சியுள்ள காலம் இறைவனின் நாமங்களை ஜபிப்பதிலும், நமது வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தேடுவதிலும் செல்லட்டும். உங்களுடைய ஜாதக  பலத்தின்படி 75 வயது முடிந்து 76வது வயது துவங்கும் நேரத்தில் நீங்கள் கேட்டிருக்கும் மாரக தசை என்பது வந்து சேரக்கூடும். குரு தசை என்பது  நடந்துகொண்டிருப்பதால் பின்வரும் காலம் என்பது இந்த பிறவியில் நீங்கள் அறிந்தும் அறியாமலும் செய்திருக்கும் பாவங்களுக்கான விமோசனத்தைத் தேடுகின்ற  வகையிலும், குரு மகான் ஒருவரைச் சரணடைவதன் மூலம் வாழ்வியல் பொருளைத் தெரிந்து கொள்கின்ற வகையிலும் அமையும். உங்கள் ஜாதக பலத்தின்படி  நீங்கள் அமாவாசை நாளில் சிவலோக ப்ராப்தி அடைவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை. அநாவசியமான கவலைகளை விடுத்து உங்களுக்கு உரிய  கடமைகளை மட்டும் சரிவர செய்து வாருங்கள். பகவன் நாமாவை சதா உச்சரித்து வருவதால் மட்டுமே உங்கள் மனம் தெளிவடையும் என்பதைப் புரிந்து  கொள்ளுங்கள். நலமுடன் வாழ்நாளைக் கழிப்பீர்கள்.
 
எனது தொழில் நிலை எவ்வாறு உள்ளது? ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை நம்பலாமா? பூர்வீக சொத்தினை விற்று தற்போது நான் வசிக்கும் ஊரில்  புதிதாக வீடு வாங்க முயற்சித்து வருகிறேன். எனது முயற்சி வெற்றி பெறுமா? கோதண்டராமன், மும்பை.

வாக்ய பஞ்சாங்க முறைப்படி தங்கள் ஜாதகத்தை கணித்ததில் தற்காலம் 19.06.2021 வரை சுக்கிர தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. பொதுவாக தற்போது  தங்களுக்கு நடந்து கொண்டிருப்பது நல்ல நேரமே ஆகும். உங்களது பூர்வீகத்தில் உள்ள வீடு மற்றும் நிலத்தை தற்போது விற்க முயற்சிக்கலாம். நல்ல
லாபத்தினைக் காண்பீர்கள். விற்றுவரும் பணத்தினைக் கொண்டு வேறு ஒரு அசையா சொத்து ஒன்றினை உருவாக்க ஏதுவான நேரமாக இருப்பதால் நேரத்தினை  பயன்படுத்திக் கொண்டு செயல்படுங்கள். ரோகிணி நட்சத்திரத்தின் மீது தங்களுக்கு ஏன் பயம் என்று தெரியவில்லை. ரோகிணி நட்சத்திரக்காரர்களால் தங்களுக்கு  எந்த விதத்திலும் தொல்லை நேராது. கவலை வேண்டாம். கூட்டு வியாபாரம் உங்களுக்கு நன்மையைத் தரும்.

தாராளமாக ரோகிணி நட்சத்திரக்காரரோடு இணைந்து வியாபாரத்தில் ஈடுபடலாம். வரும் காலத்தில் பிரச்னை ஏதும் நிகழ வாய்ப்புகள் இல்லை. வியாபாரம் நன்கு  விருத்தி அடையும். ஜீவன ஸ்தானமாகிய பத்தாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதும், ஸ்தானாதிபதி சூரியன் லாப ஸ்தானமாகிய 11ல் அமர்ந்திருப்பதும்  உங்களுக்கு சாதகமான விஷயங்கள். தொழிலில் நல்ல லாபத்தினைக் காண்பீர்கள். உங்களுடைய தனித்திறமையின் காரணமாகவும், வாடிக்கையாளர்களோடு  நீங்கள் கொண்டுள்ள தொடர்பின் காரணமாகவும் தொழிலில் நல்ல லாபத்தினைக் காண்பீர்கள். மேலும் தற்காலம் தசாபுக்தி ரீதியாகவும் நல்ல சூழல் நிலவுவதால்  நேரத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வளம் காண்பீர்கள்.
 
என் மகள் திருமண வாழ்வில் ஈடுபாடு இன்றி காணப்படுகிறாள். அவளுடைய ஜாதகத்தில் தோஷம் ஏதும் உள்ளதா? திருமணம் நடக்குமா? அவளது எதிர்கால  வாழ்வு எப்படி அமையும்? கண்ணன், திருவொற்றியூர்.

உங்கள் மகளின் ஜாதகத்தை வாக்ய பஞ்சாங்க முறையில் துல்லியமாக கணித்ததில் தற்காலம் 11.08.2019 வரை சுக்கிர தசையில் கேது புக்தி நடைபெறுகிறது.  இவரது ஜாதகத்தில் ஏழாம் இடமாகிய களத்ர ஸ்தானத்தில் கேது பகவான் ஸ்தானாதிபதி புதனின் சாரத்தினைப் பெற்று அமர்ந்துள்ளார். மேலும் களத்ர  ஸ்தானாதிபதி புதன் ஆறாம் இடத்தில் மறைந்து நிற்பது திருமணத்திற்கான வாய்ப்புகளை குறைத்துக் காட்டுகிறது. மேலும் களத்ர காரகன் சுக்கிரன், குடும்பாதிபதி  சனி, பாக்யாதிபதி சூரியன், ஜீவனாதிபதி புதன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆறாம் இடத்தில் நிற்பது அவ்வளவாக நல்ல யோகத்தினைத் தராது. களத்ர  ஸ்தானத்தில் கேது பகவான் அமர்ந்திருப்பதும் திருமண வாழ்வில் இவரது பற்றற்ற நிலையினையே காட்டுகிறது. அவரது போக்கிலேயே அவரைச் செல்ல  விடுங்கள். ஆண்டவனின் அருளால் அனைத்தும் நன்மையாக முடியும்.

நான் விரும்பும் நபர் உள்ளூரில் வேலை செய்கிறார். எனக்கு வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. அதற்காக முயற்சித்தும்  வருகிறேன். எனது முயற்சி வெற்றி பெறுமா? நான் விரும்பும் நபருடன் திருமணம் நடைபெறுமா? புத்திரபாக்கியம் இல்லை என்று ஒரு ஜோதிடர் சொல்கிறார்.  வெளியில் நான் கடனாகக் கொடுத்திருக்கும் தொகை எனக்குத் திரும்பக் கிடைக்குமா? மிகுந்த குழப்பத்தில் உள்ளேன். எனது ஜாதகத்தை ஆராய்ந்து உரிய  ஆலோசனை கூறுங்கள். விசாலாக்ஷி, பெங்களூரு.

வாக்ய பஞ்சாங்க கணித முறைப்படி தங்கள் ஜாதகத்தை துல்லியமாகக் கணித்ததில் தற்காலம் 18.07.2020 வரை சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடைபெற்று  வருகிறது. வெளிநாட்டு உத்யோகம் எப்பொழுது கிடைக்கும் என்று வினா எழுப்பியுள்ளீர்கள். தற்போதைய கிரஹ சூழ்நிலையில் தங்களது ஜாதகத்தைப் பொறுத்த  வரை பொருள் விரயமாகின்ற காலமாக உள்ளது. வெளிநாட்டிற்குச் சென்றாலும், உள்நாட்டில் இருந்தாலும் விரய காலமே தவிர பொருள் வரவிற்கான நேரத்தை  உணர்த்தவில்லை. எங்கிருந்தாலும் ஒரே சூழலே நிலவுவதால் உள்நாட்டிலேயே பணி செய்து வாருங்கள். வீணான அலைச்சல் வேண்டாம். நிச்சயமாக நீங்கள்  விரும்பியவருடன் உங்களது திருமணம் நடைபெறும். உங்களது ஜாதகத்தில் திருமணத்தைக் குறிக்கும் ஏழாம் இடத்திற்கு அதிபதியாகிய குரு பகவான்  லக்னத்திலேயே நிற்பதால் நல்ல மனிதர் ஒருவரை திருமணம் செய்து கொள்வீர்கள்.

தங்களது வயதினைக் கருத்தில் கொண்டு உடனடியாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஆகின்ற விரயத்தினை சுப விரயமாக ஆக்கிக் கொள்வது நல்லது.  உங்களது எண்ணங்களுக்கும் திட்டங்களுக்கும் உங்களது வருங்காலக் கணவர் உறுதுணையாக இருப்பார். புத்ர ஸ்தானாதிபதி சனி எட்டாம் இடத்தில் இடம்  பெற்றிருப்பதால் புத்ர பாக்யம் இல்லை என்று உங்கள் ஜோதிடர் கூறியிருக்கிறார். குரு பகவானின் பார்வை இருப்பதால் நிச்சயமாக புத்ர பிராப்தி உண்டாகும்.  சற்று தாமதமாகும், அவ்வளவு தான். ஆகவே, உடனடியாக திருமணம் செய்து கொள்ளுங்கள். மங்களம் உண்டாகும். நீங்கள் கடனாகக் கொடுத்த தொகை யாவும்  முழுமையாக 2020ம் ஆண்டில் வசூலாகிவிடும். இனி வரும் காலங்களில் யாருக்கும் கடன் தராதீர்கள். கொடுக்கல் வாங்கலில் தனித்துச் செயல்படுவது  உங்களுக்கு நன்மையைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். விரும்பிய மணவாழ்வு கிடைக்க வாழ்த்துக்கள்.
 
திருமணம் ஆன நாள் முதலாக இன்னும் சொந்தவீடு பாக்கியம் அமையவில்லை. எனது கணவரின் ஜென்ம நட்சத்திரம் எது என்பதிலும் குழப்பம் உள்ளது.  எனது மகள் ஐ.டி.துறையில் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் செல்கிறாள். சொந்தவீடு பாக்கியம் கிடைக்குமா? எங்கள் குறைகள் தீருமா? சித்ரா,  துரைப்பாக்கம்.

தங்களுடைய ஜாதகத்தை வாக்ய பஞ்சாங்க முறையில் ஆய்வு செய்ததில் தற்காலம் 24.10.2019 வரை ராகு தசையில் சுக்கிர புக்தி நடைபெறுகிறது.  வாழ்க்கையில் சற்றே சிரமப்பட்டாலும் உங்களுக்கு சொந்த வீடு வாங்கும் அம்சம் நிச்சயமாக நன்றாக உள்ளது. தற்போது நடந்து கொண்டிருக்கும் ராகு தசையின்  காலத்திலேயே உங்களுக்கு சொந்த வீடு வந்து சேரும். 03.06.2021 வரை அதற்கான நேரம் இருப்பதால் கவலை வேண்டாம். நிச்சயமாக சொந்த வீடு  வாங்குவீர்கள். உங்களுடைய கணவரின் ஜாதகத்தை ஆராய்ந்ததில் அவருடைய ஜென்ம நட்சத்திரம் விசாகம் அல்ல, சுவாதி என்பது தெளிவாகிறது. சுவாதி  நட்சத்திரம் நான்காம் பாதம், துலாம் ராசியில் பிறந்திருக்கும் உங்கள் கணவரது ஜாதகத்தில் தற்போது 28.11.2019 வரை புதன் தசையில் குரு புக்தி  நடைபெறுகிறது.

தசாநாதன் புதன், புக்தி நாதன் குரு ஆகிய இருவருமே எட்டாம் இடமாகிய விரய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் தற்போது பணக்கஷ்டம் வருவது இயற்கையே.  அதைத் தடுக்க முடியாது. மாறாக இந்த ஜாதகர் தனது மனைவியின் பெயரில் சேமிப்பில் ஈடுபட்டு வந்தாரேயாகில் வீண்விரயத்தினை தடுக்கலாம். தங்கள்  பெண்ணின் ஜாதகத்தை ஆய்வு செய்ததில் அவரது ஜீவன ஸ்தானம் மிக நன்றாக உள்ளது. நல்ல சம்பாத்தியத்தை உடைய ஜாதகமாக விளங்குகிறது. பத்தாம்  இடமாகிய ஜீவன ஸ்தானாதிபதி 11ம் இடமாகிய லாப ஸ்தானத்தில் நிற்பதாலும், சுக்கிர பகவானின் அம்சத்தில் நிற்பதாலும் ஐ.டி. துறையிலேயே மிக நன்றாக  சம்பாதிக்கும் யோகம் உள்ளது. கவலை வேண்டாம். வளமான எதிர்காலம் தங்கள் மகளுக்கு உண்டு. வெள்ளிக்கிழமை தோறும் வீட்டினில் ஐந்துமுக  குத்துவிளக்கினை ஏற்றி வைத்து மகாலக்ஷ்மியின் திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். மகாலக்ஷ்மியின் திருவருளால் வாழ்வில்  சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

சுபஸ்ரீ சங்கரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்