SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெஞ்சு முழுவதும் நஞ்சு

2019-04-01@ 16:27:48

‘‘இயேசு போதித்துக்கொண்டிருந்தபோது பன்னிரு சீடருள் ஒருவனாகிய யூதாஸ் அங்கு வந்தான். அவனோடு குருக்களும், மக்களின் மூப்பர்களும் அனுப்பிய  பெருங்கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக் கொடுக்க இருந்தவன், ‘‘நான்  ஒருவரை முத்தமிடுவேன், அவர்தாம் இயேசு. அவரைப்  பிடித்துக் கொள்ளுங்கள்’’ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லி இருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, ‘ரபீ! வாழ்க’ எனக்கூறிக்கொண்டே  அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், ‘தோழா’ எதற்காக வந்தாய்? என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி அவரைப் பிடித்துக் கைது  செய்தனர்.

உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவி தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.  அப்பொழுது இயேசு அவரிடம், ‘‘உனது வாளை அதன் உறையில் திரும்பப்போடு. ஏனெனில் வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.’’ நான்  என் தந்தையின் துணையை வேண்ட  முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப்பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை  எனக்கு அனுப்பி வைப்பாரே, அப்படியானால் இவ்வாறு நிகழ வேண்டுமென்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? என்றார். அவ்வேளையில்  இயேசு  மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ‘‘கள்வனைப் பிடிக்க வருவதைப்போல் வாள்களோடும், தடிகளோடும் என்னைக் கைது செய்ய இறைவாக்கினர்  எழுதியவை  நிறைவேறவே அனைத்தும் நிகழ்கின்றன என்றார்.

அப்பொழுது சீடர்கள் எல்லோரும் அவரை விட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.’’  (மத்தேயு 26: 4756) ஆயிரம் குற்றவாளிகள்கூட விடுவிக்கப்படலாம். ஆனால் ஒரு  நிரபராதிகூட தண்டனை பெறக்கூடாது என்ற வார்த்தைகள் நீதியின் மேன்மையை வெளிப்படுத்துகின்றது. பணம், அதிகாரம், சமுதாயத்தில் தங்களின் செல்வாக்கு  மற்றும் சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி எத்தனையோ பேர் சுதந்திரமாக நீதிமான்களைப்போல, தவறே செய்யாத உத்தமரைப்போல உலாவரும்   காட்சிகள், நம்மில் அறச்சினத்தைக் கிளர்ந்தெழச் செய்கின்றன. நெஞ்சிலே நஞ்சை வைத்து, நாவிலே அன்பை வைத்து நல்லவர்போல் நடிக்கும்  நயவஞ்சகர்கள்  பெருகி வரும் காலம் இது. ஒவ்வொரு மனிதரையும் மூன்று விதமான சக்திகள் ஆட்டுவிக்கின்றன. ஒன்று தனது சொந்த விருப்பு, வெறுப்பு என்ற சக்தி.  இரண்டாவது, மற்றவர்களின் எதிர்பார்ப்பு என்ற சக்தி. மூன்றாவது இறைவனின் எண்ணம், விருப்பம் என்ற சக்தி.

இதில் முதல் இரண்டு சக்திகளால் ஆட்டு விக்கப்படுகிறவர்கள் இறுதியில் அல்லல்பட்டு புலம்புகின்றனர். நமது வாழ்வில் இறைவனின் திட்டத்தை, திருவுளத்தை  உய்த்துணர்ந்து, அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் பாறை மீது வீடு கட்டியவர்களைப் போல் நமது வாழ்வு பலமானதாக அமையும். நாம் யாருடைய  விருப்பத்திற்கும், எதிர்பார்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்? நமது பாவ நெஞ்சம் விரியன் பாம்பின் நஞ்சு போன்றது. பாம்பாட்டியின் குரலை அது  கேட்க விரும்புவதில்லை. திறமையுடன் அவர் மகுடி ஊதினாலும் அதன் செவியில் விழுவதில்லை. எனவே, நம்முடைய பாவ நெஞ்சை இறை வார்த்தை என்ற  இருபக்கமும் வெட்டக்கூடிய  எந்த வாளிலும் கூர்மையான வாள் கொண்டுதான் மாற்ற முடியும். ஏனென்றால், கடவுளுடைய வார்த்தை வல்லமையுள்ளது ஆகும்.  இயேசு தன் பொது வாழ்வின் தொடக்கத்தில் இதைத்தான் ‘‘காலம் நிறைவேறிற்று. கடவுளின் அரசு நெருங்கி விட்டது. மனந்திருந்தி இந்தச் செய்தியை  நம்புவீர்’’ என்றார்.

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்