SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன்

2019-03-26@ 15:58:56

‘‘தந்தையே நேரம் வந்துவிட்டது. உம்மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும். ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள்  அனைவருக்கும் அவர் நிலை வாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர் மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர். உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர்  அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலை வாழ்வு. நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை  உலகில் மாட்சிப்படுத்தினேன். தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத்  தந்தருளும். நீர் இவ்வுலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் உமது பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த  அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்தார்கள். நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை  என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும். ஏனெனில் நீர் என்னிடம்  சொன்னவற்றையே நான் அவர்களிடமும் சொன்னேன்.

அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துகொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும்  நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல. மாறாக, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு  உரியவர்கள். என்னுடையதெல்லாம் உம்முடையதே. உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் நான் மாட்சி பெற்றிருக்கிறேன். இனி நான் உலகில்  இருக்கப் போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் வருகிறேன். தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய்  இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்து வந்தேன். நன்கு பாதுகாத்தேன். அவர்களுள் எவரும் அழிவுறவில்லை. மறை  நூலில் எழுதியுள்ளது நிறைவேறும் வண்ணம் அழிவுக்குரியவன் மட்டுமே அழிவுற்றான். இப்போதும் உம்மிடம் வருகிறேன்.

என் மகிழ்ச்சி அவர்களுள் நிறைவாக இருக்கும்படி நான் உலகில் இருக்கும்போதே இதைச் சொல்கிறேன். உம் வார்த்தையை நான் அவர்களுக்கு அறிவித்தேன்.  நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. ஆதலால் உலகம் அவர்களை வெறுக்கிறது. அவர்களை உலகிலிருந்து  எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை. தீயோரிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன். நான் உலகைச் சார்ந்தவனாய்  இல்லாததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. உண்மையினால் அவர்களை அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. நீர் என்னை  உலகிற்கு அனுப்பினதுபோல் நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன். அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே  உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்.’’ (யோவான் 17: 119)

தவக்காலத்தில் ஒவ்வொருவருக்கும் இயேசுவின் அனுபவம் தேவை. அடங்காத இன்ப நாட்டமும், தவறான பொருள் தேடலும், பசித்தவருக்கும், பணக்காரருக்கும்  இடைவெளியைக் குறைக்காமல் மிகுதியாக்குகின்றன. மறைவான வாக்குறுதி தந்து மனச்சான்றை மழுங்கடித்து, மக்களை, ஏமாற்றிப்  பணபலம், அடியாள் பலம்,  அதிகார பலம் இவற்றைக் கொண்டு நாட்களை நகர்த்துகின்றோமா? ‘நான்’ என்ற நிலையிலிருந்து விலகு. ‘நாம்’ என்ற பொதுவுடைமை மனோபாவத்தை  இழக்கின்றோமோ? சிந்திப்போம்! ஒரு மனிதன் காலம் காலமாக ஒரு பாவத்தையே நினைத்து அதில் ஈடுபட்டு வாழ்வானானால் நாளடைவில் அந்தப் பாவம்  அவனோடு ஒன்றாகக் கலந்துவிடுகிறது. அதனால் அவன் தன் ஆளுமைத்தன்மையை இழந்து விடுவதாலும், பாவத்தின் தன்மை தலை தூக்கி வலுப்பெறுவதாலும்  அவர் நன்மை செய்ய நினைத்தாலும், நேர்மையாக இருக்க முயன்றாலும் முடியாமல் போகிறது.

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்