SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிடந்தவாறு எழுந்திருந்து பேசுவாழி கேசனே!

2019-03-22@ 17:30:08

திருக்கல்யாண உற்சவம் - 23-03-2019

இறைவனை நாம் வணங்கும் போதெல்லாம் இறைவியோடு சேர்த்தே வணங்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. என்ன காரணம்? நாம் இறைவனின் அருள்வேண்டி, அவர் முன்னே சென்று நிற்கும்போது, இதுவரை அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பாவங்களைக் கண்டு இறைவனுக்கு நம் மேல் கோபம் வர வாய்ப்பு உண்டு. அந்நேரத்தில் அருகில் இருக்கும் இறைவி, இறைவனின் கோபத்தைத் தணித்து, அவர் நமக்கு அருள்புரியும்படி நமக்காகப் பரிந்துரை செய்கிறாள். நெருப்பு போல் இறைவனுக்குக் கோபம் வருகையில், தண்ணீரைப் போல் அவனைக் குளிர்விக்கிறாள் இறைவி. அதனால் தான் பார்வதி-பரமசிவன், வள்ளி-தெய்வானை-முருகன், சரஸ்வதி-பிரம்மா என்று தம்பதிகளாகவே வணங்கும் வழக்கம் உள்ளது. அந்த வகையில், ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், மகாலட்சுமியோடு கூடியிருக்கும் திருமாலை வணங்க வேண்டும் என்று பெரியோர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அவ்வாறு பிராட்டியோடு இணைத்துப் பெருமாளை வழிபட வழிவகுக்கும் உற்சவம்தான் திருக்கல்யாண உற்சவமாகும்.

பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுக்குப் பரீட்சை வைக்க நினைத்த பிருகு முனிவர், பாற்கடலுக்குச் சென்று திருமாலின் மார்பில் உதைத்தார். அப்போது கூடத் திருமால் கோபம் கொள்ளாமல் பொறுமை காத்தபடியால், திருமாலுக்கே பொறுமை அதிகம் என்று தீர்ப்பளித்தார் பிருகு. ஆனால், இவ்வாறு திருமாலின் திருமார்பில் உதைத்த பிருகு முனிவர், தன் தவறுக்கு வருந்தி, அதற்குப் பிராயச்சித்தமாக, மகாலட்சுமியைத் தனக்கு மகளாக ஈன்றெடுத்து, அவளைத் திருமாலுக்கு மணம் முடித்துக் கொடுக்க விழைந்தார். அதனால் கும்பகோணத்தில் ஹேமரிஷி என்ற பெயருடன் வந்து பிறந்தார், பிருகு. குடந்தையில் உள்ள பொற்றாமரைக் குளத்தின் அருகில் மகாலட்சுமியைக் குறித்துத் தவம் புரிந்தார் ஹேமரிஷி. அவர் மேல் கருணை கொண்ட மகாலட்சுமி, பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில், பொற்றாமரைக் குளத்தில் ஓர் தங்கத் தாமரையில் தோன்றி பிருகு முனிவருக்குக் காட்சி அளித்தாள். அழகிய கொடி போல் அவள் திகழ்ந்தமையால், ‘கோமளவல்லி’ என்று அவளுக்குப் பெயர்சூட்டினார் ஹேமரிஷி. ‘கோமளம்’ என்றால் அழகிய என்று பொருள், ‘வல்லி’ என்றால் கொடி என்று பொருள்.

இவ்வாறு தனக்கு மகளாகத் தோன்றிய கோமளவல்லியைத் திருமாலுக்கு மணம் முடித்து வைக்க விழைந்தார் ஹேமரிஷி. அவரது விருப்பத்தைப் பூர்த்தி செய்ய எண்ணிய திருமால், வைகுண்டத்திலிருந்து தேரில் புறப்பட்டார். தனது தேரில் யானைகளையும் குதிரைகளையும் பூட்டியிருந்தார் திருமால். ஏனெனில், வேதத்தில் ‘சாகை’ என்னும் பகுதியை ஓதுகையில், அந்த ஒலி யானையின் நடையைப் போல் இருக்கும். ‘சம்ஹிதை’ என்னும் பகுதியை ஓதுகையில், அந்த ஒலி குதிரையின் ஓட்டத்தைப் போல இருக்கும். சாகை, சம்ஹிதை இரண்டும் அடங்கிய வேதமே தனக்கு வாகனம் என்று உணர்த்தும் பொருட்டு, யானை, குதிரை பூட்டிய தேரில், ‘சார்ங்கபாணி’ என்ற திருநாமத்துடன் கும்பகோணத்துக்கு வந்தார் திருமால். பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் கோமளவல்லியை மணந்து கொண்டார். இன்றும் சார்ங்கபாணிப் பெருமாளின் கருவறை, யானை, குதிரை பூட்டிய தேர்வடிவில் இருப்பதைக் காணலாம். அது பெருமாளின் கல் தேர். சித்திரை மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சார்ங்கபாணிப் பெருமாள் மரத்தால் ஆன சித்திரைத் தேரில் வீதியுலா வருவது வழக்கம்.

அது மரத்தேர். திருமங்கையாழ்வார் தேர் போன்ற அமைப்பில் சொற்களை வடித்து, திருவெழுகூற்றிருக்கை என்னும் பிரபந்தம் பாடி, சார்ங்கபாணிப் பெருமாளைத் துதி செய்தார். அது சொல் தேர்.எனவே கல் தேர், மரத்தேர், சொல் தேர் என மூவகைத் தேர்களை உடைய பெருமாள் என்று சார்ங்கபாணிப் பெருமாள் போற்றப்படுகிறார். இவ்வாறு திருமால் கும்பகோணத்தில் தோன்றி, கோமளவல்லியை மணந்து கொண்ட காட்சியைக் காலத்தால் பிற்பட்டவர்களாகிய நாம், இன்றும் கண்டுகளிக்க ஏதுவாக, ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று, கோமளவல்லித்தாயார் சார்ங்கபாணிப் பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. திருக்கல்யாண உற்சவத்துக்கு முன்பாக, கோமளவல்லித் தாயார் பொற்றாமரைக் குளத்தில் அவதரித்ததைக் கொண்டாடும் பங்குனி பிரம்மோற்சவம் ஒன்பது நாட்களுக்கு நடைபெறுகிறது. தாயாரின் அவதார தினமான பங்குனி உத்திரத்துக்கு ஒன்பது நாட்கள் முன்னர் இந்த உற்சவம் தொடங்குகிறது. “படிதாண்டாப் பத்தினி” என்று பெயர் பெற்ற கோமளவல்லித் தாயார், எந்த உற்சவத்துக்கும் கோயிலுக்கு வெளியே செல்வதில்லை.

அதனால் ஒன்பது நாட்களும் கோயில் பிராகாரத்துக்குள்ளேயே தாயாரின் புறப்பாடுகள் நடைபெறுகின்றன. இந்த வருடம் மார்ச் மாதம் 13-ம் தேதி ஒன்பது நாட்களுக்கு இவ்வுற்சவம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் பங்குனி உத்திரத்தன்று, மார்ச் 21-ம் தேதி, வெள்ளித் தேரில் கோயில் பிராகாரத்துக்குள் தாயார் வலம் வருவார். பங்குனி உத்திரத்துக்கு மறுநாள், சப்தாவரணத்தன்று பெருமாள், தாயார் இருவரின் பாதுகைகளுக்கும் திருமஞ்சனம் நடைபெற்று, இருவரும் கோயிலுக்குள் புறப்பாடு கண்டருள்வார்கள். அதற்கு அடுத்த நாள், பங்குனி மாதம் சித்திரை நட்சத்திரத்தன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இந்த வருடம் மார்ச் மாதம் 23-ம் தேதி இவ்வுற்சவம் நடைபெற உள்ளது. அந்நாளில் மாலை ஏழு மணியளவில், பெருமாளும் தாயாரும் தங்கள் சந்நதியில் இருந்து துவஜஸ்தம்பத்துக்கு அருகே எழுந்தருள்வார்கள். அங்கே மாலை மாற்றுதல் நடைபெறும். பெருமாள் தோளில் இருந்து தாயார் தோளுக்கும், தாயார் தோளில் இருந்து பெருமாள் தோளுக்கும் மூன்று முறை மாலை மாற்றப்படும். அடுத்து வரப்பிரதானம். பெருமாள், தாயார் இருவருக்கும் மஞ்சள் தேங்காய் சமர்ப்பிக்கப் பட்டு, இருவரும் திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்திலுள்ள மங்கள ஊஞ்சலில் எழுந்தருள்வார்கள்.

ஏழுவிதமான வேத மந்திரங்கள், ஏழு விதமான பழங்கள், ஏழு விதமான சங்கீதப் பாடல்கள் சமர்ப்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து பாலால் பெருமாள், தாயாரின் திருவடிகளை அலம்பி, அதைப் பட்டால் துடைத்து, மங்களப் பொருட்களால் பூஜை செய்யப்படும். அதன்பின் திவ்ய தம்பதிகள் மணவறையில் எழுந்தருள்வார்கள். அங்கே இருவரின் கரங்களிலும் கங்கண தாரணம் (காப்பு கட்டுதல்) செய்யப்படும். அடுத்து பாஞ்சராத்திர ஆகம முறைப்படி ஹோமம் செய்யப்பட்டு, திருக்கரம் பற்றுதலும், திருமாங்கல்ய தாரணமும் நடைபெறும். அதைத் தொடர்ந்து புருஷ சூக்த ஹோமம், லாஜ ஹோமம் (பொறியிடுதல்), சாந்தி ஹோமம் ஆகியவை நடைபெற்று, பூர்ணாஹூதியும் நடைபெறும்.ஆண்டாள் நாச்சியார் அருளிய “வாரணம் ஆயிரம்” பாசுரங்களைப் பாடியபடி நலங்கு வைபவம் நடைபெறும். மஹாநிவேதனம், கற்பூர ஆரத்தியோடு திருக்கல்யாணம் நிறைவடையும். திருக்கல்யாணத்துக்கு அடுத்த மூன்று நாட்களும் திருக்கல்யாண விடையாற்றி உற்சவம் நடைபெறும். அம்மூன்று நாட்களும் மாலையில் புஷ்பப் பல்லக்கில் பெருமாளும் தாயாரும் சேர்த்தியில் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்பாலிப்பார்கள்.

சார்ங்கபாணிப் பெருமாள் பரமாத்மா, கோமளவல்லி ஜீவாத்மா. அவர்கள் இருவரையும் ஹேமரிஷி இணைத்து வைத்ததைப் போல, ஹேமரிஷி ஸ்தானத்தில் இருக்கும் ஆச்சாரியன், ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைத்து வைக்கிறார். எட்டு இழையும், மூன்று சரடும் கொண்ட அஷ்டாக்ஷரம் (எட்டு எழுத்துக்களைக் கொண்ட நாராயண மந்திரம்) என்னும் திருமாங்கல்யத்தை ஜீவாத்மாவின் கழுத்தில் பரமாத்மா இடுகிறார். எட்டு இழை என்பது அஷ்டாக்ஷரத்தில் உள்ள எட்டு எழுத்துக்களைக் குறிக்கிறது. மூன்று சரடு என்பது அந்த மந்திரத்திலுள்ள மூன்று வார்த்தைகளைக் குறிக்கிறது. அந்த மந்திரத்தின் மூலமாகத் தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவை ஜீவாத்மா உணர்ந்து, இறைவனின் திருவடிகளை அடைந்து தொண்டு செய்கிறான். வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி மாலை கும்பகோணம் சார்ங்கபாணி கோயிலில் நடைபெறும் கோமளவல்லித் தாயார்-சார்ங்கபாணிப் பெருமாள் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிக்கும் அன்பர்கள் அனைவருக்கும் பொருந்திய தேசும், பொறையும், திறலும், புகழும், நல்ல திருந்திய வாழ்வும், செல்வமும் சேரும் என்பதில் ஐயமில்லை.

உ.வே. வெங்கடேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2020

  29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 28-05-2020

  28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 26-05-2020

  26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 25-05-2020

  25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-05-2020

  24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்