SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அச்சுதன் மருகக்குமரேசா

2019-03-21@ 17:35:16

திருவதிகை விநாயகரை வணங்கி பலிபீடம், கொடி மரம், நந்தி ஆகியவற்றை தரிசிக்கிறோம். அங்கு கட்டப்பட்டுள்ள கொடி மரத்தின் இப்புறம் வாராஹி அம்மன் சிலை உள்ளது. 2012 ஆம் ஆண்டு கோயில் கும்பாபிஷேகத்தின் போது இரண்டாம் கோபுர வாயிலுக்கும் கொடி மரத்திற்கும் இடையே மின்விளக்குக் கம்பம் அமைக்கப் பள்ளம் தோண்டிய போது இரண்டடி ஆழத்தில், ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த வாராஹி சிற்பம் கிடைத்ததாக மலேசிய எழுத்தாளர் அன்பு ஜெயா குறிப்பிட்டுள்ளார். எனவே 1400 ஆண்டுகட்கு முன்னரே இங்கு சப்தமாதர்கள் வழிபாடு இருந்ததை அறிய முடிகிறது. ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவியான வாராஹி காட்டுப் பன்றியின் முகம், அழகிய இளம் பெண்ணின் உடல் என்று கொண்ட தோற்றத்தோடு விளங்குகிறாள்.

‘சித்ர மேரு பர்வதம்’ எனப்படும் கருவறையில் வீரட்டேசர் லிங்க வடிவிலுள்ளார். கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தில் தெற்கு நோக்கியவாறு இறைவனின் தனிச்சந்நதி ஒன்று உள்ளது; இங்கு திரிபுராந்தகர் எனும் பெயரில் மேற்கரங்களில் மானும் மழுவும், முன் கரங்களில் வில்லும் அம்பும் ஏந்திய உருவத்தில் அம்பிகையுடன் சிவன் காட்சி தருகிறார். இறைவி திரிபுரவல்லி, திரிபுரசுந்தரி என்றும் குறிப்பிடப்படுகிறாள். இம் மூர்த்திகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். இங்கு நாம் திரிபுரசம்ஹார நிகழ்ச்சி பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம்.

‘‘திரிபுரமதனை ஒரு நொடியதனின் எரி செய்தருளிய சிவன் வாழ்வே’’
‘‘செருத்தெறுத்தெதிர்த்த முப்புரத்துரத்தரக்கரைச் சிரித்தெரித்த நித்தர்’’

திருப்புகழ் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன் மாலி எனும் மூன்று அரக்கர்கள் பெரும் சிவபக்தர்களாக விளங்கினர். பிரம்மனிடம் வரம் பெற்று பொன், வெள்ளி மற்றும் இரும்பினாலான கோட்டைகளில் வசிக்கலானார்கள். சாகா வரம் வேண்டுமென்று பிரம்மனிடம் கேட்டபோது அவன் மறுத்து விட்டான். எனவே அதைச் சற்று மாற்றி ‘‘எங்கள் கோட்டைகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்று சேரவேண்டும்; அச்சமயம், முப்புரங்களையும் ஒரே அம்பினால் அழிக்கக்கூடிய வீரன் கையால் மட்டுமே நாங்கள் சாகும்படியான வரம் தர வேண்டும்.’’என்று கேட்டனர். பிரம்மனும் அவ்வரத்தை அளித்து விட்டான். ஆனால் தங்கள் இயற்கையான அசுரகுணம் ஓங்கியதால் அசுரர்கள் பல இடங்களுக்கும் பறந்து சென்று மனிதர்களையும், தேவர்களையும் துன்புறுத்தினர்.

தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தனர். இறைவனருளால் ஒரு தேர் உருவானது. வேதங்களே குதிரைகளாக, சூரிய சந்திரர் தேர்ச் சக்கரங்களாக, மேருமலை வில்லாக, வாசுகி நாணாக, திருமால் அம்பாக, பிரம்மன் தேரோட்டும் சாரதியாக அமரத் தேர் புறப்பட்டது. திருவதிகையின் அருகில் முப்புரங்களும் ஒன்று சேர்ந்த நேரத்தில் சிவன் தன் தேரில் ஏறினார். தேவர்கள் அனைவரும் தாங்களே முப்புரங்களை எரிக்கக் காரணமாக இருப்பவர்கள் என்று இறுமாந்தபோது தேரைப் பெருமான் காலால் சற்று அழுத்த அச்சு முறிந்தது. திருமால் ரிஷபமாகத் தோன்றி சிவனையும் உமையையும் தேரையும் தாங்கினார். சிவபெருமான் புன்னகைத்தார். அடுத்த கணம் தேவர்கள் உதவி இல்லாமலே முப்புரங்கள் எரிந்து சாம்பலாயின. அருணகிரியார் இந்நிகழ்ச்சியைப் பின் வருமாறு பாடுகிறார்.

‘‘உருவு கரிய தொர் கணை கொடு பணிபதி
இருகுதையு முடி தமனிய தநுவுடன்
உருளை இரு சுடர் வலவனும் அயனென மறைபூணும்
உறுதி படு சுரரதமிசை அடியிட
நெறு நெறென முறிதலு நிலை பெறுதவம்
உடைய ஒருவரும் இருவரும் அருள் பெற ஒரு கோடி    
தெருவு நகரியு நிசிசரர் முடியொடு
சடசடவென வெடிபடுவன புகைவன
திகுதிகென எரி வன அனல் நகைகொடு முனிவார்தம் சிறுவ!’’
அருணைத் திருப்புகழ்

பொருள்: உருவம் கரிய ஒப்பற்ற திருமால் அம்பாகவும், சர்ப்ப ராஜனாகிய வாசுகி வில்லின் முனைகளில் கட்டப் பெற்ற கயிறாகவும், பொன்னிற மேரு மலை வில்லாகவும், சூரிய சந்திரர்கள் தேரின் இரு சக்கரங்களாகவும், பிரம்மன் தேர் சாரதியாகவும், நான்கு வேதங்களும் குதிரைகளாகவும் பூட்டப்பட்டிருந்த, வலிமை மிக்க, தேவர்களே அமைத்த ரதத்தின் மீது மஹாதேவர் கால் வைத்தவுடன் அத் தேர் நெறு நெறு என அச்சு முறிய, அசையாத சிவ பக்தி உடைய அசுர வேந்தர்கள் மூவர் மட்டும் உயிர் பிழைத்தனர். (ஒருவனுக்குக் கயிலையில் குடமுழவு வாசிக்கும் பதவியையும், மற்ற இருவர்க்கு வாயில் காப்பாளர் பதவிகளையும் பரமன் கொடுத்து அருளியதை நயமாக மூவர் எனாமல் ‘ஒருவர் இருவர்’ என்று பாடியிருப்பது கவனிக்க வேண்டிய தொன்றாகும்). எண்ணற்ற தெருக்களும் அந்த நகரங்களும் அசுரத் தலைகளும் சடசட என வெடிக்கவும் ஒரே புகைமயமாய் ஆகியும் எங்கும் ஜ்வாலை வீசி தீ எழவும் அனல் வீசும் புன்னகையால் கோபித்த சிவ பெருமானின் புதல்வோனே!

‘‘மா நாக நாண் வலுப்புறத் துவக்கி ஓர்
மாமேரு பூதரத் தனுப் பிடித்தொரு
மாலாய வாளியைத் தொடுத்து, அரக்கரில் ஒரு மூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே முதற்சிரித்த வித்தகர் வாழ்வே!’’

பொதுத் திருப்புகழ் என்றும் பாடுகிறார். முப்புரங்களை, இறைவன் சிரித்தெரித்ததைக் கதிர்காமத் திருப்புகழில் பின்வருமாறு பாடுகிறார்.

‘‘புரத்தார், வரத்தார், சரச்சேகரத்தார்
 பொரத்தான் எதிர்த்தே வருபோது
 பொறுத்தார் பரித்தார், சிரித்தார், எரித்தார்
 பொரித்தார் நுதற் பார்வையிலே’’

என்பது அப்பாடல். திரிபுர சம்ஹாரத்தின் உட்பொருளைத் திருமூலர் அழகாக விளக்குகிறார்.

‘‘அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே! ’’
திரிபுர சம்ஹார மூர்த்தியையும்,

அம்மையையும் வணங்கி மீண்டும் மூலவரைத் தரிசிக்கச் செல்கிறோம். முன்புறம் இரண்டு நந்தி உருவங்கள் உள்ளன. மூலவரின் பின்புறம் சுவரில் அம்மை அப்பனின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. பிராகார வலம் வரும்போது,  திருநாவுக்கரசர், அறுபத்து மூவர், சரக் கொன்றை மரத்தடியிலுள்ள சரக்கொன்றை நாதர், அப்பர் பெருமானின் தமக்கை திலகவதியார், விஷ்ணு துர்க்கை, கிராம தேவதை ஆகியோரை வணங்குகிறோம். நாவுக்கரசர் சூலை நோயால் அவதிப்பட்ட போது அவரது தமக்கையார் அவரை வீரட்டேசுவரர் திருச்சந்நதிக்கு அழைத்துச் சென்று

இறைவனைத் தொழச் செய்தார்.
‘‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத்துறை அம்மானே’’

என்று துவங்கி பதிகம் பாட, அவரைப் பிடித்த சூலை நோய் முற்றிலுமாக நீங்கியது. தெற்குப் பிராகாரத்தில் பெரியநாயகி அம்மை சந்நதி, மூலவர் சந்நதிக்கு வலப்புறம் அமைந்துள்ளது. பலிபீடம், கொடி மரம், நந்தி இவற்றைக் கடந்து திரிபுரசுந்தரியைத் தரிசித்து வருகிறோம். வெளிப் பிராகாரத்தில் கணநாதர், தத்தாத்ரேயர், துர்வாசர், திருமூலர், அர்ஜூனன், கருடன், கபிலர், விஷ்ணு அனைவரையும் தரிசிக்கலாம். பிரம்மலிங்கம், ராமலிங்கம், வசிஷ்டலிங்கம், அகத்திய லிங்கம், வாமன லிங்கம், திரேதாயுத, துலாபர, கலியுக லிங்கங்கள் இவற்றையும் வணங்குகிறோம்.

 அறுமுகன் சந்நதியை அடைந்து தலத் திருப்புகழ்ப் பாக்களை நினைவு கூர்கிறோம்.
‘‘கருகு நிறத்தசுரன் முடித் தலை ஒநபத்தறமுடுகிக்கணை தொடும்
அச்சுதன் மருகக் குமரேசா
கயிலைமலைக் கிழவனிடக் குமரி விருப்பொ்டுகருதக்
கவி நிறையப் பெறும் வரிசைப் புலவோனே
திரள் கமுகிற்றலை இடறிப் பல
கதலிக் குலை சிதறிச் செறியும்
வயற் கதிரலையத் திரை மோதித் திமி திமெணப் பறையறைப்
பெருகுபுனல் கெடிலநதித் திருவதிகைப் பதி முருகப் பெருமாளே!
(மனக் கவலை ஒழித்தருள்வாயே)

கரிய நிறமுடைய அசுரனாகிய ராவணனது மகுடமணிந்த தலை ஒரு பத்தும் அற்று விழ, வேகமாகச் சென்று அம்பைச் செலுத்திய திருமால் மருகா! குமரேசா! கயிலைமலைப் பிரானின் இடப்பாகத்திலுள்ள பார்வதிதேவி அன்புடன் பால் ஊட்ட ஏராளமான கவிகள் (தேவாரப் பாக்கள்) பாடும் திறன் பெற்ற சம்பந்தக் கவியரசே! திரண்ட பாக்கு மரத்தின் உச்சியில் தாக்கியும், பல வாழை மரங்களிலிருந்து பழக்குலைகள் அறுந்து விழவும், செழிப்பான வயல்களில் நெற்கதிர்கள் சிதறவும், அலைகள் வீசி, ஆற்றில் வெள்ளம் வருவதை எச்சரிக்கும் பறைகள் முழங்க, வெள்ளம் பெருகிப் பாயும் கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகை எனும் தலத்தில் அமர்ந்திருக்கும் பெருமாளே! (ஆற்றில் வெள்ளம் வருவதை ஊராருக்கு உணர்த்த திமிதிமென்று பறை அடித்து அறிவிப்பது அக்காலத்திய வழக்கம்)
 மனக்கவலை ஒழித்தருளவும் பாடலில் வேண்டுகிறார். திருவதிகையில் அருணகிரியார் மற்றும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

‘‘படரும் மார்பினில் இருபது புயமதொ
டரிய மாமணி முடியொளிர் ஒருபது
படியிலே விழ ஒருகணை தொடுபவரிடமாராய்
 பரவையூடெரி  பகழியை விடுபவர்
பரவுவார் வினை கெட அருளுதவியெ
பரவு பால் கடல் அரவணை துயில்பவர் மருகோனே
அடரவே வரும் அசுரர்கள் குருதியை
அரகராவென அலகைகள் பலியுண
அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு மயில்வீரா
அமரராதியர் இடர்பட அடர்தரு
கொடிய தானவர் திரிபுரம் எரிசெய்த
அதிகை மாநகர் மருவிய சசிமகள் பெருமாளே!

பொருள்: ராவணனின் அகன்ற மார்பருகில் விளங்கும் இருபது புயங்களும், அருமையான சிறந்த ரத்னக் கிரீடங்கள் பிரகாசிக்கும் பத்து தலைகளும் பூமியில் அற்று விழ நிகரற்ற ராமபாணத்தைச் செலுத்தியவர்; வருணன் வராததால் சந்தர்ப்பத்தை ஆராய்ந்து அதற்குத் தக்கவாறு கடலின் மீது அக்னி அஸ்திரத்தை விட்டவர்; தன்னைத் துதிப்போரின் வினைத் துன்பங்கள் நீங்க அருள் செய்து விரிந்த பாற்கடலில் பாம்பணையில் துயில்பவர் ஆகிய திருமாலின் மருகனே! நெருங்கிப் போருக்கு வந்த அசுரர்களின் ரத்தத்தை அரோஹரா என்ற கோஷத்துடன் பேய்கள் குடிக்க, அலைகளால் சுழலும் சமுத்திரம் பேரொலி எழுப்பி எதிர் சண்டையிட்ட மயில் வீரனே! மண்ணோரும் விண்ணோரும் துன்பப்படும்படி மேலே விழுந்து கொடிய அரக்கர்கள் வாழ்ந்த  திரிபுரங்களை (சிவனார்) எரித்த தலமாகிய திருவதிகையில் வீற்றிருக்கும் தெய்வானை மணாளனே!”

இனிமேலாவது இருவினை எனும் இழிந்த குழியில் இறங்காமல், புகழ் விளங்க, தேவர்கள், முனிவர்கள், இந்திரன் ஆகியோரது துன்பம் ஒழிய அருளிய ஆண்டவனாகிய நீ, உனது பன்னிரு தோள்களைத் துதிக்க அருள் புரிவாயாக” என்றும் இப்பாடலில் இறைவனை இறைஞ்சுகிறார். (புய வகுப்பு என்ற தனி வகுப்பில் அருணகிரியார் முருகனின் புயங்களைப் பல்வாறாகத் துதித்துள்ளார்) நடராஜர் சபையிலுள்ள திருநாவுக்கரசர், வியாக்ரபாதர், பதஞ்சலி, திலகவதி அம்மையார் மற்றும் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி கஜலட்சுமி. துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரஹங்களை வணங்குகிறோம். வைகாசித் திருவிழாவின் ஒன்பதாம் நாள் நடக்கவிருக்கும் (நாங்கள் சென்ற மறுதினம்) தேரோட்டத்திற்காக ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடிப் பிரம்மாண்டமான கோயில் தேரை அலங்கரித்துக் கொண்டிருந்தது, கண்டு மனம் பெருமிதமுற்றது. நமக்குள் கிளைத் தெழும் மும்மலங்களையும் நீறாக்கிவிடுமாறு திரிபுராந்தகரை வேண்டிய வண்ணம் கோயிலை விட்டு வெளியே வருகிறோம்.

சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்