SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதியமான்கோட்டையின் அபூர்வம் : காசிக்கு இணையான காலபைரவர் கோயில்

2019-03-20@ 09:46:04

தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த வள்ளல் அதியமான் அரசாண்ட, தர்மபுரியின் அதியமான்கோட்டையில் இருக்கிறது தட்சிணகாசி என்று அழைக்கப்படும் காலபைரவர் கோயில். இங்கு காலபைரவர் கோயில் உருவானது ஆன்மீக வரலாற்றின் அளப்பரிய அம்சமாகவே நிகழ்ந்துள்ளது  என்று ஆய்வுகள் கூறுகிறது. அற்புத பண்புகள் கொண்ட வள்ளல் அதியமான் சிற்றரசர் என்பதால், பொருள் பலமும், படைபலமும், பகை மன்னர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு அவரிடம் இல்லை. இதனால் எப்போது பகைவர்கள் படையெடுத்து வருவார்களோ என்ற அச்சம் வள்ளல் அதியமானுக்கு நீடித்தது. நாளடைவில் அந்த அச்சமே அவரை மனநிம்மதி இல்லாமல் செய்தது.  

தனக்கு மனநிம்மதி கிடைக்கவும், பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்று ராஜகுருவையும் அமைச்சர்களையும் கலந்தாலோசித்தார். அப்போது படைபலத்தை மீறிய தெய்வ சக்தி துணை இருந்தால் நல்லது என்றும், அந்த தெய்வ சக்தி காவல் தெய்வமான காலபைரவர்தான் என்றும் தெளிவு பெற்றார். சிவாலயங்களில் ஈசானிய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் காலபைரவர்தான் தன்னையும் காப்பாற்றும் தெய்வம் என்று தெளிந்த மன்னர், காலபைரவருக்கு ஓர் ஆலயத்தை உருவாக்க விரும்பினார். இதற்காக தன் அமைச்சர்களில் சிலரை வீரர்களுடன் காசிக்கு அனுப்பி, காலபைரவர் சிலையை கொண்டு வர ஏற்பாடு செய்தார். விக்கிரகம் வருவதற்குள்ளாகவே, கோயில் கட்டும் திருப்பணியை தொடங்கிவிட்டார்.

கோயில் கட்டி முடிக்கவும், காலபைரவர் விக்கிரகம் வந்து சேரவும் சரியாக இருந்தது. தான் கட்டிய கோயிலில் காலபைரவரை பிரதிஷ்டை செய்தார். காலபைரவரின் கருவறை விதானத்தில் நவகிரகங்களின் திருவடிவங்களையும் வடித்தார். நவகிரகங்களின் ஆற்றலும் கோயிலில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், காலபைரவரை மட்டுமே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யக்கூடாது என்பதற்காகவும் தான் அதியமான் மன்னர் நவகிரகங்களை வடித்து வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. அதியமான் மன்னர் தனது நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பிரதிஷ்டை செய்த காலபைரவர் என்பதால், தன் திருக்கரத்தில் திரிசூலத்துடன் வாளும் கொண்டு காட்சி தருகிறார். ஆலயத்தில் அதியமான் மன்னரின் ஆட்சி மற்றும் மக்களின் வாழ்வியல் முறைகளைச் சித்தரிக்கும் அற்புத சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளது.

காசிக்கு அடுத்து தனிச்சன்னதியில் இருக்கும் காலபைரவர் தட்சிணகாசி காலபைரவர் என்று பிரசித்தி பெற்றுத் திகழ்கிறார். அதன் காரணமாகவே இந்த தலம் முக்தி க்ஷேத்திரம் என்றும் போற்றப்படுகிறது. இந்த கோயிலுக்கு கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து, காலபைரவரை வழிபட்டுச் செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை நடக்கிறது. மாதந்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி பூஜை, லட்சுமி பூஜை, அஷ்டமி  நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அன்று நள்ளிரவு 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெறுகிறது. கால பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவர் தேர்த் திருவிழா விமரிசையாக நடக்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்