SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எண்ணம் ஈடேறும்!

2019-03-19@ 17:01:27

15 வயதாகும் என் மகனுக்கு வயதுக்கேற்ற மூளை வளர்ச்சி இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைக்கிறான். பள்ளிக்கும் போவதில்லை. நான் கர்ப்பிணியாக இருந்தபோது வீட்டினில் புகுந்த நல்ல பாம்பினை பாம்பாட்டியின் உதவியுடன் அடித்து கொன்றுவிட்டேன். இந்த பாவத்தினால் தான் என் மகன் இப்படி இருக்கிறானா? உரிய பரிகாரம் சொல்லுங்கள். சசிகலா, வேலூர்.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசை துவங்கியுள்ளது. அவர் பிறந்ததில் இருந்து இத்தனை வருடங்களாக ராகு தசை நடந்து வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில் இருந்துதான் குரு தசை என்பது துவங்கியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அவரது நடத்தையில் நல்லதொரு மாற்றத்தினைக் காணத் துவங்கியிருப்பீர்கள். கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் பாம்பினை அடித்துக் கொன்ற நாள் தை வெள்ளி என்பதோடு அன்றைய தினம் பௌர்ணமி என்பதையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதோடு அடிபட்ட பாம்பு பூஜையறைக்கு நேராக வந்து தரையில் மூன்று முறை கொத்திவிட்டு இறந்ததாகவும் எழுதியுள்ளீர்கள்.

உங்கள் மகன் ஜாதகத்தில் ஜென்ம ராசியில் கேது இணைந்திருப்பது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சம்பவத்துடன் ஒத்துப்போகிறது. இத்தகைய கிரஹ அமைப்பினால் அவரது மன நிலை தெளிவாக இல்லை என்பதும் தெளிவாகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாளில் அரச மரத்தடியில் விநாயகருக்கு அருகில் இருக்கும் நாகருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள். தொடர்ந்து 16 வாரங்களுக்கு தவறாமல் செய்யுங்கள். அதன் பிறகு மாதந்தோறும் வருகின்ற பௌர்ணமி நாளில் மட்டும் செய்து வந்தால் போதுமானது. உங்கள் பிள்ளையின் 30வது வயது வரை இதனை அவசியம் அவர் கையாலேயே செய்யச் சொல்லுங்கள். தோஷம் நீங்கி உங்கள் மகன் நலமுடன் வாழ்வான்.

எனது மகன் +2வில் நல்ல மதிப்பெண் பெற்று சி.ஏ பயின்று வருகிறான். முதலாண்டு சிபிடி தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாததால் மன உளைச்சலில் உள்ளான். அவனது ஜாதகப்படி அவன் தேர்வு செய்த படிப்பில் ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் ஈடுபட்டும் தேர்ச்சி பெற முடியாததன் காரணம் என்ன? அவனுக்கு நல்வழி காட்டுங்கள். குமார், தர்மபுரி.

விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. சி.ஏ ஒன்று மட்டும் ஆடிட்டிங் துறை சார்ந்த படிப்பு ஆகிவிடாது. சி.ஏ தவிர இதே துறையில் மேலும் பல படிப்புகள் உள்ளன. கம்பெனி செக்ரட்டரிஷிப் முதலான தேர்வுகளை இவரால் எளிதாகக் கடக்க இயலும். விடா முயற்சியுடன் படித்து வரச் சொல்லுங்கள். 25.03.2019 முதல் தசாபுக்தி மாறுவதால் உங்கள் மகனுக்கு நல்ல நேரம் என்பது துவங்கிவிடுகிறது. தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் தேர்வெழுதச் சொல்லுங்கள்.

சுயமுயற்சியால் நிச்சயமாக முன்னேற்றம் காண்பார். அவரது ஜாதகத்தில் மூன்றாம் வீட்டில் சூரியன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரஹங்கள் இணைந்திருப்பது நல்ல எழுத்து வலிமையைக் காட்டுகிறது. அதோடு செவ்வாய் மற்றும் புதனின் இணைவும், ஜீவன ஸ்தானத்தின் மீதான இவர்களின் தீட்சண்யமும் இவருக்கு உயர்வான உத்யோக பலத்தினைத் தருகிறது. அவரது எதிர்காலம் குறித்து எந்தவிதமான கவலையும் வேண்டாம். தேர்ச்சி பெற்றதும் முடி காணிக்கை செலுத்துவதாக திருப்பதி ஏழுமலையானுக்கு பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். புதன்கிழமை தோறும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி ஹயக்ரீவரை வழிபட்டு வர எண்ணம் ஈடேறும்.

“விதீந்த்ர சிவ ஸம்ஸ்துத்ய: சாந்தித: க்ஷாந்திபாரக:
ச்ரோய: ப்ரத: ச்ருதிமய: ச்ரேயஸாம் பதிரீச்வர:”


பதினான்கு வருடங்களாக சிறையில் இருந்து வருகிறேன். மிகவும் துன்பமான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்போது விடுதலை கிடைக்கும்? எனது பிரச்னைகள் எப்போது தீரும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எனக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோரும் உயிருடன் இல்லை. யாரை வைத்து பரிகாரம் செய்தால் பலன் கிடைக்கும்? சுரேஷ்பாண்டி, கடலூர் மத்திய சிறை.

அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே குருவும், சனியும் இணைந்து இருவரும் வக்ரம் பெற்றிருக்கிறார்கள். இதுபோன்ற அமைப்பு குருசண்டாள யோகத்தினைத் தருகிறது. அதோடு ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், சுக்கிரனோடு நீசம் பெற்ற லக்னாதிபதி புதனும் இணைந்திருப்பதால் கூடா நட்பு கேடில் விளையும் என்ற கூற்றினை மெய்ப்பித்திருக்கிறது. தற்போது சந்திர தசை நடப்பதாலும், சந்திரன் கஷ்டத்தைத் தரும் எட்டாம் வீட்டில் கேதுவின் சாரத்தினைப் பெற்றிருப்பதாலும் தற்போதைய சூழலில் நீங்கள் விடுதலை ஆகி வெளியில் வருவது என்பது நற்பலனைத் தராது.

வெளியில் இருப்பதை விட உள்ளே இருப்பதே உங்கள் எதிரிகளிடம் இருந்து உங்களைக் காக்கும். தற்போது விடுதலை பெற்று வெளியில் வந்தாலும் கூட அநாவசியமான அவச்சொல்லுக்கும் பழிக்கும் ஆளாக நேரிடும். தற்போது நடந்து வரும் தசை முடியும்போது, அதாவது உங்களுடைய 42வது வயதில் விடுதலை பெற்று வெளியில் புது மனிதனாக வந்துவிடுவீர்கள். செவ்வாய் தசையின் காலத்தில் சுயதொழில் செய்து வாழ்வினில் முன்னேறுவீர்கள். ‘சரவணபவ’ எனும் ஆறெழுத்து மந்திரத்தை ஓய்வுநேரத்தில் மனதிற்குள் உச்சரித்து வாருங்கள். மனக்கவலை நீங்குவதோடு உங்கள் பிரச்னைகளும் தீர்வடையும்.

என் மகன் இறந்து 40 நாட்கள் கழித்து பேரன் பிறந்தார். எங்கள் குடும்பத்திற்கு ஒரே வாரிசு என் பேரன் மட்டுமே. தற்போது தன் தாயாரின் வீட்டில் வளர்ந்து வருகிறார். தாயும் சேயும் எங்களுடன் வந்து வாழவேண்டும் என்பதே எங்கள் ஆசை. ஒரே வாரிசு ஆன பேரன் எங்களோடு வந்திணைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? சுந்தரலிங்கம், திருநெல்வேலி.

குடும்பத்தின் ஒரே வாரிசு ஆன பேரன் மற்றொரு வீட்டில் வாழ்கிறாரே என்ற உங்களின் ஆதங்கமும், தாத்தாவிற்கு உரிய பாசமும் உங்கள் கடிதத்தில் வெளிப்படுகிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பேரனின் ஜாதகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வரை ராகு தசை நடந்து வந்துள்ளது. பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து குரு தசை துவங்கி உள்ளது. உங்கள் பேரனின் ஜாதகத்தில் குரு ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருப்பது நல்ல நிலையே ஆகும். மேலும் அவருடைய ஜாதகத்தில் தகப்பனார் வழி சொந்தத்தையும், பரம்பரையையும் குறிக்கும் ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்ற புதனுடன், பிதுர் காரகன் ஆகிய சூரியன் இணைந்திருப்பதும் அவருக்கு சாதகமான அம்சமே.

உங்கள் பேரன் நிச்சயமாக தனது தகப்பனார் வழியில் வரும் சொத்துக்களை அனுபவிப்பார். பாக்ய ஸ்தானமும், ஜீவன ஸ்தானமும் அவருக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. தற்போது நல்ல நேரம் என்பது துவங்கியுள்ளதால் நீங்களே நேரில் சென்று மருமகளை அழைத்து வர முயற்சியுங்கள். பேரன் உங்கள் வீட்டிற்கு வந்ததும் திருச்செந்தூர் தலத்திற்கு வந்து பேரனுக்கு முடி காணிக்கை செலுத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அன்றைய தினம் ஆலயத்தில் உங்களால் இயன்ற அன்னதானத்தினையும் செய்யுங்கள். குடும்ப வாரிசு உங்களோடு வந்து இணையும் நாள் நெருங்கி வந்துகொண்டிருக் கிறது. கவலை வேண்டாம்.

என் மகன் மற்றும் அவன் விரும்பும் பெண்ணின் ஜாதகங்களை அனுப்பியுள்ளேன். இங்கு ஜாதகம் பார்த்ததில் அவர்கள் இருவருக்கும் பொருத்தமில்லை என்று சொல்கிறார்கள். என்ன பரிகாரம் செய்தால் என் மகனின் திருமணத்தை அவன் விரும்பும் பெண்ணோடு நடத்த இயலும்? எப்போது திருமணத்தை நடத்தலாம்? ஒரு நல்ல முடிவினைச் சொல்லுங்கள். ஆறுமுகம், பெங்களூரு.

பெற்ற மகனின் விருப்பத்தினை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற உங்களது பாச உணர்ச்சியினை கடிதத்தில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் அந்தப் பெண்ணின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனும் அவர் விரும்பும் பெண்ணும் ஒரே ராசி என்பதாலும், இருவருடைய ஜென்ம லக்னங்களுக்கு அதிபதி புதன் ஒருவரே என்பதாலும் அவர்கள் இருவருக்குள்ளும் பொருத்தம் என்பது மிகவும் நன்றாக உள்ளது.

அவர்கள் இருவரின் ஜாதக பலத்தின்படி நீங்கள் அவர்களுடைய திருமணத்தை நல்லபடியாக நடத்த இயலும். என்றாலும் தற்போதைய நேரத்தின்படி உங்கள் மகனின் ஜாதக பலம் திருமணத்திற்கு ஒத்துழைக்கவில்லை. அவர்கள் இருவரையும் சிறிது காலம் பொறுத்திருக்கச் சொல்லுங்கள். வருகின்ற 2020ம் ஆண்டு தை மாத வாக்கில் இவர்களது திருமணத்தை நடத்துங்கள். அதற்குள் திருமணச் செலவிற்கு கையில் பணம் சேர்ந்துவிடும். அவர்கள் இருவரின் ஜாதகத்திலும் தோஷம் எதுவும் இல்லை, பொருத்தமும் நன்றாக உள்ளதால் பரிகாரம் ஏதும் அவசியமில்லை.

+2வில் தோல்வி அடைந்த நான் குடும்ப சூழல் காரணமாக கடந்த இரண்டரை வருட காலமாக ஹார்டுவேர் கடையில் வேலை செய்து வருகிறேன். தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நானும் தாயும் வேலைக்குச் செல்கிறோம். என் தந்தை வாங்கிய வீட்டு மனையை விற்று நான் சொந்தமாக தொழில் செய்ய முடியுமா? என் ஆசை நிறைவேற வழி சொல்லுங்கள். மனோஜ், பெங்களூரு.

சிறு வயதிலேயே வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உங்களது எண்ணம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. மனதில் இருக்கும் இந்த சிறு தீப்பொறியே போதுமானது. உங்கள் வாழ்வு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. கடந்த ஒரு வருட காலமாகவே சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. என்றாலும் உங்களது சிறு வயது அதற்குத் தடையாக உள்ளது. இன்னும் சிறிது காலம் மட்டும் அதாவது அடுத்த இரண்டு வருடங்களுக்கு நீங்கள் வேலை பார்க்கும் கடையிலேயே தொடர்ந்து பணி செய்யுங்கள்.

2021ம் ஆண்டின் இறுதியில் நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்கலாம். அதுவரை பொறுத்திருங்கள். இன்னும் நன்றாகத் தொழிலை கற்றுக் கொள்ளுங்கள். வெளிவட்டார வியாபார ரீதியான தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தற்போது உங்கள் தந்தை வாங்கிய வீட்டு மனையை விற்க வேண்டாம். தேவைப்படும்போது அதனை விற்றுக் கொள்ளலாம். தொழில் ஸ்தானத்தில் இணைந்திருக்கும் சூரியனும், புதனும், லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரனும் உங்களை மிகப்பெரிய முதலாளியாக உருவெடுக்கச் செய்வார்கள். தயக்கமே தேவையில்லை. தைரியமாக நீங்கள் சுயதொழில் செய்து முன்னேற இயலும். உழைப்பினால் உயரலாம் என்பதற்கு உதாரணமாய்த் திகழ்வீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-02-2020

  19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • award20

  விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

 • tenish2020

  டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

 • america20201

  இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

 • mumbai fire20

  மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்