SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேண்டாமே! வெற்று தம்பட்டம்!!

2019-03-18@ 17:34:01

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது - 7

இரவு நேரப் பயணங்களில் வாகன விளக்குகள் வரிசையாக ஒளி வீசுவதை வீதிகளில் காண்பதும் அழகிய அனுபவம் தான். அயல்நாட்டுப் பயணங்கள் மாடியில்  நின்றுகொண்டு சாலைகளை கவனிக்கிற போது அந்த வெளிச்சம் கார்கள் கொண்டாடும் கார்த்திகைத் திருவிழா என்று கருதத் தோன்றும். சில நேரங்களில்  வானில் முழு நிலவு ஒளி வீச ,விளக்குகள் வெளிச்சப்பால் பொழிய, வரிசையில் செல்லும் வாகனங்கள் தங்கள் விளக்குகளை மட்டுப்படுத்திக் கட்டுப்படுத்திக்  கொண்டு செலுத்த வேண்டிய சூழ்நிலை அமையும். தன்னுடைய வாகனத்தின் வெளிச்சம் எதிரே வருபவரை கண் கூசச் செய்யலாகாது என்கிற தெளிவு யாருக்கு  இருக்கிறதோ அவரே உயர்தரமான ஓட்டுனர் ஆவார். தன்னுடைய வாகனத்தின் வெளிச்சத்தை பிறர் கண் கூசும் விதமாக பாய்ச்சக்கூடாது என்பது போலவே  நம்முடைய வாழ்க்கையின் வெளிச்சத்தை பிறர் மீது பாய்ச்சி அவர்கள் கண்கூசும் விதமாக வாழ்வதும் ஆகாது.

விமானத்தில் எக்கானமி இருக்கையில் எளிய பயணியாய் infosys நிறுவனத்தை உருவாக்கிய நாராயண மூர்த்தி அவர்கள் பயணம் செய்தது பற்றி இணைய  வெளிகளில் சமீபத்தில் பரவலாக பேசப்பட்டது ஒருவர் எவ்வளவு வசதியுடன் இருக்கிறார் என்பது அவர் வங்கிக்கு தெரிந்தால் போதுமானது. சேர்த்து வைத்த  செல்வம் முழுவதும் பகட்டுக்காக என்று கருதுவது வாழ்வைப் புரிந்து கொள்ளும் வசதி இல்லாதவர்களின் வெற்றுத் தம்பட்டம் ஆகும். சுயமுன்னேற்ற  வகுப்புகளில் நான் பேசும்போது சில பங்கேற்பாளர்கள் ஒரு கேள்வியை கேட்பதுண்டு.... “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பதை நீங்கள் ஒப்புக்  கொள்கிறீர்களா” என்பது அந்தக் கேள்வி. “ஆமாம் ஒப்புக் கொள்கிறேன்” என்றால் அதிர்ச்சி அடைவார்கள்.

போதும் என்ற உணர்வு வாழ்வில் முன்னேறுவதற்கு தடை அல்லவா என்ற கேள்வி எழும்.  இந்த கேள்வியை infosys நாராயணமூர்த்தி யிடம் கேட்டால்  அவர் வாழ்க்கையே அதற்கான விளக்கமாய் விளங்குவதை உணர முடியும்..முதல் விஷயம், இந்தப் பழமொழி தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
பொருளீட்டுவதைப் போதும் என்று இந்த பழமொழி சொல்வதில்லை. போகங்களையும், வசதிகளையும் அனுபவிப்பதில் இருக்கும் மோகத்தைப் போதும் என்று  சொல்கிறது விலை உயர்ந்த வாகனங்கள் வீட்டில் இருந்தாலும் ஆரோக்கியத்திற்காக ஆலைக்கு மிதிவண்டியில் போகும் முதலாளிகள் உலகின் பல நாடுகளில்  உள்ளார்கள். திறமைக்கும் தகுதிக்கும் ஏற்ப சம்பாதித்துக்கொண்டு எளிமையாக வாழ்ந்தால் அந்த உணர்வு வாழ்வுக்கு மருந்து என்பதைத்தான் போதும் என்ற  மனமே பொன்செய்யும் மருந்து என்ற பழமொழி நமக்குச் சொல்கிறது.

வாரம் முழுக்க சம்பாதித்து வார இறுதியில் செலவழித்து மீண்டும் திங்கட்கிழமை அந்த வாரத்தின் சம்பாத்தியத்தை ஆரம்பிப்பதுதான் மேலை நாட்டு வழக்கம்  என்று பலரும் பேசுகிறார்கள். எனக்கென்னவோ அங்கேயும் சராசரி மனிதர்கள்தான் அப்படி செய்வதாகப் படுகிறது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கக்கூடிய  தொழிலதிபர்கள் எல்லாம் தங்கள் செல்வத்தை அறக்கட்டளைகளாக அமைத்து உலகெங்கும் உள்ள  வளராத நாடுகளுக்கு வளமான உதவிகளாக வழங்கிக்  கொண்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் எளிமையான வாழ்வுக்குப் பழகியவர்கள். வாழ்வெனும் பெரும் பொருளை உணர்வதற்கான கருவியாக மட்டும்  பொருட் செல்வத்தைக் காண்பவர்கள். உலகில் பலரும் இந்த வாழ்க்கையே செல்வத்தை எட்டுவதற்கான வழி என்று கருதிக் கொண்டிருக்கும் விசித்திரம் நிகழ்கிறது.
பல்லாண்டுகளுக்கு முன்பு ஒரு அறிஞரிடம் மேடையில் மருத்துவர் ஒருவர் வாழ்வின் நோக்கம் என்ன?   

what is the purpose of life என்று கேட்டார். நோக்கம் கொண்ட வாழ்க்கையை வாழ்வதுதான் வாழ்க்கையின் நோக்கம் . Purpose of  life  is a life with a purpose  என்று பதிலுரைத்தார் அந்த அறிஞர். அவர்தான் பேச்சாளர் சிவகாசி ராமச்சந்திரன் அவர்கள். வாழ்க்கை என்பது  பணத்துக்கான கருவியல்ல. பணம்தான் வாழ்வுக்கான எத்தனையோ கருவிகளில் ஒன்று என்று உணர்பவர்கள் தங்கள் வாழ்வையே மணம் வீசும் வனமாக  மாற்றியமைக்கிறார்கள். செல்வம் எது என்ற கேள்விக்கு குமரகுருபரர் விடை சொல்லும்போது செல்வம் என்பது சிந்தையின் நிறைவு என்று சொன்னார். உலகமெங்கும் கரன்சிகளும் அவற்றுக்கான மதிப்புகளும் வேறுபடலாம். ஆனால் தான் உழைத்த உழைப்புக்கு உரிய செல்வம் கைக்கு வரும்போது ஒருவர் பெறக்கூடிய மகிழ்வும் மனநிறைவும் அலாதியாக இருந்த காலங்கள் உண்டு.

நினைத்துப் பாருங்கள். கால்நடைகளே செல்வம் என்றிருந்த காலம் உண்டு. அதனால்தான் மாடு என்கிற சொல்லே செல்வத்தைக் குறிப்பதாக இருந்தது.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றையவை என்பது திருக்குறள். பின்னர் நாணயங்களில் செப்புக் காசுகளில் தொடங்கி நயா பைசா ரூபாய்  நோட்டுகள் தொடங்கின. இன்று இரு சகோதரர்களில் ஒருவர் அமெரிக்காவில் பணிபுரிகிறார், இன்னொருவர் இந்தியாவில் பணிபுரிகிறார் என்று வைத்துக்  கொள்ளுங்கள். இந்தியாவில் பணிபுரிபவர் தன்னுடைய சம்பளத்தை டாலர்கள் கணக்கில் கணக்குப் போட்டுப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். இந்திய உழைப்புக்கு  இந்திய மண்ணில் அமெரிக்க மதிப்புக்கு சம்பளம் வேண்டும் என்பதெல்லாம் அடங்காத  ஆசையின் அநியாயக் கனவுகள். இது போன்ற நேரங்களில்தான் செல்வம்  என்பது சிந்தையின் நிறைவு என்பது போன்ற இயல் வரையறைகள் எவ்வளவு உண்மையானவை என்று நமக்குப் புரிகிறது.

ஊரறிய பகட்டு காட்டுவதல்ல செல்வம். ஊர் உயர பயன்படுத்துவதே செல்வம். எனவேதான் தங்களுக்கு வருகிற செல்வம் மற்றும் தாங்கள் ஈட்டிய செல்வம்  எல்லாவற்றையும் இறைவன் கொடுத்தது என்னும் எண்ணத்தை அருளாளர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள். தங்கள் முயற்சி, உழைப்பு, தொடர்புகள் என எல்லாம்  இருந்தாலும் எல்லாவற்றையும் கூட்டுவிக்கும் இறையருளே காரணியாய் இருக்கிறது. இந்த சிந்தனை வெறும் அடக்கத்தின் பிரகடனம் மட்டுமல்ல. உள்நிலையில்  அவர்கள் கொண்ட உயர்ந்த அனுபவமும் ஆகும்.“பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர்ப்பானை” என்பது தேவாரம். “குலம் தரும்  செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின வெல்லாம் நிலந்தரம் செய்யும்” என்பது திவ்யப் பிரபந்தம். பெரியவர்கள் நம் செயல்களுக்காக நம்மைப் பாராட்டும்  போது அதற்கு பதில் சொல்லும் விதமாக “எல்லாம் உங்கள் ஆசீர்வாதம்: என்று சொல்கிற மரபு நம் பாரத மரபு.

இந்தப் பண்பு” நானே எல்லாம் செய்தேன் என்று தானாய் தருக்கி தனியனாய் இல்லாமல்  எல்லாம் இறைவனின் பொறுப்பு என ஒப்புக்கொடுக்கும் உன்னத  வெளிப்பாடு ஆகும். சரி எல்லாம் இறைவன் கொடுத்ததாகவே இருக்கட்டும். அதற்கு நீங்கள் தவம் செய்திருக்க வேண்டும் இல்லையா “என்று கேட்டால் அந்தப்  பெருமையையும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.“ யானேயோ தவம் செய்தேன்” என்று பதிலுக்கு அருளாளர்கள் நம்மை கேட்கிறார்கள். இதனை சரணாகதி என்று  சொல்வார்கள். இதைக் கேட்டவுடன் நாத்திகம் பேசக்கூடியவர்கள் “இது இயலாமையின் வெளிப்பாடு அல்லது பய உணர்வின் பகிரங்கம்” என்றெல்லாம் பலவும்  பேசுவார்கள். என்னுடைய உயர்வுக்கும் வெற்றிக்கும் பெருமைக்கும் இறைவன் பொறுப்பு என்று சொல்வதன் மூலம் நான் பணிவோடு இருக்கிறேன் என்பது  மட்டுமல்ல பொருள். தெய்வீகம் எனும் பேராற்றலின் ஒரு பகுதியாக இருக்கிறேன்” என்றும் பொருள். இந்த குணம் கடவுளிடம் மட்டும் அல்ல. எல்லா  நிலைகளிலும் நம் தன்மையை மேம்படுத்திக் காட்ட வல்லது.

மரபின் மைந்தன் முத்தையா

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

 • to1

  குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்