SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருவேலங்குளத்தில் பிரசித்தி பெற்ற சீனிப்புட்டு சிவபெருமான்

2019-03-15@ 17:03:38

களக்காடு அருகே மேலக்கருவேலங்குளத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுந்தர பாண்டீஸ்வரர் கோமதி அம்பாள் கோயில் அமைந்து உள்ளது. இந்த ஊரிலுள்ள குளத்தை யானைகள் வலம் வந்ததால் இவ்வூர் கரிவலங்குளம் என்று பெயர் பெற்றது. நாளடைவில் அது மருவி கருவேலங்குளம் ஆயிற்று. இந்த ஊரின் வடபகுதியில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஸ்ரீசவுந்தர பாண்டீஸ்வரர் கோயில் அமைந்து உள்ளது. கோயிலின் தலைவாசல் தெற்கு நோக்கி இருப்பது சிறப்புமிக்கது. இந்த கோயிலில் சிவன் சவுந்தரபாண்டீஸ்வரராகவும், அம்பாள் கோமதியாகவும் அருள் பாலித்து வருகின்றனர். தமிழகத்தில் நடராஜர் எழுந்தருளியுள்ள பஞ்சஸ்தலங்களில் இந்த கோயிலும் ஒன்று.

சிதம்பரம், செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கட்டாரிமங்கலம் ஆகியன இதர ஸ்தலங்கள் ஆகும். இங்குள்ள மண்டபங்களில் உள்ள கற்சிலைகள், பழைய கால கலை பொக்கிஷங்களாகவும், சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கின்றன. இந்த கோயிலில் சவுந்தரபாண்டீஸ்வரரே ஆதிக்கம் பெற்று திகழ்கிறார். இவருக்கு சீனிப்புட்டு வைத்து வழிபடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். கோயிலின் ஸ்தல விருட்சம் நெல்லி மரம். தீர்த்தம் கோமதி தீர்த்தம். பல நூற்றாண்டுகளுக்கு முன் களக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் வீரமார்த்தாண்ட மன்னர். இவரது வம்சத்தில் வந்தவர் சவுந்தரபாண்டிய மன்னர். இளவரசியான இவரது மகளுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சவுந்தர பாண்டிய மன்னர், மிகவும் மனமுருகி இறைவனை வேண்டினார்.

அப்போது உமது மகளுக்கு பிணி தீரும். அவ்வாறு தீர்ந்ததும் எமக்கு யானைகள் வலம் வரும் குளத்தின் அருகே ஆலயம் எழுப்ப வேண்டும் என்று வாக்கு கேட்டது. அதேபோல் மன்னர் மகளும் குணம் அடைந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சவுந்தர பாண்டிய மன்னர், யானைகள் வலம் வந்த குளத்தை கண்டுபிடித்து அதன் அருகிலேயே இந்த கோயிலை அமைத்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆனந்த நடராஜர் உற்சவர் சிலையை வடிவமைத்தவர் வலது கை இழந்த சிற்பி ஆவார். அவர் கைக்கு பதில் அகப்பையை கட்டிக் கொண்டு சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சிலை அவர் எதிர்பார்த்ததை விட மிகவும் தத்ரூபமாகவும், அழகாகவும் வந்ததை கண்ட சிற்பி, சிலையில் கன்னத்தில் கிள்ளினாராம். அந்த தழும்பு சிலையில் அப்படியே படிந்து விட்டது. சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் இருந்து தெற்கே 17 கிமீ தொலைவில், பத்மநேரி களக்காட்டிற்கு இடையே கோயில் அமைந்துள்ளது. தினமும் காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை, காலை 8 மணிக்கு காலசந்தி, 10 மணிக்கு உச்சிகாலம், மாலை 5 மணிக்கு சாயரட்சை, இரவு 7 மணிக்கு அர்த்தசாம பூஜை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

 • fra

  பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

 • puyal

  கிரீஸ் நாட்டில் வீசிய தீவிர புயல் காரணமாக 7 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு: 23 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்