SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நல்ல வேலை கிட்டும்!

2019-03-12@ 16:27:31

என் மகன் டிஎம்ஈ., முடித்து நான்கு ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார். அவருக்கு எப்போது வேலை கிடைக்கும், என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? பிரபாகரன், கோயம்புத்தூர்.

கோயம்புத்தூரில் இருந்து கொண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இளைஞனுக்கு வேலை கிடைக்கவில்லை என்று சொல்வது ஆச்சரியத்தைத் தருகிறது. சம்பள எதிர்பார்ப்பினைக் குறைத்துக் கொண்டு முதலில் ஒரு வேலைக்குச் செல்ல அறிவுறுத்துங்கள். படித்து முடித்துவிட்டு நான்கு வருடங்கள் சும்மா இருப்பதை விட ஏதோ ஒரு வேலைக்குச் செல்வதே நல்லது. அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் உத்யோகத்தைச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதி சந்திரன் இரண்டிலும், பத்தில் செவ்வாயும் பரிவர்த்தனை யோகத்துடன் அமர்ந்திருக்கிறார்கள்.

இந்த இருவருமே நீசம் பெற்றிருப்பதால் உயர்ந்த ஒரு இடத்தில் வேலையை எதிர்பார்க்க இயலாது. அதே நேரத்தில் சிறிய கம்பெனியாக இருந்தாலும் உயர்ந்த இடத்தில் வேலை பார்த்தால் என்ன ஆதாயம் கிடைக்குமோ அதே பலன் நிச்சயமாக இங்கும் கிடைக்கும். சிறிய கம்பெனியில்தான் இவர் தனது ஆதிக்கத்தைச் செலுத்த முடியும். தொழில்முறையில் தற்போது நடந்து வரும் செவ்வாய் புக்தி இவருக்கு கை கொடுக்கிறது. தற்போதைய நேரத்தின்படி நிச்சயமாக ஏதோ ஒருவேலை கிடைத்து விடும். நேரத்தினை பயன்படுத்திக் கொண்டு சிறிய வேலையாய் இருந்தாலும் கிடைக்கின்ற வேலையில் சேரச் சொல்லுங்கள். தினமும் காலையில் கீழ்கண்ட ஸ்லோகத்தினைச் சொல்லி சுப்ரமணிய ஸ்வாமியை வழிபட்டு வர விரைவில் உத்யோகம் கிடைத்துவிடும்.

“ராஜராஜஸகோத்பூதம் ராஜீவாயத லோசனம்
ரதீசகோடி ஸௌந்தர்யம் தேஹிமே விபுலாம் ச்ரியம். ”


உடம்பிற்கு வியாதி வருவதுண்டு. வியாதியே உடம்பாய் இருந்தால்..? வாகன விபத்து, கைவிரல் கால்விரல் அரிப்பு, வெடிப்பு, நீர் வடிதல், தோல் உரிதல், சொரியாசிஸ் என்று ஏதோ ஒரு வியாதி வருவதும் போவதுமாக உள்ளது. 15 வருடமாக காது கேட்கும் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து தற்போது முழுவதும் கேட்பதில்லை. மனைவியால் விரட்டப்பட்டு தாயோடு வசிக்கிறேன். சாப்ட்வேர் துறையில் வேலை செய்யும் மூத்த மகளும், பிடிஎஸ் படிக்கும் இளைய மகளும் என்னுடன் பேசுவதில்லை. நோயின்றி வாழவும், குடும்பத்துடன் இணையவும் என்ன செய்ய வேண்டும்? ஷண்முகம், சென்னை.

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. மனைவி, மக்கள் உங்களை அருகில் சேர்ப்பதில்லை என்றால் அதன் காரணம் என்ன? அடுத்தவர்மீது குறை சொல்வதை விடுத்து நீங்கள் செய்த தவறுகளை ஒரு முறை எண்ணிப் பாருங்கள். குடும்பத் தலைவனாக நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை தனது முயற்சியால் உங்கள் மனைவி செய்து முடித்திருக்கிறார். பெண் பிள்ளைகள் இருவரையும் ஒரு நல்ல நிலைக்குக் கொண்டு வர எத்தனை சிரமப்பட்டிருப்பார்?

அவர்களது நல்வாழ்வினில் குறுக்கிடாமல் இனிமேலாவது நீங்கள் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட முயற்சியுங்கள். தவறினை உணர்ந்து மனம் திருந்தி நடப்பதே அதற்கான பரிகாரம் ஆகும். வாட்ச்மேன் வேலை செய்தாவது பெற்ற தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற தற்போதைய உங்கள் முயற்சி ஒன்றே போதுமானது. பெற்ற தாய்க்கு செய்யும் சேவையானது நீங்கள் செய்த அனைத்து பாவங்களையும் போக்கிவிடும். மற்றவரது உதவியினை எதிர்பாராமல், உழைத்துச் சம்பாதித்து தாயாரை போஷித்து வாருங்கள். பெற்றவளைக் காப்பதே மிகச் சிறந்த பரிகாரம். 2020ம் ஆண்டின் இறுதியில் குடும்பத்தினருடன் இணைவீர்கள்.

29 வயதாகும் என் மகளுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை. திருமணத்தில் வெறுப்பைக் காட்டுகிறாள். எந்த வரன் வந்தாலும் அழகு இல்லை என்று தட்டிக் கழிக்கிறாள். என் மகளுக்கு திருமணம் நடக்குமா? இல்லை அப்படியே இருந்து விடுவாளா? மிகுந்த வேதனையில் உள்ளேன். என் மகளுக்குத் திருமணம் நடக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? ராஜேந்திரன், காட்பாடி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. 18 வயது முதல் 20வது வயதிற்குள் சந்தித்த சம்பவம் ஒன்று அவரது மனதை பாதித்திருக்கிறது. பெற்றவரால் அதனைக் கண்டறிந்து சரி செய்ய இயலும். உங்கள் மகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அவரது ஜாதகத்தில் ஆறாம் வீட்டில் சூரியன், குரு, கேது ஆகிய கிரஹங்களின் இணைவு அத்தனை சாதகமான அம்சம் இல்லை. என்றாலும் தற்போது நடந்து வரும் நேரம் என்பது திருமணத்திற்கு ஒத்துழைக்கிறது. ஐந்தாம் வீட்டுச் சுக்கிரன் அவரது எதிர்பார்ப்பையும், ஆசையையும் நிறைவேற்றி வைப்பார்.

திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்விற்கு மிகவும் முக்கியமானது என்பதையும், அதற்கான நேரம் தற்போது நடந்து வருகிறது என்பதையும், இந்த நேரத்தினை விட்டுவிட்டால் பின்பு தனிமரமாய் தவிக்க வேண்டியிருக்கும் என்பதையும் எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். அவர் பிறந்த ஊரில் இருந்து கிழக்கு திசையில் இருந்து மாப்பிள்ளை அமைவார். ஆதிக்க குணம் நிறைந்த உங்கள் மகளின் மனதினைப் புரிந்துகொண்டு அனுசரித்துச் செல்லக் கூடிய மணமகனாக இருப்பார். சனிக்கிழமை தோறும் விரதமிருந்து துளசிச் செடிக்கு பூஜை செய்து பெருமாளை வணங்கி வாருங்கள். திருமணத்தை திருமலை திருப்பதியில் நடத்துவதாய் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வேங்கடவனின் திருவருளால் மகளின் திருமணம் விரைவில் நடக்கும்.

என் கடன் தொல்லை எப்போது முடியும்? என் மரணம் சம்பவிக்கும்போது எனக்கு 10 பைசா கூட கடன் இருக்கக் கூடாது. என் ஜாதகத்தை சரிபார்த்து தீர்வு சொல்லுங்கள். தாஜூதீன், கிருஷ்ணகிரி.

79 வயதிலும் வாங்கிய கடனை அடைத்துவிட வேண்டும் என்ற உங்களின் எண்ணம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. உங்கள் ஜாதகத்தை ஆராயும்போது நீங்கள் அநாவசியமாக கடன் வாங்கியிருப்பது போல் தெரியவில்லை. அதே போல நீங்கள் தீய வழியில் செலவழிப்பவரும் கிடையாது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் சனி  12ம் வீட்டில் நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கிறார். 12ம் இடம் என்பது விரய ஸ்தானம் என்பதால் தற்போதைய சூழலில் செலவு என்பது அதிகமாகத்தான் இருக்கும். என்றாலும் அதனை சமாளிக்கும் திறன் உங்களுக்கு உண்டு. ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் என்றென்றும் உங்களுக்கு கௌரவமான வாழ்வினைத் தருவார்.

இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் மூன்றாவதான ‘ஜகாத்’தினை சரிவர கடைபிடித்து வாருங்கள். உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை இயலாதவர்களுக்குத் தந்து உதவி செய்யுங்கள். நீங்கள் செய்யும் தான தருமங்கள் சனிக்கிழமை நாளில் அமையட்டும். உங்களது இறுதிக் காலத்தை தற்போது நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் ஜாதக பலத்தின்படி 95 வயது வரை நல்லபடியாக வாழ்வீர்கள். 27.09.2020ற்குப் பின் உங்கள் கடன் பிரச்னை கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரும். எல்லாம் இறைவன் செயல் என்ற எண்ணமே உங்கள் பிரச்னைக்கான தீர்வு ஆகும். இறைவனிடம் கையேந்தியவர்களை அவன் என்றுமே கைவிடுவதில்லை.

எனது தந்தை கார் விபத்தில் இறந்து ஏழு வருடங்கள் ஆகிறது. நான் கல்லூரி மற்றும் பள்ளி கேண்டீனில் வேலை செய்து வந்தேன். 2015 ஏப்ரல் மாதத்தில் நானும் லாரியில் அடிபட்டேன். தற்போது என் தாயாரும் கீழே விழுந்து சிகிச்சை பெறுகிறார். கடந்த எட்டு மாத காலமாக வேலையில்லாமல் இருக்கிறேன். என் குடும்ப கஷ்டம் தீர எளிய பரிகாரம் சொல்லுங்கள். விஜயகுமார், கடலூர்.

‘‘பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்’’ என்ற பழமொழியினை நினைவுபடுத்தும் வகையில் உங்கள் கடிதம் அமைந்துள்ளது. என்றாலும் இறைவன் நம்மை இந்த உலகில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதற்கு ஏதோ ஒரு முக்கியமான காரணம் இருக்கும், நம்மால் இந்த உலகத்தில் நடக்க வேண்டிய செயல் ஏதோ ஒன்று இருக்கிறது என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். குறைந்த பட்சமாக தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் நாய் ஒன்றிற்காவது நம்மால் உணவளிக்க முடியும். உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானம் என்பது நன்றாகவே உள்ளது.

சமையல் தொழில் உங்களுக்கு நன்றாக கை கொடுக்கும். காலத்திற்கும் அடுத்தவருக்குக் கீழேயே பணிபுரிய வேண்டும் என்று எண்ணி இருக்காமல் தனியாக தொழில் தொடங்க முயற்சியுங்கள். சிறிய அளவிலான முதலீடே போதுமானது. வடை, பஜ்ஜி, சுண்டல் வியாபாரம் போன்றவை உங்களுக்கு கைகொடுக்கும். நல்ல பேச்சுத் திறமையும், முகராசியும் கொண்ட உங்களால் சுயதொழிலை சிறப்பாகச் செய்ய இயலும். கஷ்டம்... கஷ்டம்... என்று வெறுமனே அமர்ந்திருக்காமல் கஷ்டத்தினைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி வாருங்கள். உத்வேகத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • intelexopchina17

  சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்