SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புகழ்ச்சிக்கு மயங்காதே! இகழ்ச்சிக்கு கலங்காதே!!

2019-03-12@ 16:13:04

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது - 6

தமிழில் ஒன்று போல் ஒலிக்கும் இரண்டு சொற்கள் இருக்கின்றன ஒன்று தாழ்வு மனப்பான்மை. மற்றொன்று தாழ்வெனும் தன்மை. ஒலிக்கும்  விதத்தில்  ஒற்றுமை இருப்பினும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இந்த இரண்டு சொற்களுக்கும் உண்டு. தன்னுடைய வலிமையை அறியாமல் மற்றவர்களுடன்  ஒப்பிட்டு தம்மையே மலிவாக எடை போடுவது தாழ்வு மனப்பான்மை. தன்னுடைய வலிமையை நன்கறிந்தும்  தலைக்கனம் கொள்ளாமல்  அந்த வலிமையை  சாத்தியமாக்கிய இறைசக்திக்கும் பெரியவர்களுக்கும் சமூகத்துக்கும் நன்றியறிதலோடு இருப்பது தாழ்வெனும் தன்மை. இதனை ஆன்மிகத் தளத்தில்  இறையடியார்களிடம் இயல்பாகக் காணலாம். கண்ணில் படும் எல்லாமே கடவுளின் அம்சம் என்று கண்டு கொண்டவர்கள் அவர்கள். அங்கமெல்லாம்  குறைந்தழுகும் தொழுநோயராய்

ஆ உரித்து தின்றுழலும் புலைய  ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பர் ஆகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே
என்றார் திருநாவுக்கரசர்.

சமூகத்தளத்தில்  சிறப்புகள் எல்லாம் பெற்றிருந்தும் எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்ளும் மனிதர்கள் நிறைகுடம் என அழைக்கப்படுகிறார்கள்.  “பணிவுடையன் இன்சொலன் ஆதல்” என்று திருவள்ளுவர் இலக்கணத்திற்கு அவர்கள் வாழும் இலக்கியமாய் விளங்குகிறார்கள். நம் சமகாலத்தில் அப்படி  வாழ்ந்த ஒரு மனிதர் அப்துல் கலாம். தன்னைத் தேடி வருகிற ஒரு துண்டு காகிதத்துக்குக் கூட எல்லையில்லாத மரியாதையும் முக்கியத்துவமும் தருவது  அவருடைய இயல்பாக இருந்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வோர் அம்சத்திலும் இருந்தும் கற்றுக்கொள்ளக்கூடிய எளிய மனிதராகவே இறுதிவரை அவர்  இருந்தார். தான் அடையக்கூடிய தகுதிகள் பதவிகள் விருதுகள் இவற்றோடும் தன்னை அடையாளம் காணாத பக்குவம்தான் மனிதர்களை மேலும்  விரும்பத்தக்கவர்களாகவும், வெற்றி மிக்கவர்களாகவும் உருவாக்குகிறது.

பிறருக்கு ஒரு பொருட்டாகவே தோன்றாத சுய பிம்பங்களையும் சுய தம்பட்டங்களையும் சுமந்து திரியக்கூடிய ஒருவர் எல்லோராலும் ஏதோ ஒரு கட்டத்தில்  அலட்சியப்படுத்தப் படுபவராய் ஆகிப்போவார். அப்படி, தன்னை எப்போதும் பெரிய மனிதராகவே எண்ணிக் கொள்ள கூடிய ஒருவர் உரிய நேரம் கடந்து சற்று  தாமதமாக விமான நிலையத்திற்கு வந்தார் வரிசையில் நிற்க பொறுமையில்லாமல் அவசரம் அவசரமாக அனைவரையும் தள்ளிக்கொண்டு தன் பெட்டிகளை  பரிசோதனை பட்டையில் வைத்தார் தட்டிக்கேட்டவரிடம் “நான் யார் தெரியுமா” என்று உச்ச அபஸ்வரத்தில் அலறினார். பின்னர் பின்னர் பயணப் பதிவு நடக்கும்  இடத்திலும் அனைவரையும் தள்ளிவிட்டு கொண்டு முன்னே போக முயன்றார். வரிசையில் இருப்பவர்கள் ஆட்சேபித்தபோது மீண்டும்” நான் யார் தெரியுமா”  என்று அலறினார்.

பின்னர் ஒருவழியாக பயணப் பதிவு அலுவலர்  தன் இருக்கையிலிருந்து இறங்கிவந்து “ ஐயா வரிசையில் வாருங்கள்” என்றார். உடனே “நான் யார்  தெரியுமா” என்று சீறினார். அந்த அலுவலர் ஒரு நொடி கூட பதட்டப்படாமல் தன் மேசையிலிருந்த ஒலிபெருக்கியை எடுத்து “ பயணிகளின் கனிவான  கவனத்திற்கு  இங்கு யாரோ ஒருவர் தான் யார் என்பதை மறந்துவிட்டு எல்லோரிடமும் நான் யார் தெரியுமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் அவரை  அடையாளம் தெரிந்தவர்கள் உதவலாம்” என அறிவித்தார் நம்முடைய அடையாளம் இன்று அகங்காரத்தை நினைத்தால் அது அரிதாரம் போலக் கலைந்து  அசிங்கப்படுத்தி விடும் என்பதற்கு இந்த மனிதருக்கு நிகழ்ந்த அவலமே அத்தாட்சி. காமத்துப்பால் எழுதும்போது ஓர் உவமையை  திருவள்ளுவர்  பயன்படுத்துகிறார். ‘‘அறிதோ றரியாமை கண்டற்றால்” என்பார். அது காமத்துக்கு மட்டுமல்ல வாழ்வின் எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியது.

அதாவது ஒருவன் வாழ்வில் ஏதேனும் அறிந்துகொள்ள முற்படும் போதெல்லாம் தான் எதையுமே அறிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் அறிகிறான் என்பது  இதன் பொருள். தாழ்வெனும் தன்மை நம்மை உயர்த்துகிறது. தாழ்வு மனப்பான்மையோ நாம் உயர்வதற்கு தடையாய் இருக்கிறது. நாம் இதுவரை அறிந்திராத  ஒன்று பற்றி யாரேனும் சொன்னால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சாதிப்பவர்கள் அகந்தையின் உச்சத்தில் இருப்பவர்கள். புதிது புதிதாய் அறிந்து  கொள்ளவும் ஆய்வு செய்யவும் ஆர்வம் இருந்தால் வயதோ முதுமையோ தடையல்ல. இந்த உலகில் ஒவ்வொருவரும் ஒரு திறமையுடன் தான்  படைக்கப்படுகிறார்கள். குருவி கட்டும் கூடு, அரக்கு கரையான் புற்று, தேன்கூடு, சிலந்திவலை ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டது. இது போல் உலகில்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு திறமை கொண்டவர்கள் என்கிறார் அவ்வையார்.

“ வான்குருவியின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்குஞ் செய்யரிதால்  யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.”

தெரியாத ஒன்றை தெரிந்துகொள்வதற்கு பெயர் ஆர்வம். தன்னால் இயலாத ஒன்றை இன்னொருவர் செய்கிறார் என்றால் அவரைப் பாராட்டுவது மனிதப் பண்பு.
ஒரு விஷயத்தில் எதிரும் புதிருமாக இரண்டு பேர் கருத்து சொல்வார்கள் என்றால் இரண்டில் ஒன்றுதான் சரியாக இருக்க முடியும். இரண்டுமே சரிதான்  என்பதுபோல எதிரும் புதிருமான உரையாடல் எங்காவது நிகழ்ந்திருக்கிறதா? நிகழ்ந்திருக்கிறது. ஆரண்யத்தில் சீதை கண்களுக்கு முன் மாயமான் நடமாடியது.  உடலெங்கும் வைரம், வைடூரியம் எல்லாம் மின்னின. அதைப்பார்த்து இலக்குவன் ‘‘இப்படி ஒரு மான் இருக்க இயலாது’’ என்று சொன்னான். உடனே இராமன்  ‘‘இல்லாதன இல்லை இளங்குமரா’’ என்றான். “இந்த உலகில் இது இல்லை என்று சொல்லும் விதமாய் ஒன்றுமே இல்லை” என்கிறான் ராமன்.

யார் சொன்னது சரி என்கிறீர்களா? இலக்குவன் சொன்னதும் சரி. ராமன் சொன்னதும் சரி. வந்திருப்பது உண்மையான மான் அல்ல மாயமான் என்கிற  இலக்குவனின் கணிப்பு சரிதான். அதேநேரம் இந்த உலகத்தில் இப்படி ஒரு விஷயமே இல்லை என்று எதையுமே சொல்ல வாய்ப்பில்லை. நாம் அறியாமல்  ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உள்ளன என்பதை தன் அனுபவ அறிவால் ராமன் சொல்கிறான். எனவே இரண்டும் சரிதான். கூட்டங்களில் நாம்  உரையாற்றும்போது எதிரே இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் அல்லது பலவகைகளில் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்னும் எண்ணம் இருக்கும்போது நாம்  அவர்களை கவர்ந்து அவர்கள் மதிப்பை பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒரு சிலர் மேடையில் பேசும்போது எதிரே இருப்பவர்களை முட்டாள்களாக  நினைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை சொல்வார்கள். இது மிகவும் ஆபத்தானது.

நாம் அவர்களை அப்படி நினைத்தால் அவர்களும் நம்மை அப்படி நினைப்பதற்கு உரிய சூழ்நிலைகள் உருவாகிவிடும். மாறாக, நாம் அவையை மதிக்கக்கூடியவராக  இருந்தால் பேசும்போதே அவர்களிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள  நிறைய இருக்கும். அவர்களும் நம்மிடம் கற்றுக் கொள்வார்கள். ஒரு நிறுவனத்தில் இருந்து  இன்னொரு கிளைக்கு புதிதாக மாற்றலாகி  உயர் அதிகாரியாக ஒருவர் செல்லலாம். ஆனால் அங்கு அவரைவிட பதவியில் கீழே இருக்கக்கூடிய பல்லாண்டு கால  அனுபவம் கொண்ட ஒருவர் சில நுட்பமான நடைமுறைகளை அவருக்கு கற்றுத் தரக்கூடிய இடத்தில் இருக்கலாம். அறிவுக்கு முதலிடம் தந்து தகுதிக்கும்   வயதுக்கும் அடுத்த இடத்தை கொடுக்க வேண்டும் என்பதைத்தான் சுவாமி நாத தத்துவம் நமக்கு சொல்லித் தருகிறது.

பிரணவத்தின் பொருளை தந்தைக்கு உபதேசித்த  தனயன் சுவாமிக்கே குருநாதன் என்னும் பொருளில் சுவாமிநாதன் என அழைக்கப்படுகிறான். இன்றைக்கு  வீடுகள் தோறும் பார்ப்பீர்கள். பெற்றோர்கள் தாங்கள் புதிதாக வாங்கிவந்த செல்பேசியை எப்படி இயக்குவது என்று தடுமாறி தங்கள் வீட்டு சுவாமி  நாதன்களையோ, சுவாமி நாதினிகளையோ அண்டி உபதேசம் பெறுகிறார்கள். நம்மைவிட நமக்கு அடுத்த தலைமுறை கொண்டிருக்கும் அறிவு அதிகம் என்னும்  உணர்வோடு அவர்களை நாம் அணுகினால் நம் மூத்த தலைமுறைக்கு நம்மைவிட அனுபவம் அதிகம் என்னும் உணர்வோடு அவர்கள் நம்மை  அணுகுவார்கள். நம்மைவிட நம் குழந்தைகள் இன்னும் அறிவாளிகளாக இருப்பதற்காகத்தான் வாழ்வில் இத்தனை போராட்டம். இது நமக்கு மட்டுமல்ல உலகில் பிறக்கும்  ஒவ்வொரு உயிருக்கும் இந்த எண்ணம் இருக்கிறது. மனித உயிருக்கு மட்டும் இந்த உணர்வு சொந்தமல்ல. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் திருவள்ளுவரை  கேட்டுப் பாருங்கள். அவர் சொல்கிறார்.தமிழ் தமிழ் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

மரபின் மைந்தன் முத்தையா

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rally

  சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 • slide

  சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

 • torch

  சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

 • statue

  சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

 • fire

  லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்