SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாலவனை சுமப்பது யார்?

2019-03-08@ 14:22:42

“கண்ணே குணகேசி இந்த தந்தையை மன்னிப்பாயா? குழந்தாய். பருவம் அடைந்து பூத்து குலுங்கும் உனக்கு மனம் முடிக்காத பாவி ஆகிவிட்டேன். அழகிலும், அறிவிலும், பண்பிலும், அன்பிலும் சிறந்து விளங்கும் உன்னை, கரம் பற்ற ஏற்ற ஒரு வரன், இந்த தேவ லோகத்திலும், மனிதர்கள் வாழும் பூ லோகத்திலும் கண்டில்லேனே? தேடி களைத்ததே மிச்சம் அம்மா” என்று அழாத குறையாக மன்றாடுகின்றான் இந்திரன் தேரோட்டி மாதலி.

“தந்தையே தாங்களே தன் நிலை மறக்கலாமோ?” இது அவள் மகள் குணகேசி. “இந்திரன் தேரோட்டி ஆயினும் பெண்ணை பெற்ற தந்தை ஆகிவிட்டேனே அம்மா?” “ உண்மை தான் அப்பா, ஆயினும் தாங்கள் இறைவன் ராவண வதம் முடிக்க, தேர் ஓட்டி உதவி புரிந்தவர் ஆயிற்றே,  அந்த புண்ணியமும் மாலவன் அருளும் துணை நிற்கும், அப்பா. கவலை களையுங்கள்.” “ உண்மை தான் மகளே. ஆனால், அவனோ நம்மை பாராமுகமாய் உள்ளானே? ...ஹ்ம்ம் மழை பொய்த்தாலும், வானமே கதி என்று இருக்கும் உழவனை போல் ,அவனையே நம்பி பாதாள உலகம் செல்கிறேன் வரன் தேடி.

ம்ஹூம் வருகிறேன் அம்மா.” என்று மாதலி விடை பெற்று பாதாள லோகம் சென்றான். சொர்க்கத்தில் நிம்மதி என்று கனவு காணும் நமக்கு ,படிக்கும் போதே திகில் ஊட்டுகிறது மாதலியின் நிலை. தேவலோகத்திலும் கவலைக்கு பஞ்சம் இல்லை என்று வெளிச்சம் போட்டு காட்டி விட்டது மாதலியின் இக்கவலை. நிலையான இன்பம் தருவது இறைவனின் இணையடி நிழல் அல்லவா, அதை தவிர மற்றனைத்தும் துன்பமே. அதனால் தான், தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் - இந்திர பதவியும் வேண்டேன், என்றார் போலும். கவலை தோய்ந்த மனத்தனாய் பாதாள லோகம் செல்லும் வேளையில் “நாராயணா நாராயணா” என்ற ஒரு இனிமையான குரலை செவிமடுத்தான் மாதலி.

பகவானுக்கு புண்ய ஷ்ரவண கீர்த்தனன் என்று ஒரு பெயர் உண்டு. அவன் பெயரும் சரிதமும் கேட்ட மாத்திரமே- புண்யமும், மோட்சமும் அளிக்க வல்லது என்று பொருள் அந்த நாமத்திற்கு. அதனால் தானே, பிரகல்லாத ஆழ்வார் ஸ்ரவனம் கீர்த்தனம் என்று அவன் நாமத்தை நினைப்பதை முதலில் வைத்தான். இப்படி பல நன்மை தரும் நாமம்  கேட்டு மாதலி பூரித்தான். “வரவேண்டும் வரவேண்டும் பாகவத ஸ்ரேஷ்டரே தங்கள் வரவால் தன்யன் ஆனேன்” என்று நாரண நாமம் சொன்ன நாரதர் பதம் பணிந்தான் மாதலி. “என்ன மாதலி வழக்கத்திற்கு மாறாக உன் வதனம் வாடி உள்ளதே?, என்ன விஷயம்?” என்றார்.

“பெண்ணை பெற்றுவிட்டேனே சுவாமி அவளை நல்ல இடத்தில் சேர்க்க வேண்டுமே என்ற கவலை. இன்னும் நல்ல வரன் அமைந்த பாடில்லை. ஆகவே நல்ல வரன் தேடி பாதாளம் வரை செல்கிறேன்.” “உனக்கு உதவ நானும் உன்னுடன் வரன் தேடலாமா மாதலி?” “ இது என்ன கேள்வி  சுவாமி தாங்கள் உடன் இருப்பது அந்த நாரணன் உடன் இருப்பது போல் அல்லவா?”  “நல்லது மாதலி, முதலில் வருணனை கண்டு அவன் அனுமதி பெற்று பாதாளம் செல்வோம் சரி தானே?” “தங்கள் சித்தம் என் பாக்கியம் சுவாமி” இவ்வாறு நாரதரும் மாதலியும் அவன் மகள் குணகேசிக்கு வரன் தேட ஒன்று சேர்ந்து புறப்பட்டனர்.

வருணனின் அனுமதி பெற்று ஹிரண்யபுரம், ஸ்வர்ணபுரம், காமதேனுபுரம் போன்ற பல இடங்கள் சென்று வரன் தேடினர். ஆயினும் வரன் அமைந்த பாடில்லை இறுதியாக வாசுகி என்னும் நாகராஜன் ஆளும்  போகவதி என்னும் சர்ப்பங்களின் நகரை அடைந்தனர்.  அங்கே..... “ சுவாமி, எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் இன்னும் என்னை சோதிக்கின்றானே ? இன்னும் வரன் அமைய வில்லையே’’ என்று வருந்திய மாதலியிடம், “ அவசரப்படாதே மாதலி அதோ பார் திரண்ட தோளும், மலர்ந்த பார்வையும், கம்பீரமான நடையும் கொண்டு ஒரு இளைஞன் செல்கிறான். அவனிடம் அனைத்து நல் லட்சணங்களையும் நான் காண்கிறேன் அவன் குணகேசிக்கு தகுந்த வரனாய் இருப்பான் என்பது என் எண்ணம்.

இருவரின் திருமணம், ஒருவரின் ஆணவத்தை அழித்து உலகுக்கே நன்மை பயக்கும் மாதலி!  வா அவனை பேசி முடிப்போம்” என்றார் நாரதர். “சுவாமி என் மகள் வாழ்விலும் தங்கள் கலகம் வேண்டாம் என்று ஆசை படுகிறேன்” “சரி, சொல், வேறு தகுந்த வரனை  உன்னால் தேட முடிந்ததா?” “இல்லை சுவாமி’’
“ பின் என்ன, வா இவனை பேசி முடிப்போம்” இருவரும் போய் பேசினர் அந்த வரனிடம். அவன் தன் பாட்டனாரிடம் கேட்க சொல்லவே, ஆர்யகன் என்ற பெயர் உடைய அந்த கிழட்டு நாகத்திடம் சென்று வரன் கேட்டனர்.

அதற்கு அந்த நாகம் “ என் பேரனை உங்கள் மகளுக்கு மண முடிப்பதில் எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை. ஆனால் இவனுடைய தந்தை சிகுரன், சில நாட்களுக்கு முன்பு தான், பெரிய திருவடியாம் கருடனால் பட்சிக்கப்பட்டார். அடுத்து அவன் மகனான இவனை பட்சிப்பேன் என்று சபதம் செய்து சென்று இருக்கிறார். அற்ப ஆயுளை உடைய இவனுக்கு எந்த நம்பிக்கையில் கன்னிகாதானம் செய்வீர்கள்? அய்யகோ! இவனுக்கு நல்ல வரன் வந்தும் முடிக்க முடியாத பாவி ஆகி விட்டேனே!. நாகர்களான எங்கள் தாய் கத்ரு, கருடனின் தாய் வினதைக்கு செய்த தீங்கினால் இன்னும் என்ன, என்ன அனுபவிக்க நேரிடுமோ?  

தெரிய வில்லையே!. ஹே தீன தயாளா! நாராயணா உன் மனம் என்று இறங்குமோ? அறியேனே” என்று புலம்பியது அந்த கிழட்டு நாகம். “கவலையை விடுங்கள் அண்டங்களை ஆளும் இந்திரனின் தேர் ஓட்டி நான் . நான் அவனை காப்பேன்’’ என்று மார் தட்டினான் மாதலி. “அந்த இந்திரனை அமிர்த கலசத்திற்க்கான போரில் வென்றவர் பட்சிராஜன் கருடன்” என்றார் அந்த கிழட்டு நாகம். “கவலையை விடுங்கள் அனைத்தையும் உபேந்திரன் பார்த்துக் கொள்வான்.” இது நாரதர். மாதலி இருவரையும் இந்திரனிடம் அழைத்து சென்றான். இந்திரன் விஷயம் அறிந்து, கருத்து உணர்ந்து, அந்த நாகனை உபேந்திரனிடம் அழைத்து சென்றான்.

சரி, யார் இந்த உபேந்திரன்? வாமன அவதாரத்தில், இந்திரனின் தாயான அதிதிக்கு இளைய மகனாக பிறந்து உலகை அளந்த அந்த மாயக் கண்ணன் தான் அது. இந்திரனுக்கு தம்பியாக பிறந்து, அவன் படை தளபதியாகவும் இருக்க மனம் உவந்து, சொர்க்கத்தில் உபேந்திரன் என்ற பெயர் கொண்டு இருக்கிறான் ஸ்ரீமன் நாராயணன்.  அவன்  அருகில் அந்த சுமுகன் என்னும் நாகத்தை அழைத்து சென்றான் இந்திரன். அவர் இந்திரனை நோக்கி “அண்ணா இவருக்கு அமுதம் தரலாமே” என்றார் பணிவாக. ஆனால் இந்திரன் அமுதம் தேவர்களின் தனி சொத்து என்பதால் அமுது தராமல் நீடூழி வாழ ஆசி மட்டும் வழங்கினான்.

சுபயோக சுபதினத்தில் சுமுகன் என்னும் அந்த நாகனுக்கும், குணகேசிக்கும் திருமணம் நிகழ்ந்தது. இன்பமான அந்த தருணத்தில் கழுகின் கரையும் சத்தம் கேட்டு சமுகன் நடுங்கி ஸ்ரீஹரியின் பாதத்தில் மயங்கி விழுந்தார். அவன் பயந்தது போலவே தன் இரையை தேடி சொர்க்கம் வரை வந்து விட்டார் பட்சிராஜன் கருடன். “இந்திரா ! யாரை கேட்டு இந்த சுமுகனுக்கு திருமணம் நிகழ்த்தினாய்?அதோடு நில்லாமல் நீடூழி வாழ வரம் தந்தாய் என்று கொக்கரித்தார் கருடாழ்வார். “ கருடனே  பொறுப்பாய். எல்லாம் உன் தலைவன் ஸ்ரீமன் நாராயணனின் சொல் படியே நடந்தது” என்றான் இந்திரன் .

“ என்ன எம் ஸ்ரீஹரியா இப்படி செய்தது?” என்று அருகில் உபேந்திர ரூபத்தில் இருக்கும் ஸ்ரீஹரியிடம் பேச தொடங்கினான் கருடன். “ ஓய் நாராயணரே, உமக்கே இது நியாயமா? உன்னை, நீர் உவக்கும் இடமெல்லாம் தாங்கி சுற்றித்திரியும் எனக்கு, எவ்வாறு இப்படி ஒரு துரோகம் செய்ய துணிந்தீர்? பக்தரில் பார பட்சம் காணும் நீரா பக்த  வத்சலர்? உன்னை அனுதினமும் தூக்கித் திரிந்த எனக்கு இதுவும் வேண்டும் இதற்கு மேலும் வேண்டும்” என்று பொரித்து தள்ளினார் கருடாழ்வார்.

“என் அன்பிற்கு இனிய கருடா, நீயே, என்னை தாங்குவதாய் நினைக்கிறாய் அல்லவா?, நல்லது. சற்று இந்த வலது கையை தாங்குவாய் எனக்கு இது பாரமாய் உள்ளது” என்றார் பிரபு. “இதில் என்ன பெரிய பிரமாதம் தோளில் கையை வையுங்கள். இந்த அண்டங்கள் அனைத்தும், என் சிறகை நான் விரித்து பறக்கும் போது நிலை தடு மாறுகின்றன, அப்படி இருக்க இது பெரிய சிரமமா? ஹ்ம்ம் வையும் உம் கையை” என்றார். சுவாமியும் கையை வைத்தார். கருடனுக்கு பொறி கலங்கத் தொடங்கியது பாரம் தாங்காமல் மயங்கி பரந்தாமன் பாத மலரிலே விழுந்தார் கருடன்.  

தன் திருவடி தாமரையில் மயங்கி கிடக்கும் சுமுகன் என்ற அந்த நாகனை எடுத்து கருடன் தோளில் இட்டு, “கருடா இந்த நாகம் என்னிடம் அபயம் வேண்டி சரணாகதி என்று வந்து விட்டது. ஆதலால், இதை நான் காத்தே தீருவேன். இதோ உன் தோளில் எம்மால் இடப்பட்ட இவன், இனிமேல் உம்மால் காக்கப்பட வேண்டும். என்னை நீ தாங்குவதாய் உரைத்தாய் - உண்மையில் உன்னையும் சேர்த்து தாங்குவது யாமே. நீ ஆணவம் கொள்வது, கோபுரத்தில் உள்ள பதுமை, கோபுரத்தையே தான் தாங்குவதாய் இறுமாந்தது போல் இருக்கிறது.

இனி உண்மையை உணர்ந்து தெளிவாய். ஆசிகள். “என்று கூறி கருடனுக்கும் சுமுகனுக்கும் அருளினான். அனைத்தையும் அவன் தாங்குவதால் தானே, விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு விளக்கம் எழுதுகையில் ஆதி சங்கரரும் கூறுகிறார். “சரீரபூதப்ருத்” எனும் நாமத்தை ஆதி சங்கரர் “சரீராரம்பக  பூதனாம் பரணாத் பிராண ரூப தார” என்று விளக்குகின்றார் . அதாவது, அனைத்து ஜீவனையும், ப்ராண ரூபமாக தாங்குபவன் என்று பொருள்.

திருமங்கை மன்னனும் தன் பெரிய திருமொழியில்,
“நஞ்சு சேர்வதோர் வெஞ்சின அரவம்
வெகுவி வந்து நின் சரண் எனச் சரணாய்
நெஞ்சிற்கொண்டு நின் அஞ்சிறைப்பறவைக்கு
அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து
வெஞ்சொலாளர்கள் நமன் தமர் கடியார்..( பெரிய திருமொழி 5-8-4)  

என்று பதிவிடுகின்றார்.  இந்த சரிதம், மஹா பாரதத்தில், உத்யோக பர்வத்தில் பகவத்யான பர்வம் என்னும் அத்தியாயத்தில் உள்ளது. சரி, மேல் சொன்ன கதையில் சுவாமி ,ஏன் கருடனை, அந்த  சுமுகனை  காக்க சொல்லி கட்டளை இட்டார்? தாமே காத்திருக்கலாமே? என்றால், கருடனும், சுமுகனும் அவன் அடியவர்கள், கருடனை பொறுக்கச் சொல்லி நாகனை காத்தால், இருவருக்குள்ளும் பிணக்கு ஏற்படும். இப்படி செய்ததால் இருவருக்கும் பிணக்கு இல்லாமல் போனது என்று சொல்கிறார் பெரிய வாச்சான் பிள்ளை. மேல் சொன்ன திருமங்கையாழ்வார் பாடலுக்கு, அவர் விளக்கம் சொல்லுகையில் “ இனி இருவர்க்கும் ரஷ்ய - ரட்சக பவமிறே உள்ளது. பாத்ய பாதக சம்பந்தம் போய்விட்டதே” என்று அருளுகிறார்.

இப்படி கருடனின் ஆணவமும் அழித்து, சுமுகனின் அல்லல் களைந்து, இருவருக்கும் இடையில் நட்பையும் நிலைக்க வைத்த, புத்தி கூர்மையை ராமானுஜரும் வியக்கிறார். தன்னுடைய சரணாகதி கத்யத்தில் பகவத் குணங்களை பட்டியல் இடுகிறார். அதில் “சாதுர்யம்”  என்ற குணத்தை கூறுகின்றார். அதன் மூலம்  நமக்கு இந்த சரிதத்தையே உணர்த்துகின்றார் என்று வேதாந்த தேசிகர் தம்முடைய பாஷ்யத்தில் கூறுகிறார்.   

திருவெள்ளரை என்னும் திவ்ய தேசத்தில் இன்றும் இந்த அற்புத சரிதத்தை விளக்கும் சிற்பத்தை கர்ப கிருகத்தின் சுற்றுப்புற சுவரில் காணலாம். இப்படி வியாசராலும் நமது ஆச்சாரியார்களாலும் போற்றப்பட்ட திவ்ய சரிதம் இது. இதை கற்று உணர்ந்து கருடன் போல் ஆணவம் களைந்து, இக்கதை மூலம் பகவான் காட்டும் சாதுர்யம் முதலாய குணங்களை பாடி பரவி, அவன் அடி அடைவோம்.

- ஜி.மகேஷ்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-08-2019

  20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • wphotoday

  உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

 • carshowchennai

  சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

 • hongkongrally

  ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

 • 19-08-2019

  19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்