SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகைத்தார் நபிகளார்..!

2019-03-08@ 14:10:45

ரமலான் நோன்பு கட்டாயக் கடமைகளில் ஒன்று. ரமலான் மாத பகல் நேரங்களில் உண்ணுதல், பருகுதல், இல்லற உறவில் ஈடுபடுதல் ஆகியவை முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன. வேண்டுமென்றே ஒருவர் நோன்பை முறித்தால் அறுபது நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும் அல்லது அறுபது வறியவர்களுக்கு ஆடை தானம் அளிக்க வேண்டும் என்பது மார்க்கச் சட்டம். இச்சையைக் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் ரமலான் மாதத்தில் பகல் நேரத்தில் மனைவியுடன் உறவு கொண்டு விட்டார். மனசாட்சி உறுத்தவே நபிகளாரிடம் ஓடிவந்தார். “இறைத்தூதர் அவர்களே, நான் பாவம் செய்து விட்டேன். அதற்கான பரிகாரம் என்ன?” என்று கேட்டார்.

“அறுபது நாட்கள் தொடர்ந்து நோன்பு வையுங்கள். அதுதான் பரிகாரம்” என்றார் நபிகளார்.“முப்பது நாள் நோன்பிலேயே என்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை. அறுபது நாள், நான் எப்படித் தொடர்ந்து நோன்பு வைப்பேன்?” என்று கேட்டார் அந்த மனிதர். அதற்கு நபிகளார்,“சரி, அப்படியானால் அறுபது ஏழைகளுக்கு நடுத்தரமான உணவு வழங்குங்கள்” என்றார்.“அந்த அளவுக்கு என்னிடம் வசதி இல்லை இறைத்தூதர் அவர்களே..” என்றார் அந்த மனிதர். “சரி, அறுபது வறியவர்களுக்கு ஆடைகளை தானம் வழங்குங்கள்” என்றார் இறைத்தூதர்.“அதற்கும் என்னிடம் வசதி இல்லையே” என்றார் அவர். அந்தச் சமயத்தில் அரசுக் கருவூலத்திற்கு ஒரு கூடை நிறைய பேரீச்சம்பழம் வந்தது.

உடனே நபிகளார் அந்த மனிதரை அழைத்து,“இந்தக் கூடை நிறைய உள்ள பேரீச்சம்பழங்களை ஏழைகளுக்கு தானமாக அளித்துவிடுங்கள்” என்று கூறினார்.
 அந்த மனிதர் சற்றும் சளைக்காமல், “இறைத்தூதர் அவர்களே, மதீனா நகரின் இந்த முனையிலிருந்து அந்த முனை வரை என்னை விட ஏழை வேறு யாரும் இல்லை” என்றார்.இதைக் கேட்டதும் நபிகளார்(ஸல்) தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்துவிட்டார்.“சரி, இந்தப் பழங்கள் முழுவதையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டார்.செய்த தவறுக்குப் பரிகாரம் கேட்க வந்தவர் பழக்கூடையுடன் திரும்பினார்.மார்க்கச் சட்டங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்தான்; ஆனால் அதே சமயம்  நெகிழ்ந்து கொடுக்க வேண்டிய சமயங்களில் நெகிழ்ந்தும் கொடுக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சுவையான நிகழ்வை  சட்ட அறிஞர்கள்  மேற்கோள் காட்டுவதுண்டு. நபிகளாரின் பெருந்தன்மைக்கு மட்டுமல்ல, இஸ்லாமியச் சட்டங்கள் மிகுந்த நெகிழ்வுத்தன்மை உடையவை என்பதற்கும் இது சான்றாகும்.

இந்த வார சிந்தனை

“தீனில் மார்க்கத்தில் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் வைத்திடவில்லை.”(குர்ஆன்22:78)

சிராஜுல்ஹஸன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்