SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேய்க்கு அருளிய சிவன்

2019-03-06@ 09:43:49

ஸ்ரீ சண்டேஸ்வர பட்டம்  06.03.2019

வான் பொய்ப்பினும் தான் பொய்யா வளத்தனைய காவிரி எனப்பாடப்படும்  காவிரி ஆற்றின் கிளை நதியான மண்ணியாறு ஓடி வளங்கொழிக்கும் சோழ நாட்டில் அதன் கரையில் அமைந்து இருக்கும் ஒரு ஊர் சேய்ஞ்ஞலூர் எனப்படும் சேங்கனூர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சேங்கனூர். சேங்கனூரைச் சேர்ந்த அந்தணர்  எச்சதத்தன்  பவித்ரை ஆகியோரின் மகன் விசாரசர்மர். விசார சர்மன் வேத சாஸ்திர ஆகமங்களில்  பாண்டித்தியம் பெற்று இளமையிலேயே பல்கலைகளிலும் சிறந்து விளங்கத் தொடங்கினான். சிவபெருமானிடம் கொண்ட பேரன்பினால் விசாரசர்மனுக்கு இறைத் தொண்டில் ஆர்வமும் அதிகமாகியது. மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் ஒருநாள் பசுவை அடித்தபோது விசாரசர்மனுக்கு அப்பசு மீது இரக்கம் உண்டாயிற்று.  புனிதமான பசுக்களைக் காக்கும்  எண்ணத்தில் ஊரில் உள்ள மறையவர்களின் அனுமதியால் பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டான்.  

இவனது அன்பாலும்  அரவணைப்பாலும் பசுக்கள்  பல மடங்கு பால் கறக்கத் துவங்கின. நல்ல பராமரிப்பின் காரணமாக பல  சமயங்களில் பசுக்கள்  தாமாகவே நின்ற இடத்திலேயே  அதிகமான  பாலை பொழியத் தொடங்கின.  சித்தமெல்லாம் சிவனாகக் கொண்ட விசார சர்மன், பசுக்கள்  அதிகமாக தானே  பொழியும் பால் ஈசன்  அபிஷேகத்திற்கு உதவுமே  என  எண்ணினான்.  மண்ணியாற்றங்கரையில் உள்ள மணல் திட்டில் ஒரு  ஆத்திமரம் இருந்தது. அதன் கீழ் சிவலிங்கம் ஒன்றை மணலால் அமைத்தான்.  அதனைச் சுற்றிலும் திருக்கோயில், கோபுரம், மதில் முதலியன மணலாலேயே வருவினான்.  பால்குடத்தை  பசுக்களின் மடி  அருகில்  கொண்டு வைத்த உடன் அவை தாமாகவே  பாலைச் சொரிந்தன.  அதனை எடுத்துச் சென்று  மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தான். பறித்து வந்த  ஆத்திமலர் மற்றும் காட்டுப் பூக்களால்  பூஜை செய்தான். அபிஷேகத்திற்குப் பால் சொறிந்த பசுக்கள்  வீட்டிற்குச் சென்றபோதும் இறையருளால் முன்புபோலவே  குறைவின்றி பால் கறந்தன.

விசார சர்மன் தினமும்  ஆத்தி மரத்தினடியில் இருந்த மணல் லிங்கத்திற்கு பசுவின் பாலால்  சிவபூஜை செய்வதை ஒருவன் கண்டான். ஊரில் உள்ளவர்களிடம் பசும்பாலை மணலில் கொட்டி வீணாக்குகிறான் என்று கூறினான். எச்சதத்தனிடம் அவர்கள் இதுகுறித்து விசாரித்தனர். தான் கவனிப்பதாகக் கூறி, உண்மையை நேரில் கண்டு அறிய எச்சதத்தன் மறுநாள் ஒரு மரத்தின் மீதிருந்து நடப்பதைக் கவனித்தார். தன் மகன் சிவபூஜை செய்வதையும் கறந்த பால் கொண்டு அபிஷேகம் செய்வதையும் கண்டார். மரத்திலிருந்து இறங்கி வந்து ஒரு கோலினால் விசார சர்மன் முதுகில் ஓங்கி அடித்தார். விசாரசர்மாவின் மனமும் உடலும் சிவ பூஜையில் இருந்ததால் அடித்ததை உணரவில்லை. எச்சதத்தன் வெகுண்டு அங்கிருந்த பாற்குடங்களைக் காலினால் இடறிச் சிந்தினார். அவ்வாறு செய்த கால் இருந்த திக்கை நோக்கி தந்தை என்பதைக் கூட கவனியாமல் விசார சர்மன், ஒரு கோலை எடுத்து வீசினான். அக்கோல் சிவனுடைய மழுப்படையாக மாறி எச்சதத்தனது கால்களைத் துண்டித்தது. எச்சதத்தன் மணல் மேல் வீழ்ந்து இறந்தார்.  விசாரசர்மன் பூஜையில் வந்த இடையூறு நீங்கியது என்று எண்ணி வழிபாட்டைத் தொடர்ந்தான்.

விசார சர்மனது உறுதி,  ஈடுபாடு ஆகியவை சிவனை மகிழ்விக்க அவரது இணை சகியான தேவியுடன் ரிஷப வாகனத்தில் உடனே காட்சி தந்தார். அதை கண்டு மெய்சிலிர்த்த விசார சர்மன், சிவபெருமான் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். ஈசன் விசார சர்மனைப் பார்த்து  “நம்பொருட்டாக உம்மைப் பெற்ற தந்தையின் கால்களை வெட்டி இறக்கச் செய்தாய்.  ஆதலின் இனி நாமே உனக்கு தந்தை ஆயினோம்.” என்று கூறி  தம் மார்போடு அணைத்துத் தழுவி உச்சி முகர்ந்தார் விசார சர்மனும் சிவனுக்கு சேய் ஆனான். சிவனின் திருக்கரத் தீண்டல் பெற்ற விசார சர்மன் உடல் சிவ ஒளி கொண்டதாக ஒளிர்ந்தது. சிவன் விசார சர்மனை தனக்குத் தொண்டு செய்யும் திருத்தொண்டர் குழாங்களுக்கெல்லாம் தலைவராக்கினார். இனி தனக்குப் படைக்கப்படும் அனைத்தும்  உனக்குறியவை.  “நமக்கு நிவேதனம் செய்த உணவும், உடுத்த உடைகளும், சூடும் மலர் மாலைகள், அணிகலன்கள் முதலியன அனைத்தும் உனக்கே உரிமையாகும்படி “சண்டீசன்” என்னும் பதவியையும் தந்தோம்” என்று கூறித் தம் சடை முடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்து அவருக்குச் சூட்டினார்.

மேலும், “எம்மை வழிபட்டவர்கள் கடைசியில் உன்னைத் தரிசனம் செய்தால்தான் எம்மை வழிபட்டப் பலனைப் பெறுவார்கள்” என்ற வரத்தையும் அளித்தார்.  அதனால் எவ்வூரிலும் மஹாசிவராத்திரி அன்று சிவனை வழிபடுவதைவிட இவ்வூரில் வழிபடுவது சிறப்பானதாகும். 4 காலமும் அபிஷேகம் கண்டருளும் சிவனை வணங்கிடுவோருக்கு இவ்வுலகில் வேண்டியது மட்டுமில்லாமல் வேண்டும்போது  மறு உலகம் சென்று பிறவாப்பேரின்ப வாழ்வைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. அனைத்து தேவர்கள், சித்தர்கள், கனநாதர்கள், முனிவர்கள் ஆகிய அனைவரும் ”ஹர ஹர” என்று ஆரவாரித்து சண்டேசனை வாழ்த்தி மலர் தூவித் துதித்தனர்.  விசார சர்மரும் “சண்டேச்வர நாயனார்” ஆகி சிவபெருமான் திருவடி தொழுது சண்டீசப் பதவி எய்தினார். ஆத்தி மரத்தடியில் நிகழ்ந்த நிகழ்வின் நினைவாக மண்ணியாற்றங்கரையில் ஒரு சிறு ஆலயம் அமைத்தான் சண்டீசன்.  கால்கள் வெட்டப்பட்டு இறந்த விசார சர்மன் தந்தை எச்சதத்தன்  சிவதோஷம் நீங்கி சிவனருளால் உயிர்பெற்று திருக்கயிலாயத்தை அடையும் பேறு பெற்றார்.

சண்டன் என்றால் முரடன் என ஒரு பொருளும் இருப்பதாகக் கூறுவர். சிவன்பால் முரட்டுத்தனமான  பக்தி கொண்டவன் ஆதலால் விசார சர்மன் என்பதற்கு பதிலாக சண்டீசன் என மறுபெயர் சூட்டப்பட்டார் சூரனை அழிப்பதற்காக வந்த. சேய்  முருகன். சேய்க்கு நல்லதாக அமைந்த ஊராதலின் சேய் + நல் + ஊர் = சேய்ஞலூர் என்று பெயர் பெற்றது.  மக்கள் வழக்கில் ‘சேங்கலூர் ‘  சேங்கனூர்  என்று வழங்குகிறது. இத்தலத்திற்கு சத்யகிரி, குமாரபுரி, சண்டேச்வரபுரம் என வேறு காரணப் பெயர்களும் வழங்குகின்றன முருகன் இங்கிருக்கும் இறைவன் இறைவியிடம் சர்வ சம்காரப் படைக்கலத்தைப் பெற்றதால் சக்திகிரீஸ்வரர் எனவும் அவரது துணைவி என அழைக்கப்படும் பொருளில் சகிதேவி எனவும் அம்பாள் அழைக்கப்படுகிறாள். இறைவன் சக்திகிரீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருளுகிறார். எந்த ஊரிலும்  சிவனின் அம்பாள் பெயர் சகிதேவி என அமைந்திருக்கவில்லை. நான்கு கரங்களில் அட்சமாலையும், தாமரை மலரும் அபய வரத முத்திரையுடன் நின்ற கோலத்தில் மகா மண்டபத்திலிருந்தும் அம்பாள் அருளுகிறாள்.

அருகில் இரட்டை பைரவரும் சூரிய சந்திரரும் இருந்து அருளுகின்றனர். எல்லா சிவன்கோயில்களிலும் அருட்பாலிக்கும் சண்டிகேஸ்வரர் இத்தலத்தில் தான் அவதாரம் செய்தார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் மிகமிக இளைய வயது உடையவர் இவரே என்பதும், மற்றவர்களைவிட காலத்தால் முந்திய நாயன்மாரும் இவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. பாரத நாட்டில் எந்த சிவாலயத்திலும் சண்டிகேஸ்வரரை வணங்கா விட்டாலும் இந்த சிவ ரூப சண்டிகேஸ்வரரை வணங்கினால் நிச்சயப்  பலனுண்டு  என தெரிவிக்கப்படுகிறது. தினமும் இரண்டு கால அபிஷேகம் பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக காலை 7.30 மணி முதல் 11.00 மணிவரையும் மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் திறந்திருக்கும் சிவபெருமானுக்குப் பிள்ளைகள் நான்கு பேர் எனப்படும் பிள்ளைகளில் மூத்தவர் கணபதி, இளையவர் முருகன், மூன்றாவது  காழிப்பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தர், நான்காவதாக சேய்ஞலூர் செல்லப்பிள்ளை விசாரசர்மன் எனப்படும்   சண்டிகேஸ்வரர்  ஆகும். விசார சர்மன், சண்டேஸ்வரராக பட்டம் பெற்ற வைபவம் ஆண்டு தோறும் இந்த கோயிலில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 06.03.2019 அன்று நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்