SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைப்பேறு நல்குவாள் கோனியம்மன்

2019-03-04@ 10:09:37

நம்ம ஊரு சாமிகள் - கோவை

கோவை நகரின் மையப்பகுதி முந்தைய காலத்தில் ஓங்கி உயர்ந்து வளர்ந்து நின்ற மரங்கள் நிறைந்த அடர்ந்த காடாகவே இருந்தது. அந்த வனத்தை
சீர்படுத்தி, மலைவாழ் மக்களின் தலைவனான கோவன் சீர்படுத்தினான். அந்த வனத்தின் மையப்பகுதியில் பெரிய புற்று இருந்தது. பெரும்பாலும் நேராக இருக்கும் புற்று. ஆனால் இங்கே கோணலாக, அதாவது வளைந்து, நெளிந்து இருந்தது. நாகத்தின் மீது கொண்ட அச்சத்தால் அந்த புற்றை ஆட்களைக்கொண்டு இடித்து அகற்றினான் கோவன். அந்த பகுதியில் தம் மக்களோடு குடியேறினான். அந்த பகுதியை ஆட்சி செய்து வந்தான். புற்று இருந்த ஊர் புற்றூர் ஆனது. அதுவே புத்தூரானது. கோவன் ஆண்டு வந்த புத்தூர் என்பதால் கோவன்புத்தூர் என்றாகியது. ஒரு சமயம் கடும் பஞ்சம் நிலவியது.

குடிக்கவே நீரின்றி, மக்கள் வாழ வழியின்றி பரிதவித்தனர். சுத்தமான நீர் இல்லாததாலும், போதுமான உணவு கிடைக்காததாலும் பலர் நோய்வாய்ப்பட்டனர். சிலர் செத்து மடிந்தனர். அதனைக்கண்ட கோவன், புற்றை இடித்ததனால் தான் இந்த நிலை நமது பகுதிக்கு வந்து விட்டது என்றெண்ணி. நாகதேவதையை நினைத்து, தனது செயலுக்கு வருந்தினான். பின்னர் புற்று இருந்த இடத்தில் ஒரு கல்லை ஊன்றி அவளே படைக்கும் ஆற்றலும், காக்கும் ஆற்றலும் கொண்டவள் எனக்கூறி வழிபட்டு வந்தான். தம் மக்களையும் வழிபட வைத்தான்.  தனக்கு எல்லாமும் ஆனவள். என் தாய், இந்த புற்று அம்மன் தான். இவளே சக்தி வாய்ந்த தெய்வம். எனக்கு எல்லாமே இந்த அம்மா தான் என்று தன் மக்களிடம் அடிக்கடி கூறி வந்தான்.

இதன் காரணமாக அப்பகுதி மக்கள் ஏதாவது வேண்டுதல் என்றால் கோவன் அம்மாவிடம் முறையிட்டால் உடனே பலன் கிட்டும் என்று கூறி வந்தனர். அதுவே கோவன் அம்மன் என்றானது. பின்னாளில் அது மருவி கோவனம்மன், கோனியம்மன் என அழைக்கப்படலாயிற்று. கோவன்புத்தூரே பின்னாளில் கோயம்புத்தூரானது. கோனியம்மன் நகரின் நடுவில் கோயில் கொண்டு மக்களைக் காத்து வருகிறாள். கோனியம்மன் வடக்கு நோக்கி எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், கபாலம், அக்னி, சக்கரம், மணி ஏந்தி அமர்ந்த கோலத்தில் அருட்பாலிக்கிறாள். அம்மன் இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருக்கிறாள். அம்பிகையின் எதிரே சிம்ம வாகனம் உள்ளது. முன் மண்டபத்தில் லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இக்கோயிலில் ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை உண்டு.

இக்கோயிலில் ஒரு சிறப்பு என்னவென்றால் நவகிரஹங்கள் தம்பதி சமேதராக வீற்றிருக்கின்றனர். ஆண்டு தோறும் இக்கோயிலில் மாசி 14ம் நாள் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு தேரோட்டம் 6.3.2019 அன்று நடக்க உள்ளது. முந்தைய நாள் திருக்கல்யாணம் 5.3.2019 நடக்கிறது. காலை 6 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். இக்கோயில் கோயம்புத்தூர் பெரியகடை வீதியில் அமைந்துள்ளது. இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது. செவ்வாய், வெள்ளியில் இங்கு வந்து அம்மனுக்கு செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டால், நினைத்த காரியமெல்லாம் விரைவில் நடந்தேறும். தாலி பாக்கியம் நிலைத்திருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோயிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. 2008 ஆம் ஆண்டு இத்திருக்கோயிலின் நுழைவாயிலில் 83.3/4 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது. பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன. திருக்கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய ராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.

சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்