SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செய்ய வேண்டியதை செய்து கொண்டே இரு!

2019-03-04@ 10:08:14

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது - 5

உபநிஷதத்தில் ஒரு கதை உண்டு யட்சன். ஒருவனிடம் பஞ்சபூதங்கள் போட்டிக்கு வந்தன. அந்த யட்சனோ யாரையும் மதிக்காமல் இருந்ததால் அவனுக்கு பாடம் கற்பிக்க பஞ்சபூதங்களும் அவனை வம்புக்கு இழுத்தன. முதலில் அக்னி தேவன் வந்தான் “நீ யார் “என்று யட்சன் கேட்க “நான் அக்னிதேவன். என் இன்னொரு பெயர், ஜாதவேதன். அதாவது அனைத்தையும் அறிந்தவன் என்று பொருள். நான் உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன் மட்டுமல்ல. அவை அனைத்தையுமே  எரித்துவிடுவேன்” என்றான். உடனே யட்சன் ஒரு புல்லைத் தூக்கி முன்னே வைத்து “இதை எரித்துக் காண்பி” என்று கேட்க எவ்வளவு முயன்றும் கூட அக்னியால் அந்த ஒற்றைப் புல்லை எரிக்க முடியவில்லை. அவன் தோற்றுத் திரும்பினான்.

பின்னர் வாயுதேவன் அந்த யட்சனிடம் அனுப்பப்பட்டான். “நீ யார்” என்று யட்சன் கேட்க, “ நான் வாயுதேவன். என் இன்னொரு பெயர் மாதரீச்வன். வானவெளியில் சஞ்சரிப்பவன் என அதற்குப் பொருள். நான்  எந்த பொருளையும் எளிதில் சுமப்பேன்” என்று வாயுதேவன் பதில் சொன்னார் உடனே யட்சன் அந்தப் புல்லைக் காண்பித்து “இதைத் தூக்கு பார்க்கலாம்” என்றான். வாயுவால் முடியவில்லை இப்படி ஒவ்வொருவராக தோற்றுத் திரும்பினர். பிறகுதான் தெரிந்தது அந்த யட்சன் வடிவத்தில் கடவுள் வந்திருந்தார். பஞ்ச பூதங்களுக்கும் செயற்கரிய செயல்களை தாம்தான் செய்கிறோம் என்கிற அகந்தை வந்திருந்ததால் அவர் தன்னுடைய சக்தியை ஒவ்வொரு பூதத்திடமிருந்தும் விலக்கிக் கொண்டு விட்டார். அதனால், உலகையே இருக்கக்கூடிய அக்னிக்கும் உலகையே சுமக்கக்கூடிய வாயுவுக்கும் தாங்கள் வழக்கமாக செய்கிற வேலையை செய்ய முடியவில்லை.  கடவுள் துணையின்றி தங்களால் ஒரு புல்லைக்கூட அசைக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டார்கள்.

இந்தக் கதையை இரண்டு விதங்களில் புரிந்து கொள்ளலாம்.  ஒன்று கடவுள்  துணையில்லாமல் எந்த சக்தியாலும் செயல்பட முடியாது என்பது. இரண்டாவது அகங்காரமின்றி நம் கடமையை நாம் செய்து வந்தால் போதும், நம்  மூலமாக  கடவுள் செயல்படுகிறார் என்கிற  உத்திரவாதம். இதில் இரண்டாவது மனநிலைதான் முதல் தரமான மனநிலை. ஞானியர்கள் இந்த மனநிலையில்தான் இருந்தார்கள். தாங்கள் செய்யும் எல்லா செயலுக்கும் கடவுளையே பொறுப்பாக்கினார்கள். இது தங்கள் பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல் என்று சிலர் கருதலாம். ஆனால் அவர்கள் தங்கள் செயல்களின் விளைவுகளுக்குத்தான் கடவுளை பொறுப்பாக்கினார்களே தவிர தங்கள்  செயல்களுக்கு அல்ல இந்த மனநிலைக்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. திருநாவுக்கரசர் தன்னுடைய தேவாரத்தில்“தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று பாடினார். இது எல்லையில்லாத மனமுதிர்ச்சியின்
அடையாளம்.

கவுன்சிலரை தெரிந்திருந்தாலும் கூட வேலை செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆனால் ‘‘கடவுளையே எனக்குத் தெரியும். அவர் என்னைப் பார்த்துக் கொள்வார். என்னுடைய வேலைகளை நான் செய்துகொண்டே இருப்பேன்” என்று சொல்வது பக்குவப்பட்ட மனத்துக்கு அடையாளம். பதறாத செயலுக்கும் அடையாளம். இந்த சிந்தனையின் தாக்கத்தை நாம் மகாகவி பாரதியிடம் பார்க்க முடியும்.

“நமக்குத் தொழில் கவிதை; நாட்டுக் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல்;
உமைக்கினிய மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்”


என்றார் பாரதி. நாம் ஒருவிதமான எதிர்பார்ப்புடன் ஒரு பணியை செய்து முடித்து அதன் விளைவு வேறு மாதிரியாக இருந்தால் நம் மனம் ஒப்புக்
கொள்ளாது. பொதுவாகவே மனித மனம் எப்படி என்றால்: வெற்றி வந்தால் நான் பொறுப்பு; தோல்வி வந்தால் விதி பொறுப்பு “என்பதாகத்தான் இருக்கும்.
ஆனால் மாணிக்கவாசகர்,” இறைவனே செயல் என்மூலமாக நடந்தாலும் நீதான் என் மூலமாக செயல்படுகிறாய்” என்று  சொல்கிறார். நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்று கேட்கிறார். உள்ளபடியே சொல்லப்போனால் ஒருவன் தனக்கு நிகழ்கிற விஷயங்களை எவ்வித புகாரும் இல்லாமல் ஏற்றுக்கொள்கிற பக்குவத்தை தருவதற்காக உருவானதுதான் விதிக் கொள்கை. எப்படி என்று பார்ப்போம். ஒருவர் எவ்வளவு முயற்சித்தாலும் நன்மை வரவேண்டிய இடத்தில் தீமை வருகிறது.

அது மனித முயற்சியையும் தாண்டிய விளைவாக இருக்கிறது என்றால் அது விதி என்பதை மனிதன் புரிந்து கொள்கிறான் இந்த விதிக்கு இன்னொரு அழகான தமிழ்ச்சொல் வினை என்பதாகும். சிலர் கர்மவினை என்பார்கள். இது ஒரு பொருட்பன்மொழி. கர்மம் என்பது வினைக்கான சமஸ்கிருதச் சொல். வினை என்பது கர்மத்திற்கான தமிழ் சொல். நாம் ஒரு செயலை செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த செயலுக்கு எதிர்விளைவாக நன்மை வர வேண்டி இருக்கிறது. ஆனால் தீமை வந்துவிட்டது. இப்போது என்ன செய்யலாம் என்று அபிராமி பட்டரை நீங்கள் கேட்பீர்களேயானால் அவர் உங்கள் கேள்வியிலேயே ஒரு திருத்தம் செய்கிறார்.

உனக்கு தீமை வரவில்லை தீமை விளைந்திருக்கிறது என்று சொல்கிறார் அபிராமி பட்டர். எதை விதைக்கிறோமோ அது விளையும். ஆனால் விதை எப்படி நம் கண்ணுக்குத் தெரியாதோ அது போல நம் செயலாகிய வினை என்றோ செய்த வினை எங்கோ மறைந்திருக்கிறது. உரிய காலத்தில் விளைந்து தன்னுடைய இருப்பை உணர்த்துகிறது இதைத்தான்  “நன்றே வருகினும் தீதே விளைகினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை என்று” அபிராமி பட்டர் அம்பாளிடத்திலே தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறார் எனவே விதிக் கொள்கை என்பது ஒருவன் ஏதோ ஒன்றின் மேல் பழி போட்டு விட்டு எதையும் செய்யாமல் உட்காருவதற்காக அல்ல.

மாறாக, செயலின் விளைவு என்னாகுமோ என எண்ணி ஏங்கிக் கொண்டிராமல் செய்யவேண்டியதை செய்துகொண்டிருப்பதற்கான ஏற்பாடாகும். ஆக்கப்பூர்வமான இந்த அணுகுமுறையை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பாரத தேசத்தின் ஆழ்ந்த ஞானம் இதனை ஒரு கோட்பாடாகவே  “விதிக்கொள்கை” என அறிவித்தது. ஆனால் மேலை நாட்டுக் கல்வி செய்த தீமையின் விளைவாக பாரதத்தில் சொல்லப்படுவதெல்லாம் மூட நம்பிக்கைகளில் முளைத்தவை என்று பல மூடர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று சொன்னால் அது அவர்களுக்கு வறட்டு வேதாந்தமாகப்படுகிறது. இதையே every action as has an equal and an equal and opposite reaction என்று ஐன்ஸ்டீன் சொன்னார்.

மரபின் மைந்தன் முத்தையா

(தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-06-2019

  19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • bji

  முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

 • suvami

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

 • mango

  கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

 • earth

  சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்