SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேடனுக்கு முக்தியருளிய வில்வவன நாதர்

2019-03-04@ 09:44:41

மஹாசிவராத்திரி - 04.03.2019

மாசி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தசி நாள், மஹாசிவராத்திரியாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் ஒளிப் பிழம்பாய் நிற்க  பிரம்மாவும், திருமாலும் அவரது அடி முடியைத் தேடியது, தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட கடும் ஆலகால விடத்தை சிவபெருமான் அருந்தி அனைவரையும் காத்தருளியது. ஸ்ரீ மஹாவிஷ்ணு சிவபெருமானிடம் சக்கரம் பெற்றது. ஸ்ரீ பார்வதி தேவி கடுந்தவமியற்றி சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றது, பஞ்ச பாண்டவர்களின் ஒருவனான அர்ச்சுனன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பாசுபத அஸ்திரம் பெற்றது, 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் தன் கண் மலர்களை சிவபெருமானுக்கு அர்ப்பணித்து முக்தி பெற்றது. பகீரதன் தன் முன்னோர்களைக் கடைத்தேற்றும் பொருட்டு சிவபெருமானைக் குறித்து தவம் செய்து அவரருளால் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தது.

யமனைத் தண்டித்து என்றென்றும் மார்க்கண்டேயருக்கு பதினாறு வயதாக இருக்க  அருட்பாலித்தது ஆகிய இந்த அற்புதங்கள் அனைத்தும் நிகழ்ந்த நாள் மஹா சிவராத்திரி நாளே என்று புராணங்கள் கூறுகின்றன.  மஹாசிவராத்திரியின் மகத்துவத்தையும், புனிதத்தையும் எடுத்துக் காட்டும் வகையில் பல புராண நிகழ்வுகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று ஒரு வில்வ மரத்தின் மீது உட்கார்ந்திருந்த வேடன் ஒருவன் தன்னை அறியாது சிவராத்திரி அன்று கண் விழித்து, தான் தூங்காமல் இருக்கும் பொருட்டு வில்வ தளங்களைப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருக்க, அந்த வில்வ தளங்கள் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்திற்கு அர்ச்சனையாக அமைய, சிவனருளால் அவனுக்கு முக்தி கிடைத்தது. மஹாபாரதம், சாந்தி பர்வாவில் அம்புப் படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர் மஹா சிவராத்திரியின் மகத்துவத்தை பாண்டவர்களுக்கு கூறினார்.

சித்ரபானு என்ற அரசன் தான் முற்பிறப்பில் வேடனாக இருந்ததாகவும், தான் ஒரு நாள் வேட்டையாடும் பொருட்டு காட்டிற்குச் செல்கிறான். அங்கே ஒரு அழகான மானை கண்ட வேடன் அதனை வேட்டையாட துரத்துகிறான். இதை கண்ட அங்கு தவமியற்றிக் கொண்டிருந்த  தவநிதி என்ற முனிவர் மானைக் காப்பாற்றவேண்டி அவர் ஒரு புலியாக மாறி வேடனைத் துரத்தினார். வேடன் தன்னைத் துரத்தி வந்த புலியிடமிருந்து தப்பும் பொருட்டு ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். மரத்தில் ஏறிய வேடன் தான் தூங்கி விழுந்துவிடாமல் இருக்கும் பொருட்டு அந்த மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட அவை மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கத்திற்கு அர்ச்சனையாக அமைந்தது.  அவ்வாறு வேடன் கண் விழித்த நாள் மஹா சிவராத்திரி நாளாகவும் அமைந்ததால் சிவபெருமான் பெரு மகிழ்ச்சி அடைந்து வேடனுக்கு முக்தி அருளினார். அவனே சித்ரபானு என்ற மன்னனாக அவதரித்தான் என்றும் புராணம் கூறுகிறது.

இச்சம்பவம் நிகழ்ந்தது தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருவைகாவூர் என்ற திருத்தலமே என்று இத்தலத்திற்குரிய தல புராணம் தெரிவிக்கிறது. காவரி ஆற்றின் வடகரையில் உள்ள 63 திருத்தலங்களில் 48வது தலமாக உள்ள திருவைகாவூர்  சம்பந்தரால் பாடப் பெற்ற பெருமை கொண்டது. கும்பகோணத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இத்தலத்து இறைவன் ஸ்ரீ வில்வவனேஸ்வரர், ஸ்ரீ வில்வவன நாதர் என்றும் இறைவி ஸர்வ ஜன ரட்சகி, வளைக்கை நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். ஒரு காலத்தில் வில்வ மரங்கள் நிறைந்த காடாக  இப்பகுதி இருந்தபோது, ஒரு வில்வமரத்தின் கீழ் இறைவன் சுயம்புவாக  எழுந்தருளியதாக  ஐதீகம். சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் 11வது நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிவராத்திரி கதையில் கூறப்படும் வேடனின் ஆயுட் காலம் முடிந்துவிட்டதால் அவனைப் பிடிக்க யமன் இங்கு வந்த போது,  சிவனருளால் அவன் காப்பாற்றப்பட, துவார பாலகர்களும், நந்தியும் யமனை வெளியே துரத்தினாராம்.   எனவே  நந்தி இந்த ஆலயத்தில் இறைவனைப் பார்த்தவாறு இல்லாமல், நுழைவாயிலைப் பார்த்த வண்ணம் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. இந்த ஆலயத்தில் உள்ள நான்கு நந்திகளும் ஆலய கிழக்கு வாயிலை  நோக்கியே இருக்கின்றன. (இந்த ஆலயம்  போன்றே தொண்டை நாட்டு பாடல் பெற்ற  தலங்களான வட திருமுல்லை வாயில் ஸ்ரீ மாசிலாமணி ஈஸ்வரர்  மற்றும் வேலூர் அருகில் உள்ள திருவல்லம் வில்வ நாதீஸ்வரர் ஆலயங்களிலும் நந்தி சந்நதியை நோக்காது எதிர் திசை நோக்கி அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது) இந்த திருவைகாவூர் ஆலயத்தில்  துவாரபாலர்கள் இல்லை. மாறாக ஸ்ரீ மஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

யமதர்மராஜன் ஆலயத்திற்கு முன்புறம் ஒரு தீர்த்தத்தை ஏற்படுத்தி,  புனித நீராடி இறைவனை வழிபட்டதாக உள்ள ஐதீகத்தின் அடிப்படையில் இந்தக் குளம் யம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு, சப்தமாதர், பூமா தேவி  ஆகியோர் வழிபட்ட இத்தலம் . பூதேவி வழிபட்டதால் பூமிபுரம் என்ற பெயர் பெற்றது. பிரளயகாலத்தில் இறைவன் ஒரு வில்வமரமாகத் தோன்றியதாலும், இப்பகுதி வில்வமரங்கள் செறிந்த காடாக இருந்ததாலும் இது வில்வவனம் மற்றும் வில்வாரண்யம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. வேதங்களே வில்வ மரங்களாக இங்கு எழுந்தருளி இறைவனை வழிபட்டு வருவதாக ஒரு ஐதீகம். நுழைவாயிலை அடுத்து உள்ள மண்டபத்தின் தென்புறம் ஸ்ரீ மஹாசிவராத்திரியின் மகிமையைப் பறைசாற்றும் இத்தலத்துப் புராணக் கதையை நினைவூட்டும் வகையில் வேடன் வில்வமரத்தில் இருந்தபடி பூஜை செய்வதும், மரத்தின் கீழ் புலி காத்திருப்பதும், அவனுக்கு அருட்பாலித்த சிவபெருமானை வணங்கும் பொருட்டு பிரம்மா, விஷ்ணு ஆகியோர் சூழ்ந்திருப்பதும் தத்ரூபமாக சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளது கண்டு மகிழத்தக்கது.

இந்த ஆலயக் கருவறையில் சிவபெருமான் சுயம்புத் திருமேனியாக ஸ்ரீ வில்வவனநாதர் என்ற பெயரோடு  எழுந்தருளி அருள்கிறார். இறைவி ஸ்ரீ ஸர்வஜன ரட்சகி தனிச் சந்நதியில் இறைவன் போன்றே கிழக்கு நோக்கி அருள்கிறாள். தேவி முன்பாக ஸ்ரீ சக்ரம் உள்ளது. பக்தர்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் மாலை 6 முதல் 7.30 வரை இந்த சந்நதி முன்பாக நின்று தேவியை மனதாற வேண்டி தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தால், தேவி அவற்றை தீர்த்து வைப்பாள் என்று பக்தர்கள் நம்புகின்றனர். சண்டேசர் சந்நதியில் இரண்டு சண்டேசர்களைத் தரிசிக்கலாம். இங்கு வீணா தட்சிணா மூர்த்தியையும் தரிசிக்கலாம். சிவராத்திரி சிறப்பு வழிபாடு இத்தலத்திலேயே துவங்கியதாக ஐதீகம் உள்ளது. மஹா  சிவராத்திரி முடிந்து அமாவாசை நாளன்று வேடனுக்கு சிவபெருமான் முக்தி கொடுக்கும் நிகழ்ச்சி, பெரிய வைபவமாக இன்றும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 6.3.2019 புதன் கிழமை நடைபெறுகிறது. கும்பகோணம் திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள திருவைகாவூரில் ஸ்ரீ வில்வவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

விஜயலட்சுமி சுப்பிரமணியம்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-06-2019

  27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mo

  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

 • 4l

  ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

 • c1

  ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

 • b

  இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்