SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழுக்கும் அழகென்று பேர்!

2019-02-28@ 15:58:35

குறளின் குரல் - 99

அணிகள் கவிதைக்கு அழகு சேர்க்கின்றன. ஒரு பொருளை அலங்காரமில்லாமல் சொல்வதை விட, அலங்கரித்துச் சொல்வது, சொல்லப்படும் பொருளின் பால்  கவர்ச்சியை ஏற்படுத்தும். தண்டியலங்காரம் என்ற இலக்கண நூல், கவிதையில் தென்படும் அணிகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது.   கவிதைக்கு அழகு  சேர்க்கும் அணிகள் எண்ணற்றவை. அவற்றில் உவமையணி, அணிகளின் அரசி எனப் புகழப்படும் பெருமையுடையது.  வள்ளுவர் உவமையணியைக் கையாளும்  இடங்கள் ஏராளம்.
 
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.’ (குறள் எண் -100)

 ஒருவன் இன்சொல் இருக்க, அதைப் பயன்படுத்தாது கடுஞ்சொல் பேசுவது என்பது, இனிக்கும் பழம் இருக்கும்போது அதைத் தின்னாது புளிக்கும் காயைத்  தின்பதைப் போன்றது என்கிறார் வள்ளுவர். எல்லோரிடமும் கனிவாகப் பேசவேண்டும் என்று நாம் சொல்லும்போதே அந்தச் சொல்லில் கனி வந்து  விடுகிறதல்லவா!

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு!’  (குறள் எண் -129)

 நெருப்பால் சுட்ட காயம் ஆறிவிடும். ஆனால் நாவால் சுட்ட காயம் ஆறாது. நெருப்புக் காயத்தோடு சொல்லால் விளையும் காயத்தை வள்ளுவர் உவமிக்கிறார்.  இப்படி வள்ளுவர் சொல்லும் உவமைகள் இன்னும் எத்தனையோ. வள்ளுவர் கையாளும் உவமை ஒவ்வொன்றும் அழகும் தெளிவும் நிறைந்தவை. உவமையணி  வள்ளுவத்தில் தொட்ட இடமெல்லாம் கொட்டிக் கிடக்கிறது.

  தமிழ் கவிதை அணிகளில் சொற்பொருள் பின்வரு நிலையணி என்ற ஓர் அணி உண்டு. ஒரு சொல் அதே பொருளில் மீண்டும் மீண்டும் ஒரு கவிதையில்  வருமானால் அது அந்தக் கவிதைக்கு ஒரு தனி எழிலைக் கொடுக்கிறது. அவ்விதம் சொற்பொருள் பின்வரு நிலையணி அமையப்பெற்று அழகு பெற்ற  குறட்பாக்கள் திருக்குறளில் பல உண்டு.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
 துப்பாய தூஉம் மழை.’ (குறள் எண் - 12)

 உண்பவர்களுக்கு வேண்டிய உணவுப் பொருட்களை உண்டாக்கித் தருவது மழைதான். அதுமட்டுமல்ல, தானே உணவாகவும் அமையக் கூடியது மழை.  

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு!’ (குறள் எண் -86)

 வந்த விருந்தினரை வரவேற்று இனி வரும் விருந்தினரை எதிர்பார்த்துக் காத்திருப்பவன், வானுலகத்தில் உள்ளவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.’ (குறள் எண் -108)

  ஒருவன் செய்த உதவியை எந்தக் காலத்திலும்  மறக்கக் கூடாது. அப்படி மறப்பது நல்லதல்ல. ஆனால் ஒருவன் கெடுதல் செய்வானேயானால் அதை  அப்போதே மறந்துவிட வேண்டும். அதுவே நல்லது. அந்தக் கெடுதலை மனதில் வைத்துக் கொண்டு புழுங்கக் கூடாது.

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்.’ (குறள் எண் - 200)

 பயன் விளைவிக்கும் சொற்களையே சொல்ல வேண்டும். பயனற்ற வெற்றுச் சொற்களைச் சொல்லாமல் தவிர்த்து விட வேண்டும்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.’ (குறள் எண் -202 )

 தீய செயல்கள் தமக்கும் பிறருக்கும் ஒருசேரக் கெடுதல் விளைவிப்பவை என்பதால் அவற்றைத் தீயை விடத் துன்பம் தருவதாக எண்ணி விலக்கி  விடவேண்டும்.

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.’  (குறள் எண் - 236 )

  எந்தச் செயலில் ஒருவன் ஈடுபட்டாலும் அதில் புகழ் பெறுதற்குரிய தகுதியோடு ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் அதில் ஈடுபடாமல் இருப்பதே நல்லதாகும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.’ (குறள் எண் - 297 )

 ஒருவன் பொய்யாமையை உண்மையாகவே பின்பற்றுவான் எனில் அதுவே சிறந்த அறமாகும். செய்யக் கூடாத செயல்களைச் செய்யாமலிருத்தல் மேலும்
சிறப்பானதாகும்.

இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
கிடும்பை படாஅ தவர்!  (குறள் எண் -623)

 துன்பம் வந்தபோது அதற்காக அஞ்சிக் கலங்காதவர், அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து!’ (குறள் எண் - 645)

  சொல்லும் சொல்லை எதிர்த்து வெற்றி கொள்ளும் இன்னொரு சொல் இல்லாதவாறு, சொல்லைத் திறமையாகக் கையாள வேண்டும்.

பொருளல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.’ (குறள் எண் -751)

 ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிக்கத் தக்கவராக ஆக்குவது செல்வமாகும். இவ்விதம் செய்ய வல்லது பொருளைத் தவிர வேறொன்றுமில்லை.
 சொற்பொருட் பின்வரு நிலையணி தமிழின் பழம் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளது. வழிவழியாகப் பயின்றுவரும் அணி என்ற பெருமையை உடையது இவ்வணி.

வஞ்சியேன் என்றவன் தன் ஊருரைத்தான் யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ.’

  எனத் தமிழில் ஒரு பழைய வெண்பா உண்டு. வஞ்சி மன்னன் தன் ஊர் வஞ்சி என்றான். வஞ்சிக்க மாட்டேன் என்றான். அதனால் என்னை இழந்தேன். ஆனால்  வஞ்சி நாட்டு மன்னனான அவன் வஞ்சிக்க மாட்டேன் என்று உறுதி கூறியும் வஞ்சித்துவிட்டானே!` என்று தன் தோழியை வஞ்சி என அழைத்துத் தலைவி  சொல்வதாக அமைந்த பாடல் இது. இதில் வஞ்சி என்ற ஒரே சொல்லை அடுக்கடுக்காக அடுக்கி தமிழ் நயத்தை மிகுவிக்கிறார் புலவர்.

  சொற்பொருட் பின்வரு நிலையணி சிலேடை அணியோடு தொடர்புடையது. ஒரே சொல் மடக்கி மடக்கி வரும்போது பல்வேறு பொருள்களில் வருவதுண்டு.  இத்தகைய சிலேடை அணியை காளமேகப் புலவரிடத்தில் அதிகம் காணலாம். சிலேடைக்கோர் காளமேகம் என்றே அவர் போற்றப்படுகிறார். அண்மைக் காலத்தில்  வாழ்ந்த தமிழறிஞர் வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்கள் சிலேடையாகப் பேசுவதில் வல்லவர் என்பதால் அவரைத் தற்காலக் காளமேகம் என்றும்  உரைநடைக் காளமேகம் என்றும் சொல்வதுண்டு.
 
ஏனோ மகாகவி பாரதியார் சிலேடை அணியை அதிகம் கையாளவில்லை. காந்திமதிநாதன் என்பவர் `பாரதி சின்னப் பயல்’ என்று குறும்பாக ஒரு வெண்பா  ஈற்றடி கொடுத்ததும், காந்திமதி நாதனைப் பார்அதி சின்னப் பயல்’ என பாரதியார் இளம்வயதில் சிலேடையாகப் பாடினார் என்று ஒரு செய்தி உண்டு. தன்னைச்  சின்னப் பயலாக்க முயன்ற அவரை அதிசின்னப் பயல் ஆக்கிய இச்செய்தி அனைவரும் அறிந்த ஒன்று.

பாரதியார் கவிதைகள் தொகுப்பில் சரஸ்வதி வணக்கப் பாடலில்

வாணியைச் சரண் புகுந்தேன் - அருள்
   வாக்களிப்பாள் எனத் திடமிகுந்தேன்
பேணிய பெருந்தவத்தாள் நிலம்
  பெயரளவும் பெயர் பெயராதாள்!

  எனப் பெயர்’ என்ற சொல்லை ஒருவரின் பெயர்’ என்ற பொருளிலும் பெயர்த்து எடுப்பது’ என்ற பொருளிலுமாக இருபொருள்படக் கையாள்கிறார். மற்றபடி,  பாரதி இலக்கியத்தில் சிலேடை சார்ந்த பிரயோகங்கள் மிக மிகக் குறைவு. அந்தாதிப் பாடல்கள் ஒரே சொல்லை ஒரு செய்யுளின் இறுதியிலும் அடுத்த  செய்யுளின் முதலிலும் கொண்டு அமைபவை. அந்த வகையில் ஒரு சொல்லை அல்லது சீரை இரண்டு முறை கையாள்பவை. தமிழில் பிள்ளைப் பெருமாள்  ஐயங்கார் என்ற புலவர் எழுதிய திருவேங்கடத்து அந்தாதி என்ற நூல் மாபெரும் சாதனை நூல். அந்த நூலில் மூன்று நிபந்தனைகளுக்கு உள்பட்டுக்  கவிதைகளைப் படைத்துள்ளார் நூலாசிரியர்.

 ஒன்று அது அந்தாதி. எனவே ஒரு செய்யுளின் கடைசிச் சொல்லை அல்லது சீரை அடுத்த செய்யுளின் முதலில் அமைத்துப் பாடியுள்ளார். இதுவே கடினம்.     இன்னும் கடினமான பணி அந்த நூல் முழுவதும் கட்டளைக் கலித்துறை என்ற யாப்பு வகையில் அமைந்துள்ளது.  தமிழில் கட்டளைக் கலித்துறை மட்டும்தான்  எழுத்தெண்ணிப் பாட வேண்டிய இலக்கணத்தை உடையது. நேரசையில் தொடங்கினால் ஓர் அடியில் பதினாறு எழுத்து இருக்க வேண்டும். நிரையசையில்  தொடங்கினால் பதினேழு எழுத்து இருக்க வேண்டும். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் எழுத்தெண்ணிப் பாடத் தயங்கவில்லை. (எழுத்துக்களைக் கணக்கிடும்போது  ஒற்றெழுத்துக்களை நீக்கி மற்றவற்றைக் கணக்கிட வேண்டும் என்பது இலக்கண விதி.)

  இவையிரண்டும் அந்தாதி என்ற அமைப்பாலும் கட்டளைக் கலித்துறை என்ற பாடல் இலக்கண வகையாலும் அவருக்கு நேர்ந்தவை. இந்த இரு நிபந்தனைகள்  அவரின் அபரிமிதமான ஆற்றலுக்குப் போதவில்லை. எனவே அவர் இவற்றோடு மூன்றாவதாக இன்னும் ஒரு கட்டுப்பாட்டைத் தமக்குத் தாமே விதித்துக்  கொள்கிறார்!   ஒவ்வொரு பாடலிலும் இரண்டாம் சீர் ஒரே சொல்லாக மறுபடி மறுபடி நான்கு அடிகளிலும் நான்கு முறை வரும்படி அமைக்கிறார். ஆனால்  ஒவ்வொரு முறையும் அந்தச் சீர் பிரிந்து நான்கு வெவ்வேறு பொருளைத் தரும். இருபொருள் தரும் சொல்லை சிலேடை என்கிறோம். ஒரே சொல் நான்கு  பொருளைத் தருமானால் அதை என்னவென்று சொல்வது!
  இதோ எடுத்துக்காட்டாக திருவேங்கடத்து அந்தாதியில் ஒரு பாடல்:

மாயவன் கண்ணன்’ மணிவண்ணன் கேசவன் மண்ணும் விண்ணும்
தாயவன் கண்நன்’ கமலமொப்பான், சரத்தால் இலங்கைத்
தீய வன்கண்ணன்’ சிரமறுத்தான் திருவேங்கடத்துத்
தூயவன் கண்அன்’ புடையார்க்கு வைகுந்தம் தூரமன்றே!’

  இந்தச் செய்யுளில் கண்ணன் என்ற ஒரே சொல், கண்ணன், கண் கமலம் போன்றவன், வன்கண்ணனான ராவணன் சிரமறுத்தவன், அந்தத் தூயவன் கண் அன்பு  செலுத்தினால் வைகுந்தம் சேரலாம் என்று நான்கு விதமாகப் பொருள்படுவதைப் பார்க்கலாம். இத்தகைய அபாரமான மேதைமையைப் பார்த்து வியந்தவர்கள்,  பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் கடவுள் அருளால் பாடல் இயற்றினார் எனப் போற்றிக் கொண்டாடுவதில் ஆச்சரியமென்ன?

   திருக்குறள் அந்தாதி அமைப்பைக் கையாளவில்லை என்றாலும் தமிழ் எழுத்து வரிசையில் ஆதியில் அமைந்துள்ள எழுத்து திருக்குறளின் ஆதியாகவும், தமிழ்  எழுத்து வரிசையின் அந்தம் திருக்குறளின் அந்தமாகவும் இடம்பெற்று அழகு சேர்க்கின்றன. தமிழின் முதல் எழுத்தான அகரத்தில் ஆரம்பிக்கிறது திருக்குறளின்  முதல் குறளின் முதல் எழுத்து.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு.’

  தமிழ் எழுத்து வரிசையின் கடைசி எழுத்தான ன் என்ற மெய்யெழுத்தில், திருக்குறளின் கடைசிக் குறளின் கடைசிச் சீர் நிறைவு பெறுகிறது.

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்!’

 நீதிகளை வலியுறுத்தி எழுதப்பட்ட நீதி நூலில் நீதிகளோடு தம் அழகுணர்ச்சியையும் வள்ளுவர் புலப்படுத்துகிறார் என்பது திருக்குறளின் பெருமை. அதனால்தான்  திருக்குறளை நீதி நூல் என்பதோடு கூட, இலக்கியம் எனவும் கொண்டாடுகிறோம்....  ஒரு சில திரைப்பாடல்கள் கூட அந்தாதி அழகோடு அமைந்துள்ளன.  பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணதாசன் பாடல் அந்தாதி வகையைச் சேர்ந்தது.

வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின்
நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்துவந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்....’

  - என்று தொடங்கும் அந்தப் பாடல் முழுவதுமே இப்படி, முடிந்த சொல் மீண்டும் தொடங்கும் வகையில் அந்தாதியாக வளர்கிறது.  சொற்பொருள் பின்வரு  நிலையணி திருக்குறள் போன்ற கவிதை நூலில் மட்டுமா? உரைநடையிலும் கூட உண்டு. தமது தமிழ் நடைக்காகப் புகழ்பெற்ற எழுத்தாளர் தீபம் நா.  பார்த்தசாரதி, தமது படைப்புகளின் இடையே இந்த அணியைப் பல இடங்களில் கையாள்கிறார்.

அவள் பார்வையே பேச்சாக இருந்ததென்றால் அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது என ஒரு வாக்கியம். இதில் பார்வை என்ற சொல் இரண்டு முறை வந்து  இருவேறு பொருள்களைத் தருகின்றன. முதல் பார்வை, பார்க்கும் விழிப் பார்வை. இரண்டாம் பார்வை பரந்துபட்ட சமூகக் கண்ணோட்டம்.   தமிழ் என்றாலே  அழகு. அதன் இனிய சொற்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தித் தன் திருக்குறள் என்ற ஒப்பற்ற நூலுக்கு அழகு சேர்க்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அவர்  மீண்டும் மீண்டும் பயன்படுத்திய சொற்களை நாம் மீண்டும் மீண்டும் படிக்கும்போது நம் மனம் இலக்கிய இன்பத்தில் தோய்ந்து மகிழ்ச்சியில் ஆழ்கிறது. 

(குறள்  உரைக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்