SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறுமுகனை வேண்டுபவர்க்கு பெருவாழ்வு கூடும்

2019-02-27@ 17:55:32

அருணகிரி உலா - 70

தொழுதூர் - விருத்தாசலம் சாலையில் தொழுதூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள திருத்தலம் திருவரத்துறை என இன்று அழைக்கப்படும் திருநெல்வாயில் அரத்துறை. நிவா நதிக்கரையில் உள்ள இத்தலத்தில் தான் திருஞான சம்பந்தரை வெய்யில் வாட்டுவது கண்டு இறைவன் முத்துச் சிவிகையருளினார். ஊர் = நெல் வாயில்; கோயில்= அரத்துறை. இறைவன், ஆனந்தீஸ்வரர், தீர்த்த புரீஸ்வரர், அரத்துறைநாதர். இறைவி: ஆனந்தநாயகி, அரத்துறை நாயகி.

கோயிலுள் நுழைந்ததும் நந்தி, கொடி மரம் வணங்கி, தேவி திரிபுர சுந்தரியைத் தரிசிக்கிறோம். இரு புறமும் துவார சக்திகள் உள்ளன. விநாயகர், சரஸ்வதி ஆகியோரை வணங்கி வருகிறோம். கருவறை வாயிலிலுள்ள விநாயகர், முருகர், நந்தி ஆகியோரை வணங்கி சுயம்புலிங்கமான இறைவனைத் தொழுகிறோம். கிழக்கு நோக்கிய சந்நதி, கருவறைக் கோட்டத்தில் பிச்சாண்டவர், விநாயகர், நடராஜர் சிவகாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோரைத் தொழுகிறோம் மறுபுறம் பிரம்மா, சிவன், பார்வதி, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், கீழே தனிச் சந்நதியில் சண்டிகேஸ்வரர் ஆகியோரை வணங்கலாம்.

பிராகாரத்தை வலம் வரும்போது, விநாயகர், வால்மீகி, முனிவர், சப்தமாதாக்கள், மகாவிஷ்ணு, ஜோதிர்லிங்கம், அண்ணாமலையார், ஆதிசேஷன் ஆகியோரை வணங்கி முருகனைத் தரிசிக்கிறோம். தேவியருடன் அவன் கொலு வீற்றிருக்கும் அழுகைக் கண்டு மகிழ்ந்து திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்.

     ‘‘பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
     பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும்
பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
     ப்ரபல கொச்சையிற் ...... சதுர்வேதச்
சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
     சிவிகை யைக்கொடுத் ...... தருளீசன்
செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
     திருவ ரத்துறைப் ...... பெருமாளே.’’

‘‘பிறவிப் பிணியைத் தொலைத்தருளக் கூடிய உருவமற்ற முழுமுதற் பொருளான ஞானானந்தக் கடலில் மூழ்கும் பெரிய முனிவர் கூட்டங்கள் போற்றுகின்ற வயலூரில் [செய்ப்பதி] புகழ் விளங்க வீற்றிருப்பவனே! சீர்காழியில் நான்கு வேதங்களிலும் வல்லவனாய் தோன்றிய சிறுவனே![ நான்மறை வல்ல ஞானசம்பந்தன் எனச் சம்பந்தரே தம்மைப் பற்றிக் குறித்துள்ளார்] உன்பால் திருவருள் வைத்து முத்துக்குடையும், முத்துப் பல்லக்கும் கொடுத்தருளிய சிவன் வீற்றிருக்கும் திருஅரத்துறைப் பெருமாளே! பூமியில் புகழ் பெற்ற சத்திய வாசகப் பெருமாளே!

தண்டாயுதபாணி, சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயரிலுள்ள லிங்கங்கள், காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, அஷ்டோத்தரலிங்கம், கஜலட்சுமி ஆகியோரைத் தரிசித்து வெளியே வருகிறோம். வெளிப் பிராகாரத்தில் உள்ள நவகிரகங்களையும், தனிச்சந்நதியில் சனி பகவானையும் வணங்குகிறோம்.

சிதம்பரத்திலிருந்து 31 கி.மீ. தொலைவிலும், காட்டுமன்னார் கோயிலிலிருந்து 6 கி.மீ தொலைவிலும் உள்ள மேலக்கடம்பூர் திருத்தலம் நமது அடுத்த இலக்கு. 2 கி.மீ. தொலைவில் கீழக்கடம்பூர் எனும் தலமும் உள்ளது. இவ்விரண்டு தலங்களிலுமே, இங்கு தான் அருணகிரிநாதர் பாடினார் என்று கூறினார்கள். கீழ்க்கடம்பூரில் முருகன்
சந்நதி ஏதும் இல்லை. மொகலாயர் ஆட்சியில் சிதிலமாக்கப்பட்ட பல சிலைகள்  மீட்கப்பட்டு தொல் துறையாளர்களின் உதவியால் கோயிலில் வைக்கப்பட்டுள்ளன. கோயிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை வணங்கி மேலக்கடம்பூரை நோக்கிப் பயணிக்கிறோம்.

விநாயகரை வணங்காமல் தேவர்கள் அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு செல்லும் போது, கீழே விழுந்த ஒரு சொட்டு அமுதமே லிங்கமாக உருவாகியது என்றும் எனவே தான் மேலக்கடம்பூர் இறைவன் அமிர்த கடேஸ்வரர் என்று அழைக்கப்பட்டார் என்பது புராணம். கடம்பவனமாக விளங்கியதாலே இத்தலம் கடம்பூர் எனப்பட்டது. தலவிருட்சம் கடபமரம்.
கிழக்கு நோக்கிய வாயில். கொடிமரம் இல்லை. நேரே மூலவர் சந்நதி தெரிகிறது. வலப்புறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நதி. வித்யுஜோதிநாயகி என்ற பெயருடைய அம்பிகையை இன்று ஜோதி மின்னம்மை என்று அழைக்கின்றனர். மஹா பெரியவா அளித்த ஸ்ரீசக்ரம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெளி மண்டபத்தில் நவகிரகங்களும் உள்ளே நடராஜ சபையும் உள்ளன. சற்று சாய்ந்த நிலையில் ஆரவார விநாயகர் தென்படுகிறார். மூலவரும் ஒரு புறம் சாய்ந்து வீற்றிருக்கிறார். இந்திரன் தன், தாயார் பூஜை செய்வதற்காக வேண்டி கருவறையைத் தேர் பூட்டி குதிரைகளால் இழுத்துச் செல்லப்பார்த்த போது விநாயகர் வலக்காலை ஊன்ற தேர் நின்று விட்டது. தவற்றை உணர்ந்த இந்திரன் தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டான். கருவறை அடிப்பாகம் குதிரைகள் பூட்டிய தேர் போன்ற அமைப்பில் கல் சக்கரங்களுடன் உள்ளது.

   கருவறையின் வெளிப்புறத்தில் மிக அழகான சிற்பங்கள் உள்ளன. கன்னி விநாயகர், ரிஷபாரூடர், அகஸ்தியர், தேவேந்திரன், தட்சிணா மூர்த்தி, ரோமரிஷி ஆகியோரைக் காணலாம். வள்ளி தெய்வானை. சமேத அறுமுகனைக் கண்டு வணங்குகிறோம். அருணகிரியார் இத்தலத்தில் பாடிய ஒரு திருப்புகழ்.

    ‘‘நாரணன் சீராம கேசவன் கூராழி
     நாயகன் பூவாயன் ...... மருகோனே
நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு
     நாடகஞ் சேய்தாள ...... ரருள்பாலா
சூரணங் கோடாழி போய்கிடந் தேவாட
     சூரியன் தேரோட ...... அயிலேவீ
தூநறுங் காவேரி சேருமொண் சீறாறு
     சூழ்கடம் பூர்தேவர் ...... பெருமாளே.!

நாராயணன், ஸ்ரீ ராமன், கேசவன், கூர்மை கொண்ட சக்ராயுதம் தரித்த நாயகன், தாமரைப் பூப்போன்ற வாயை உடையவன் [அல்லது வாய்திறந்து பூவுலகை யசோதைக்குக் காட்டியவன்] ஆகிய திருமாலின் மருகனே!      நாரதர், தும்புரு இவர்கள் இசைபாட நின்று ஆடுகின்ற நடனத்தைச் செய்கின்ற திருவடிகளை உடைய சிவபெருமான்
அருளிய குழந்தையே!

[‘இலங்கும் ஏழிசை யாழ் எடுத்து யாவரும் உருகத்
துலங்கு நாரதர் தும்புரு முதலியர் பாட...
-சிதம்பர புராணம்]

     சூரனும் அவன் வருத்தும் செயல்களும் கடலிற் போய் அழியவும், சூரியனுடைய தேர் தங்கு தடையின்றி முன்பு போல் ஓடவும் வேலாயுதத்தைச் செலுத்தியவனே! [தனது நகராகிய வீர மகேந்திரபுரி வழியாகச் செல்லும் போது சூரியன் தனது உக்ரத்தை அடக்கி, இளங்கதிர் பரப்பிச் செல்ல வேண்டும் என்று சூரபத்மன் கட்டளை இட்டிருந்தான்]
  தூய நறுமணம் கமழ்கின்ற காவிரியுடன் சேர்கின்ற ஒளி பொருந்திய சிற்றாறு சூழ்கின்ற கடம்பூரில் வீற்றிருக்கும் பெருமாளே! தேவர் பெருமாளே! [ உற்சவ மூரத்தி
வில்லேந்திய வேலவனாக உள்ளார்]
      கடம்பூர் முருகனை வணங்கி, நால்வர், சரஸ்வதி, பாபஹரேஸ்வரர், வனதுர்க்கை, மஹாலட்சுமி ஆகியோரைத் தரிசிக்கிறோம். பர்வதராஜன், பிரம்மா, யமன், சித்ரகுப்தன், கங்காதரர், துர்க்கை இவர்களை வணங்கி வரும்போது, அம்பிகையைத் தன் தொடை மீது இருத்தி, அலிங்கன மூர்த்தியாக விளங்கும் சிவ பெருமானின் மிக அழகான சிற்பத்தைக் காணத் தவறாதீர்கள். சண்டிகேஸ்வரரை வணங்கி மீண்டும் கோயிலின் முன்புறம் வருகிறோம்.

    தச புஜரிஷப தாண்டவ மூர்த்தியின் மிக அழகான ஓவியம் ஒன்று வைக்கப்பட்டிருந்ததைக் காண்கிறோம். மிக பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள சிவபிரானின் சிற்பத்தை இவ்வாறு ஓவியமாக வரைந்து வைத்துள்ளனர். பிரதோஷ நாளன்று மட்டும் இம் மூர்த்தி வெளியே எடுத்து வரப்படுகிறார். ராஜேந்திர சோழனால் வங்காளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மூர்த்தி என்று கூறுகின்றனர். கி.பி.1110 ஆம் ஆண்டு முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்ட இக்கோயிற் பணியை மேற்பார்வை செய்து வந்த அரசனது ராஜகுரு பூஜித்த திருவுருவம் இது என்றும் கூறுவர்.

ரிஷபத்தின் மீது நின்றாடும் பெருமான் பத்துக்கைகளிலும் ஆயுதங்கள் தாங்கி வீசியவண்ணம் காட்சி அளிக்கிறார். கீழேயுள்ள பீடத்தில் உமை,திருமால், பைரவர், வீரபத்ரர், விநாயகர், நாரதர், பிருங்கி, ம்ருகண்டு, நந்தி, கந்தர்வர்கள் ஆகியோரைக் காணலாம்.  பிரதோஷமன்று அபிஷேகம் கொள்ளும் இத்திருவுருவம் தமிழில் ‘‘ஏறு கொண்ட பைந்தோள் ஆடல்வல்லான்’’ எனப்படுகிறார்.

‘‘நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
 தென் கடம்பை திருக்கரக் கோயிலான்
 தன் கடன் அடியேனையும் தாங்குதல்
 என் கடன் பணி செய்து கிடப்பதே’’
என்று வரும் அருமையான தேவாரப் பதிகத்தைப் பாடினார். ‘ நம் கடம்பனை’ என்று உரிமையோடு முருகப் பெருமானைக் குறிப்பிடுகிறார். [கடம்பன் - கடப்ப மாலையை அணிந்தவன்]

அமிர்தகடேஸ்வரரை ‘எமக்கமிர்த தோழர் என்று அருணகிரியாரால் பாடப்பெற்ற முருகப் பெருமானையும் வணங்கி மேலக்கடம்பூரிலிருந்து புறப்படுகிறோம். கடைஞாழல் எனப்படும் கடலூரின் ஒரு பகுதியாகவே விளங்கும் திருப்பாதிரிப்புலியூர் வந்து சேர்கிறோம். பாதிரி மரம் தல விருட்சம் புலிக்கால் கொண்ட வியாகர பாதர் பூஜித்த தலம். எனவே பாதிரிப் புலியூர் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லையம்பதி தென் புலியூர் என்றும் இத்தலம் வடபுலியூர் என்றும் அழைக்கப்பட்டது. பாதிரி என்ற சொல் வடமொழியில் பாடலம் எனப்படுவதால் இறைவன் பாடலீசுவரர் எனப்படுகிறார். அம்பிகை = பிரஹந்நாயகி, பெரிய நாயகி.

அருணகிரியார் இத்தலத்தை ‘ பாடல வளநகர்’ என்று அழகாகக் குறிப்பிடுகிறார். இறைவன் திருநாமங்கள் கரையேற்றும் பிரான், தோன்றாத்துணை என்றும் வழங்கப்படுகின்றன. ‘தோன்றாத்துணை’ என்பது அப்பர் தேவாரத்தில் வருகிறது. சமணர்களால் கடலுள் வீழ்த்தப்பட்ட அப்பர் சுவாமிகளைக் கடலினின்றும் கரையேற விட்டவர் இத்தலத்து இறைவனே என்பது பற்றி ‘கரையேற விட்டவர்’ எனும் திருநாமம் வழங்கலாயிற்று என்கிறார் உ.வே.சா அவர்கள். திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் அம்பிகையை ‘தோகை நாயகி’ என்று விளிக்கிறது.

 கிழக்கு நோக்கிய கோயில். முன்புறம் மண்டபம் உள்ளது. அருகில் சிவகர தீர்த்தம்; நீர் சுத்தமாயிருப்பது கண்டு மனம் மகிழ்ந்தது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்று பலிபீடம், கொடி  மரம், நந்தி வணங்கி, அடுத்த நுழைவாயிலருகே செல்கிறோம். இருபுறமும் விநாயகரும் தண்டாயுத பாணியும் அருட் பாலிக்கின்றனர். உள் மண்டபத்தில் தகடு வேயப்பட்ட 6 படிகள் ஏறிக் கருவறையை நோக்கிச் செல்கிறோம். அங்கும் பலிபீடம் நந்தி மற்றும் விநாயகரைத் தரிசிக்கலாம். உள் சுற்றில் சந்திரனை அடுத்து திருநாவுக்கரசர் உற்சவ மூர்த்தமும் மூல மூர்த்தமும் விளங்குவதைக் காணலாம். அமர்ந்த கோலத்தில் கையில் உழவாரப்படையுடன் காட்சி அளிக்கிறார்,.

அவரைக் கல்லில் பூட்டிக் கடலில் இட்ட போது, ‘சொற்றுணை வேதியன் ’ எனத்துவங்கும் பதிகம் பாடினார். கல்லையே தெப்பமாக வருணன் தன் கைகளால் தாங்கித் திருப்பாதிரிப்புலியூர் அருகே அவரைக் கரை சேர்த்தான். அவ்விடம் கரையேற விட்ட குப்பம்- வண்டிப்பாளையம் எனப்படுகிறது. சித்திரை அனுஷம் அன்று இறைவன் பாடலேஸ்வரர் வண்டிப் பாளையத்திற்கு எழுந்தருளுகிறார்.

பிராகார வலம் வரும்போது அறுபத்து மூவரைத் தரிசித்து, தல விநாயகராகிய சொன்னவாற்றி விநாயகரை வணங்குகிறோம். அம்பிகை இறைவனை வழிபட்ட போது உதவி செய்தமையால் அங்குச பாசத்திற்குப் பதிலாக கையில் பாதிரிமலர்க் கொத்துடன் காட்சி அளிக்கிறார். ‘காட்சி தந்த லிங்கம்’, மீனாட்சி சுந்தரேஸ்வரர், அருணகிரிநாதர் ஆகியோரை வணங்கி முருகப் பெருமான் சந்நதியை அடைகிறோம். கருத்துச் செறிவு மிக்க திருப் பாதிரிப்புலியூர் திருப்புகழை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

   ‘‘நிணமொடு குருதி நரம்பு மாறிய
தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
நிரைநிரை செறியு முடம்பு நோய்படு ...... முதுகாயம்
நிலைநிலை யுருவ மலங்க ளாவது
நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ ...... முயவோரும்
உணர்விலி செபமுத லொன்று தானிலி
நிறையிலி முறையிலி யன்பு தானிலி
உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை ...... வழியாமுன்
ஒருதிரு மரகத துங்க மாமிசை
யுபநிட மதனை விளங்க நீயருள் ...... புரிவாயே’’

  இதுபாடலின் முன்பகுதியாகும். மாமிசம், ரத்தம், நரம்பு, சதை, குடல், எலும்பு, தோல் இவை நெருங்கியுள்ள இவ்வுடம்பு நோய் உண்டாகும் உடலாகும் வயதுக்கேற்றபடி உருவமாற்றமும், மாசுகளும் உண்டாவதும், ஒன்பது துளைகளை உடையதுமான் சிறு குடிலாம் இந்த உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கும் பொழுதே வேண்டிய முயற்சிகளைச் செய்து, சிறந்த தவங்களை மேற் கொள்ளும் உணர்ச்சி ஏதும் இல்லாதவன் (நான்); ஜபங்களை மேற்கொள்ளாதவன்; செய்யத்தகாதவற்றை ஒதுக்கும் நற்குணமற்றவன்; நீதி, நெறி, முறைமை சிறிதுமற்றவன்; அன்பு செலுத்தாதவன்; உயர்ந்த வாழ்க்கை வாழும் லட்சியமற்றவன்; இத்தகைய பல இயல்பான குறைகள் என்னிடமிருப்பினும், என் அறிவு கலங்கி ஞாபகசக்தி அழியுமுன் ஒப்பற்ற, அழகிய, பச்சை நிறம் கொண்ட, பரிசுத்தமான மயிலில் வந்து உன் அழகிய ஆறுமுகங்களும் பிரகாசிக்க என் முன்னே தோன்றி நான்கு வேதங்கள், அவற்றின் முடிவான உபநிஷத்துக்கள் இவற்றின் உட் பொருளை எனக்கு உபதேசிக்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகிறார்.

சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்