SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கரும்பு துவர்க்கிறது! தேன் புளிக்கிறது!

2019-02-27@ 17:53:50

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் - 19

‘என்றும் எப்போதும் இன்பத்தையே அனுபவிக்க வேண்டும்’ என்பது தான் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கிறது. ‘துயரம் என்வாழ்வில் துளியும் தோன்றக்கூடாது. மகிழ்ச்சியிலேயே என் மனம் திளைக்க வேண்டும்’ என்பது அனைத்து மனிதர்களின் ஆசையாக இருந்தாலும் அந்த எண்ணம் யாருக்காவது ஈடேறி இருக்கிறதா என்று பார்த்தால் இசைவான பதில் எவரிடமிருந்தும் வருவதில்லை. ஆனால் பிரபஞ்சத்தின் பிரதான மூல ஔியாக பிரகாசிக்கும் இறைவனோடு இணைந்த ஞானிகளின் குரல் வேறு விதமாக ஒலிக்கிறது.

‘இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’

‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா! இறைவா!’ என்று பூரண இன்பத்தைப் புரிந்து கொண்ட புளகாங்கிதம் மகான்களின் வாக்கில் வெளிப்படுகிறது. சாதாரண மனிதர்களாகிய நாம் இன்பம் என்று நினைத்து தேடி அலையும் உலகப் பொருள்கள் எல்லாம் சிறிது அனுபவித்து ஆனந்தம் அடைந்த அடுத்த விநாடியே நமக்குக் கசந்து விடுகிறது. உடனேயே அடுத்த இடம் நோக்கி நம் மனம் அலை பாய்கிறது. தேடிய அப்பொருள் கைக்கு எட்டிய பின்பு அதை விட்டுவிட்டு மேலும் ஒன்றிற்கு நம் மனம் மீண்டும் ஆசைப்பட்டு அவதியுறுகின்றது. பேராசை என்னும் பெருங்கடலில் சிக்குண்ட சிறு துரும்பாக மனிதர்களின் மனம் ஓரிடத்தில் நில்லாது அங்கும் இங்கும் அல மருகின்றது.

‘இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு- அது
எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு’

என்று பம்பரமாக நம் மனம் சுழலுகின்றது.

‘பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஒரா வினாயேன் உழலத் தகுமோ?’

என்று கந்தர் அனுபூதியில் ஆறுமுகனிடம் முறையிடுகிறார் அருணகிரிநாதர். எப்படிப்பட்ட பேராசை மனிதர்களிடம் இருக்கிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிடுகிறது தாயுமானவரின் தமிழ்.

‘ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி
ஆளினும் கடல் மீதிலே
ஆணை செலவே நினைவர் அளகேசன் நிதராக
அம்பொன்மிக வைத்த பேரும்.
நெசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவார்
நெரு நாள் இருந்த பேரும்
நிலையாகவே இனும் காயகற்பம் தேடி
நெஞ்சு புண்ணாவர் எல்லாம்
யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவது ஆக முடியும்.
உள்ளதே போதும் நான் நாள் எனக் குளறியே
ஒன்றை வி்ட்டு ஒன்றி பற்றிப்
பாச - கடற்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்!
பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே!

உலகம் முழுவதையும் ஆளும் அரசன் கடற் பரப்பையும் தான் ஆள வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். குபேரனுக்கு நிகராக சொத்து சேர்த்த ஒருவன் செப்பைத் தங்கம் ஆக்கி மேலும் பொருள் சேர்க்க நினைக்கிறான். நீண்டகாலம் இவ்வுலகில் வாழ்ந்த ஒருவன் மேலும் ஆயுளை நீட்டிக்க என்ன வழி என்று யோசிக்கிறான். எனவே எவரும் எதிலும் பூரண திருப்தி பெறவில்லை காரணம் என்ன ? மனித மனம் ஒன்றை விட்டு மற்றொன்றை நாடும் இயல்பையே தன் நிரந்தர நடவடிக்கையாக ஆக்கிக் கொண்டுவிட்டது. கவலையற்று வாழும் ஞானிகள் போல எப்போதும் மனிதர்கள் இன்பமாக இருப்பதற்கு என்ன வழி?

ஆரா இயற்கை அவா நீப்பிள் அந்நிலையே
பேரா இயற்கை தரும்...... என்றும்
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.... என்றும் திருவள்ளுவர் கூறுகின்றார். எல்லாவற்றையும் விட மேலானது ஒன்று உள்ளது. அதற்கு நிகராக இவ்வுலகம் முழுமையும் தேடினாலும் வேறு ஒன்றை கண்டுபிடிக்க முடியாது.

ஆகச் சிறந்ததான அப்படி ஒன்றை ஒரு மனிதன் அடைந்துவிட்டால் அவன் மனம் ஏன் இன்னொன்றை நாடப் போகிறது? உவமை இல்லாத அப்படிப்பட்ட உன்னதப் பொருள் இறைவன் மட்டுமே! அவன் பாதகமலங்களைப் பற்றிவிட்டால் நம்பாத கமலங்கள் அடியோடு அற்றுப்போகும். கவலையே கடுகளவும் இல்லாத பரிபூரணக் களிப்பில் நாம் இருக்கலாம் என்கிறார் வள்ளுவர்.

எனவேதான். இறை இன்பத்தை பேரின்பம் என்றும் இவ்வுலக இன்பத்தைச் சிற்றின்பம் என்றும் நம் சான்றோர்கள் கூறுகின்றனர். மாணிக்கவாசகர் மனித மனத்தைப் பேரின்பம் நுகர்வதற்கு வா என்று அழைக்கும் விதமாக திருவாசகத்தின் திருக்கோத்தும்பி பகுதியில் பாடுகின்றார். ‘‘தினையளவே தேன் உள்ள பூவில், மனமாகிய வண்டே நீ ஏன் அமர்கின்றாய்! அப்பூவில் உள்ள தேன் விரைவில் தீர்ந்துவிடும்! பிறகு அடுத்தடுத்து வெவ்வேறு பூக்கள் இருக்கும் இடம் நாடி வீணாக நீ பறந்து அலைய வேண்டும்! இறைவனின் திருப்பாத கமலங்களை நீ விரும்பி அங்கு சென்று தேன் அருந்தினால் காலம் முழுவதும் கவலையின்றி பேரின்பத் தேனை அருந்திக் கொண்டே இருக்கலாம் என அதியற்புதமாக ஆலோசனை கூறுகின்றார். இதயம் கவரும் இலக்கிய நயம் துலங்க, சிறந்த சொல்லாட்சியுடன் சுடர் விடும் அந்த திருவாசகப்பாடலைப் பார்ப்போமா?

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே
நினைத்தொறும், காண்தொறும், பேசுந்தொறும் எப்போதும்
அனைத்து எலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பி!

மாணிக்கவாசகரின் வேண்டுகோளுக்கு ஏற்ப நம் மனம் பேரின்ப மலர்த் தேனைப் பருகிவிட்டால் போதும். அடுத்தவிநாடியே இதுவரை, நாம் அனுபவித்த இகலோக
இன்பங்கள் வேம்பாகக் கசக்கும். அருணகிரிநாதரின் ஒரு வாழ்க்கை அனுபவம் மூலமாக இதைக் காணலாமா! ஆறுமுகப் பெருமானின் தரிசனமும், உபதேசமும் பெற்ற அருணகிரியார்க்கு வாழும் காலத்திலேயே பெரும் புகழ் வாய்த்தது.

பூர்வ பட்சிம தட்சிண உத்தர திக்குள
பக்தர்கள் அற்புதம் என ஓதும்
சித்ர கவித்துவ சத்தம் மிகுத்துத்
திருப்புகழைச் சிறிது அடியேனும்
செப்பென வைத்து உலகிற் பரவ
தரிசித்த அனுக்ரகம் மறவேனே!

என்று அருணகிரியாரே தாம்பெற்ற புகழ் அனுபவத்தைப் புள காங்கிதத்துடன் கூறுகின்றார். ஒருநாள் அவர்மேல் அன்பு வைத்த அடியார்களில் ஒருவர் தேனும், இன்னொரு பக்தர் கரும்பும் கொண்டுவந்து தந்தனர். ‘அன்புகூர்ந்து எங்களின் பிரசாதமாக இவ்விரண்டையும் ஏற்று அமுது செய்து அருளல் வேண்டும்’’ என்று கூறினர். ‘இந்தக் கரும்பும், தேனும் அவ்வளவு விசேஷமானதா! எங்கிருந்து இதைப் பெற்றீர்கள்? என்று கேட்டார் அருணகிரிநாதர்.

 ‘ஒருவர் பதில் அளித்தார் இந்தக் கரும்பு முழுவதுமே இனிக்கும் தன்மை கொண்டது. பொதுவாக கரும்பின் அடிப்பகுதி இனிக்கும். மேல் பகுதி கசக்கும். மேலும் கணுக்களும் அதிகமாகக் காணப்படும். இந்த விசேஷக்கரும்பு அமுதம் போன்ற சுவையுடன் அதிகம் கணுக்கள் இல்லாது முழுபாகமும் தித்திக்கும் தன்மை கொண்டது மற்றொருவர் சொன்னார். நான் எடுத்து வந்துள்ள தேன் அவ்வளவு எளிதில் கிடைக்காது.

பூவிற் சிறந்ததாமரையில் அமர்ந்து தேனீக்கள் தேன் பருகி
சந்தன மர உச்சியிலே கூடுகட்டி சேமித்து வைத்த மதுரமான தேன் இது.
தாமரைத் தண் தாது ஊதி மீ மிசை
சாந்தின் கொடுத்த நீந்தேன்’

என்று சங்கப்பாடல் புகழ்கிறது. இருவரின் பதிலையும் கேட்டபிறகு அப்படியா! மிகவும் சந்தோஷம் கரும்பை முதலில் கடித்துப் பார்க்கிறேன்! பிறகு தேனையும் அருந்திச் சுவைக்கிறேன் என்றார். கரும்பைக்கடித்த அருணகிரியார் முகத்தைச் சுருக்கினார். பிறகு தேனை அருந்திய அவர் தித்திக்கவே இல்லையே என்றார். இருவரும் பதற்றத்துடன் ‘சுவாமி ! உங்களுக்கு உடம்பு சரியில்லையா அல்லது மனதில் ஏதாவது குழப்பமா?’ என்று கேட்டனர். அருணகிரிநாதர் மொழிந்தார்.

அன்பர்களே! ஆறுமுகப் பெருமானை வழிபடுவர்க்கு உடலும், உள்ளமும் ஒரு நாளும் ஊனப்படாது. எனக்கு ஏன் தேனும் கரும்பும் தித்திக்கவில்லை தெரியுமா? முருகப் பெருமானின் பேரானந்த அனுபூதியிலே நான் திளைத்திருக்கும் பொழுது அழியும் இவ்வுலகில் அற்ப சுகங்கள் எனக்கு எவ்வாறு ஆனந்தம் ஊட்டும்? அதனால்தான் கரும்பு துவர்க்கிறது. தேன்புளிக்கிறது.

‘பெரும் பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற
பேதை கொங்கை விரும்பும் குமரனை, மெய் அன்பினால்
 மெல்லமெல்ல உள்ள அரும்பும் தனிப்பரமானந்தம்
தித்தித்து அறிந்த அன்றே கரும்பும் துவர்த்து
செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே.

மேற்கண்ட ஆனந்த அனுபவத்தை அடியேனும் பெற திருப்போரூர் கந்தசாமியே! தாங்கள்தான் பேரருள் புரிய வேண்டும் என்று விண்ணப்பம் செய்கிறார் சிதம்பர சுவாமிகள்

‘அருணகிரிநாதர் அனுபவம் நாயேற்குக்
கருணை பொழி போரூரா காட்டு!

பேரின்பம் பெற நாமும் மனம், மொழி, மெய்யால் இறைவனை வேண்டுவோம்!

திருப்புகழ் திலகம் மதிவண்ணன்

(இனிக்கும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-07-2019

  23-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • Chandrayaan2Isro22

  இந்திய விண்வெளியில் புதிய அத்தியாயத்தை எட்டவுள்ள சந்திராயன்-2: வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட புகைப்படங்கள்

 • DornierAircraftNavy

  இந்திய கடற்படையின் கிழக்கு பிராந்தியதிற்க்காக நாட்டுக்கு அற்பணிக்கப்பட்ட டார்னியர் விமானங்கள்: புகைப்படத் தொகுப்பு

 • SicilyMountEtna22

  சிசிலி தீவில் வெடித்து சிதறிய ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா: தீப்பிழம்புகளை கக்கிய புகைப்படங்கள்

 • IcelandPilotWhale

  ஐஸ்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 50க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள்: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்