SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெற்றிகள் தரும் வெற்றிலை மாலை வழிபாடு

2019-02-27@ 09:44:45

சென்னை-மயிலாப்பூர்

வெற்றிலை மாலை போட்டு வேண்டினால் வேண்டியதை வேண்டியவாறே அருளும் வீரபத்திர சுவாமி திருக்கோயில் சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி, மாதவப் பெருமாள் கோயில்களின் அருகே அமைந்துள்ளது. இது ஒரு பிரார்த்தனை தலமாகும். இங்கு மூன்று பௌர்ணமி தினங்களில் சேர்ந்தாற்போல் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாத்தி அர்ச்சனை செய்து மனமுருகி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இத்தலத்தில் இவர் கல்யாண வீரபத்திரராக அருட்காட்சி அளிக்கிறார். விதியை மாற்றும் வீரபத்திரர் என இவரை பக்தர்கள் அன்புடன் வழிபடுகின்றனர். தட்ச யாகத்தை அழித்து கோபத்துடன் திரும்பிய வீரபத்திரருக்கு வெற்றிலைக்கொடியுடன் கூடிய இத்தலத்தை அடைந்தவுடன் அவருக்கு மனதில் இனம் புரியாத அமைதி ஏற்பட்டது. வெற்றிலையின் நறுமணம் அவருக்கு மேலும் அமைதியைத் தந்தது.

அன்று முதல், வெற்றிலை அவருக்கு பிடித்த ஒன்றாக மாறியது. இத்தலத்தில் சினம் தணிந்த வீரபத்திரர் சாந்தமூர்த்தியானவுடன், தாட்சாயணியான பார்வதிதேவி அவர் முன் தோன்றி தன் வளர்ப்புத் தந்தையின் அறியாமையை மன்னித்து அவரை உயிர்பெறச் செய்யுமாறு வேண்டினாள். எனவே வீரபத்திரர் தட்சப்பிரஜாபதியை உயிர்த்தெழச் செய்தார். தட்சன் தன் தவறை மன்னிக்கும்படி வேண்டி சாமவேதங்களை இசைத்தான். அதனால் மனம் மகிழ்ந்த ஈசனின் அம்சமான வீரபத்திரர் தட்சனிடம் என்ன வரம் வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு தட்சன் தன் மகள் தாட்சாயணியின் திருமண வைபவத்தை தான் காண வேண்டும் என வரம் கேட்க அதற்கு பதிலளித்த வீரபத்திரர் தாட்சாயணியை பங்குனி உத்திர நன்நாளிலே திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். தாட்சாயணி தன் வளர்ப்பு தந்தைக்கு அபயம் தந்ததால் அன்று முதல் அபயாம்பாள் என வணங்கப்படுகிறாள்.

ஒரு பங்குனி உத்திர நன்நாளில் முப்பத்து முக்கோடி தேவர்கள் புடைசூழ திருமால் தன் தங்கையின் திருமண வைபவத்தை சீர் கொண்டு வந்து நடத்தினார். அன்று முதல் இத்தல வீரபத்திரர் கல்யாண வீரபத்திரர் என போற்றப்படுகிறார்.இத்திருக்கோயில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது. ஆலயத்தில் சிவசுந்தர விநாயகர், வீரபத்திரர், அபயாம்பாள், ஆதிசங்கரர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யர், சரபேஸ்வரர், விருபாட்சீஸ் வரர் எனும் அஷ்டலிங்கேஸ்வரர், விசாலாட்சி, சீர்கொண்டு வந்த பெருமாள், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, காலவீரபைரவர், விருட்ச கணபதி, சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை என அருளாட்சி புரிந்து வருகின்றனர். சனீஸ்வரர், நவகிரகங்கள், தியான அனுமன் ஆகியோர் இங்கு தனி சந்நதி கொண்டுள்ளனர். ஆலயத்தில் உள்ள அனைத்து விநாயகப் பெருமான்களும் வடக்கு நோக்கியே எழுந்தருளியிருப்பது சிறப்பான அம்சம்.  

பங்குனிப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும் திருத்தலம் இது. அத்திருவிழாவின் கடைசி நாளான பங்குனி உத்திர நாளில் வீரபத்திரருக்கும் அபயாம்பாளுக்கும் திருக்கல்யாணம் மிகச் சிறப்பாக நடைபெறும். அன்று தட்சனுக்கு வீரபத்திர சுவாமி திருக்கல்யாண காட்சியை அருள்வார். பெருமாள் தன் தங்கையான பார்வதியின் திருக்கல்யாண வைபவத்தை சீர் கொண்டு வந்து நடத்தித் தருவது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். சித்ராபௌர்ணமி, ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணி மூலம், புரட்டாசி நிறைமணிகாட்சி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் (அன்று அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரம்), மார்கழி ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி கடலாடு உற்சவம், கந்தசஷ்டி உற்சவம் என ஆண்டு முழுவதும் விழாக்கோலம் காணும் வீரபத்திரரை வணங்கி சகல பாக்கியங்களும் பெறுவோம். ஆலயத் தொடர்புக்கு: 09444383532.
 
ந.பரணிகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 14-12-2019

  14-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • po13

  கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு வண்ணமயமான ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட போலந்து: ஜொலிக்கும் புகைப்படம்

 • wagle_hunttt

  கஜகஸ்தானில் பாரம்பரிய போட்டி : கழுகுடன் வேட்டைக்கு செல்லும் கசாக் மக்கள்

 • modi13

  நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

 • 3dhmes_111

  3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்