SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலமெல்லாம் காப்பாள் காத்தாயி

2019-02-25@ 15:48:36

நம்ம ஊரு சாமிகள் - மரத்துறை  தஞ்சை

'காத்தாயி’ என்ற சொல்லுக்கு, தன்னை நாடி வந்து வணங்கும் அன்பர்களின் கல்யாண வேண்டுதலை, ஓர் அயன காலத்துக்குள் நிறைவேற்றி அருள்பவள் என்றே பொருள் கொள்ளலாம். அதாவது காத்தாயியை வழிபட்டால் ஆறு மாத (ஓர் அயனம்) காலத்துக்குள் திருமண பாக்கியம் கிடைக்குமாம். முன்னொரு காலத்தில் காதா என்ற முனிவருக்கு காதயா என்ற மகன் இருந்தான். காதா முனி பெண் பிள்ளை வேண்டும். அதுவும் அந்த பராசக்தியே மகளாக பிறக்க வேண்டும் என்று கடும் தவம் செய்து துர்கையை மகளாக பெற்றார். அதனால் இவளுக்கு ‘காத்யாயனி’ என்ற பெயர் வந்தது. அதுவே கிராமப்புறங்களில் காத்தாயி என்று அழைக்கப்படலாயிற்று. ஸ்ரீகிருஷ்ணரை அடைவதற்கான தடைகள் நீங்க வேண்டும் என விரும்பிய கோபியர், ஒருநாள் கானகத்தின் வழியில் காத்யாயன மகரிஷியைச் சந்தித்தனர். அவரை வணங்கி, தங்களது பிரச்னைக்குத் தீர்வு வேண்டினர்.

உடனே அவர் தன் வாக்கிருந்து வந்த பீஜ மந்திரங்களைக் கொண்டு காத்யாயினி தேவியை உருவாக்கித் தந்து, ‘இந்த தேவியை வழிபட்டால், விரைவில் தடைகள் நீங்கும்’ என்று உபதேசித்ததாக புராணத் தகவல் ஒன்றும் உண்டு. குருக்ஷேத்திரப் போரின் இறுதிக் கட்டமான 18ஆம் நாள். பீமனுக்கும் துரியோதனனுக்கும் நடந்த கதாயுத யுத்தத்தில், துரியோதனன் தொடை பிளக்கப்பட்டு, குற்றுயிராகக் களத்தில் வீழ்ந்து கிடந்தான். யாருமின்றித் தனியனாகக் களத்தில் விடப்பட்ட துரியோதனனை, போரில் மடியாமல் இருந்த அஸ்வத்தாமன் சந்தித்தான். அஸ்வத்தாமன் கௌரவர்களின் குருவான துரோணாச்சார்யரின் மகன். பிறப்பால் அந்தணன். தந்தையைப்போல அஸ்திர சாஸ்திரத்தில் திறமை மிக்கவன். மந்திர தந்திர சாஸ்திரங்களில் தந்தையையும் மிஞ்சியவன். தன் தந்தை துரோணரைக் கொன்ற காரணத்தால், அவன் பாண்டவர்களைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான்.

தன் அருமை நண்பன், கௌரவச் சக்கரவர்த்தி கோரமாக யுத்தக்களத்தில் வீழ்ந்து கிடக்கும் காட்சியைக் கண்ட அஸ்வத்தாமனின் மனம் கொதித்தது. சிரத்தைக் கொய்யாமல், தொடையில் கதையால் அடித்து, அவனைச் சிறுகச் சிறுகச் சாகும்படி செய்த பாண்டவர்கள் மீது துரோண புத்திரன் அஸ்வத்தாமன் கடும் கோபம் கொண்டான். செஞ்சோற்றுக் கடனுக்காக, தான் என்ன செய்ய வேண்டும் என்று துரியோதனனிடம் கேட்டான் அஸ்வத்தாமன். ‘எப்படியாவது பாண்டவர்களைப் பழி வாங்க வேண்டும்’ என்று அஸ்வத்தாமனிடம் முறையிட்டான் துரியோதனன். மரணத்தின் வாயிலில் நின்றுகொண்டு, நன்றிக்கடனாக தன்னிடம் வேண்டிக் கொள்ளும் கௌரவச் சக்கரவர்த்தியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதைத் தன் முக்கிய கடமையெனக் கருதினான் அஸ்வத்தாமன். ஏற்கெனவே, தன் தந்தையின் மரணத்துக்காகப் பாண்டவர்கள் மேல் வெறுப்புற்றிருந்தவனுக்கு, இப்போது அதற்கும் சேர்த்து பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியது. துரியோதனன் விரும்பிய வண்ணமே செய்வதாக வாக்களித்துவிட்டுப் புறப்பட்டான்.

இரவு நேரம்… எதிரிகளின் பாசறைக்குச் சமீபமான வனத்தின் ஓர் ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தான். பாண்டவர்களை எப்படி அழிப்பது என்று தீவிரமாகச் சிந்தித்தான். அந்த மரத்தின்மேல் இருந்த கூட்டில் காக்கைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அப்போது, ஒரு கோட்டான் அங்கே வந்து, உறங்கிக்கொண்டிருந்த காக்கைகளைக் கொத்தித் தின்றது. இரவில் கண் தெரியாமல், எதிரி யாரென்றும் அறியாமல், எதிர்க்கவும் முடியாமல், காக்கைகள் உயிர் விட்டன. அந்தக் கோட்டான், காக்கைகளைக் கொன்றதுபோல உறங்கிக்கொண்டிருக்கும் பாண்டவர்களையும், பாண்டவ புத்திரர்களையும் கொன்று, பாண்டவ வம்சத்தையே இரவோடு இரவாகப் பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டான் அஸ்வத்தாமன்.பாண்டவர்களின் பாசறைக்குச் சென்று, உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களின் புத்திரர்களை ஒவ்வொருவராக வெட்டிச் சாய்த்தான். பாண்டவர்கள் மட்டும் அந்த நேரம் அங்கில்லாமல் போகவே, அவர்கள் உயிர் தப்பினார்கள். பொழுது புலரும் நேரத்தில் பாசறைக்குத் திரும்பிய பாண்டவர்கள், தங்கள் புத்திரர்கள் அனைவரும் கோரமாக மடிந்து கிடப்பதைக் கண்டனர்.

இது அஸ்வத்தாமன் வேலை என்றறிந்த ஐவரும் கொதித்து எழுந்தனர். வனத்தில் ஓடி, மறைந்திருந்த அஸ்வத்தாமனை தேடிச் சென்றனர். போருக்கு அறைகூவினர். நேருக்கு நேர் போர் செய்ய இயலாத அஸ்வத்தாமன், ஒரு தர்ப்பையை மந்திரித்து, அதனையே அஸ்திரமாக்கி, பாண்டவர்களின் சந்ததி அனைத்தையும் அழிக்கும்படி ஆணையிட்டு அதை ஏவினான். காலசர்ப்பம் போல விஷத்தைக் கக்கிக்கொண்டு புறப்பட்டது அந்த தர்ப்பை அஸ்திரம். பாண்டவர்கள் அதை எதிர்த்து அஸ்திரங்களைத் தொடுத்தனர். ஆனால், அந்த தர்பாஸ்திரம் தங்களைத் தாக்காமல் காத்துக்கொள்ள முடிந்ததே தவிர, அவர்களால் அந்தத் தர்ப்பையை அழிக்க முடியவில்லை. ஆதிபராசக்தியின் அழிக்கும் சக்தியை ஆதார மந்திரமாக்கி, தர்ப்பையை மந்திரித்து ஏவியிருந்தான் அஸ்வத்தாமன்.  அது சீறிச் சென்ற இடத்தில் நின்றிருந்த பாண்டவ சந்ததியினர் அனைவரும் மடிந்து வீழ்ந்தனர். முடிவாக மீதி இருந்தது ஒரே ஒரு பாண்டவ சந்ததிதான். அர்ஜுனனின் புதல்வன் அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்திலிருந்த சிசு.

உத்தரை, விராட மன்னனின் புதல்வி. அபிமன்யுவின் மனைவி. அம்பிகையிடம் தீவிர பக்தி கொண்டவள். அபிமன்யுவின் திருமணத்தன்றே அவளுக்கு காத்யாயினி என்கிற துர்கையை உபாஸிக்கும் மந்திரத்தை உபதேசித்திருந்தான் கண்ணன். அவளும் தீவிரமாக தேவி உபாஸனை செய்து வந்தாள். தன் மங்கலச் சின்னங்கள் நீடித்திருக்க, அவள் அன்னை ஆதிபராசக்தியை தினமும் ஆராதித்தாள். ஆனால், பாவம்… அவள் கணவன் அபிமன்யு திருமணமான முதல் ஆண்டிலேயே யுத்தகளத்தில் பலியாகிவிட்டான். உத்தரை உடன்கட்டை ஏற முயன்றாள். ஆனால், அப்போது அவள் கர்ப்பவதியாக இருந்ததால், உடன்கட்டை ஏறுவது பாவம் என்று தடுத்து நிறுத்தி, அவளைக் காப்பாற்றிவிட்டான் கண்ணன்.‘அன்னை ஆதிபராசக்தியை ஆராதித்து என்ன பயன்? உத்தரையின் மாங்கல்யத்துக்கே பங்கம் வந்துவிட்டதே?’ என்று மற்றவர்கள் கூறினார்கள். உத்தரை மனம் தளரவில்லை. தீவிர வைராக்கியத்துடனும் பக்தியுடனும் காத்யாயினியைத் தொடர்ந்து ஆராதித்தாள். அதற்குப் பலன் கிடைக்கும் நேரம் வந்தது. கண்ணனின் ஆணைப்படி கர்ப்பரக்ச மந்திரத்தை ஜபித்து காத்யாயினியை பக்தியோடு பூஜித்து வந்தாள் உத்தரை.

அஸ்வத்தாமன் அனுப்பிய தர்பாஸ்திரத்தைக் கண்ணனே ஓர் ஆயுதத்தால் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் ‘பாரதப் போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன்’ என்று கண்ணன் இரு தரப்பினருக்கும் வாக்களித்திருந்தான். அவன் வாக்குத் தவற விரும்பவில்லை. அதேநேரம், அவன் தர்மம் தவறவும் தயாராக இல்லை. உத்தரையின் கர்ப்பத்தில் வாழும் பாண்டவர்களின் சந்ததிக்கான சிசுவைக் காப்பாற்ற சங்கல்பித்தான் கண்ணன். உத்தரை அன்றாடம் உபாஸிக்கும் அன்னை காத்யாயினி வேறு யார்? அவள் கண்ணனின் சகோதரிதானே! தன் சகோதரி காத்யாயினிடமே அந்தப் பணியைத் தந்தான் கண்ணன். இதற்காகவே அவன் உத்தரைக்கு காத்யாயினியை உபாஸனை செய்யும்படி ஏற்கெனவே உபதேசித்திருந்தான். அஸ்வத்தாமன் அனுப்பிய அஸ்திரம் மரண தேவதையாக உத்தரையின் உடலை நெருங்கிய அதே விநாடி, அவள் கர்ப்பத்தில் இருந்த சிசுவை அங்கிருந்து அகற்றி, கண்ணன் திருக்கரத்தில் வைத்துவிட்டு, அந்த இடத்தில் தானே அமர்ந்து கொண்டாள் தேவி காத்யாயினி. அஸ்வத்தாமனின் மந்திர தர்ப்பை, ஆதிபராசக்தியைத் தாக்கியதுமே அது சக்தியிழந்து பஸ்பமானது.

அந்த விநாடியே தான் இருந்த இடத்தில் மீண்டும் உத்தரையின் சிசுவை கண்ணனிடமிருந்து வாங்கி வைத்துவிட்டு, வெளியில் வந்தாள் காத்யாயினி.
மாயவன் கண்ணன், மாயை எனும் அவன் சகோதரி துர்கை இருவரும் அனுக்ரஹித்து, பாண்டவ வம்சத்தைக் காத்து, உத்தரையின் கர்ப்பத்தில் உயிர்காத்துத் தந்த அந்த சிசுதான், பரீக்ஷித்து மஹாராஜன். அதனாலேயே இன்றும் பெண்கள் கர்ப்பத்திலுள்ள சிசுவைக் காத்து, நல்ல சந்தானம் பெறுவதற்கு காத்யாயினியை உபாஸிக்கிறார்கள். இதனால் தான் காத்யாயினிக்கு ‘கர்ப்ப ரக்சாம்பிகை’ அதாவது ‘கர்ப்பத்தில் உள்ள சிசுவைக் காப்பவள்’ என்ற பெயரும் உண்டு. காத்தாயிக்கு பல்வேறு இடங்களில் கோயில் இருந்தாலும் தனித்துவம் பெற்ற கோயிலாக மரத்துறை கிராமத்திலிருக்கும் கோயில் திகழ்கிறது. கோயிலில் கருவறையில் உள்ள காத்தாயி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

மதுரை வீரன், பொம்மி மற்றும் வெள்ளையம்மாளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். ஏழு முனிகள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் திருவுருவங்கள் சுதை வடிவில் காட்சி தருகின்றன. மேற்கு பிராகாரத்தில் கிழக்கு நோக்கி மூன்று பச்சையம்மன் சிலைகள் உள்ளன. வடக்கு பிராகாரத்தில் சங்கிலிக் கருப்பன், வீரன், மாடன், நாகர் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றன. பச்சையம்மன் மற்றும் பூங்குறத்தி சுதை வடிவங்களும், வடதிசையில் வள்ளித்தாய் மற்றும் குழந்தையை மடியில் அமர வைத்துள்ள காத்தாயி அம்மன் சுதை வடிவங்களும் உள்ளன. கருவறையில் உள்ள காத்தாயி அம்மாள் இடக்காலை மடித்து, வலக்காலைத் தொங்கவிட்டு, வலக்கையில் கிளியுடன், இடக்கையில் தாமரை மலருடன் ஐந்துதலைநாகம் குடைபிடிக்க அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். மரத்துறை, தஞ்சை மாவட்டம். கும்பகோணத்திலிருந்து மணல்மேடு செல்லும் சாலையில் பந்தநல்லூருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது

சு.இளம் கலைமாறன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்