SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போர் வீரர்கள் போற்றி வழிபட்ட காலபைரவர்

2019-02-25@ 09:45:50

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது குப்பம் செல்லும் சாலையில் அமைந்துள்ள காலபைரவர் கோயில். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஹொய்சாள மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது. இங்குள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியதாகவும், அந்த சுயம்புலிங்கமே காலபைரவரின் அம்சமாக விளங்குவதாகவும் வழிவழியாக சொல்லப்பட்டு வருகிறது. கிருஷ்ண தேவராயர் காலத்தில் போர்வீரர்கள் இந்த கோயிலில் போர்க்கருவிகளை வைத்து வழிபட்டதாகவும்  தகவல்கள் கூறுகின்றன. விவசாயம் மற்றும் கால்நடைகளை மேய்க்கும் தொழில்களை அடிப்படையாக கொண்ட 150 கிராமங் களை சேர்ந்த பல்வேறு சமூகத்தினர் காலபைரவரை தங்களின் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

அவர்கள், தங்களது வீட்டில் எந்தவொரு சுப நிகழ்ச்சிகளை நடத்துவதாக இருந்தாலும், இந்த பைரவரை வழிபட்ட பிறகே அந்த சுபகாரியங்களை துவங்குகிறார்கள். கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங் களிலிருந்தும் நிறைய பக்தர்கள் இங்கு வந்து காலபைரவரை வழிபட்டு செல்கின்றனர். இந்த கோயிலுக்கு அருகில் ராஜேந்திர சோழர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டதாக சொல்லப்படும் நந்தீஸ்வரர் சிலை ஒன்றும் உள்ளது. நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் சிவலிங்கம் தெரிவதுபோல் அமைக்கப்பட்டிருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பு. ‘`அத்தி மரத்தை தலவிருட்சமாக கொண்டிருக்கும் இந்த கோயிலில், லிங்க வடிவில் காட்சி தரும் ஸ்ரீ காலபைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

அப்போது எலுமிச்சை, பூசணி, தேங்காய் மூடி ஆகியவற்றில் நெய்தீபம் ஏற்றி வைத்து பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அதன்மூலம் காலபைரவர் தங்களுக்கு காவலாக இருப்பதுடன், தங்கள் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றுவார் என்றும் மனப்பூர்வமாக நம்புகிறார்கள். அதேபோல், வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு தவறான முடிவுக்கு வரும் நிலையில் இருப்பவர்கள் ஒருமுறை இந்த கோயிலுக்கு வந்து சென்றால், அவர்கள் தங்களது பிரச்னைகளில் இருந்து சீக்கிரம் மீண்டு விடுவார்கள் என்ற ஐதீகமும் உள்ளது. விழாக்காலங்களில் பைரவரின் வாகனமான நாய் சிலையை எடுத்துக் கொண்டு கோயிலை சுற்றி வலம் வருகிறார்கள். அந்த நாய் சிலை, தன்னைச் சுமந்து வருபவர்களை ஆளுக்கொரு திசையாக இழுத்துச் செல்லுமாம். ஏதேனும் தெய்வக்குறையாக இருக்குமோ’ என்று அச்சப்பட்ட மக்கள், இது பற்றி அருள்வாக்குக் கேட்டபோது கிடைத்த அறிவுறுத்தலுக்கு இணங்க, சிவன்பார்வதி சிலையைச் சுதைச் சிற்பமாக இங்கே பிரதிஷ்டை செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

காலபைரவர் கோயில்களில் இந்தக் கோயில் வித்தியாசமானது. பொதுவாக காலபைரவரை திகம்பரராக இருக்கும் கோலத்தில் தான் தரிசித்திருப்போம். ஆனால், இங்கே லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் நெற்றிப்பகுதியில் திரிசூலம் பொறிக்கப்பட்டிருக்கிறது. கருவறை வாயில் வழியே தரிசித்தால் பஞ்சலோக பைரவலிங்கத்தையும், சிவன்பார்வதியையும் தரிசிக்க முடியும். லிங்க வடிவிலான பைரவரை சுவரில் இருக்கும் ஒரு துவாரத்தின் வழியாகத்தான் தரிசிக்க வேண்டும். இங்கே சிவபெருமான் மீசையுடன் காட்சி தருவது சிறப்பு. திருமணத் தடை, தீராத பிணி, வேலையின்மை, கல்வியில் தடைகள் முதலான பிரச்னைகள் உள்ளவர்கள், தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் ராகு காலத்தில் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும் என்பது தொடரும் நம்பிக்கையாக உள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

 • bookday

  இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

 • ukraine

  உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

 • londonprotest

  லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

 • 23-04-2019

  23-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்